இறுக்கமடையத் தொடங்கியிருக்கும் கிழக்கு வன்னி மீதான போர்

இலங்கை இராணுவத்தில் ஆழ ஊடுருவும் அணி என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று மறுத்து வந்த படைத்தரப்பு இப்போது அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில், புதுக்குடியிருப்பு நகருக்கு மிகச் சமீபமாக நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதல் ஒன்றில் புலிகளின் விமானப்படைத் தளபதியான கேணல் சங்கர் கொல்லப்பட்டிருந்தார். இதற்கு முன்னரும், பின்னருமான பல தாக்குதல்களில் புலிகளின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள், தளபதிகள் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

மேலும் பல தளபதிகள் மயிரிழையில் தப்பியிருக்கின்றனர். அதுபோன்றே பாலம்பிட்டியில் பொதுமக்களின் பஸ் மீதான தாக்குதல், ஐயங்கன்குளத்தில் மாணவர்கள் சென்ற மினிபஸ் மீதான தாக்குதல் என்று ஆழ ஊடுருவும் படையணியால் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்ட எத்தனையோ சம்பவங்களும் இருக்கின்றன.

வெகு தொலைவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் படைத்தரப்பு எவ்வாறு சம்பந்தப்பட முடியும் என்றெல்லாம் இராணுவத் தரப்பு கேள்வி எழுப்பி வந்தது. ஆனால் இப்போது இராணுவத்தில் ஆழ ஊடுருவும் அணிகள் செயற்படுகின்றன என்ற உண்மை வெளியுலகிற்கு அம்பலமாகியிருக்கிறது. கடந்த மாதம் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுகளைக் குழப்புகின்ற நோக்கிலும் கிழக்கு வன்னிப் பிரதேசத்தில் வேவு பார்த்து முக்கிய தளபதிகளை அழிக்கின்ற நோக்கிலும் புலிகளின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவும் அணிகள் பல களம் இறக்கப்பட்டிருந்தன.

கிழக்கு வன்னிப் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான், உடையார்கட்டு, முள்ளியவளை, அலம்பில் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவாலயங்களில் சுடரேற்ற வரும் தளபதிகள் கேணல் சொர்ணம், கேணல் ஜெயம் போன்றோரை அழிக்கும் நோக்கில் இராணுவத்தின் 3வது விசேட படைப்பிரிவைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட அணிக்கு தலைமையேற்றுச் சென்றிருந்தார் மேஜர் லலித் ஜெயசிங்க.

படைத்தரப்பின் தாக்குதல் இலக்கு உயர்மட்டத் தளபதிகளாக இருந்ததாலும், இந்தப் பிரதேசத்தில் எட்டு வருடங்களுக்கு மேலாக ஆழ ஊடுருவும் அணியில் இணைந்து செயற்பட்டவர் என்பதாலும் மேஜர் ஜெயசிங்க இந்த அணியில் தானும் இணைந்திருந்தார். வழக்கத்தில் ஆழ ஊடுருவும் அணிகளில் கப்டன், மேஜர் போன்ற தரங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெறுவதில்லை.

அவர்கள் தாக்குதல் குழுக்களை வழி நடத்துவதுண்டு. ஆனால் புலிகளின் பிரதேசத்துக்குள் சென்று தாக்குதல்களை நடத்தும் குழுக்களில் அவர்கள் இடம்பெறுவதில்லை. 2001ஆம் ஆண்டு கேணல் சங்கர் மீதான தாக்குதலை மேற்கொண்ட குழுவுக்கு தலைமையேற்றுச் சென்றிருந்த மேஜர் ஜெயசிங்க, 8பேர் கொண்ட அணியுடன் நவம்பர் 14ஆம் திகதி மணலாறு நெடுங்கேணிக்கு தெற்கேயுள்ள காட்டுப்பகுதி ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்திருந்தார். புலிகளின் பிரதேசத்துக்கள் ஊடுருவிய சில நாட்களின் பின்னர் இந்த இராணுவ அணிக்கும் புலிகளின் எல்லைக் காவல் அணிக்கும் இடையில் திடீரெனச் சண்டை மூண்டது.

