பிரபாகரன் மக்கள் தலைவனா? கேள்விக்கு என்ன பதில்?


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்புகள் அனைத்துமே இத்தகைய ஒரு கேள்வியை பெரும் பரப்புரையாகச் செய்வதையே தமது கொள்கையாகக் கொண்டுள்ளன. இவர்களின் இத்தகைய பரப்புரையால்தான் சிங்கள அரசால் தமிழினத்தின் மீதான இன அழிப்புப் போரை மிகக் கேவலமாக, மூர்க்கத்தனமாக நடத்த முடிகிறது.

இதிலே துப்பாக்கி முனையில் ஜனநாயக அரசியல் நடத்தும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோர் புலிகளின் தலைவரையும், புலிகள் இயக்கத்தையும் பாசிசவாதி என்றும் பயங்கரவாதி என்றும் விமர்சிப்பதில் நேர்மையோ நீதியோ இருப்பதாகக் கூற முடியாது.

இவர்கள் எல்லாரும் தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் பயணத்தில் இதே பட்டம் பறக்க விட்டவர்கள்தான். இவர்கள் எல்லோரும் மகிந்த என்ற ~போதி மரத்தின் கீழ் நிர்வாணம் அடைந்து| இத்தகைய ஞானோபதேசம் செய்யும் புத்தர்கள் என்பது பொதுச் சிறப்பு ஆகும்.

தமிழ் மக்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் ஜனநாயக முறையில் வழி நடத்தித் தமிழ் மக்களின் தலைவராக இருக்காது கூட்டணியைச் சிதைத்து சிங்கள நீதி மன்றத்துக்கு கொண்டு போன ஆனந்த சங்கரியை எப்படித் தமிழித்தின் தலைவர் எனலாம்? தமிழினத்தின் மானம் மரியாதை இறையாண்மை, உயிர், உடமை அனைத்தையும் தாரை வார்த்து வரும் மாற்று இயக்கங்கள் எப்படிப் புலிகளையும் தலைவரையும் பாசிசவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் எனலாம்?

சிங்களத் தலைமை பார்க்க விரும்பும் ~வாலாட்டி வளையவரும் அரும் குணவான்கள்| இவர்களை விட வேறு எவரும் இருக்க முடியாது. இவர்கள் பண்டாரநாயக்க, சிறிமா, ஜே.ஆர்., பிரேமதாச, சந்திரிகா, ரணில், மகிந்த என்ற சிங்களத் தலைவர்கள் விரும்புவதையே செய்யும் இவர்களை எப்படித் தமிழர் தலைவர் என்பது?

வேண்டுமெனில் இவர்களைச் சிங்களத் தலைவர்கள் என அழைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது?

இவர்களில் யாருடனும் பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் ஒப்பிட முடியும் எனச் சொல்வது அபத்தமாகும்.

இவர்கள் 'திருட்டு, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கொலை, களவு, கடத்தல், கப்பம், மக்களின் வாக்குத் திருட்டு போன்ற எல்லா ~நற்பணிகளையும் மக்கள் நலனுக்காகச் செய்யும் அர்ப்பணிப்பு மிக்க மக்கள் தலைவர்கள"; எனலாமா?

இலங்கை இந்திய அரசுகள் பிரபாகரன் ஒரு மக்கள் தலைவன் அல்ல என உலகுக்கும் தமிழ் மக்களுக்கும் காண்பிப்பதில் பெரும் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து வருகின்றன. இத்தகைய சூழலில் வயதால் மூத்தவர்கள் வயதில் குறைந்தவரான பிரபாகரனை எப்படித் தலைவர் எனக் கொள்கிறீர்கள்? இதில் தர்க்கமோ தமிழர் பண்போ இருப்பதாகத் தெரிய வில்லையே? என்ற பல கேள்விகளை எழுப்பி என்னைப் பதில் தர முடியுமா என்ற கேள்வி தொடுக்கப் பட்டது.

