சுழன்று வேகமெடுத்து கிளர்ந்தெழுந்து
பின் அடங்கி அமுங்கி மெல்ல நகர்ந்து
சற்றுக் கெம்பி சடுதியாய் தோன்றி மறைந்து..,
அசைந்து.., மறந்து..,
மீண்டும்.., தமிழகம் கொந்தளித்து
கொதித்துப்போய்க் கிடக்கிறது.
தற்போது, அதற்கு சரியான காரணம் இருக்கிறது. நியாயம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வலுவான பிடி இருக்கிறது. ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தோடும் அதன் இன்ப துன்பங்களோடும், வெற்றி தோல்விகளோடும் தன்னை இணைத்துப் பார்க்கும் தாய்த்தமிழகத்தின், உணர்வு என்பது எப்போதும் ஈரமாகவே இருந்திருக்கின்றது. இருந்துவருகின்றது.
"இடைப்பட்ட கடல் வற்றினாலும், எம் தமிழ் உறவுகளுடனான உறவு வற்றிப்போகாது? என்று தமிழகக் கடற்றொழிலாளி ஒருவர் அண்மையில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்ததுபோல், ஈழத்தமிழ் மக்களினதும், தமிழீழ மக்களினதும் உறவுநிலை, பிரிக்க எடுக்கின்ற சதிகளையும் தாண்டி ஆழமானது. தமிழகத்தின் அரசியல் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப, ஈழத்தமிழர் பிரச்சினை, முன்னிலைப்படுவதும், பின்தள்ளப்படுவதும், சற்று மறக்கடிக்கப்படுவதும், மழுங்கடிக்கப்படுவதும் கடந்தகால வரலாறுகளாயின.
எண்பத்தி மூன்று யூலைப் படுகொலைகளின் பிரதிபலிப்பாக, தமிழகம் கொண்ட போர்க்கோலத்திற்கு ஒப்பாக, தற்போது தமிழகம் உணர்வுமயமாகவும், உணர்ச்சிமயமாகவும் காணப்படுகின்றது. ஆளும் கட்சி உட்பட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் (குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சி மற்றும், சில தமிழர்விரோத குதர்க்கவாதக் கட்சிகள் தவிர) இன்று, களத்தில் இறங்கியிருக்கின்றன. மாணவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். சங்கங்கள், அமைப்புக்கள், போராட்டத்தில் இறங்கியுள்ளன. எங்கும் ஈழத்தமிழர் ஆதரவுக் குரல்கள், முழக்கங்கள்.
தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையம் தென்பையும் அளிக்கின்ற நிகழ்வுகள். கடந்தகால துயரச்சம்பவங்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட அரசியல்கள், பின்தள்ளப்பட்டு, யதார்த்த அரசியல் நடத்தவேண்டிய கட்டாயம். சூழ்நிலை. சூழ்நிலைக் கைதியாக மத்திய அரசு மாறிவிட்ட பரிதாபம். அதனுடன் அணிசேர்ந்திருப்பதால், ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் மாநிலக் கட்சிகள். இங்கே தீர்மானிப்பவர்களாக மக்கள் மாறிவிட்டனர். மக்களின் ஓட்டத்துடன், ஓடியே ஆகவேண்டும் கட்சிகளும். இடையில் ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது.
தமிழகத்தின் உணர்வுக் கொந்தளிப்பைத் தடுத்து நிறுத்த திட்டமிட்டு எழுப்பப்பட்ட சுவர். அது தற்போது, அடியோடு, சரிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய மத்திய அரசின், அயலறவுக் கொள்கை வகுப்பாளர்களின், நிரந்தர வரைபாக அமைந்திருந்த, சுதந்திர தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளாத, அதனைத் தடுத்துநிறுத்துகிற செயற்திட்டத்தின், ஒவ்வொரு அசைவுகளுமே கடந்தகால வரலாறுகளாயின. தமிழக மக்களை, கட்சிகளை ஒருவிதமான அச்சுறுத்தல் நிலையில் வைத்திருந்தபடி, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும், மௌனமாய்? இருத்தல் என்ற போர்வையிலும், இந்திய மத்திய அரசு ஈடுபட்டுவந்தமை, உணரப்பட்டமை என்பதிலும் பார்க்க, ஆதாரத்துடன் உணர்த்தப்பட்டமை நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளது.
