அஞ்சாத நெஞ்சுறுதி! குலையாத கொள்கை வெறி! புலிகளிடம் வாங்கியவை இவையே: திருமா விகடனுக்கு வழங்கிய பேட்டி
''திருமாவைக் கைது செய்!'' -லேசுபாசாகக் கிளம்பிய குரல்கள் இப்போது ஒருமித்து... வலுவாகி தமிழக அரசின் தலையைக் காயவைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி கடைக்கோடி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை சிறுத்தை திருமாவுக்கு எதிராக சீற்றத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் காங்கிரஸாரை அமைதிப்படுத்தும்விதமாக, திருமா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என பரபரப்புக்கிளம்பியிருக்கிறது.
ஆனால் திருமாவோ, வருகிற 26-ம் தேதி சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்துவதற்கான முன்னேற் பாடுகளில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில், அந்த மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென தடை விதித்தது. உடனே முதல்வர் கருணாநிதியை நேரில் போய்ச் சந்தித்த திருமா, மாநாட்டுக்கான தடையை உடைத்து உரிய அனுமதியைப் பெற்று வந்தார். முதல்வர் வீட்டிலிருந்து அவர் வெளியே வந்த சில நிமிஷங்களில் அவரைச் சந்தித்தோம்.
சமீபத்தில் அவரை மையமாக வைத்து கிளம்பிய அத்தனை சர்ச்சைகளுக்கும் பதிலளிக்கும் விதமாக விழிகள் சிவக்க நம்மிடம் பேசினார் திருமாவளவன்.
''காங்கிரஸை அமைதிப்படுத்தும் நோக்கில்தான் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு திடீரென தமிழக அரசு தடை போட்டதாகச் சொல்கிறார்களே?''
''நான்குமுறை திட்டமிட்டும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் தொடக்க விழாவையும் தமிழீழ அங்கீகார மாநாட்டையும் நடத்த முடியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் தமிழீழ அங்கீகார
மாநாட்டை நாங்கள் நடத்த முயன்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபோது, போலீஸார் வீணான அச்சத்தைப் பரப்பி வேறு தேதியில் நடத்திக் கொள்ளச் சொன்னார்கள். அனைத்தையும் தாண்டி வருகிற 26-ம் தேதி மாநாடு நடத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தடை போடப்பட்டது.
எங்களுக்கும் காங்கிரஸாருக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் வளர்ந்து விட்டதால் ஏற்பட்ட விளைவுதான் இந்தத் தடை. அதனால்தான், உடனடியாக முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்தேன். 'ஈழ மண்ணின் விடிவுக்காக தந்தை செல்வா முன்வைத்த கோரிக்கையைப் பிரகடனப்படுத்துகிற மாநாடுதானே தவிர, இந்திய இறையாண்மையை மீறுகிற காரியங்கள் மாநாட்டில் துளியளவும் இடம்பெறாது' என உறுதிபடச் சொன்னேன்.
முதல்வரும் எங்களின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு மாநாட்டுக்கு சம்மதம் தெரிவித்தார். தமிழீழ அங்கீகார மாநாட்டை வியக்கத்தக்க அளவில் நடத்திக் காட்டுவோம்.''
''சத்திய மூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தி மோசமான அரசியல் நிகழ்வை ஆரம்பித்து வைத்துவிட்டார்' என 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் மீது பாய்ந்திருக் கிறார்களே?'''
''காங்கிரஸ் மீதும், அக்கட்சியின் தலைவர்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் நாங்கள். பெருந்தலைவர் காமராஜரின் படத்தை எங்கள் இயக்கத்தின் அத்தனை ஆவணங்களிலும் பிரசுரித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல தலித் மக்களுக்கு உரிய, உயரிய அங்கீகாரங்களைக் கொடுத்து அப்போதே அழகு பார்த்திருக்கிறது காங்கிரஸ்.
