தமிழ்த் தேசியமும் இந்தியத் தேசியமும்: மும்பைத் தாக்குதலினூடாக ஒரு பயணம்





01.'பயங்கரவாதம் கிலோ என்ன விலை? மும்பைத்தாக்குதலை முன்வைத்து ஒரு விலை நிர்ணயம்" என்றுதான் உண்மையிலேயே இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். ஏனெனில் அந்தளவிற்கு 'பயங்கரவாதம்" பெரும் சந்தைப் பொருளாக மாற்றம் கண்டு வருகிறது. செப்டம்பர் 11 நியூயோர்;க்கில் நடந்த தாக்குதலுடன் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த வியாபாரம் அண்மையில் மும்பையில் நடந்த தாக்குதலுடன் மேற்படி மாற்றத்தை அடைந்துள்ளதாகவே படுகிறது.

ஏனெனில் இத்தாக்குதல் நடந்ததிலிருந்து இந்திய அதிகார வர்க்கத்தை தாங்கிப் பிடிக்கும் ஊடகங்கள் இப்புற நிலையை உருவாக்க பெரும் பாடுபடுகின்றன. ஆனால் மும்பைத்தாக்குதல் உலக அளவில் உடனடியாக சில எதிர்வினைகளை தோற்றுவித்த போதும் ஒரு சில நாட்களிலேயே அது பெரிய வட்டத்திலிருந்து ஒரு புள்ளியாகத் தேய்ந்து வருகிறது.

இந்தப் புள்ளியும் நாளை நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே! இதில் ஆச்சரியப்படக்கூடிய வேறு ஒரு விடயம் என்னவெனில் இந்திய அதிகார வர்க்கத்தைச் சார்ந்த ஊடகங்கள் இவ்வளவு முக்கு முக்கியும் இந்திய உப கண்டத்திலேயே மேற்படி எதிர்வினை ஒரு தேய்மானத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்களால் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கிற விடயத்தை ஊடகங்கள்தான் தூக்கி நிறுத்துகின்றனவோ என்று எண்ணுமளவிற்கு இந்திய மக்களின் எதிர்வினை இருப்பதை கண்கூடாகப் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது.

உடனடியாகப் பெரும் எழுச்சியைத் தோற்றுவித்த இத்தாக்குதல் ஏன் ஒரு சில வாரங்களிலேயே பெரும் தேக்கத்தைச் சந்தித்திருக்கின்றது என்பதைத்தான் நாம் தற்போது சற்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த ஆய்வு ஒரு வகையில் ஈழப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடும் இந்திய ஆளும் வர்க்கத்தின் நிலைப்பாட்டில் உள்ள அபத்தக்கூறுகளை அடையாளம் காட்டும் வித்தில் அமைந்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

ஏனெனில் மேற்படி தாக்குதலும் அதையொட்டிய இந்திய அரசின் நடவடிக்ககைகளும் ஏற்கனவே இந்திய உபகண்டத்தின் 'விளைவுகளுக்குள்" சிக்குண்டுள்ள எமக்கு சில பாதகமான அம்சங்களை தோற்றுவிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே இத் தாக்குதலின் 'விளைவை" நாமும் ஒரு வகையில் அனுபவிப்பவர்களாகவே இருக்கிறோம்.

இந்திய ஊடகங்கள் பெரும் பிரயத்தனப்பட்டு இத்தாக்குதலை 'செப்டம்பர் 11" இற்கு நிகராக வர்ணிக்கத் தொடங்கியிருந்தன.

உள்ளுர் மக்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் உலக கவனத்தையும் தம்மீது திருப்பும் நோக்குடன் ஊடகங்கள் செயற்படத் தொடங்கியிருந்தன.

