என்ன செய்யப் போகிறார் கலைஞர்?




உடனடியாக யுத்த நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வற்புறுத்துவதற்காகத் தமது வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வாக்குறுதி அளித்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச கொழும்பு விஜயம் கிணற்றில் போட்ட கல்லாக முடங்கிப் போய்க் கிடக்கின்றது. இயன்ற விரைவில் அவர் கொழும்புக்கு வருவார் என்பதற்கான முகாந்திரம் ஏதும் காணப்படவேயில்லை.

ஈழத்திலே, இலங்கை அரசு தொடுத்திருக்கும் கொலைவெறி யுத்தத்தினால் தமிழர் தாயகம் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. கணத்துக்குக் கணம் சாவும் அழிவுமாகத் தமிழர் தாயகம் ரணகளமாகிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, விரைந்து சென்று, யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு ஆவன செய்யுங்கள் - ஆக்கபூர்வ நடவடிக்கை எடுங்கள் என்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வற்புறுத்தலாகவும், வலியுறுத்தலாகவும் வெளிப்பட்டிருக்கின்றது. விரைந்து நடவடிக்கை எடுக்க வாக்குறுதி அளித்த புதுடில்லி அரசியல் தலைமை, சரியான பிரதிபலிப்புகளைக் காட்டாமல் காலத்தை இழுத்தடிக்கின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்துக்கு இந்தியா, தோள் கொடுத்து உதவி, ஆயுதத் தளபாடங்கள் மற்றும் வசதிகளை அளித்தும் வருகின்றது என்பதே இந்திய மக்களின் பொதுவான குற்றச்சாட்டாகும்.

சிங்களப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குவதை இந்திய அரசு அடியோடு நிறுத்த வேண்டும் என்பதும் -

தமிழர் தாயகம் மீது தான் தொடுத்துள்ள யுத்தத்தை இலங்கைப் படைகள் உடனடியாக நிறுத்தச் செய்யவேண்டும் என்பதும் -


தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு நிலைப்பாடாக இருக்கின்றது. இதையே ஒக்டோபர் மத்தியில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் தமிழகத் தலைவர்கள் தங்களது முடிவாக அறிவித்தார்கள்.

இந்த இரண்டு கோரிக்கைகளையும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40 எம்.பிக்களும் கூட்டாக இராஜிநாமாச் செய்வர் என்றும் இந்திய மத்திய அரசை எச்சரித்து அறிக்கையும் விட்டனர் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்.

ஆனால், தமது கட்சியுடன் கூட்டணி அமைத்து, அதை நம்பி ஆட்சியை நடத்தும் இந்திய மத்திய அரசை இவ்விடயத்தில் வழிக்குக் கொண்டுவரத் திராணியற்ற - இலாயக்கு அற்ற - தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இவ்விடயத்தில் நழுவல், வழுவல் போக்கைக் கைக்கொண்டார்.

அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தமிழகத்தில் கிளர்ந்த எழுச்சியை நீர்த்துப் போகச் செய்து, பயனற்றதாக்கி இருக்கிறார் - செல்லாக்காசாக்கி இருக்கிறார் - கலைஞர்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதியான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் புதுடில்லியில் நடந்த பேச்சுகளை அடுத்து - மேற்படி இரு கோரிக்கைகள் தொடர்பாக எந்த ஆக்கபூர்வமான உறுதிமொழியோ, சைகையோ காட்டப்படாத நிலையில் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகள் மனநிறைவை அளிக்கின்றன என ஒருதலைப்பட்சமாக அறிவித்து, நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் இராஜிநாமாத் திட்டத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார் அவர்.

அதன் பின்னரும் தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சி கிளர்ச்சியாக - புரட்சியாக - வெடித்ததை அடுத்துத் திரும்பவும் தமிழகத்தில் சர்வகட்சிக் கூட்டம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தி, அத்தலைவர்களோடு புதுடில்லிக்குப் பறந்தார் அவர்.

இந்தியப் பிரதமரையும் சந்தித்தார். இலங்கை விடயம் பற்றி விரிவாகப் பேசினார் என்றும் அறிவிக்கப்பட்டது. தமது வற்புறுத்தலின் பேரில் இந்தியப் பிரதமர் தனது பிரதிநிதியாக இந்திய வெளிவிவகார அமைச்சரை இயன்ற விரைவில் கொழும்புக்கு அனுப்பி, அங்கு யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க உறுதி தந்தார் என இச்சந்திப்பை அடுத்து கலைஞர் அறிவித்தார்.

ஈழத்தில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கையில் பற்றி எரியும் யுத்தம், ஊழிப் பெரும் கூத்தாய் கணத்துக்குக் கணம் பேரழிவை ஏற்படுத்தி நாசமாக்கும் நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கையில் மூன்று வாரம் கழித்தும் கூட, இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்புக்குச் செல்வதற்கான - இயன்ற விரைவில் என்ற காலக்கெடு - இன்னும் முடிவடையவில்லை.

இன்னும் ஒரு மாதம் பூர்த்தியானாலும் கூட, அந்த இயன்ற விரைவில் என்பது அப்போதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகின்றது. ஈழத் தமிழர் விடயத்தில், ஒருபுறம் இலங்கை அரசுக்கு யுத்த தளபாட மற்றும் பயிற்சி உதவிகளை வழங்கிக்கொண்டு, யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்ய விருப்பற்ற - திராணியற்ற - நிலையில் உள்ள மத்திய அரசுடன் கூடிக் குலாவியபடி கலைஞர் என்ன செய்யப் போகிறார்?

அவரது பதிலைப் பதிவுசெய்ய வரலாறு பார்த்திருக்கின்றது.



Comments