உக்கிரமான போர் எழுச்சி கொண்ட 2008 ஆம் ஆண்டு விடை பெற்று செல்வதற்கு இன்னமும் மூன்று தினங்களே உள்ளன. இந்த வருடத்தில் இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் மோதல்களிலும், அரசியல் வன்முறைகளிலும், இயற்கை அனர்த்தங்களினாலும் இழக்கப்பட்டுள்ளன.
2006ஆம் ஆண்டு போர் உக்கிரம் அடைந்த போதும் கடந்த மூன்று வருடங்களில் 2008 ஆம் ஆண்டே மிகவும் கொடூரம் நிறைந்த ஆண்டாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விடைபெற்று செல்கின்ற போதும் அது போரை அடுத்த வருடத்திற்கு விட்டு செல்கின்றது என்பதை மறுக்க முடியாது.
வன்னிப் பகுதியின் முக்கிய நகரங்களான கிளிநொச்சியை அல்லது முல்லைத்தீவை இந்த வருடத்தின் முடிவுக்குள் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் திட்டம் அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சில தினங்களில் நிறைவேற்றுமா? என்பது ஒருபுறம் இருக்க அது படைத் தரப்பை பாரிய நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. அரசின் இந்த திட்டம் வன்னியில் உள்ள பொதுமக்களுக்கும் பாரிய மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய தேவைப்பொருட்கள் போன்றவற்றின் விநியோகத்தை அரசு மட்டுப்படுத்தியுள்ளதுடன், அங்கு வான் தாக்குதல்களையும், எறிகணை மற்றும் உந்துகணை வீச்சுக்களையும் மிக அதிகளவில் மேற்கொண்டு வருகின்றது.
டிசம்பர் 6 ஆம் நாளில் இருந்து 25 ஆம் நாள் வரையிலுமான 19 நாட்களில் 60க்கும் மேற்பட்ட வான் தாக்குதல்களை இலங்கை வான் படை வன்னிப் பகுதியில் மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதல்களில் வான்படை பரசூட் மூலம் பாரிய குண்டுகளை வீசி வருவதனால் பொதுமக்கள் பெரும் அழிவுகளை சந்தித்து வருகின்றனர். இந்த குண்டுகள் தரையில் இருந்து 50 அடி உயரத்தில் வானில் வெடிப்பதனால் குண்டுச் சிதறல்கள் தரையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே கடந்த வாரங்களில் வன்னியில் நடைபெற்ற சமர்களில் படைத்தரப்பு அதிக சேதங்களை சந்தித்துள்ளது.
கடந்த 16 ஆம் நாள் நடைபெற்ற சமரினை தொடர்ந்து 20 ஆம் நாள் அன்று இரணைமடு பகுதியில் முன்நகர்ந்திருந்த இராணுவத்தின் 574 ஆவது பிரிகேட் படையணியின் முன்னணி பாதுகாப்பு அரண்கள் மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியிருந்தனர். இந்த மோதல்களில் இராணுவத்தினரின் இரண்டு கி.மீ நீளமான முன்னணி பாதுகாப்பு நிலைகள் கைப்பற்றப்பட்டதாகவும், 60 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் வரையில் காயமடைந்ததாகவும், இராணுவத்தினரின் 15 சடலங்களையும் பெருமளவான ஆயுத தளபாடங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும் இந்த மோதல்களில் தமது தரப்பில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள படைத்தரப்பு அரை கி.மீ தூரத்திற்கு படைத்தரப்பு பின்நகர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது என்பதனால் களத்தின் உண்மையான நிலைமைகள் அதிகம் வெளித்தெரிவதில்லை. எனினும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இலத்திரனியல் ஊடகங்கள் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் அதிகம். அதன் அதீத வளர்ச்சி காரணமாக போர் தொடர்பான முழு தகவல்களையும் எந்த ஒரு நாடும் இலகுவாக மறைத்து விடமுடியாது.
