சரத் பொன்சேகாவின் கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால்: தா.பாண்டியன்

சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தானது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடுக்கப்பட்ட சவால் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தா.பாண்டியன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்நாட்டு தலைவர்களை, கோமாளிகள் என்று கூறியிருக்கிறார். இமயம் சென்று கனகவிஜயனின் தலையிலேயே கல் சுமக்க வைத்து, சேரன் செங்குட்டுவன் அழைத்து வந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அந்த கனகவிஜயனின் ஆணவ சொற்கள் தான் இன்று சரத் பொன்சேகா வாயில் வெளிப்பட்டுள்ளது.

இந்தியா என்ற வலிமைமிக்க நாட்டின் முக்கிய பகுதியாக தமிழ்நாடு விளங்குகிறது என்பது தெரிந்தும், அந்த தமிழ்நாட்டின் தலைவர்கள் தான் மத்திய ஆட்சி விழாமல் தாங்கி நிற்கும் தூண்கள் என்று தெரிந்தும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று எப்படி பிரகடனம் செய்ய முடிகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகத்தான் கருத வேண்டும். இராணுவத் தளபதியிடம் குவிந்துள்ள சிங்கள இனவெறியை படம் பிடித்துக் காட்டுகிறது.

வேறுநாடாக இருந்திருக்குமானால், இதற்கு எதிர்நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுது நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும். இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி, ஆணவத்துடன் சிறிலங்காவின் சிங்கள இராணுவத் தளபதி பேசிய இன்றைய சூழலில், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் சிறிலங்காவுக்கு செல்வது அர்த்தமற்றது.

சிறிலங்கா பிரதமரை புதுடில்லிக்கு அழைக்க வேண்டும். இந்திய அரசையும் தமிழ் மக்களின் கௌரவத்தையும் அவமானப்படுத்திய சரத் பொன்சேகாவை இதற்காக பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். இதற்கு உடன்படவில்லை என்றால் சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை மூடுவதற்கு இந்திய அரசு உடன் முடிவெடுக்க வேண்டும்.

இதில் தமிழக அரசியல் தலைவர்களின் பங்கு முக்கியமானது. தமிழ் மக்களின் சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Comments