இந்த மோதலின் போது மேஜர் லலித் ஜெயசிங்கவுக்கு மார்பிலும் காலிலும் காயம் ஏற்பட்டது. ஆழமான காயம் என்ற போதிலும் அவர்களால் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முடியவில்லை. காரணம் அவர்கள் அப்போது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காடுகளில் மறைந்திருந்தனர். அங்கிருந்து இராணுவ முன்னரங்க நிலையை அடைய வேண்டுமானால் 30கி.மீ தூரத்தை நடந்தே கடக்க வேண்டியிருந்தது. காயமுற்ற மேஜர் லலித் ஜெயசிங்கவையும் தூக்கிக் கொண்டு நடந்து செல்வது சாத்தியமானதாக இருக்கவில்லை.இதனால் அந்த அணியில் இடம்பெற்றிருந்த மருத்துவப் பயிற்சி பெற்ற சிப்பாய் ஒருவரே சிகிச்சை வழங்கினார்.

பின்னர் நவம்பர் 26ஆம் திகதி புலிகளின் மீது தாக்குதல் நடத்த இந்த அணி மற்றொரு முயற்சியை மேற்கொண்டிருந்த போது மீண்டும் புலிகளின் கண்களில் சிக்கியது.

காடுகளின் மறைவில் ஆழ ஊடுருவும் அணிக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் தொடங்கியது. இராணுவ அணி தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்தது. இந்த மோதலில் மேஜர் லலித் ஜெயசிங்கவுக்கு மீண்டும் காயமேற்பட்டது. அத்துடன் மற்றும் ஒரு சிப்பாய் காலில் காயமடைந்தார். 8 பேர் கொண்ட அந்த அணியில் இப்போது 6 பேர் மட்டுமே சண்டையிடக் கூடிய நிலையில் இருந்தனர். படுகாயமடைந்த மேஜர் ஜெயசிங்கவையும் காயமுற்ற சிப்பாயையும் தூக்கிக் கொண்டு அந்த அணி பின்வாங்கி ஓடியது. அந்த நேரத்தில் மேஜர் ஜெயசிங்க மரணமானார்.

எப்படியாவது அவரது சடலத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் படைத்தரப்பு உறுதியாக இருந்தது. வவுனியாவில் உள்ள விசேட படைப்பிரிவின் பிரிகேட் தளபதியான பிரிகேடியர் நிர்மல் தர்மரட்ண இதில் பிடிவாதமாகவே இருந்தார். இதையடுத்து அவர் கஜபாபுர பகுதிக்குச் சென்று அந்த இராணுவ அணியை மீட்கும் நடவடிக்கையை நேரடியாகவே வழிநடத்தினார். இராணுவ அணி நெடுங்கேணிப் பகுதிக்கு பின்வாங்கி வந்து கொண்டிருந்தபோது விசேட படைப்பிரிவின் அணியொன்று அங்கு ஹெலிகொப்டர் மூலம் தரையிறக்கப்பட்டு அந்த அணி மீட்கப்பட்டது.

வன்னியில் ஆழ ஊடுருவும் அணியினர் இவ்வாறு விமானம் மூலம் மீட்கப்பட்டது இது மூன்றாவது தடவை. 2000 ஆம் ஆண்டு நவம்பரில் பெரியமடுப் பகுதியில் ஒரு தடவையும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொக்காவில் பகுதியில் இரண்டாவது தடவையும், இப்போது மூன்றாவது தடவையாகவும் வான்வழி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புலிகள் ஒட்டுசுட்டானுக்கும் நெடுங்கேணிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அதிகளவில் அணிகளை நிறுத்தாததால் படைத்தரப்புக்கு இந்த மீட்பு நடவடிக்கை சுலபமாக அமைந்திருக்கிறது. எனினும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது புலிகளின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் எம்.ஐ 24 மற்றும் கிபிர் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