இந்த வகையில் கடந்த 16 ஆம் நாள் கிளாலி கள முனையில் நடைபெற்ற சமர் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. அன்றைய நடவடிக்கையின் போது படைத்தரப்பு நான்கு டிவிசன்களை பயன்படுத்த முனைந்த போதும் களநிலைமையின் பாதகமான நிலைமையை முன்கூட்டியே அறிந்து கொண்ட 55ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்னா சில்வா ஆரம்பத்திலேயே தனது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தார். எனினும் கிளாலி பகுதியில் நகர்ந்த 53 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்னா நடவடிக்கையை தொடரவே விரும்பினார்.
இந்த சமரின் போது 53 ஆவது படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்ததுடன், அதன் சிங்க றெஜிமென்டை சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் உயிருடன் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். ஏ நிசான் ரணசிங்கா (22) என்ற படை சிப்பாய் காலை 6.30 மணிக்கு காயமடைந்த போதும் அவரை கைவிட்டு விட்டு அவருடன் முன் நகர்ந்த படைஅணிகள் தளம் திரும்பிவிட்டன. மாலை 7.00 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் அணி ஒன்று இறந்த படையினரின் சடலங்களின் மத்தியில் படை சிப்பாய் ஒருவர் மூச்சுவிடுவதை அவதானித்து முதலுதவிகளை வழங்கிய பின்னர் அவரை களமுனை வைத்தியசாலைக்கு அவசரமாக அனுப்பியது.
அங்கு அவருக்கு தேவையான அவசரசிகிச்சைகள் வழங்கப்பட்ட போது தனக்கு குடிக்க நீர் தருமாறு ரணசிங்கா கேட்டுள்ளார். அதிகளவான குருதி வெளியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட அவருக்கு மேலதிக சிசிச்சைகள் வழங்கும் பொருட்டு விடுதலைப்புலிகளின் மருத்துவ பிரிவு அவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தது. அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ரணசிங்கா தெரிவித்த கருத்துக்கள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருந்தன. நவம்பர் 25 ஆம் நாள் மூன்று மாதகால அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்த ரணசிங்கா உடனடியாகவே யாழ்.குடாநாட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
பின்னர் மிகவும் உக்கிரமான களமுனைகளில் ஒன்று என கணிக்கப்படும் கிளாலி கள முனைக்கு டிசம்பர் 9 ஆம் நாள் அனுப்பப்பட்டதுடன், 16 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நகர்விலும் பயன்படுத்தப்பட்டிருந்தார். புதிதாக சேர்க்கப்பட்ட படையினர் மிகவும் குறுகிய காலப் பயிற்சியுடன் களமுனைகளில் பயன்படுத்தப்படுவது படைத்தரப்பின் பலவீனமாகவே கருதப்படுவதுடன் அது பல கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. இராணுவம் படை பலத்தை தக்கவைப்பதில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றதா? களமுனைகளில் இழக்கப்படும் அனுபவம் மிக்க படையினரின் வெற்றிடங்களை புதிய அனுபவமற்ற படையினரைக்கொண்டு படைத்தரப்பு நிரப்பி வருகின்றதா? என்ற கேள்விகளுடன் வலிமை மிக்க படையணிகளாக கருதப்பட்டு வந்த 53, 55, 57 மற்றும் 58 ஆவது படையணிகளின் வலிமைகள் தொடர்பாகவும் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதாவது இந்த படையணிகள் அனுபவமுள்ள படையினரை இழந்து வலிமை குன்றியுள்ளதாக காணப்படுவதாகவே கருத்துக்கள் தோன்றியுள்ளன. நடைபெற்று வரும் மோதல்களில் அதிகளவான படையினர் காயமடைந்தும் இறந்தும் களமுனைகளில் இருந்து அகற்றப்படுவதுடன், பெருமளவான படையினர் தப்பி ஓடி வருவதனாலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைப்பதில் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் உள்ள படையினரின் நிலைகளை தக்கவைக்கும் பொருட்டு கிழக்கில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் வன்னி நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதுடன், பெண் இராணுவத்தினரும் வன்னி களமுனைகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே கிளிநொச்சி நோக்கி மீண்டும் ஒரு பாரிய நகர்வை கடந்த திங்கட்கிழமை (22) அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தின் 58 மற்றும் 57 ஆவது படையணிகள் இணைந்து மேற்கொண்டிருந்தன. ஐந்து முனைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த நகர்வுகளில் உருத்திரபுரம் மற்றும் இரணைமடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் ஏனைய மூன்று முனைகளில் தொடர்ந்து சமர் நடைபெற்று வருவதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இதன் போது 100 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 250 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதல்களில் வான்படையினரின் எம்.ஐ24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் பங்குபற்றியிருந்தன. எனினும் குஞ்சுப்பரந்தன் பகுதியில் முன்நகர்வில் ஈடுபட்டுவரும் 582 ஆவது பிரிகேட் படையினருடனான மோதல்கள் பல நாட்களாக தொடர்வதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. பரந்தன் பூநகரி நெடுஞ்சாலையை ஊடறுத்து விடுதலைப் புலிகளால் அமைக்கப் பட்டுள்ள மண் அணைகளை கைப்பற்றும் நோக்கத்துடன் இராணுவம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆறு கி.மீ நீளமான இந்த மண் அணை பாதுகாப்பு முன்னரங்கில் 300 மீற்றர் பகுதியை கைப்பற்றியுள்ளதாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
குஞ்சுப்பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் 21 ஆம் நாள் வரையிலுமான 10 நாட்கள் நடைபெற்ற மோதல்களில் 200க் கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 53 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
பரந்தன் பகுதியில் உள்ள "எல்" வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போதே இந்த மோதல்கள் ஏற்பட்டிருந்தன. சில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடிகளாக உள்ளன. அங்கு விடுதலைப்புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர், மண் அணைகளுக்கு முன்பாக அகழிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவை நீரால் நிரம்பியுள்ளன.
மண் அணைகளுக்கும் அகழிகளுக்கும் இடையில் பொறிவெடி மற்றும் மிதிவெடி அபாயங்களும் உண்டு. செங்குத்தாக மேல் உயரும் மணல் அணைகளை தாண்டுவது கடினமானது. மண் அணைகளை படையினர் அண்மிக்கும் வரை காத்திருக்கும் விடுதலைப் புலிகள் கனரக துப்பாக்கிகள், பி.கே எல்.எம்.ஜி என்பன கொண்டு மூர்க்கமாக தாக்கி வருவதாக படைத்தரப்பில் இருந்து வெளிவந்த தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வார மோதல்களில் விடுதலைப்புலிகள் பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கான ஆயுத வினியோகம் சீராக இருப்பதாகவும் படைத்தரப்பின் புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ள நிலையில் 40 மீற்றர் நீளமான றோலர் படகு ஒன்றை முல்லைத்தீவில் இருந்து 70 கடல்மைல் தொலைவில் தாம் தாக்கி அழித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தாக்குதல் சம்பவம் நடந்த போது அந்த கப்பலில் இருந்த ஆயுத தளபாடங்கள் இறக்கப்பட்டு விட்டதாக பிறிதொரு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து 122 மி.மீ, 130 மி.மீ, 152 மி.மீ பீரங்கிகள், 81 மி.மீ மற்றும் 120 மி.