கண்டுகொள்ளாத இந்தியா, கால் பதிக்கும் சீனா


http://www.kumudam.com/magazine/Reporter/2009-01-04/imagefolder/pg11.jpg

கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஈழத் தமிழருக்கு ஆதரவான அலையை கிளர்ந்தெழச் செய்ததில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அண்மையில்கூட டெல்லியில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரும், மூத்த தலைவருமான அத்வானியை சந்தித்துப் பேசி, ஈழத் தமிழர்களின்பால் அவரது கவனத்தைத் திருப்பிவிட்டு வந்திருக்கிறார். அதோடு ஊர் ஊராகப் போய் தமிழ் ஆர்வலர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் செய்யும் பிரசாரமும், அந்தந்த ஏரியாக்களில் சூடு கிளப்பிக்கொண்டிருக்கிறது. முதல் தடவையாக கடந்த 28_ம் தேதி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்தது. அன்று மாலை நாகர்கோயிலில் `தமிழாலயம்' நிறுவனர் பச்சைமால் ஏற்பாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கருத்தரங்கம் நடந்தது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வந்திருந்த சிவாஜிலிங்கத்தை நாம் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

எந்த நேரமும் கிளிநொச்சி ராணுவ வசமாகலாம் என்கிறார்களே..? அதன்பிறகு ஈழ விடுதலைப் போராட்டம் என்னாகும்?

" `கிளிநொச்சியை நெருங்கிவிட்டோம்' என கடந்த இரு மாதங்களாகவே ராணுவம் கூறி வருகிறது. ஆனால், புலிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் பதிலடியால் ராணுவம் பின்வாங்கி ஓடுகிறது என்பதுதான் உண்மை. ஒருவேளை கிளிநொச்சியை மட்டுமல்ல... முல்லைத்தீவையும் சேர்த்தே ராணுவம் பிடித்தாலும் ஈழ விடுதலைப் போராட்டம் ஒருபோதும் ஓயாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். காரணம் அது மக்களின் போராட்டம்.''

டெல்லியில் அத்வானியைச் சந்தித்த நீங்கள், பிரதமரையோ, சோனியாவையோ சந்திக்க முயற்சிக்கவில்லையா?

"தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு சோனியாவைச் சந்திக்கும் வாய்ப்பு ஒருமுறை கிடைத்தாலே ஈழப்பிரச்னையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை 2006-ம் ஆண்டின் இறுதியில் கலைஞர், சுப.வீரபாண்டியன் ஆகியோரின் முயற்சியால் ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு எங்கள் எம்.பி.க்களுக்கு கிடைத்தது. அதன்பிறகு, 2008 ஆகஸ்டில் சார்க் மாநாட்டுக்காக அவர் கொழும்பு வந்திருந்தபோது பதினைந்து நிமிடங்கள் மட்டும் அவருடன் பேசினோம். மற்றபடி டெல்லியில் அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக 2007 முதல் நாங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பலன் கிட்டவில்லை.''

மன்மோகன்சிங்குடன் என்ன பேச விரும்புகிறீர்கள்?

"அத்வானியுடன் பேசிய விஷயங்களைத்தான் அவருடனும் பேச வேண்டும். அதாவது, இரண்டு காரணங்களுக்காக இலங்கைப் பிரச்னையில் இந்தியா தலையிடவேண்டும் என்போம். முதல் காரணம், ஈழத்தமிழர்களின் நலன். அடுத்த காரணம், இந்தியாவின் நலன்.

தற்போது பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையை தங்கள் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றன. இது இந்தியாவுக்கு கொல்லைப்புற வழியாக வரும் மிகப்பெரிய ஆபத்து. குறிப்பாக, சீனா ஒரு பில்லியன் டாலரை (சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்) இலங்கைக்கு அள்ளிக்கொடுத்து அம்பாந்தோட்டை என்கிற துறைமுகத்தைச் சீரமைத்து வருகிறது. இது இந்தியாவின் கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பகுதியாகும். இதேபோல கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி வவுனியா விமானப் படைத்தளத்தை புலிகள் தாக்கியபோது, அங்கு இந்தியா வழங்கியிருந்த ரேடார் சேதமடைந்தது. உடனே சீனா என்ன செய்தது தெரியுமா? `இந்தியா வழங்கிய `2டி' தொழில்நுட்ப ரேடாரைவிட சக்தி வாய்ந்த `3டி' ரேடாரை நான் தருகிறேன்' என்று கூறி கொழும்பில் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த ரேடார் மூலமாக திருவனந்தபுரம், தூத்துக்குடி, சென்னை வரை கண்காணிக்க முடியும். இதை வழங்குவதற்காக இலங்கைக்கு வந்த சீன வெளியுறவு அமைச்சர் உதிர்த்த ஒரு வாசகம், `ஒன்றுபட்ட சீனாவை இலங்கை ஆதரிப்பதால், இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்வோம்' என்பது. இதுவும்கூட திபெத் உள்ளிட்ட வேறு சில பிரச்னைகளில் சீனாவுடன் கருத்து மாறுபாடு கொண்டுள்ள இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட மறைமுக குட்டுதான்.

இதெல்லாம் போக, இலங்கையின் மன்னார் பகுதியில் ஒன்பது எண்ணெய்க் கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை சீனாவிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. `இது தவறான முடிவு. அப்படி சீனாவிடம் எண்ணெய்க் கிணறுகள் கொடுக்கப்பட்டால் அவை பற்றி எரியும்' என கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். அதற்கு மறுநாள்தான் ராணுவத் தூண்டுதலோடு என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் தகரவேண்டுமானால், இந்தியா அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் இலங்கைப் பிரச்னையில் தலையிட்டே ஆகவேண்டும். இந்தியாவுடன் என்றும் நட்புறவை விரும்புபவர்கள் ஈழத்தமிழர்கள்தான் என்பதையும் இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.''

எல்லாம் சரி... `புலிகளை எப்படி ஆதரிக்க முடியும்?' என்பதுதானே இங்குள்ள பிரச்னை?

"ஈழப்பிரச்னையை அப்படி ஏன் பார்க்கிறீர்கள்? ஒரு நாட்டின் ராணுவமே அந்நாட்டு பூர்வீகக் குடிகள் மீது இனவெறி கொண்டு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல் அல்லவா இது? இதற்கான அனுதாபத்தை எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழ் மக்களிடமும், இந்திய அரசிடமும்தானே நாங்கள் எதிர்பார்க்க முடியும்?''

தமிழக முதல்வரும்கூட, `இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் புலிகளை தி.மு.கங ஆதரிக்கவில்லை' என்ற பொருள்பட பேசியிருக்கிறாரே?

"ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் கலைஞருக்கு நன்றி. அதே சமயம், ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினர்தான் புலிகள் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நாங்கள் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்காது.''

இப்படியே போனால் ஈழத்தமிழர்களின் எதிர்காலம்தான் என்ன?

"தொடர் போரால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து, சோமாலியாவைப் போன்ற நிலைமை அங்கு உருவாகும். இதுபோன்ற சூழல்களில் தாங்கும் சக்தியை அதிகம் கொண்டவர்கள்தான் ஜெயிக்க முடியும். அதற்கு நல்ல உதாரணம், ஹோசிமின் தலைமையில் நடைபெற்ற வியட்நாம் விடுதலைப் போராட்டம்தான். அதேபோல எல்லா வகையிலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழப் பழகியுள்ள ஈழத்தமிழர்களுக்கு இறுதியில் வெற்றி கிடைத்தே தீரும்.''


Comments