இதற்குப் பதிலாக இந்துக்களின் புராணத்தில் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த சம்பவத்தை உதாரணமாகக் காட்டலாம். சிவனுக்கு முருகன் குழந்தை. அதுவும் அவன் சிவனின் வாரிசு. விளையாட்டே என்றாலும் விதிப்படி ஆடும் பண்பு தமிழரது. இது சமயத்தில் மட்டும் அல்லாது பண்பிலும் ஊறிய குணமாகும். பிரணவத்தின் தத்துவத்தை அறிந்தே இருந்த சிவன் எங்கே தன் குழந்தையும் அதனைச் சரியாகத் தெரிந்து வைத்துள்ளானா எனப் பிறருக்கு காட்டி விட வேண்டி அதன் பொருளைக் கூறக் கேட்கிறார்.

போதிப்பவன் உயர்வாகவும் போதனை பெறுபவன் தாழ்வாகவும் இருக்க வேண்டியது கட்டாய நியதி. எனவே குழந்தையாகிய முருகனுக்கு தந்தையான சிவன் பணிந்தே போகவேண்டி இருந்தது. தந்தை என்றும் மைந்தன் என்றும் கூறி விளையாட்டு விதிகளைக் கூட மாற்றம் செய்ய முடியாது. எனவே சிவன் தானே தாழ்ந்து பணிந்து கைகட்டி வாய் பொத்தி உபதேசம் பெற்றார் என்கிறது கதை. எனவே வயது குலம் கோத்திரம் என்ற பேதம் எதுவும் உண்மைக்கு முன்னால், தர்மத்தின் முன்னால் நீதிக்கு இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்பதையே இக்கதை காட்டுகிறது.

ஆண்டு தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் மாவீரர் நாளில் கூடும் மக்கள் தொகையை அண்ணளவாகப் பார்த்தாலும் ஐந்து இலட்சம் தமிழர் இருப்பர். இவர்களில் சுகயீனம் மற்றும் வேறு காரணங்களாலும் பங்கு பற்ற முடியாது போனவர்கள் இன்னும் ஒரு ஐந்து இலட்சம் எனக் கணக்கிடலாம். உலகில் இடம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களின் தொகையுடன் பார்க்கையில் பத்து இலட்சம் மக்கள் ஏறக்குறைய 75 வீதத்துக்கு குறையாதவர்களாக இருக்கும்.

1995 இல் குடாநாட்டு மக்கள் ஐந்து இலட்சம் பேர் ஒரே நாளில் புலிகளின் பின்னால் எதுவித கட்டாயமும் இன்றி வன்னி நோக்கி இடம் பெயர்ந்தனர். இன்றும் அரசின் பேரழிவுப் போருக்கு மத்தியில் வன்னியில் ஐந்து இலட்சம் வரையான மக்கள் புலிகளின் பின்னால் பாதுகாப்புத் தேடி நிற்கின்றனர். அரசு எவ்வளவோ ஆசை வார்த்தைகளை அள்ளிக் கொட்டியும் அதன் பின்னால் செல்லாது மரணத்தின் நிழலில் வாழுகிறார்கள். இதன் உண்மைக் காரணிகள் புலிகளுக்குப் பிரச்சாரம் ஆகிவிடும் என்பதால் வெளிநாட்டு ஊடகங்களையும் உதவி நிறுவனங்களையும் அரசு வெளியேற்றி வைத்திருக்கிறது.

இத்தகைய இரும்புத் திரைக்குப் பின்னால் அரசு பயங்கர ஆயதங்களையும் கொத்தணிக் குண்டுகளையும் ஆயிரக் கணக்கில் எறிகணைகளை வீசி இன அழிப்பைச் செய்கிறது. அதே வேளையில் 'புலிகளே தமிழ் மக்களைக் கட்டாயப் படுத்தி தடுத்து வைத்து தமக்குப் பாதுகாப்புத் தேடுகின்றனர்" என்ற பரப்புரையை உலகம் எங்கும் செய்து வருகிறது.; வன்னி மக்கள் பிரபாகரனின் பின்னால் நிற்பதில் உள்ள மர்மம் என்ன?

