குரங்கின் கையில் கொள்ளிக் கட்டை சாணிக்குவியலில் இடிவிழுந்தால் அது தங்கமாகிவிடும்’, ‘முதிர்ந்த நாகப்பாம்பு வயிற்றில் நாகரத்தினம் இருக்கும்’ என்பதை நம்புகிறவர்களுக்கு அறிவியல் தெரியாது. அந்த அப்பாவிகளிடம் கோயில் கருவறைக்குள் கண்ட சாதிக்காரர்கள் நுழைந்தால் இல்லாத சாமி கூட செத்துப்போகும் என்ற வஞ்சகர்களின் வாதம் எடுபடும். அப்படி வஞ்சகம் பேசுகிறவர்கள் தான் இங்கே எவராவது தேசியஇனங்களின் உரிமை பற்றிப் பேசினால் ‘இந்திய இறையாண்மைக்கு ஆபத்து’ என்றும், ஈழத்தமிழர் மீதான படுகொலைகளை நிறுத்தக்கோரினால் ‘இலங்கை இறையாண்மையில் தலையிடாதே’ என்றும் வீரிடுகிறார்கள். இதுவும் வஞ்சகமான வாதம் தான். ஆனால் சாணியில் இடி விழுந்தால் தங்கமாகும் என்பதை நம்பும் பாமரத்தனமிக்க மக்கள் இந்த வஞ்சகர்கள் வாதத்தில் உண்மை இருப்பதாகவே நம்பி, அச்சத்துக்கு ஆளாகிப் போகிறார்கள்.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனப்படுகொலை உச்சத்தை அடைந்துவிட்டது. முப்படைகளையும் பயன்படுத்தி ஈழத்தமிழ் மக்களை சிங்களப் பேரினவாத அரசு கொன்று குவிக்கிறது. இலங்கை அரசுக்கு நிதியும், இராணுவப் பயிற்சியும், போர்த் தளவாடங்களும், போர் கப்பல்களும் அள்ளிக் கொடுத்த தில்லி அரசு, தமிழகமக்கள், தொடர் போராட்டங்கள் நடத்தியும், ‘போரை நிறுத்துமாறு’ சிங்கள அரசிடம் கோர மறுக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசின் தமிழர் எதிர்ப்புப் போக்கைக் கண்டித்தும் பேசிய வைகோ, கண்ணப்பன் மற்றும் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் சிறையிலிடப்பட்டார்கள்.
ஈழத்தமிழர் மீதான இராணுவத்தாக்குதலை நிறுத்தக்கோரி போராடும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் இன்றுவரை கைது செய்யப்படுகின்றனர். இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்றும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்றும் குற்றம்சாட்டி அச்சுறுத்துகிறார்கள். இறையாண்மை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாத சாமானிய மக்கள் இக்குற்றச்சாட்டுகளின் தவறான அடிப்படையை அறிந்து கொள்ளாமல் அதிர்ந்து போகிறார்கள். ஏதோ செய்யக் கூடாத ஒன்றை தமிழ்உணர்வாளர்கள் செய்து விட்டார்களோ என்று அச்சப்படுகிறார்கள். இந்தியாவில் தேசிய இன உரிமை கோரினால் தண்டிக்கும் அளவிற்கு சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன.
கோளாறு செய்யும் இந்திய தேசியவாதிகள்
இந்தியா என்ற நாடு இறையாண்மை உள்ள ஒரு நாடு. இந்த இந்தியா என்ற நாட்டின் இறையாண்மை இந்தியா என்ற பரந்து விரிந்த நிலப்பரப்புக்கு உரியதாகக் கருதிவிடக்கூடாது. இறையாண்மை என்பது ஒரு நாடு முழுமையாக இருக்கும் போதும் இருக்கும் அந்த நாட்டிலிருந்து தேசிய இனங்கள் பிரிந்து சென்று தங்களுக்கான தேசங்களைப் படைத்துக் கொள்ளும் போதும் அவை இறையாண்மையோடு இருக்கும். பல தேசிய இனங்கள் வெளியேறிய பிறகு, எஞ்சியுள்ள நிலப்பகுதி அங்கு வாழும் தேசிய இனத்தின் இறையாண்மையுள்ள நாடாகத் திகழும்.
இறையாண்மை : தேவையான புரிதல்
இறையாண்மை (Sovereignty) எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள்(Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. ‘தேசம்’ என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தாம் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது.
ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேசிய இன மக்களுக்கே இறையாண்மை உடைமையானது என்பதும் தான் இன்றைய உலகளாவிய அரசுமுறைகளின் சாரம் ஆகும். 19 ஆம் நூற்றாண்டில், ஜெர்மனியின் சிதறிக்கிடந்த பகுதிகளெல்லாம் இணைக்கப்பட்டு ஜெர்மனி என்ற ஐக்கியப்பட்ட தேசம்(1871) உருவாக்கப்பட்டது. அது போலவே இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்டு இத்தாலி தேசம்(1871) உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல தனித் தேசங்கள் எழுந்தன. 1924 ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் 26 நாடுகள் இருந்தன.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் (1939-1945) நாடுகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இது எவ்வாறு நிகழ்ந்தது? முன்பு இருந்த பல்தேசிய இன நாடுகளிலிருந்து மொழியடையாளத் துடன் தேசிய இனங்கள் பிரிந்து சென்று தங்கள் தாயக நிலப்பரப்பின் மீது தனித்தேசங்களைப் படைத்துக் கொண்டதால் விளைந்தது. அந்த தேசங்கள் இறையாண்மை கொண்ட தேசங்களாக விளங்குகின்றன.
