பயங்கரவாதத்தை ஒடுக்க முன்னர் அதன் தோற்றுவாயை அழியுங்கள்!



"கெடுகுடி சொற் கேளாது" - என்பர். அப்படித்தான் நிற்கிறது கொழும்பு அரசும்.
யுத்தத்தை நிறுத்தும்படி யார் சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்று அடம் பிடிக்கின்றது அது.

‘முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா’ - என்பது போல போர்வெறித் தீவிரத்தில் முனைப்புக்கொண்டு நிற்கும் பௌத்த - சிங்களப் பேரினவாதம், ஈழத் தமிழர்களை ஆயுதமுனையில் அடக்கி, ஒடுக்கி, சங்காரம் செய்த பின்னர்தான் மிச்சம் எதுவும் என்று சன்னம் ஆடுகின்றது.

"யுத்தத்தை நிறுத்தி,புலிகளுடன் அமைதிப் பேச்சை மேற்கொள்ளுமாறு பல தரப்புகளிடமிருந்தும் அழுத்தம் வருகின்றது. ஆனால், நாம் எந்த அழுத்தத்துக்கும், சவாலுக்கும் அடிபணிய மாட்டோம். யுத்தம் நிறுத்தப்பட மாட்டாது." என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவே இலங்கை அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்துவிட்டார்.

இலங்கையில் தமிழர் தாயகம் மீது கொழும்பு அரசு தொடுத்திருக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தச் செய்து, அமைதித் தீர்வுக்கான சமாதானப் பேச்சுகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகின்றது.

இது தொடர்பான தமிழகத்தின் ஒட்டுமொத்த நிலைப்பாடு தமிழக சட்டச்பையில் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், தமிழகத்தின் பல கட்சிப் பிரமுகர்களும் இவ்விடயம் சம்பந்தமாக தமது ஏகோபித்த வற்புறத்தலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வெளியிட்டிருக்கின்றனர்.

இதனையடுத்து, யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக தமது விசேட பிரதிநிதியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியைக் கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்அமோகன் சிங் தீர்மானித்திருக்கின்றார்.

இலங்கைக்கு வருகை தரவிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் முகர்ஜி, இங்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரும் வற்புறுத்தலை இந்திய மத்திய அரசின் நிலைப்பாடாக முன்வைப்பாரா அல்லது தமிழகத்தின் அழுத்தத்தை எடுத்து வந்து கொழும்புக்குத் தெரிவிக்கும் புதுடில்லியின் வெறும் செய்தியாளராக - தூதுவராக - மட்டுமே செயற்படுவாரா என்பது தெரியவில்லை.

எந்த நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்துதான் நாம் பார்க்கவேண்டும்.

ஆனால், யுத்தத்தை நிறுத்துவதற்கு வலியுறுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு வரவிருக்கின்றார் என்ற தகவல் நேற்றுமுன்தினம் புதுடில்லியில் கசியத் தொடங்கியதுமே அதற்கு உடனடியாகவே இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் மூலம் பதிலடி தந்துவிட்டது கொழும்பு அரசு.

அழுத்தம் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் எமக்குக் கவலையில்லை. யுத்தத்தை நாம் நிறுத்த மாட்டோம் - என்பதை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா இவ்வாறு விரைந்து - இவ்வாறு தடிப்பாக - சூளுரைத்தமை இந்தியாவுக்கான பதிலடியன்றி வேறில்லை.

"பயங்கரவாதிகளான புலிகளை அழித்த பின்னர்தான் மறுவேலை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் வரை யுத்தம் தொடரும்" - என்று அடித்துக் கூறியிருக்கின்றார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா.

புலிகள் மேற்கொள்வது பயங்கரவாதமா,விடுதலைப் போராட்டமா என்பது வேறுவிடயம். பிரதமர் கூறுகின்றமை போல் அதைப் பயங்கரவாதமாகக் கொண்டாலும்கூட, அது அரச பயங்கரவாதத்தின் பெறுபேறேயன்றி - பின்விளைவேயன்றி - வேறில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆகவே, பிரதமர் கூறும் பயங்கரவாதத்தை அடக்குவதாயின், அதற்கு முதலில் அதன் தோற்றுவாயான அரச பயங்கரவாதத்தை அடக்கி, ஒடுக்கவேண்டும்.
தமிழர் தாயகம் எங்கும் அரச பயங்கரவாதமும், அராஜகமும், ஆக்கிரமிப்பும் கட்டவிழ்ந்து தறிகெட்டு அட்டகாசமாகப் பெருக்கெடுத்து ஓடுகையில், பயங்கரவாதத்தை அடக்குவது குறித்து அரசின் பிரதமர் உபதேசம் செய்கின்றமை ‘யாரோ வேதம் ஓதுவது போல’ தோற்றுகின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் தங்களது உரிமைகளுக்காக - நீதிக்காக - நியாயம் வேண்டி - அமைதி வழியில் போராடினார்கள் தமிழர்கள். ஆனால், பௌத்த - சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் அவர்களுக்கு நியாயம் செய்யவில்லை. அது மட்டுமல்ல, சிங்களப் பேரினவாதத்தின் ஆட்சித்துறையின் ஆயுத பலம் தமிழ் மக்களின் ‘அஹிம்சையை’ நொருக்கி, சின்னாபின்னமாக்கியது.

ஒடுக்கு முறையாளர்களின் வன்முறை ஒடுக்கப்பட்டவர்களின் சாத்வீகத்தை அடக்கி ஒடுக்கிய குரூரம் தொடர்ந்து அரங்கேறியது.
இந்த வரலாற்று நிகழ்வு - அனுபவப் பட்டறிவு - தமிழ் தேசியப் போராட்டம் ஆயுத வழிக்குத் திரும்புவதற்கு தோற்றுவாயாக அமைந்தது என்பது கண்கூடு.

இனக் காழ்ப்புணர்வில் ஊறிப் போயிருக்கும் கொடிய அடக்குமுறையாளரின் இராணுவ அதிகாரத்தின் முன்னே, தமிழ் மக்கள் வெறும் சாத்வீக அணுகுமுறையின் தார்மீகப் பலத்தோடு எதிர்த்து நிற்பது சாத்தியமற்றது என்ற பாடமே அவர்களை இன்று இந்த வழியை நாட வைத்தது என்பது வரலாற்று உண்மை.

அஹிம்சை முறையில் - சாத்வீக நெறியில் - காந்தீயப் பாதையில் - அறவழியில் - தமிழர்கள் போராட்டம் நடத்தியபோது நீதியோ, நியாயத் தீர்வோ வழங்காமல், ‘அரச பயங்கரவாதம்’ மூலம் அதை அடக்கி, ஒடுக்கி, தமிழர்களை ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நெட்டித் தள்ளிய சிங்களத் தலைமைகள், இப்போது தமிழரின் ஆயுதப் பேராட்டத்தைப் பயங்கரவாதமாகக் சித்திரித்து, அந்தப் பயங்கரவாதத்தை அழித்த பின்னர் நியாயத் தீர்வு வழங்குவோம் என்று கூறுவது கேலிக்குரியது; அபத்தமானது.



Comments