காயமடைந்த சிங்களப்படையினருக்காக இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் பணத்தாசை காட்டியும், மிரட்டியும் பெருமளவு குருதி வன்பறிப்பு


கிளிநொச்சியில் படுகாயமடைந்த பல நூற்றுக்கணக்கான படையினர், மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொதுமக்களிற்கான மன்னார், வவுனியா பொது மருத்துவமனைகளில் அரசின் உத்தரவுக்கு அமைாவக படையினருக்கு என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், மக்களின் சிகிச்சைபெறும் கட்டிடங்களிலும் படுகாயமடைந்த படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மக்கள் படையினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக, எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

காயமடைந்துள்ள படை உறுப்பினர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதாகவும், அவர்கள் இரவு பகலாக வேதனை மற்றும் கவலையில் கதறியழும் சத்தம் மருத்துவமனைக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் தெளிவாகக் கேட்பதாகவும் அவர் கூறினார்.

இதனால் கோபமடைந்துள்ள படையினர் தம்மை தாக்கக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் மருத்துவமனைக்குச் செல்வதைக் குறைத்து வருகின்றனர்.

இதேவேளை, பல நூற்றுக்கணகான படையினர் ஒரே நேரத்தில் களமுனைகளில் படுகாயமடைவதால், இரத்த வைப்பகத்தில் அவர்களுக்கான இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்வதற்கு சிறீலங்கா படையினர் இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் பணத்தாசை காட்டியும், மிரட்டியும் அவர்களிடம் இருந்து பெருமளவு இரத்ததினை பெற்று வருவதாகவும் ஐரோப்பிய தொலைக்காட்சியின் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்த மாதம் முகமாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து பெருமளவான சிறீலங்கா படையுறுப்பினர்கள் கொழும்பிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனை சில ஊடகங்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியதால், கிளிநொச்சியில் படுகாயமடைந்த படையினர்கள் இம்முறை மன்னார் மற்றும் வவுனியா மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Comments