தமிழக எழுச்சி தொடர்பில் மத்திய அரசு இரட்டை வேடம்?


இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய மத்திய அரசு இரண்டுங்கெட்டான் நிலையில் நடந்து கொண்டு வருகின்றமை இலங்கையில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் - குறிப்பாகத் தமிழகத்திலும் - பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது.

ஒருபுறம் - மத்தியில் தனது ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தயவில் தங்கியிருக்கும் மத்திய ஆட்சிப் பீடம், அதற்காகத் தமிழகத்தில் புதிதாகக் கிளர்ந்தெழுந்து வரும் ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிக்கு சாதகமாகச் செயற்படுவதுபோல் காட்டப்படவேண்டிய கட்டாயம்.

மறுபுறம் - ஈழத் தமிழர்களுக்காகக் களத்தில் போராடி வரும் விடுதலைப் புலிகள் தொடர்பில், மத்திய கூட்டரசின் பிரதான கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கொண்டுள்ள கருத்து நிலைப்பாட்டைக் கவனிக்கவேண்டிய இக்கட்டு.

இன்னொரு புறம் - ஏற்கனவே, தான் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துத் தனது நாட்டில் தடைசெய்துவிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு, யுத்தம் நிறுத்தம் செய்து, அமைதிப் பேச்சுக்குப் போகுமாறு எவ்வாறு வெளிப்படையாக இலங்கை அரசைக் கோருவது என்ற சிக்கல்.

- இப்படிப் பலமுனைப் பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு, தன்னையும் குழப்பி, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தையும் போட்டடித்துக் குழப்பிக் கொண்டிருக்கின்றது புதுடில்லி.
தமிழகக் கட்சிகளின் தயவையும் நம்பி ஆட்சியைக் கொண்டிழுக்கும் இந்திய மத்திய அரசு, தனது எஞ்சிய ஐந்து மாத ஆட்சியையும் கூட ஒருவாறு சமாளித்துத் தொடர்வதுடன், தமிழகக் கட்சிகளைத் தாஜா செய்து, தன் பக்கத்தில் தொடர்ந்து வைத்திருந்து, அதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிப்பதிலும் குறியாக இருக்கின்றது.

இதற்காக தமிழகக் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து இழுபடுவது போல அது இழுபடுகின்றது. ஆனால், யதார்த்தக் கள நிலையோ தமிழகக் கட்சிகளின் விருப்புக்கு இசைவாக அதைச் செயற்பட விடுவதாயில்லை.

அதனால், இரண்டுக்கும் நடுவில் இரண்டுங்கெட்டானாக நடந்து கொள்கின்றது அது.
ஈழத் தமிழர் விவகாரத்தை ஒட்டி தமிழகத்தில் ஏறத்தாழ ஒன்றுபட்ட கிளர்ச்சி நிலை - எழுச்சி - ஏற்பட்டிருப்பதால், இதற்கு உறுதியாகப் பிரதிபலிப்பை காட்டும் வகையில் - பதில் தரும் விதத்தில் - இந்திய மத்திய அரசு செயற்படவேண்டும். அதை விடுத்து நழுவுகின்ற - வெள்ளத்தில் வழுவுகின்ற மீன் போல அது நடந்து கொள்ளக்கூடாது.

இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசின் நழுவல், வழுவல் போக்கு ஏற்கனவே தமிழகத்தில் கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய அரசியலில் முதிர்ந்த அனுபவமும், ராஜதந்திரமும்மிக்க சாணக்கியரான தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இந்திய மத்திய அரசின் இந்த இரண்டுங்கெட்டான் நடிப்புப் போக்குக்கு இடம் கொடுத்து, தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கை பலியாகிப் போக இடமளித்து விடமாட்டார் என்ற நம்பிக்கை உலகம் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் உண்டு.

இலங்கையில் தமிழர் தாயகம் மீது கொழும்பு அரசு தொடுத்திருக்கும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தினதும் கருத்தெழுச்சியாக உள்ளது. அரசியல் கட்சிகள், அணிகளின் பெயரால் வேறுபட்டு நிற்கும் தமிழக மக்கள் இலங்கையில் உடனடியாக யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என்ற தீர்மானத்தில் மட்டும் ஒருமித்து நிற்கின்றார்கள்.

ஆனால், அவர்களின் இந்தக் கருத்து நிலைப்பாட்டைத் தானும் உள்வாங்கிச் செயற்படுவதற்கு அந்தத் தமிழகக் கட்சிகளின் ஆதரவில் தங்கி நிற்கும் இந்திய மத்திய அரசு தயாரில்லை என்பதுதான் தமிழகத்தை நெருடி விசனமுற வைக்கும் விடயமாகும்.

இலங்கையில் யுத்தத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமும் இந்திய மத்திய அரசைக் கோரும்போது பிரதமர் மன்மோகன் சிங் தலையாட்டுகின்றார்.

அதனை நேரடியாகக் கொழும்புக்கு வற்புறுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடன் கொழும்புக்கு அனுப்புங்கள் என்றதும் அதற்கும் பிரதமர் தலைசாய்க்கின்றார். ஆனால், அதற்கும் அப்பால் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு அதீத மௌனமே சாதிக்கின்றது.

யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சரை விரைந்து கொழும்புக்கு இந்தியப் பிரதமர் அனுப்புவார் என்ற தகவலைக்கூட தமிழக முதல்வர்தான் அறிவிக்கவேண்டியிருக்கின்றது. இந்திய மத்திய அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஒட்டுமொத்த தமிழகம் கோருகின்றமை போல இலங்கையில் யுத்த நிறுத்தத்திற்கு இந்தியா வலியுறுத்துமா என்பது குறித்தும் அமானுஷ்ய அமைதியே புதுடில்லியால் பேணப்படுகின்றது.

தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிகளின் குழுவுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் நேரிடையாக அளித்த வாக்குறுதிப்படி, தனது வெளிவிவகார அமைச்சரை அவ்விடயத்தையொட்டி, இந்திய மத்திய அரசு கொழும்புக்கு அனுப்பும் என்ற விடயம் கூட இந்திய மத்திய அரசில் இன்னும் தெளிவு படுத்தப்படவேயில்லை.

இதேவேளை, இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றைச் செய்யும்படி இந்தியா வற்புறுத்தவே மாட்டாது என்று கொழும்பு அரசத் தரப்பில் இராணுவத் தளபதியில் இருந்து ஆட்சித் தலைவர்கள் வரை பலரும் உறுதிபடக் கூறிவருகின்றனர்.

ஆக, இவ்விடயத்தில் தமிழகத்திற்கும் தலையாட்டி, கொழும்புக்கும் விட்டுப் பிடித்து நாடகம் ஆடுகின்றது இந்திய மத்திய அரசு என்ற சந்தேக நிலைமை எழுந்திருக்கின்றது.

இலங்கையில் யுத்த நிறுத்தத்துக்கு வற்புறுத்தி, அதனைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் வலியுறுத்தல் தொடர்பாகத் தன் மௌனம் கலைத்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க இந்திய மத்திய அரசு முன்வரவேண்டும்.

இல்லையேல்,

அது இரட்டை வேடம் போடுவதாக அர்த்தப்படுத்தப்படுவதுடன் விபரீத அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தி விடும்.


Comments