இன்றைய அரசு முறைகளின் அடிப்படைக் கூறுகள் இரண்டு : 1. ஜனநாயகம் (மக்களுக்கே அதிகாரம்) 2. தேசிய இனங்களுக்கே இறையாண்மை (அதை அந்த தேசத்தில் அரசாங்கம் ஒன்றை நிறுவி அந்த தேசிய இனம் நடைமுறைப்படுத்தும். முறையற்ற வகையில் அரசு செயல்பட்டால், அந்த அரசிடமிருந்து இறைண்மையைப் பிடுங்கி வேறு ஒரு அரசை ஏற்படுத்தி செயல்படுத்தும்). பல தேசிய இனங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில், ஒரு தேசிய இனம் தனது மொழி, பண்பாடு, இனநலன் ஆகியவை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், தன் இறையாண்மையைக் கையிலெடுத்துக் கொண்டு தன் தாயகத்தை அந்த பல்தேசிய நாட்டிலிருந்து பிரித்துத் தனிதேசத்தைப் படைத்துக் கொள்ளும். இது ஐரோப்பாவில் தோன்றி உலகம் முழுவதும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை.
இனத்தின் இறையாண்மை - நாட்டின் இறையாண்மை :
ஒரு பல்தேசிய நாட்டில் உள்ள தேசிய இனங்கள் தனித்துப் போக விரும்பினால், அதை அனுமதிப்பது தான் ஜனநாயகம். வாக்குரிமை அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உதிரிகளாக உடன் வைத்துக் கொண்டு, ஜனநாயக முத்திரையுடனேயே, ஒரு பெருந்தேசிய இனம் தன் நலத்திற்கு ஏற்ப சட்டங்களை நடைமுறை படுத்துவதும், எதிர்க்குரல் எழுப்பும் தேசிய இனங்களை சட்டங்களின் மூலமும், படைபலம் மூலமும் நிர்மூலம் செய்வதும் ஜனநாயகத்தின் பேரால் நடைமுறை படுத்தப்படும் எதேச்சாதிகாரமே ஆகும். இதுதான் இந்தியாவிலும், இலங்கையிலும் நடந்து கொண்டு வருகிறது. ஒடுக்கப்படும் தேசிய இனத்;தில் தேர்தல் கட்சிகளாக இருந்து கொண்டு நாடாளுமன்றம் செல்லும் பிரதிநிதிகள் ஒடுக்கும் தேசிய இனத்தின் சர்வாதிகார முகத்துக்கு ஜனநாயக முகமூடி அணிவித்து விடும் வேலையை மட்டுமே செய்கிறார்கள் அதற்கான பலனையும் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு தேசிய இனம் பிரிந்து சென்றால் ஒரு நாட்டின் இறையாண்மை என்னாவது என்ற கூக்குரலே பொருளற்றது என்பதை சில வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு புரிய வைக்கலாம்.
ஒரு இனத்துக்குத்தான் இறையாண்மை சொந்தமானது. அந்த இறையாண்மை, அது வாழும் நாட்டினுடையதாக உணரப்படும். ஒரு இனம் நிலையானது நாடு(State) என்பது அழியக்கூடியது, மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது. ஒர் இனம் தனது நாட்டை இழந்து அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும்கூட அதன் இறையாண்மை அதனுடனேயே இருக்கிறது. அந்த இனம் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்க்கிக் கொள்ளும் போது, அந்த நாடு இறையாண்மை மிக்க நாடாக விளங்குகிறது.
தங்கள் தாயகத்தை இழந்து உலகம் முழுவதும் உரிமைகள் இழந்து பரவிக் கிடந்த யூதர்கள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1948 இல் ஏகாதிபத்திய நாடுகளின் உதவியோடு இஸ்ரேல் என்ற அதுவரை உலக வரைபடத்தில் இல்லாத, ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்ரேல் இன்று ஒரு இறையாண்மை மிக்க நாடு. இந்த இறையாண்மை, இதுவரை வரைபடத்திலேயே இல்லாதிருந்த இஸ்ரேலுக்கு எங்கிருந்து வந்தது? அது ஒரு இனத்திற்கே உரித்தான -- பிரிக்கவியலாத பண்பு ஆகும்.