இதற்குப் பிரபாகரனை நேரில் கண்டு தெரிந்து கொண்ட தமிழர் அல்லாதவரின் கூற்றுகளைக் கவனத்தில் எடுப்பது தேவையாய் உள்ளது. 11.08.2008 இல் வெளியான ஸ்ரெயிட் ரைம்ஸ் என்ற இந்தியச் சஞ்சிகையில் வேலூர் மணி இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுடன் எடுத்த செவ்வியை வெளியிட்டுள்ளார். அதில் பிரபல இந்திய உளவுத் துறைத் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் இப்படித் தெரிவித்துள்ளார்.;

“கடந்த சில வாரங்களாக இலங்கைப் படைகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், அவர்கள் சண்டையில் வென்றாலும் போரில் வெற்றி கொள்வாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் (இலங்கைப் படைகள்) தமிழ் மக்களைத் தம் பின்னால் பெற்று விடவில்லை என்றே நினைக்கறேன். அவர்கள் வேறு பல நாடுகளில் உள்ளது போன்ற நிலையை விரும்புகிறார்களா? ஈராக் ஒரு நல்ல உதாரணம். தமிழரை உங்கள் பின்னால் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதையே நாம் சொல்ல விரும்புகிறோம்."

அடுத்து சிங்கள ஊடகரும் சந்திரிகாவின் உறவினருமான குமார் ரூபசிங்க தமது கட்டுரையில் தெரிவித்த கருத்துகளைப் பார்க்கலாம். 'எனது பார்வையில் அரசியல் பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வு ஆக முடியாது, பிரதேசங்களைப் பிடித்து விட்டால் மட்டும் போர் முடிந்து விடாது. போரை வெல்ல வேண்டுமானால் மக்களின் உள்ளங்களை வென்றாக வேண்டும். புலிகள் இயக்கத்தால் பிரதேசங்களை வெல்ல முடியாது போனாலும், படுமோசமான, பாரதூரமான, நீடித்த, துன்பகரமான அரசியல் முரண்பாடுகளை அரசு தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் கவரத் தவறும் நிலையில் மிகப் பெரும் தோல்வியைச் சந்திக்கும்.”

தலைவர்கள் சிலர் பிறரால் உருவாக்கப் படுகிறார்கள். இவர்கள் பிறரின் தேவைக்காக உழைக்கும் இவர்கள் உண்மை மக்கள் தலைவர்களாக இருக்க முடியாது. மக்களுக்கிடையே தாமாக உருவாகும் தலைவர்களே உண்மையான தலைவர்களாக இருக்க முடியும். இப்படி மக்களுக்குள் மக்களாக வளர்ந்து, மக்களுக்காகத் தலைவராக உருவானவரே பிரபாகரன்.

இந்தியக் காங்கிரஸ் இந்திய மக்களின் விடுதலையை முடக்க வெள்ளையாரால் தோற்றுவிக்கப் பட்டது. அதனைச் சரியாக அறிந்து போர்க் கோலம் பூண்ட தலைவர் நேதாஜி.

நேதாஜி போன்றே பிரபாவும் தமிழர் விடுதலைக் கூட்டணி வழி தவறிச் சிங்கள அரசால் பயன் படுத்தப் படுவது கண்டு தலைவராகத் தோற்றம் பெற்றவர். மாவோ, சே குவேரா, ஹோ சி மின், பிடல் காஸ்ரோ போல சாதாரண மக்களிடையே எந்த ஒரு புறச் சக்தியின் தூண்டுதலும் இல்லாது தலைவராக எழுந்தவர்.. இன்று வரை ஈழத் தமிழ் மக்களோடு, அவர்களின் மனத் தூண்டலின் வெளிப்பாடாக தன்னை ஆக்கிக் கொண்ட ஒரு தலைவனாக வாழ்ந்து வருகிறார். தமிழரின் உரிமைகளைத் தவிர வேறு எதற்கும் விலைபோகாத வைரமாகத் தம்மைப் பட்டை தீட்டிக் கொண்டவர்.