ஆனால் இரண்டுமே நடைபெறவில்லை என்பது இந்திய ஆளும் வர்க்கத்தையும் அதனைத் தாங்கும் ஆதிக்க ஊடகங்களையும் அதிர்ச்சிக்குள் தள்ளியிருக்கிறது. இந்திய மட்டத்திலேயே மேற்படி ஊடகங்களின் அபத்தக்கூத்தை மறுதலித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது இந்திய ஆளும் வர்கத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மனித உரிமைப் போராளியும் எழுத்தாளருமான அருந்ததி ராய் "9 is not 11 and November isn't September" என்ற தலைப்பில் "ழரவ டழழம" சஞ்சிகையில் தனது கருத்தை உடனடியாகவே முன்வைத்தது நல்லதொரு உதாரணம். (அந்த ஆய்விலும் சில குளறுபடிகள் இருந்த போதிலும்)

நாம் முதலில் உலக அளவில் இந்திய அரசு கைவிடப்பட்டிருக்கிற சங்கதியைக் கொஞ்சம் ஆராய்வோம். உண்மையைக் கூறப்போனால் இதில் ஆய்வுக்குரிய எந்த விடயமோ பரம இரகசியேமா ஒன்றுமில்லை. வெளிப்படையான விடயம் உலகின் மீதுள்ள மேற்குலக - குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கம். அதன் வழிதான் உலகின் கூட்டணிகள் உருவாகின்றன. மும்பைத்தாக்குதலை அடுத்து இந்தியாவும் தெற்காசிப்பிராந்தியத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க பெரும் பிரயத்தனப்படுகிறது. ஆனால் மேற்குலகின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்" இந்தியாவின் 'பயங்கரவாத்திற்கெதிரான போரும்" ஒன்றல்ல. இதை நாம் சொல்லவில்லை. மேற்குலகின் 'இராஜதந்திரம்" இதுதான். இந்திய ஊடகங்களிற்கு இது புரியாமல் போனது ஆச்சர்யமளிக்கிறது.

செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து எந்தவித பேச்சிற்கும் இடம் வைக்காமல் மேற்குலகம் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது போல் தாமும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க முடியும் அதற்கு மேற்குலகம் ஆதரவளிக்கும் என்று இந்திய ஊடகங்கள் முட்டாள்தனமாக நம்பின - ஒரு வகையில் உளறின என்று கூட சொல்லலாம். இப்போது நாம் இந்த கட்டுரைக்கு அருந்ததிராயின் பாணியில் இப்படி தலைப்பு வைக்கலாம் 'இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல" ஆனால் இந்திய அரசியல்வாதிகள் கெட்டிக்காரர்கள். தாம் ஒன்றும் கிழிக்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்து மௌனம் காத்தார்கள். வழக்கம் போலவே தெரிந்தே முன்னுக்கு பின்னாக மாற்றி மாற்றி பேசினார்கள். (ஈழப் பிரச்சினை தொடர்பாக ஆளும் திமுக அரசும் இந்திய அரசும் முன் பின்னாகப் பேசியதை இதனுடன் ஒப்பிடலாம். இதைத்தான் நாம் பின்னுக்கு தெளிவாகப் பார்க்கப் போகிறோம்) அவர்களுக்கு தெரியும் சுடு கஞ்சி ஆறி பழசாகும் என்பது. ஆனால் அவர்களே ஆச்சர்யப்படும் வகையில் கஞ்சி ஆறினது மட்டுமல்ல புளித்தும் விட்டது. அதிகார ஊடகங்கள் மூக்குடைந்ததுதான் மிச்சம்.