இன்று தங்கள் நாட்டை இழந்துவிட்ட பாலஸ்தீனியர்கள், 1967 இல் ஜோர்டானிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜோர்டான் நதியின் மேற்குக்கரை மற்றும் எகிப்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட காஸா பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அது ஒரு தேசிய இனமாக ஏற்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அவையில் முழு உறுப்பினராக இல்லாவிடிலும் பார்வையாளர் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் தனது நாட்டைப் பிரகடனம் செய்யும் போது அது ஒரு இறையாண்மையுள்ள நாடு ஆகும். இந்த இறையாண்மை எங்கிருந்து வருகிறது? பாலஸ்தீன தேசிய இனத்திடமிருந்து வருகிறது.
முதல் உலகப் போருக்கு முன் ஆஸ்திரியா - ஹங்கேரி இறையாண்மையுள்ள ஒரே நாடு. 1919 இல் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் தனித்தனி நாடுகளாயின. இறையாண்மை என்ன ஆனது? அந்தந்த தேசிய இனத்திற்கு உரிமையானது. முன்னூறு ஆண்டுகள் ஆஸ்திரியப் பேரரசுக்குள் அடங்கியிருந்த செக்கோஸ்லேவியா 1918 இல் இறையாண்மையுள்ள நாடானது. அது 1993 இல் மிக அமைதியாக, செக் குடியரசும் ஸ்லோவேகிய குடியரசுமாகப் பிரிந்து தனி இறையாண்மையுள்ள நாடுகளாக விளங்குகின்றன. இப்படித்தான், யூகோஸ்லாவியா ஒரு இறையாண்மையுள்ள பல்தேசிய இன நாடாக (1946) விளங்கியது. இதிலிருந்து, 20 இலட்சம் மக்கள் தொகையுடைய ஸ்லோவேனியா 1991 இலும், 20 இலட்சம் மக்கள் தொகையுடைய மாசிடோனியா 1993 இலும் 44 இலட்சம் மக்கள் தொகை கொண்ட குரோயா, 40 இலட்சம் மக்கள் தொகை கொண்ட போஸ்னியா, 104 இலட்சம் மக்கள் தொகைக் கொண்ட செர்பியா ஆகியவை 1994 இலும் வெளியேறித் தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக மாறின.
மேலும் 2007 இல் செர்பியாவிலிருந்து 8 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மாண்டிநிக்ரோவும், 2008 இல் 20 இலட்சம் மக்கள் தொகையுடன் கொசாவாவும் பிரிந்து சென்று தனித்தனி இறையாண்மை கொண்ட நாடுகளாக விளங்குகின்றன. செக்கோஸ்லோவேகியாவின் இறையாண்மை, யூகோஸ்லாவியாவின் இறையாண்மை என்னானது என்று எவரும் கேள்வி எழுப்பவில்லை.
1917 ஆம் ஆண்டுப் புரட்சிக்குப்பின், 1923 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியம் ஓர் இறையாண்மையுள்ள நாடாக விளங்கியது. தேசிய இனங்களின் இறைமை அரசியல் சட்டப்படியே ஏற்பளிக்கப்பட்டிருந்தது. 1991 இல் தேசிய இனங்கள் பிரிந்து இறையாண்மையுள்ள குடியரசுகளை நிறுவிக் கொண்டன. சோவியத் ரஷ்யாவின் இறையாண்மை என்னாவது என்று எவரும் கேள்வி எழுப்பவில்லை. மானுட வர்க்கத்தின் அலகுகளாக தேசிய இனங்கள் வளர்ச்சியடைவதும் தங்கள் தேசங்களை நிறுவிக் கொள்வதும், தங்கள் இனநலன் பேண ஓர்அரசை நிறுவிக் கொள்வதும், அதில் தவறும் அரசை தூக்கியெறிந்து மக்கள் நலம் நாடும் அரசை நிறுவிக் கொள்வதும் தற்கால வரலாற்றின் போக்கு ஆகும்.
தேசம் என்றால் என்ன?
நாடு (State) என்பது அரசு, இறைமை இவற்றுடன் ‘ஒரு மக்கள்’ வரையறுக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியில் வாழ்வதைக் குறிக்கும். நாடு என்பதில் நான்கு கூறுகள் அடங்கி இருக்கின்றன. அவை : ஒரு மக்கள் (a People), நிலப்பகுதி (Territory), ஓர் அரசு (Government), மற்றும் இறைமை அல்லது இறையாண்மை(Sovereignty). ஒரு நாடு ஒரு மக்களால் உருவாக்கப்படுகிறது என்றால் அது ஒரு தேசிய இனத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஆனால் ஒரு நாடு எவ்வளவு பெரியதாகவும், எத்தனை மொழியினங்களைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
தேசம் அல்லது தேசிய இனம் என்பது ஒரு மொழியைத் தம் அடையாளமாக, பொதுமொழியாகக் கொண்ட, தமக்கான நலன்களை அல்லது பாதிப்புகளை பொதுவில் கொண்ட, மரபுவழி உறவு உடைய வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு மக்கள் சமூகமாகும். ‘யேவழைn’ என்ற ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ ஆகிய இரண்டையும் குறிக்கும். ஜே.வி.ஸ்டாலின், ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம் என்று வரையறுத்தார் : 1. ஒரு பொது மொழி. 2. ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி 3. ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு 4. பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘நாம் ஓரினம்’ என்ற உளவியல், இவற்றைக் கொண்டு வரலாற்று வழி நிலைத்துவிட்ட மக்கள் சமுதாயமே தேசம் ஆகும்.
