உலகெங்கும் 60-ஆவது மனித உரிமை தினத்தை கடைப்பிடிக்கும் டிசம்பர் 10-ம் நாளில் நோர்வே பேர்கன் நகரில் தீப்பந்த ஊர்வலம் வேற்றின மக்களுடன் இணைந்து பேர்கன் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் ஊர்வலமானது மாலை 06-00 மணிக்கு பேர்கன் நகரில் அமைந்துள்ள மனித உரிமைகளுக்கான (Raftohuset) அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பித்தது. இவ் ஊர்வலத்தில் பெருமளவிலான தமிழ் மக்களுடன் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் பங்கு கொண்ட மக்கள் ஒர் கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைச் சித்தரிக்கும் பதாதைகளையும், குறிப்பாக கொத்தணிக் குண்டுகளுக்கு எதிரான பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர். அத்துடன் துண்டுப்பிரசுரங்கள் என்பன நோர்வேஜிய மொழியில் மக்களிற்கு கொடுக்கப்பட்டது. இதனால் நோர்வே மக்களின் கவனம் யுத்த முன்னெடுப்புகளுக்கு எதிராகவும் சமாதானத்திற்கு ஆதரவாகவும் இருந்தது.
ஊர்வலமானது நகரின் மத்திய பகுதி ஊடகச் சென்று (Rådhus) நகரசபை மண்டபத்தில் முடிவடைந்தது. அதன் பின் மண்டபத்தில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் ஒன்று கூடினார்கள். அங்கே வேறு நாடுகளில் அடக்கு முறைக்கு உள்ளாகும் மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர். அவர்கள் தமது உரையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் பல நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கடுமையாகக் கண்டித்தனர்.
சேசலிச இடது சாரிகட்சியை சேர்ந்து அமீர்பயான் உரையாற்ரிய போது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு உலக சமுதாயம் மூலம் தீர்வு காண தான் உதவுவதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து குருதிஸ், ஆப்கானிஸ்தான் மக்களின் பிரதிநிதியும் உரைநிகழ்தினார்.
இறுதியாக தமிழர் பிரதிநிதியின் உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. வெளியில் கடும் குளிர் நிலவிய போதும் சிறுவர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
Comments