war and terror என்ற பல்லவியுடன் ஆப்கானை ஆக்கிரமித்துள்ள மேற்குலகத்திற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒரு இஸ்லாமிய நாடாக - ஆப்கானிஸ்தானின் எல்லை நாடாக ஆயிரம் முரண்பாடுகளைக் கடந்தும் சில இராஜதந்திர உடன்பாடுகள் இருக்கின்றன. இந்த 'இராஜதந்திரத்தை" இந்தியாவிற்காக இழக்கவோ ஏன் சிறிதும் தளர்த்தவோ மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா விரும்பாது. எனவே இவற்றை மீறி பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது என்பது வெறும் பூச்சாண்டிதான். கொண்டலீசா அம்மையார் 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், நீ அழுகிற மாதிரி அழு" என்பது போல் பாகிஸ்தானிலுள்ள சில குழுக்களை முன்னிறுத்தி அவர் வைத்த குற்றச்சாட்டும் அதனை அடுத்து அவர்களில் சிலரை பாகிஸ்தான் அரசு கைது செய்த செய்கையும் இருக்கின்றன. இதுதான் இந்தப் பிரச்சினையில் உள்ள அதிகூடிய எல்லை. இதற்கு மேல் எதிர்பார்ப்பவர்கள் முட்டாள்கள். இன்னும் கொஞ்சம் நீட்டிப் பார்த்தால் இன்னொரு 'கார்கில் போர்" அவ்வளவுதான். திரும்பவும் நாம் ஒரு முறை சொல்லிக் கொள்ளலாம். 'இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல". இந்த இராஜதந்திரத்தின் பின்னணியில்தான் இந்தியா உலகத்தால் கைவிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு இத்தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது இன்னும் தெளிவாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே. பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் சற்று அமெரிக்காவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கியிருப்பதால் பாகிஸ்தானை தனது கைக்குள் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் பின்புலம் இதில் இருப்பதாகக் கூட சில ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல புகழ்பெற்ற பாகிஸ்தான் ஏடான "dawn" இதழில் இத்தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவுத்துறையினரின் தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் ஊகங்கள்தான். ஒன்றும் நிருபிக்கப்படாதவை. அவை என்றுமே நிருபிக்கப்படப்போவதில்லை என்பது வேறு கதை. எனவே இந்த முன்மாதிரிகளின் அடிப்படையில் பாகிஸ்தானை முழுக் குற்றவாளிகளாக்கி போர் தொடுப்பது என்பது சாத்தியமில்லாதது. பாழாய்போன வாசகம் ஒன்று திரும்பவும் ஞாபகத்திற்கு வருகிறது. 'இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல".

அண்மையில் தெற்காசியாவை மையப்படுத்திய ஒரு அரசியல் ஆய்வாளர் ஒருவருடன் மும்பைத்தாக்குதல் குறித்து உரையாடிக்கொண்டிருக்கும் போது போகிற போக்கில் ஒரு முக்கியமான தகவலை அவர் கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம்? என்னவென்பதையெல்லாம் தாண்டி இந்திய அதிகார வர்க்கம், தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அமைப்பு உரிமை கோரியிருந்த போதும் லஸ்கர் - இ - தொய்பா மீதே வெளிப்படையான குற்றத்தை சுமத்தத் தொடங்கியிருந்தது. லஸ்கர் - இ - தொய்பா இந்தியா உட்பட சில நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் அது காஸ்மீரின் சுதந்திரத்திற்காகப் போராடுகிற ஒரு அமைப்பு.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் வரும் காலங்களில் காஸ்மீர் பிரச்சினையை கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (இதுவும் அமெரிக்காவின் உள்ளார்ந்த அரசியல்களில் ஒன்று). கிளின்டன் பதவியில் இருந்த காலத்தில் இந்தியாவிற்கு இது பெரும் தலையிடியாக இருந்தது. பராக் ஒபாமாவும் கிளின்டனின் வெளிவிவகாரக் கொள்கைகளையே கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்;க்கப்படுகிற நிலையில் இந்தியாவிற்கு மீண்டும் இப் புதிய நெருக்கடி.

எனவே, மும்பைத்தாக்குதலை வைத்து காஸ்மீர் பிரச்சினையில் ஒரு ஆதாயம் தேடும் படலத்தில் இந்தியா இறங்கியிருப்பதாக அவரது வாதம். உலக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட அல்கைதாவே இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று எல்லோரும் நம்பும் வண்ணம் இருக்க இந்தியாவின் காஸ்மீர் பிரிவினைக்குழுக்கள் மீதான உடனடிக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்குரியது.