இந்தியா ஒரு தேசமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே விடை. இந்தியா ஒரு நாடு; பல்தேசிய இன நாடு. பல தேசிய இனங்கள் தங்கள் தாயகப்பகுதிகளில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு. இந்தியாவை ஒரு தேசம் என்று அழைப்பவர்கள் அரசியல் அறிவியல் அறியாதவர்கள்; அல்லது அறிந்திருந்தும் பொய் பேசும் நேர்மையற்றவர்கள்.
இரட்டைக் குடியரிமை ஏன்?
பலதேசங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டாட்சியை (Federation) உருவாக்கும் போது இந்த குடியுரிமை பிரச்சினை எழுகிறது. தேசங்கள் தான் முதன்மையானவை. அவை ஒன்று சேர்ந்து உருவாக்கும் ‘Federation' இரண்டாம் நிலையுடையதுதான். வட அமெரிக்காவில், 13 குடியேற்றப் பகுதிகள் ஆங்கிலக் காலனிய ஆட்சியைத் தூக்கியெறிந்து விடுதலை பெற்றன. அவை தங்களது தனி உரிமையை(State’s Rights) விட்டுக்கொடுக்காமல் கூட்டாட்சியை உருவாக்கின. இவ்வளவிற்கும், அந்த 13 குடியேற்றங்களும் மண்ணின் மைந்தர்களுடையவை யல்ல் அவர்கள் குடியேறிய வந்தேறிகள் தாம். ஆனாலும் அவர்களுடைய தனித்துவ உரிமைகள் ஏற்கப்பட்டு அமெரிக்கக் கூட்டாட்சி உருவாக்கப்பட்டது. ஆகவே அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமை(double Citizenship) அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமெரிக்கனும் முதலில் தன் நாட்டின் (மாநிலம்) குடிமகன்; அதன்பிறகு அவன் அமெரிக்கக் குடிமகன். இவ்வாறு இரண்டு குடியுரிமை ஏற்கப்பட்டால் தான் அது கூட்டாட்சி (Federation) ஆகும். சுவிட்சர்லாந்திலும் கூட இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். தொன்மையான தமிழினத்திற்கு இங்கே தனி அடையாளம் குடியுரிமை மறுக்கப்படுகிறது. இந்தியாவில் எந்தத் தேசிய இனத்தின் அடையாளமும் ஏற்கப்படவில்லை. அந்தத் தேசங்களுக்குத் தாயக உரிமை கூட இந்திய அரசியல் சட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே குடியுரிமை தான். அது இந்தியக் குடியுரிமை. ஒரு தேசிய இனத்தின் அடையாளமும், குடியுரிமையும் அதன் இறையாண்மையும் ஏற்கப்படுவது தான் ஜனநாயகத்தின் சாரம். இவற்றை ஒட்டு மொத்தமாக மறுத்துவிட்டு, ஆரியம், இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பன – பனியா ஆதிக்கத்தின் களமாக இந்தியத் துணைக் கண்டத்தை உறுதி செய்வது இந்திய “ஜனநாயகத்தின்”; சாரம்.
இந்தியாவும் 2003 - இல் இரட்டைக் குடியுரிமை வழங்கியது. இங்குள்ள தேசிய இனக் குடிமக்களுக்கு அல்ல. இந்தியாவிலிருந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி செல்வச் சீமான்களாக வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்று குறிப்பிடப்படும் மேல்தட்டு இந்திய வம்சா வழியினருக்கு, முன்னமே அமெரிக்கக் குடிமகன்களாக இருக்கும் நிலையிலும் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்தியா வரத் தேவையில்லை. இந்தியாவுக்கு ‘விசுவாசம்’ காட்டத் தேவையில்லை. ஆனால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கலாம் தொழில் தொடங்கலாம்; ஆறு குளங்களைக்கூட முடிந்தால் கைப்பற்றலாம். இந்தியாவில் பிறந்த குடிமக்களுடைய உரிமைகளில் எள்ளளவும் குறையாத உரிமை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கப் புரட்சி பேசும் கட்சிகளெல்லாம் இந்த உலகப் பெரு முதலாளிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கி, இந்திய வளங்களைத் தாரை வார்ப்பதை ஆதரித்து நின்றார்கள் என்பதும் வரலாறு தான். பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இரட்டைக் குடியுரிமை மசோதாவை (2000) காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது.
இந்தியாவில் தேசிய இனங்களின் அடையாளமும், குடியுரிமையும், தேசிய இறையாண்மையும், தேசிய இனங்களின் தாயக உரிமையும் ஏற்கப்படும் வரை, இந்திய அரசியல் சட்டம் ஒரு ஜனநாயக விரோத, ஒற்றையாட்சி அரசியல் சட்டமே ஆகும்.