அதேவேளை இதே பிரதேசத்தில் மாவீரர் தினத்தன்று காலையில் மற்றொரு ஆழ ஊடுருவும் அணி மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டு அவரது சடலத்தையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். அதுபோன்றே கடந்த 2ஆம் திகதி நெடுங்கேணி பெரியகுளம் பகுதியில் கிளைமோர் தாக்குதல் நடத்த ஊடுருவிய இரண்டு விசேட படைப்பிரிவு கொமாண்டோக்களும் புலிகளால் கொல்லப்பட்டு அவர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. மேஜர் லலித் ஜெயசிங்கவுக்கு மரணத்தின் பின்னர் லெப்.கேணல் பதவி உயர்வு இராணுவத் தளபதியால் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் கடந்த 8வருடங்களாக வன்னிப் பகுதியில் புலிகளுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்த ஒருவராவார்.

இவரது மரணம் இராணுவத் தரப்புக்குப் பெரும் இழப்பு என்பதுடன் ஆழ ஊடுருவும் அணியினருக்கு உளவியல் ரீருதியான பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆழ ஊடுருவும் அணியினருக்கும் களமுனையில் உள்ள படையினருக்கும் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவரது மரணம் பற்றிய தகவலை இராணுவத் தரப்பு மறைத்தே வைத்திருந்தது. ஆனால் கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்று விடயத்தை அம்பலப்படுத்தி விட்டது. இதன் பின்னரே இராணுவத் தலைமையகம் லெப்.கேணல் லலித் ஜெயசிங்கவின் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டது.

லெப்.கேணல் லலித் ஜெயசிங்க தலைமையிலான 3 ஆவது விசேட படைப்பிரிவு தான் வன்னியின் கிழக்கு முனையில் செயற்பட்டு வந்தது. மேற்கு வன்னியில் விசேட படைப்பிரிவின் 1ஆவது மற்றும் 2ஆவது ஸ்குவாட்ரன்கள் 57ஆவது டிவிசனுக்கு உதவியாகவும், கொமாண்டோ பிரிகேட்டின் 2ஆவது மற்றும் 3ஆவது பற்றாலியன்கள் 58ஆவது டிவிசனுக்கு உதவியாகவும் ஆழ ஊடுருவும் அணிகளாகச் செயற்பட்டு வருகின்றன.

மேஜர் லலித் ஜெயசிங்கவின் இராணுவ அணியின் தாக்குதலில் இருந்து பிரிகேடியர் பால்ராஜ், கேணல் ஜெயம், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் சொர்ணம் போன்ற பல முக்கிய தளபதிகள் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிழக்கு வன்னி மீதான போர் இறுக்கமடையத் தொடங்கியிருக்கிறது. இராணுவத்தின் புதியதொரு டிவிசன் உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு களமுனையில் களம் இறக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தினால் 64ஆவது டிவிசனுக்கான புதிய கட்டளை அதிகாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பிரிகேட்களைக் கொண்ட இந்த டிவிசன் இப்போதைக்கு அதிரடிப்படை4 என்ற பெயரிலேயே செயற்படவுள்ளது. 64ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த கேணல் நிசாந்த வன்னியாராச்சி நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த டிவிசனின் பொது நிர்வாக அதிகாரியாக லெப்.கேணல் பிரியந்த விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டிருக்கிறார்.

641 பிரிகேட் தளபதியாக லெப்.கேணல் இந்திரஜித் பண்டாரவும், 642 பிரிகேட் தளபதியாக லெப்.கேணல் ரந்துல ஹத்னாகொடவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது வன்னிக் களமுனையில் பற்றாலியன் தளபதிகளாகக் கடமையாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய டிவிசன் அரைத் தாக்குதல் டிவிசனாகச் செயற்படும் என்றும், 59ஆவது டிவிசன் கைப்பற்றிய பிரதேசங்களைப் பாதுகாப்பதுடன் நெடுங்கேணிப் பகுதியில் புதிய களமுனை ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.
- சுபத்ரா


Comments