இலங்கையில் தமிழர்கள் மீது நடக்கும் கொடூரமான தாக்குதலைத் தடுக்க விரும்பும் இயக்குநர் சீமானும், கொளத்தூர் மணியும், மணியரசனும் மத்தியில் உள்ள காங்கிரஸையும், ராஜீவையும் பற்றிப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்திபவன் மீது தாக்குதல் நடக்கிறது. உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
இன்னும் சிலரைக் கைது செய்யும் பட்டியலில் மும்முரமாக இருக்கிறது காங்கிரஸ். திருமங்கலம் இடைத்தேர்தலுக்குள் தங்களுடைய கூட்டணி சிறிதும் பலமிழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசோ, இலங்கை அரசுக்கு உதவு வதைக் கூட முன்பு செய்ய முடிந்தது. ஆனால், இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தனது குரலை உயர்த்த முடியவில்லை.
இந்தியக் கடலோரம் கரையேறும் அகதிகளாக ஒதுங்குபவர்கள் மீது படிகிற சந்தேகங்கள், ஈழம் பற்றிப் பேசுகிறவர்கள் ஒவ்வொருவர் மீதும் படிந்து கொண்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்குமிடையில் இங்கு நடக்கும் சச்சரவுகள்; தாக்குதல்கள்; கைதுகள் எல்லாம் இலங்கையில் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுவதற்கும், போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கும் கொஞ்சமாவது உதவுமா?
சிந்திக்கட்டும் சம்பந்தப்பட்டவர்கள்!.
நன்றி: குமுதம், Dec 31, 2008
Comments