இறையாண்மை : வரலாறும் வரையறையும்
ஆங்கிலத்தில் ‘Soveignity’ என்று குறிப்பிடப்படும் சொல் ‘Supreme Powers’ உச்ச இறைமை அதிகாரம் என்று பொருள் படும். ஒரு நாட்டின் அரசுக்கு அந்நாட்டின் மீதுள்ள முழுமுதல் அதிகாரம் என்பது இதன் பொருள். நாட்டின் நான்கு அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான இறையாண்மை மிகவும் சிக்கலான ஒரு சொல் ஆகும்.
பிரெஞ்சு எழுத்தாளரான ஜீன் போதின் (Jean Bodin) தமது Republic (1576) என்ற நூலில் இந்த சொல்லை முதன்முதல் பயன்படுத்தினார். தாமஸ் ஹாப்ஸ்(1588-1679), ஜான் லாக்(1632- 1704) போன்ற ஆங்கிலேய அரசியல் அறிவியலாளர்கள், ‘நாடு எவ்விதம் தோன்றியது?’, ‘அரசு வந்தவிதம் என்ன?’ என்பது குறித்துப் பேசும் போது ‘சமுதாய ஒப்பந்தம்’(Social contract) பற்றிப் பேசினார்கள். தொடக்க கால இயற்கை நிலையில் மக்களுக்குத் தோன்றிய பிரச்சினைகளும், அதைத் தீர்த்துக் கொள்ள அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை எட்டி, ஓர் அரசைப் படைத்துக் கொண்டமையும் பற்றிப் பேசினார்கள். மூன்றாவதாக சமுதாய ஒப்பந்தம் பேசியவர் பிரெஞ்சு சிந்தனையாளர் ரூசோ(1712-1778). ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் ஏனைய இருவரிடமிருந்து மாறுபட்டது. முழுமையான இறையாண்மையை (Absolute Sovereignty) மன்னனுக்கு உரித்தானதாகக் காட்டிய தாமஸ் ஹாப்ஸிடமிருந்தும், ‘அரசை சமூகமே உருவாக்கியது, ஆகவே அரசை எதிர்த்து மக்கள் புரட்சி செய்யலாம்’ என்றுகூறி அரசையும், சமூகத்தையும் இறையாண்மை உடையவையாகக் காட்டிய ஜான் லாக்கிடமிருந்தும் மாறுபட்ட சிந்தனையை அளித்தார்.
ரூசோ இப்படிக் கூறினார்: தொடக்க கால மக்கள் உன்னதக் காட்டுமிராண்டிகள் (Noble Savages); கால ஓட்டத்தில் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தான சூழல் உருவானது; ஆகவே மக்கள் சமூகம் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தது அதன்படி சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளை சமூகத்திடம் ஒப்படைத்தனர் ஓர் அரசியல் சமூகம் உருவானது. அந்த சமூகத்தின் பொது விருப்பம் (Social Contract) இறையாண்மை உடையது. அந்த ‘பொது விருப்பம்’ என்பது தனிமனிதர்களின் விருப்பமும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் விருப்பமும் ஆகும்.(அது பெரும்பான்மையானவர் விருப்பம் அல்ல). அது பொது நலன் நாடும் விருப்பம் ஆகும். அதுவே ஒவ்வொருவரின் உண்மையான விருப்பம் என்று ரூசோ கூறினார். பொது விருப்பமே, ஒரு நிர்வாக எந்திரத்தை, அரசைப் படைத்தது. அரசு என்பது பொது விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு நிர்வாகக் கருவிதான். அது இறையாண்மை உள்ள மக்களால் உருவாக்கப்படுகிறது. அரசு என்ற முகவரை(Agent) மக்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்று ரூசோ கூறினார்.
சட்டங்கள் என்பவை பொது விருப்பத்தின் வெளிப்பாடுகளே. ரூசோ இவ்விதம் மக்களின் இறையாண்மையயை (Popolur Sovereignty) உயர்த்திப் பிடித்தார். ரூசோவின் சிந்தனைகள் பிரெஞ்சுப் புரட்சியையும்(1789), அமெரிக்க விடுதலைப் போரையும் (1775-1783) உந்தி உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன. பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பா முழுவதும் ‘தேசிய’ உணர்ச்சியை பல்வேறு மக்களிடம் உசுப்பியது. அதைத் தொடர்ந்து ஐரோப்பியப் பேரரசுகளிடமிருந்து விடுபட்டு தேசங்கள் எழுந்தன. ரூசோ பேசிய மக்களின் இறையாண்மை தேசங்களுக்கான இறையாண்மையாகவே இருந்தது. ஒவ்வொரு மக்களும் (தேசம்) பிரதிநிதிகள் மூலமாக அன்றி, நேரடியாகவே தங்களை ஆண்டுகொள்ள வேண்டும் என்று கருத்தறிவித்தார். மக்களுடைய இறையாண்மையை வேறொரு அமைப்பு பெறமுடியாது என்பது அவரது எண்ணம். ஐரோப்பாவில் ரூசோவின் சிந்தனைகள் ‘தேசிய இறையாண்மை’ (National Sovereignty) என்ற கோட்பாட்டு வடிவத்தைப் பெற்றது.