கக்கன், பி.ஆர்.பரமேஸ்வரன், பெரியவர் இளையபெருமாள் என காங்கிரஸால் கௌரவிக்கப்பட்ட தலித் தலைவர்கள் எத்தனையோ பேர். ஆனால், இன்றைக்கு இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எங்களைப் பற்றி சகிக்க முடியாத அவதூறுகளைப் பரப்புகிறார்கள். உண்மையிலேயே நடந்ததைச் சொல்கிறேன்... சத்தியமூர்த்தி பவனுக்கு எதிரே எங்கள் இயக்கத்தின் தொழிற்சங்கத்துக்கான பெயர்ப் பலகை ஒன்று இருந்தது. அந்த இடத்தில் பேனர் கட்டிக் கொண்டிருந்த எங்கள் இயக்கத்தினரை, காங்கிரஸைச் சேர்ந்த சில பிரமுகர்கள் கேவலமாகப் பேசி இருக்கிறார்கள்.
என்னையும் கேட்கவே கூசுகின்ற வார்த்தைகளால் ஏசியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் கைகலப்பு நடந்திருக்கிறது. எங்களை அடித்தவர்களை எங்களவர்கள் திருப்பி அடித்திருக்கிறார்கள். ஏசியவர்களைத் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். மற்றபடி, சத்திய மூர்த்தி பவனில் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் எங்கள் இயக்கத்தினருக்கும் சம்பந்தமே இல்லை. சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே தங்கபாலு, ஜி.கே.வாசன், இளங்கோவன், ப.சிதம்பரம், சுதர்சனம் உள்ளிட்ட பல தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்கள் இயக்கத்தவர்கள் யாரும் சத்தியமூர்த்தி பவன் பக்கம் போகவில்லை என்ற உண்மை நிலவரத்தைத் தெளிவுபடுத்தினேன்.
அதையும் தாண்டி எங்களைச் சம்பந்தப்படுத்தி ஆவேசம் பாடினார்கள். தொண்டர்களைத் தூண்டிவிட்டு, அரசியல் நடத்தும் வழக்கம் எங்கள் இயக்கத்துக்குக் கிடையாது. அநாகரிகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாக்கில் நரம்பில்லாமல் அள்ளிவீசும் சாக்கடைகள் எங்களை ஒருபோதும் சலனப்படுத்தாது.''
''தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டவர்கள் உங்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே..?''
''மறைந்த காங்கிரஸ் தலைவரான மூப்பனாரால், 'ஜனநாயக சக்திகள்' என வர்ணிக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆனால், இன்றைக்கு அண்ணன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கட்டப்பஞ்சாயத்து செய்பவனாக என்னைச் சித்திரித்துப் பேசுகிறார். இளங்கோவன், தங்கபாலு கோஷ்டியினர்தான்
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் என்னையும் என் இயக்கத்தையும் களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளில் ஒன்றையாவது இவர்களால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?''
''உங்களால் முதல்வர் கருணாநிதி ரொம்பவே சங்கடத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், கூட்டணியைவிட்டு நீங்கள் விரைவிலேயே வெளியேற்றப்படலாம் எனவும் பேசப்படுகிறதே?''
''ஈழ மண்ணின் விடியலை முன்னிறுத்தி நாங்கள் புதிதாக ஒன்றும் பேசவில்லை. ஐம்பது ஆண்டுகளாக தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் கருத்தைத்தான் எங்கள் இயக்கத்தின் சார்பாக முழங்குகிறோம். அதனால் ஈழ விவகாரத்தில் நாங்கள் எழுப்பும் குரல் ஒருபோதும் முதல்வருக்கு தலைவலியைக் கொடுக்காது.
அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் தமிழீழ அங்கீகாரத்தில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்தால், 'தமிழீழம் உருவாவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை' எனச் சொல்லிவிட்டு, வருகிற தேர்தலை தைரியமாக அவர்களால் எதிர்கொள்ள முடியுமா? தமிழீழத்தை எதிர்க்க, தமிழக மக்களை ஏய்க்க, இந்தக் கட்சிகளால் எள்ளளவும் முடியாது. புலிகளை எதிர்ப்பதாக முழங்குவ தெல்லாம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான்.