எனவே, பாகிஸ்தான் மீதும், காஸ்மீர் பிரிவனைவாதக் குழுக்கள் மீதும், தனிப்பட்ட முறையில் இயங்கும் தாவூத் இப்ராகிம் போன்றவர்கள் மீதும் ஒரேயடியாகக் குற்றத்தைச் சுமத்தி தனக்கு எதிரான முழு இஸ்லாமியச் சக்திகள் அனைத்தையும் மும்பைத்தாக்குதலை வைத்து தனது பிடிக்குள் கொண்டுவரலாம் என்று நினைத்த இந்திய அதிகார வர்க்கத்தின் வேகம் ஒரு தமிழ்சினிமா நகைச்சுவை நடிகர் ஒருவரின் பாத்திரத்திற்கு இணையாகச் சுருங்கிப்போனது ஒரு வரலாற்றுச் சோகம்தான்.

இனி நாம் உள்ளுக்குள்ளேயே இந்தியாவின் தேசியம் கைநழுவியிருப்பதை ஆராய்வோம்.

02.

கடந்த நவம்பர் 26. நான் நின்ற இடத்தில் வழக்கத்திற்கு மாறாக மாலையிலேயே இருளடைந்து கொண்டிருந்தது அந்த சூழல். உலகத் தமிழினமே ஒருவிதமான பதட்டத்தில் உறைந்திருந்த நாள் அது. அடுத்த நாள் தேசியத்தலைவரின் உரையை ஒட்டிய பதட்டம் அது. மோசமான கள நிலவரங்களால் சோர்ந்திருந்த ஈழத் தமிழினத்திடம்; இயல்பாகவே அந்தப் பதட்டம் தொற்றிக் கொண்டது.

என்னிடம் கூடுதலாக வேறொரு பதட்டமும் சேர்ந்து கொண்டது. தென்னிந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்த எனது தோழி ஒருத்தியிடம் இருந்து வரவேண்டிய முக்கியமான தொலைபேசி அழைப்பு அது. அந்த அழைப்பிலுள்ள சில சாத்தியங்களை பொறுத்து நீண்ட நாட்களாக இழுபறிப்பபடும் எனது திரைப்பட முயற்சி ஒன்றிற்காக நான் அடுத்த நாளே அவரைச் சந்திக்க பெங்களுர் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் எனது தொலைபேசிக்கு வந்ததோ ஒரு குறுஞ்செய்தி மட்டுமே. அது "Mumbai under attack".


ஏனெனில் அவர் அப்போது மும்பையிலேயே தங்கியிருந்தார்.
அதிர்ந்து போய் தொலைக்காட்சியை முடுக்கியபோது சர்வதேச செய்தி ஊடகங்கள் நேரடியாகவே மும்பைத்தாக்குதலை அஞ்சல் செய்து கொண்டிருந்தன. உடனடியாக அத்தாக்குதலின் வீரியத்தை அப்போது உணர முடியவில்லை. அடுத்த நாள்தான் அதன் விளைவை முழுமையாக அனுபவிக்கக்கூடியதாகவிருந்தது.

தலைவர் பிரபாகரன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்திய ஊடகங்களின் 'பயங்கரவாதம்" குறித்த அரற்றல் அப்பேச்சை இடைவெட்டிக் கொண்டிருந்தன. இதனால் தலைவரின் உரையின் உள்ளடக்கம் லேசாக அதன் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியிருந்தது. நட்புடனும் தோழமையுடனும் பாரத தேசத்தை விளித்து முன்வைக்கப்பட்ட அந்த உரையை, செவிமடுக்கும் நிலையில் அன்று இந்திய தேசம் இருக்கவில்லை.

இயற்கை உட்பட எல்லாவற்றாலும் வஞ்சிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் மீதி வஞ்சனையை அன்று காலமும் சூழலும் தம் பங்கிற்குத் தின்று தீர்த்தன. அதற்காக மும்பையில் தாக்குதல் நடைபெற்றிருக்காவிட்டால் முதல் வேலையாக தலைவரின் உரையை இந்திய அதிகார வர்க்கம் கவனத்தில் எடுத்திருக்கும் என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. உரையை அடுத்து இரு தரப்பிற்குமிடையே நடைபெற வேண்டிய கருத்து பரிமாற்றங்கள், எதிர்வினைகள் ஒரு தேக்கத்தைச் சந்தித்துவிட்டன. இது உடனடியாக தம்மை ஒரு இன அழிப்பில் இருந்து காப்பாற்றத் துடிக்கும் ஒரு இனத்திற்கு சாதகமான அம்சம் அல்ல.