ஒவ்வொரு தேசிய இனமும் தன் இறையாண்மையைத் தானே கொண்டிருக்கிறது. ரூசோவின் ‘பொது விருப்பம்’ கோட்பாடு, ஒரே மொழி, ஒரே தேசிய இனம், குறுகிய பரப்பு, மக்களே நேரடியாக அரசில் பங்கு பெறுதல் ஆகியவற்றுக்குச் சார்பாக இருந்தமையால், அது தேசங்களின் இறையாண்மை கருத்தாக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. National Sovereignty என்பது ஒரு Collective Sovereignty (கூட்டு இறையாண்மை) ஆகும். ஒவ்வொரு மனிதனும் இறைமை உள்ளவன் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மீது, தன் உடல் மீது முழு உரிமை இருக்கிறது. இது Personal Liberty (ஆள் உரிமை அல்லது ஆளுடைமை உரிமை) என்று கூறப்படுகிறது. தான் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதுவே மனிதனின் ”Self determination “உரிமை ஆகும். இது தனிமனிதனின் இறையாண்மையைக் குறிக்கிறது.
ஒரு மனிதனுக்கு எது நல்லதோ அதுவே அவன் இனத்திற்கும் நல்லதாக அமைகிறது. தமிழில் கல்வி என்பது ஒரு தமிழருக்கு மட்டுமின்றி தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நல்லதாக அமைகிறது. ஆகவே ஒரு தேசிய இனம் என்பது ஒரு பெரிய விரிவாக்கப்பட்ட மனித உரு (Expanded Self) போன்றது. ஓரினத்த்தின் இறையாண்மை (National Sovereignty) என்பது ஒரு கூட்டு இறையாண்மை ஆகும். தேசிய இனத்தின் இறையாண்மையை மறுப்பது என்பது அந்த இனத்தின் ஒவ்வொரு மனிதனின் இறையாண்மையை மறுப்பது ஆகும். இது ஜனநாயகத்தின் சாரத்தையே மறுப்பது ஆகும். ஒரு தனிமனிதனுக்குகு தன் தீர்மானிக்கும் உரிமை அல்லது தன்னுரிமை ( Selff-Determination) உண்டு என்றால், அதே உரிமை அந்த்த தேசிய இனத்துக்கும் உண்டு. இதை உலகப் பிரகடனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
தேசிய இறையாண்மை என்ற சொல் முதன் முதலாக பிரெஞ்சுப் புரட்சியின் போது வெளியிடப்பட்ட ‘மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனத்தில்’ (Declaration of the Rights of Man and Citizen) தான் பயன்படுத்தப்பட்டது. தேசிய இறையாண்மையும் மக்கள் இறையாண்மையும் (Popular sovereignty) ஒன்றல்ல. தேசிய இன மக்களிடம் இறையாண்மை சிதறிப்பரவிக் கிடக்கிறது என்பது பொருள் அல்ல. அதற்கு மாறாக ‘ஒரு மக்கள்’ அனைவரையும் ஒட்டு மொத்தமாக உருவகிக்கிற தேசிய இனத்திடம் இறையாண்மை முழுமையாகத் தங்கியிருக்கிறது என்று பொருள்.
மொழி இன தேசிய மக்களாட்ச்சி அரசுகளின் தொடக்கம் :
அமெரிக்க விடுதலைப் போரின் போது வெளியிடப்பட்ட சுதந்திர அறிக்கை(1776) முக்கியமானது:
“எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். பிறரால் மாற்ற இயலாத உரிமைகளை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே மக்களிடையே அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. அரசாங்கங்களின் நியாயமான அதிகாரங்கள் ‘ஆளப்படுவோரின் இணக்கம்’ என்று அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்நோக்கங்களை அழிக்க எம்முறையான அரசாங்கமும் முற்படுமானால், அதனை மாற்றி அல்லது அழித்துப் புதிய அரசாங்கத்தை நிறுவ மக்களுக்கு உரிமையுண்டு”
(சி.எப்.ஸ்ட்ராங், தற்கால அரசியல் அமைப்புகள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சென்னை, 1985, பக்கம் 46)
பிரெஞ்சுப் புரட்சியிலும் ரூசோவின் தாக்கம் இருந்தது. புரட்சியின் போது 1789 இல் கூடிய தேசிய அவை (National Assembly), பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன் ‘மனிதன், குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கை’யை(1789) வரைந்தது. ‘மனிதர்கள் சுதந்திரத்துடன் பிறந்து சம உரிமையுடன் வாழ்கிறார்கள். மனிதனின் வரையறுக்க இயலாத நடைமுறை உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வோர் அரசியற் சட்டத்திற்குமுரிய நோக்கமாகும். இறைமை நாட்டு மக்களிடமே இருக்கிறது. அரசியலமைப்பை மாற்றக் கூடிய வரையறுக்க இயலாத உரிமை நாட்டு மக்களிடம் இருக்கிறது.’ (மேலது பக்.48)