நாங்கள் தமிழீழ அங்கீகாரத்தை வலுவாக முழங்குவோம். யாருக்கும் பாரமாகவோ, சங்கடசக்தியாகவோ ஒருபோதும் தொடுக்கிக்கொண்டு இருக்க மாட்டோம். கலைஞர் எங்களின் திடத்தையும் நேர்மையையும் ஒருபோதும் நெருக்கடியாக நினைக்க மாட்டார்!''
''காங்கிரஸ் தலைவர்களின் பிரஷரால் நீங்கள் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்களே?''
''என்னைக் கைது செய்யச் சொல்லி ஆவேசம் காட்டுவதெல்லாம் 'மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்த, கதைதான்!' இறையாண்மையை மீறி நான் பேசியதாக ஆதாரமும் இல்லை; அடிப்படையும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், என்னைக் குறிவைத்துகாங்கிரஸார் செயல்படவில்லை. அவர்களின் குறிக்கோள் தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதுதான்.
அவர்களின் நெருக்கடி திருவிளையாடல்களுக்கு நான் பகடைக் காயாக அகப்பட்டிருக்கிறேன். என்னை வைத்து தி.மு.க. அரசை சீண்டிப் பார்க்கும் காங்கிரஸ் தலைவர்கள், அவர்களுக்கு அவர்களே புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்கபாலுவும்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தவறான கருத்துகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, என் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறார்கள். அன்னை சோனியா சொல்படி இவர்கள் செயல்படுகிறார்களா இல்லை 'அம்மா'வின் இயக்குதல்படி செயல்படுகிறார்களா எனத் தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இப்போது கம்யூனிஸ்ட் இடம் வகிக்கிறது. அதனால் காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டி யிடவும் வாய்ப்பு குறைவுதான். இதைவைத்து தி.மு.க. கூட்டணியை உடைத்து பலவீனமாக்க அ.தி.மு.க. திட்டம் போடுகிறது.
இதற்கேற்றாற்போல் காங்கிரஸ் தலைவர் கள் எங்களை மையமாக வைத்து தி.மு.க. அரசுக்கு குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் பொறுமைக்கும் நிதானத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது. ஈழ விவகாரத்தில் இறையாண்மையை மீற மாட்டேன் என உறுதி கொடுத்துவிட்டேன். சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட விவகாரத்திலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. இந்த உண்மைகள் தெரிந்தும், கைதுக்கு வலியுறுத் தும் காங்கிரஸ் தலைவர்கள் 'விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது' என கலைஞரை வற்புறுத்துவதாகவும் சொல்கிறார்கள்.
அவர்கள் வெளிப்படையாக அறிவித்தால், நாங்களும் வெளியேறத் தயார். கைது நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயார். சட்டத்துக்கு உட்பட்டு, என் மீது நடவடிக்கைகள் பாயுமானால் அதனை எதிர்கொள்வதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அதற்காக தி.மு.க. உடனான இணக் கத்தையோ பாசத்தையோ உடைத்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் மீது ஆத்திரப்பட மாட்டோம். தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறவும் மாட்டோம்.''
''புலிகளால் கிடைக்கும் ஆதாயங்களுக்காகத்தான் நீங்கள் ஈழ விவகாரத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி...''
''புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும், அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம்... அவர்கள் நடத்தும் அரசாங்கம்... புதிய நாட்டை உருவாக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி... இதற்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும். புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான்.
'எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி... குலையாத கொள்கை வெறி... இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத் தயங்காத தைரியம்...' இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம். அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்களின் மகா வேதனை. புலிகளிடம் கையேந்தி கட்சியை வளர்க்கும் நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகிற நிலையில் புலிகளும் இல்லை. ஆதாயப் புகார்களைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை... அனுதாபப்படுகிறேன்.''
-விழிகளில் ஜிவுஜிவுப்பு குறையாமல் விடை கொடுக்கிறார் திருமா!
- இரா.சரவணன்
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்
Comments