நான் மேற்குறிப்பிட்ட திரைப்படத்துறையைச் சேர்ந்த தோழி, நடிகை என்பதையும் தாண்டி நட்புடனும் தோழமையுடனும் பழகக்கூடியவர். நடிகைகள் குறித்த எனது மதிப்பீட்டையே கலைத்துப் போட்டவா அவர். சிறந்த நடிகை - நல்ல உழைப்பாளி. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தனிப்பட்ட விடயங்களைக்கூட மனம் விட்டுப் பேசக்கூடியளவிற்கு எமக்கிடையிலான நட்பு வளர்ந்திருந்தது. ஆனால் மும்பைத் தமாக்குதலுக்கு அடுத்த நாள் எனது சந்திப்பு தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது பேசினார் என்பதை விட அப்பளமாகப் பொரிந்தார் என்பதுதான் சரியாக இருக்கும்.

நான் 'பயங்கரவாதியாக" நடிக்க முடியாது. நீங்கள் வேண்டுமென்றால் கதையை மாற்றுங்கள். பிறகு 'கால்சீட்" தருவது பற்றி யோசிக்கிறேன் என்று ஏதேதோ உளறினார். அவருக்காகவே நீண்ட நாட்களாகக் காத்திருந்த எனக்கு அது அதிர்ச்சி. ஒரு பெண் போராளியாக நடிக்கச் சம்மதித்திருந்த அவருக்கு மும்பைத்தாக்குதலை அடுத்து அவருடைய பாத்திரம் அவரளவில் 'பயங்கரவாதமாகி" இருந்தது. அவரில் எந்தத் தவறும் இல்லை. இது உளவியல் சிக்கல்.

செப் 11 தாக்குதலை அடுத்து அமெரிக்கா செய்த முதல் வேலை. உலெகெங்கிலுமுள்ள போராட்ட அமைப்புக்களை எந்தவித பாகுபாடுமின்றி - தொடங்கி அடுத்த நாளே மூடுவிழா நடத்திய 'லெட்டர் பாட்" அமைப்புக்கள் தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வரை 'பயங்கரவாத" பட்டியலில் இணைத்ததுதான் அது. இது 'எங்கயோ தேள் கொட்ட எங்கேயோ நெறி கட்டியதாம்" என்ற எமது கிராமத்து சொல்வடைக்கு நல்ல உதாரணம். அந்த நடிகைக்கு ஏற்பட்டது தனி உளவியல் சிக்கல். அமெரிக்காவிற்கு உண்டாகியது கூட்டு உளவியல் சிக்கல். இரண்டிற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை.

எனது தோழி ஒருத்தி ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் இந்த தனி - கூட்டு மன உளவியல் தொடர்பாக கலாநிதி பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அந்த ஆய்வு மட்டும் சரியாக வெளிவருமென்றால் 'பயங்கரவாதம்" குறித்த தனி மதிப்பீட்டையும் அரசுகளின், அமைப்புக்களின் பொது மதிப்பீட்டையும் ஒரு வரையறைக்குள் நாம் கொண்டு வரலாம். எம் மீது தடவப்பட்டிருக்கும் 'பயங்கரவாத" சாயத்தை அதன் வழி கழுவ முற்படலாம்.