மீ மோட்டார்கள், கனரக இயந்திர துப்பாக்கிகளுக்கான வெடிபொருட்கள், சிறிய ஆயுதங்கள் மற்றும் 60 மற்றும் 70 குதிரைவலு கொண்ட வெளி இணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்த விடுதலைப்புலிகள் அவற்றை பாரிய கப்பல் ஒன்றின் மூலம் மூல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பிற்கு கொண்டு வந்ததாகவும், இலங்கை நோக்கிய பயணத்தின் போது கப்பல் பல தடவைகள் கொடிகளையும், பெயரையும் மாற்றிக் கொண்டதாகவும் வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முதலில் விடுதலைப்புலிகள் அன்ரனோவ் 12 ரக சரக்கு விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் எனினும் அது கைகூடாததனால் அவர்கள் கப்பல் ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டனர் அல்லது அது அவர்களின் சொந்த கப்பலாக கூட இருக்கலாம் எனவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. கப்பல் முல்லைத்தீவுக்கு அண்மையான அனைத்துலக கடற்பரப்பை அடைந்து நங்கூரம் பாச்சி நின்றதும், அதில் இருந்த பொருட்கள் 40 மீற்றர் நீளமான றோலர்களிலும், சிறிய விசைப்படகுகளிலும் இறக்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று இலங்கைக்கு தகவல்களை வழங்கியிருந்தது. இலங்கை கடற்படையினரும், வான்படையினரும் மேற்கொண்ட இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோலர் கண்டறியப்பட்டது. ஆனால் பிரதான ஆயுதக்கப்பலை கடற்படையினரால் கண்டறிய முடியவில்லை. அது தவறவிடப்பட்டது அரசுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து படைத்தரப்பு விடுதலைப்புலிகளின் பலம் தொடர்பாக பல தவறான கணிப்புக்களை வெளியிட்டு வந்ததுடன், படையினரின் முன்நகர்வு தொடர்பான வலிமையான பிரசாரங்களையும் தென்னிலங்கையில் மேற்கொண்டு வந்திருந்தது.
ஆனால் வருடத்தின் இறுதிப்பகுதியில் களத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும், விடுதலைப்புலிகளின் வினியோக வழிகள் தொடர்பான தகவல்களும் அரசுக்கு சாதகமானதல்ல. அடுத்த வருடம் தொடரப்போகும் போர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற போரைப்போல இருக்கப் போவதில்லை. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த "வன்னி படை நடவடிக்கை' அடுத்த ஆண்டுக்கும் தொடரப்போகின்றது என்ற போதும், வலிந்த தாக்குதல்களில் படைத்தரப்பு களைப்படைந்துள்ளதாகவே தோன்றுகின்றது. தொடர்ந்து படை நடவடிக்கை ஏற்படுத்தி வரும் களைப்பும், சலிப்பும் ஒருபுறம் இருக்க தொடர்ச்சியான இழப்புக்களும் இராணுவத்தின் போரிடும் வலுவை கணிசமான அளவு குறைத்துவிட்டதாகவே வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் 3,000 பேரை படையில் சேர்க்க முடியும் என படைத்தரப்பு மார்தட்டி வருகின்ற போதும், அனுபவமும், சிறந்த பயிற்சியும் கொண்ட படையினருக்கும், புதிதாக களமுனையை காணப்போகும் படையினருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு. இதனை யாரும் மறுக்க முடியாது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இரணைமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வலிந்த சமரானது அவர்கள் வருங்காலத்தில் தாக்குதல் சமர்களையும், வலிந்த சமர்களையும் தீவிரப்படுத்த போவதை கட்டியம் கூறியுள்ளதுடன் அதற்கான படை பலம் அவர்களிடம் உண்டு என்பதும் படைத்தரப்புக்கு கசப்பான செய்தி.
இந்த வருடத்தின் இறுதியில் உக்கிரம் பெற்றுள்ள களமுனைகளும், தென்னிலங்கையின் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படும் அதிகளவான படையினரின் சட லங்களும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அதிகளவான காயமடைந்த படையினரும் கூறும் செய்தி ஒன்று தான் அதாவது தற்போதைய படை நடவடிக்கை 1997 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட "வெற்றி நிச்சயம்' படை நடவடிக்கையை விட மோசமானதொரு நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவது என்பது தான் அந்த செய்தி.
வேல்ஸிலிருந்து அருஷ்வீரகேசரி வாரவெளியீடு
Comments