அமெரிக்க விடுதலைப் பிரகடனமும், பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் மனிதனின் - குடிமகனின் உரிமைப் பிரகடனமும் இனி அரசுமுறையின் அடித்தளம் மக்களாட்சிதான் என முன்னறிவித்து விட்டன. சில தேசங்களின் காலனியாதிக்கப் பேராசை முதல் உலகப் போருக்குக் (1914-1918) காரணமானது. ஆனால் ஐரோப்பாவில் எஞ்சியுள்ள தேசங்கள் தங்கள் விடுதலைக்காக முட்டி மோதிக் கொண்டமையும் முதல் உலகப் போருக்கு முக்கிய காரணமாகும். முதல் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், நசுக்கப்பட்ட தேசிய இனங்கள் தேசங்களாக உரிமை பெற்று அரசியல் சமூகங்களாக நிலைபெற ஆதரவளித்தார். அதன்படி எந்த ஒரு தேசமும் இனி இன்னொரு தேசத்தின் கீழ் இருக்கத் தேவையில்லை என்ற கருத்து ஏற்கப்பட்டது. பல தேசங்களைத் தம் ஆட்சியதிகாரத்துக்குள் அடக்கிக் கொண்டிருந்த பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன.
மத்திய ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு ஐரோப்பாவிலும் புதிய தேசிய இன அரசுகள் உருவாயின. பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ்லேவியா, யுகோஸ்லாவியா (ஆறு தேசங்களை உள்ளடக்கியது) ஆகியவை உருவாக்கப்பட்டன. புதிய தேசங்களின் அரசியலமைப்புகள் மூன்று முக்கியப் பண்புகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டன. அவை: 1. ஆளுரிமை (Personal Liberty) 2. மக்கள் இறைமை (Popular sovereignty) 3. நாட்டுணர்ச்சி அல்லது தேசிய இன உணர்ச்சி (Nationalism).
முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான அரசு முறை‘தேசிய மக்களாட்சி முறை’ ஆகும். அதாவது ‘தேசிய இனங்களின் இறைமையுள்ள ஆட்சியும் அவற்றில் ஜனநாயக முறைமையும்’ என்பதே புதிய போக்கு ஆகும். இப்போக்கு தான் உலகம் முழுவதும் பரவியது. சிதைக்கப்பட்ட ஜனநாயகம் : இந்தியா ஐரோப்பாவின் இந்த முறை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தியாவில் அது மொட்டையடிக்கபட்டு செயல்படுத்தப்பட்டது. “வாக்குரிமை” என்ற ஜனநாயகம் ஏற்கப்பட்டு, தேசிய இறையாண்மையும், தேசிய சனநாயகமும் மறுக்கப்பட்டு விட்டன. இந்தியா என்ற சந்தையைக் காக்கவும், சமஸ்கிருத ஆரிய மேலாண்மையைத் தொடரவும் ‘இந்தியாவே தேசம்’ என்று கற்பிதம் செய்யப்பட்டு, அதை ஏற்கும்படி துப்பாக்கி முனையில் கட்டாயம் செய்யப்படுகிறது.
தமிழர் இறையாண்மை
இந்தியாவில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் 1947 இல் முடிவடைந்தது. Decolonisation என்னும் ‘அன்னிய காலனிய ஆதிக்க வெளியேற்றம்’ சாதிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வலுவந்தமாக இணைக்கப்பட்ட பல தேசங்கள், இன்று ‘உள்நாட்டுக் காலனிகளாகக’; தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. மேலை நாடுகளைப் போலன்றி, தமிழ்த் தேசிய இனம் ஒரு நீண்ட கால இருப்பையும் வரலாற்றையும் கொண்டது. தமிழகம் 1801 இல் தான் இந்தியாவுடன் இணைக்கபட்டு தனது இறையாண்மையை ஆங்கிலேயரிடம் இழந்தது. தேசிய இன இறையாண்மை தமிழினத்துக்கு மீண்டும் கிடைக்கவே இல்லை.
ஈழத் தமிழ்த் தேசிய இனமும் இறையாண்மையும் :
ஈழத் தமிழ்த் தேசிய இனம், சிங்களப் பெருந் தேசிய இனம் ஆகியவை இலங்கையிலே தனித்தனியே ஆனால் ஓர் அரசின் கீழ் இருந்து வருகின்றன. இனவெறி பிடித்த பெருந்தேசிய சிங்கள அரசு தமிழர் மீது இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. சிங்கள மரபின் மூதாதையான விஜயன் இலங்கைக்கு வரு முன்னரே இலங்கையில் சீர்மிகு பண்பாட்டுடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தனி அரசு இழந்தனர். கி.பி. 1619 இல் தமிழ் ஈழ மன்னன் சங்கிலி போரில் வெல்லப்பட்டு, தமிழர் இறைமை போர்த்துக்கேயர்களால் கைக்கொள்ளப்பட்டது. 1815 இல் ஆங்கிலேயர் கண்டி தமிழ் அரசையும் வென்று தமிழர் இறைமையைக் கைக்கொண்டார்கள். 1833 இல் தமிழர் தாயகம் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயரால் ஒரு நாடாக உருவாக்கப்பட்டது. 1948 - இல் இலங்கை விடுதலை
பெற்ற போது ஈழத்தமிழர் இறைமை அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை.