அவர் பிறவித் தலைவராக வாழ்ந்து கொண்டிருப்பதால் ஈழத் தமிழ் மக்கள் மட்டுமன்றி,; உலகத் தமிழ் மக்களாலும் தலைவராக மதிக்கப் படுகிறார், தாமாகவே அவரைத் தமது தலைவர் ஆக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை. அவரது எதிரிகள் எத்தனையோ வழிகளில் மக்களிடமிருந்து பிரித்து எடுத்து விட முயன்றனர். ஆனால், சத்தியம் என்பது மிகப் பலம் வாய்ந்தது என்பதை உறுதியாக நம்பும் தலைவரின் சிந்தனையும் செயற்பாடும் அத்தனை முயற்சிகளையும் தவிடு பொடி ஆக்கிவிட்டது. எதிரிகளின் பொய் உரைகளால் ஏமாந்தவரே பின்னர் உண்மை தெரிய வந்ததும் மீண்டும் மனம் மாறிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இந்த அனுபவம்தான் தமிழ் மக்களின் மனதில் தலைவர் பற்றிய கருத்தை சிலைபோல் உறுதியாக்கி வைத்துள்ளது.

சாதி, சமய பேதங்களுக்கு அப்பால் சிந்தித்துச் செயற்படும் மனித நேயமும், கலை நெஞ்சமும் கொண்டவர் தலைவர். அதனால் அவரைத் தெரிந்து கொண்டவர் அறிந்தோ அறியாமலோ அவரை பாராட்டத் தவறுவதில்லை. அவரைத் தெரியாதவர்கள் அப்படித் தெரிந்து கொண்டு பின் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் தலைவரைத் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள வைத்து விடுகின்றன. அப்படிக் கருத்துத் தெரிவித்தவர்களுள் வேற்று மதத்தவராக உள்ள கத்தோலிக்க மத குருமார் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், அருட்தந்தை கஸ்பர் ராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள்.

தலைவரால் ஈர்க்கப்பட்ட வணபிதா சிங்கராயர், கனகரத்தினம் அடிகளார் என்போர் இன்று எம்மிடையே இல்லை. இவர்கள் தம் உயிர் உள்ளவரை பிரபாகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் எமக்கு எத்தகைய சிறந்த தலைவர் கிடைத்துள்ளார் என்பதை உறுதிப் படுத்துகின்றனர்.

இறுதியாக இன்று இராணுவத்தால் சூழ்ச்சி மூலம் பறிக்கப் பட்ட மடுமாதா திருத்தலத் தந்தை எமிலியானுஸ் பிள்ளை வெளிநாட்டு ஊடகத்துக்குக் கூறியிருப்பதை கவனத்தில் எடுப்பது அவசியமாகத் தெரிகிறது.

“30,000 மக்கள் கொண்ட சமுதாயம் ஒட்டு மொத்தமாக ஓடிவிட்டது. இன்று இங்கு இருப்பவராகத் தமது பதுங்கு குழிகளிலிருந்து ஊடுருவிப் பார்க்கும் படையினர் மட்டுமே உள்ளனர். இந்தப் புனித தலம் தொடர் போர்க்களமாக மாறிவிட்டது. சென்ற தசாப்தத்தின் பெரும் பகுதி புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்தது. மடு ஒரு இராணுவ வெற்றியின் அடையாளமாக இருக்கிறது. எனவே இலங்கை இராணுவம் கடந்த ஜனவரி தொடக்கம் வடக்கே காட்டுப் பகுதியிலிருந்து பெரும் தாக்குதலைத் செய்தது,’’

இவற்றைப் படித்த பிறகாவது எமது தமிழ் மக்கள், திரு.வே. பிரபாகரன் அவர்களை எமது தமிழீழத்தின் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்வதில் பெருமை அடைவார்கள் என்பதில் சந்தேகமே இருக்காது.

-வன்னித்தம்பி தங்கரத்தினம்-


Comments