"திருடன் காலிலே தேள் கொட்டியது'' போலாயிற்று வவுனியா, சிங்களப்படை மீதான விடுதலைப் புலிகளின் மூவழித் தாக்குதல். இந்தத் தாக்குதலில், சிறீலங்காப் படையினர் பெரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். ஒரு முக்கியம் வாய்ந்த கட்டளை பீடத்தையே மாற்று இடத்திற்கு கொண்டு செல்லவேண்டிய அளவிற்கு, சிங்களம் பெரும் இழப்பையும் அழிவையும் சந்தித்தது. ஆனால், அத்தாக்குதலில், இரு இந்தியப் பிரைஜைகள் காயங்களுக்கு உள்ளானதன் மூலம், "கள்ளத்தனமாக'' தமிழின அழிப்பிற்கு உதவி செய்தவரும் இந்திய அரசு சந்தித்துள்ள நெருக்கடி, மிகப் பெரிதானது.
அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கவல்லது. தமிழக மக்களுக்கும், தமிழக கட்சிகளுக்கும், தமது உணர்வுகளை அச்சமின்றி வெளிப்படுத்த, ஒரு சந்தர்ப்பத்தை இந்திய அரசு இதன்மூலம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கேள்விகேட்கும் அளவிற்கு நிலைமையின் தீவிரம் சென்றிருக்கின்றது. "தமிழக இளைஞர்களை மாற்று வழியில் செல்லத் துாண்டாதீர்கள்'' என, சு.ப.வீரபாண்டியன் எச்சரிக்கின்றார். "இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றப்போய், இந்தியாவின் இறையாண்மையை பறிகொடுத்துவிடாதீர்கள்'' என்று எச்சரிக்கின்றார் வைகோ. தமிழ் மக்களுக்க எதிரான தமது போருக்கு இந்தியாஆற்றிவரும் பங்களிப்பை, சிறீலங்கா பகிரங்கமாகவே பாராட்டிவருகின்றது.
இந்தியாவின், உதவியுடனும், ஒத்துழைப்புடனும் பங்களிப்புடனுமே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை, தமது அரசு முறியடித்துவருவதாக, சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம பாராட்டி நன்றி தெரிவிக்கின்றார். இந்தியாவைச் சேர்ந்த இருநூற்றி அறுபத்தைந்து பேர், சிறீலங்காவின் படையினருக்கு உதவுவதற்காக, சிறீலங்காவில் தங்கியிருந்து செயற்பட்டுவருகின்றனர் என்கின்ற உண்மை ஒருபுறம் இருக்க, ரஸ்சிய நவீன போர் விமானங்களை ஓட்டி, தமிழர் வாழும் பகுதிகளில் குண்டு வீச்சில் ஈடுபடுவதில், சிறீலங்கா விமானப்படையினருடன், இந்திய விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர் என்கின்ற தகவல், தற்போது வெளிவந்திருக்கின்றது.
இலங்கையில் நடைபெறும் போரில் சிங்களப்படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் செல்லவில்லை என, இந்திய தரப்பில் சமாளிக்கப்படுகின்றது. அவர்கள் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண பொதுமக்கள் என, நிரூபிக்க இந்திய அரசு முற்படுகின்றது. "அவர்கள் இந்திய இராணுவத்தைச் சேர்தவர்கள் அல்லர். அவர்கள் சிவிலியன்கள். அவர்களாகவே சென்றிருக்கின்றனர் என்பது உண்மையானால். இந்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதுமில்லை என்பதும் உண்மையானால், அதே உரிமை எங்களுக்கும் உண்டு.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் போராட தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் செல்வதையும் இந்திய அரசு தடுக்கமுடியாது'' என்று எழுதியிருக்கிறது "தென் செய்தி'' ஏடு. தமிழகத்தின் கடந்த கால மௌனம், தமிழின விரோ திகளுக்கு, மகிழ்ச்சியையும், தென்பையும், தந்ததென்பது மறுப்பதற்கில்லை. கட்டற்ற, இனஅழிப்புப் போருக்கு சிங்களத்திற்கு துணைசெல்ல அவர்களை துாண்டவும் அது வழிவகுத்தது. இன்று, தமிழகம் தன் மௌனம் கலைத்து, விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. தமிழினத்தின் எதிரிகள் அச்சப்பட.
Comments