1956 இல் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கி இலங்கையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கிக் கோரிக்கை வைத்தார். இது 1972 இலும் கூட ஏற்கப்படவில்லை. 1972 இல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ‘தனிநாடு’ கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கேசன்துறையில் வெற்றி பெற்றார். 1972 இல் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை சாதிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது. 1976 இல் தனிஈழம் கோரிக்கையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ‘தமிழர்க்குத் தனிநாடு’ என்ற கோரிக்கையை ஆதரித்து 19க்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, ஈழத்தமிழர் தம்முடைய கருத்தை ஜனநாயக முறைப்படித் தெரிவித்தனர். ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். அது கோரும் தீர்வு தமிழ் ஈழம் ஆகும்.
கடந்த 2005 - இல் நடந்த நாடாளுமனறத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற, தனி இழம் கோரும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுகின்றனர். தமிழ் ஈழம் என்பது தந்தை செல்வாவால் முன்னிறுத்தப்பட்டு அவ்வப்போது ஈழத்தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி ஏற்பளிக்கப்பட்ட அரசியல் தீர்வாகும். ஈழமக்களின் அரசியல் தீர்வைத்தான் எந்த நாடும், எந்த கட்சியும் நிறைவேற்றித்தர வேண்டுமேயொழிய தங்களுக்குப் பிடித்த அல்லது தங்கள் நலனுக்கு உகந்த நயவஞ்சகத் திட்டங்களை அரசியல் தீர்வு என்னும் போர்வையில் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது.
அரசியல் - அறிவியல் பார்வை தேவை :
இலங்கையில் ஈழப்பகுதியில் முப்படைகளைக் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை யாராவது கண்டனம் செய்தால் ‘அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவது’ என்று இந்திய தேசிய அரசியல்வாதிகள் கூக்குரலிடுகிறார்கள். சிங்கள இனவெறி அரசுக்கு ஆயதமும், பணமும், பயிற்சியும், உளவு வேலையும் செய்து தருகின்ற இந்திய அரசைப் பார்த்து ‘இலங்கை ஒருமைப் பாட்டைக் காக்கிறேன் என்று இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்து விடாதீர்கள்’ என்று அறிவுறுத்தலாகக் கூறினால் கூட ‘இந்திய இறையாண்மைக்கு ஆபத்து’ என்று அலறுகிறார்கள், இந்திய தேசியம் என்ற பெயரில் தங்கள் சமூக, பொருளியல் மேலாதிக்கத்தை இங்கே நிறுவிக் கொண்டவர்கள். அரசியல் அறிவியல் பார்வையற்றோர் அவர்களுடன் ஒத்துப் போகிறார்கள்.
இந்தியாவின் அரசியல் முறை மேற்கத்திய உலகிடமிருந்து கொண்டு வரப்பட்ட ஒன்று. இறையாண்மை கோட்பாடும், மக்களாட்சிக் கோட்பாடும் உலகம் முழுவதும் எந்த வடிவில் எந்த உணர்வில் பயன்படுத்தப்படுகிறதோ அதே வடிவில் தான் இங்கும் பயன்படுத்தப்பட வேண்டும். பழங்காலத்தில் இந்தியக் குரங்கு ஒன்று இலங்கையில் தமிழர் நகரைத் தீயிட்டு எரித்ததாக இராமாயணம் கூறுகிறது. இன்று, இனப்படுகொலைக்கு ஆளாகியிருக்கும் ஈழத்தமிழர் பிரச்சினையில், இந்திய அரசியல்வாதிகள் கையிலெடுத்து இருக்கும் இறையாண்மைக் கோட்பாடு குரங்கின் கையில் அகப்பட்ட கொள்ளிக்கட்டை. தெற்கு ஆசியாவிலேயே எந்த தேசிய இனமும் விடுதலை அடையக்கூடாது, அவ்வாறு விடுதலை பெற்றால் இங்கே இந்தியத் தேசியப் பொய்மை தகர்ந்து போகும் என்று அஞ்சுகிறார்கள்.
இறையாண்மை பெயரால் உண்மையான தேச இறையாண்மையை மறுப்பது, ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை வதைப்பது என்பது நீண்டக்காலம் தொடர முடியாது. அரசியல் அறிவியல் இங்குள்ள மக்களின் கண்களைத் திறக்கும் போது, இந்தியப் பொய்மை தகர்ந்து போகும்.
-முனைவர் த.செயராமன்-
Comments