அந்த நடிகை இரண்டு நாளில் தொடர்பு கொள்வதாகக் கூறி பெங்களுர் சென்றவர். தொடர்புக்கு வந்தார். அவருடைய 'கோபம்" ஏகத்திற்கும் குறைந்திருந்தது. பொறுமையுடன் எல்லாவற்றையும் கேட்டார். 'பயங்கரவாதம் என்றால் என்ன? எது பயங்கரவாதம்? அதன் மூலமும் வேரும் எங்கிருந்து தொடங்குகிறது. விடுதலைப் போராட்டங்களையும் பயங்கரவாத செயல்களையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிடுவது சரியா என்பதையெல்லாம்தான் நாம் உங்களின் பாத்திரத்தினூடாகப் பேச விரும்புகிறோம். நீங்கள் முதலில் உங்கள் பாத்திரத்தை உணருங்கள். பிறகு நடிப்பது பற்றி முடிவெடுப்போம்" என்று நீண்ட வியாக்கியானம் கொடுத்த பிறகு ஏதோ புரிந்தவர் போல் அடுத்த வாரம் சென்னை சென்று தொடர்பு கொள்கிறேன் என்றவர் மீண்டும் சென்னையிலிருந்து தொடர்புக்கு வந்தார். அவரிடமிருந்து 'மும்பை" காணாமல் போயிருந்தது. பழைய தோழியாக அன்பொழுகப் பேசினார்.

ஏனெனில் தமிழகம் அவரை மாற்றிவிட்டிருந்தது. மேலே நான் குறிப்பிட்டது முழுவதும் ஒரு நடிகையின் கதை இல்லை. இந்தியத் தேசியம் கைநழுவின கதை இது. அவர் மும்பையிலிருந்தபோது தாக்குதலை விட உக்கிரமாக 'பயங்கரவாதம்" குறித்து ஊடகங்கள் ஒரு தாக்குதலை ஆரம்பித்திருந்தன. அதன் விளைவுதான் அவரில் தொற்றிக் கொண்டது. அவர் பெங்களுர் (அவரது தாயின் சொந்த இடம்) வந்த போது அவரைக் கன்னட தேசியமும் பிழைக்க வந்த இடமான சென்னை வந்த போது தமிழ்த் தேசியமும் அவரைப் பிடித்துக் கொண்டது.

இந்தியத் தேசியம் தொலைந்து போனது. மும்பையில் தாக்குதல் நடந்த பிரதேசங்கள் தவிர்ந்து மற்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை தொடர்கிறது என்று பிபிசி செய்தியாளர் சொல்லிக்கொண்டிருந்தபோது இந்திய ஊடகங்கள் முழு இந்தியாவுமே பற்றி எரிவது போன்ற பிரம்மையை உருவாக்க பெரும் பிரயத்தனப்பட்டன.

03.

பெரும்பாலான இந்திய ஊடகங்களின் எதேச்சதிகாரமான போக்கையும் இந்தியத் தேசியம் என்ற போர்வையில் இந்துத்துவ அரசியலை கட்டடைமைக்க முற்படுவதையும் மும்பைத்தாக்குதலை அடுத்து மிகத் தெளிவாகவே உணரக்கூடியதாகவிருந்தது. உதாரணத்திற்கு மும்பைத் தாக்குதலின் பின்னான "ஐனெயை வுழனயல" வார இதழை நாம் ஆய்வுக்குட்படுத்திப் பார்ப்போம்.

டிசம்பர் 17 தேதியிட்ட இந்தியா டுடே 'பயங்கரவாத" சிறப்பிதழாக அதைக் கட்டமைத்திருந்தது. மும்பைத் தாக்குதலை விட வன்முறையாக அந்த இதழ் இருந்தது. 'பயங்கரவாதத்தின் மீது போர் தொடுப்போம். நாம் இப்போதே போரிட்டாக வேண்டும் ஏன், எப்படி? என்ற தலைப்பில் அடிப்போம், கொல்லுவோம், போர்தொடுப்போம், எதிரியை தோற்கடிப்போம் என்று அதன் ஆசிரியர் குழுவினர் ஒவ்வொருவரினதும் கட்டுரையை வாசிப்பவர்கள் மும்பைத் தாக்குதலுக்கு நிகரான வன்முறையை எழுத்து வடிவில் அனுபவிக்க முடியும்.
இதே இதழ்தான் காலம்காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக நச்சுக் கருத்துக்களை பரப்பி வருகிறது. செஞ்சோலையில் குண்டு வீசி சிங்களம் அப்பாவி சிறுமிகளை கொலை செய்த போதுகூட புலிகளின் முகாம் தாக்கப்பட்டதாக எழுதியிருந்தது. ஒரு வேளை சிறுமிகள் கொல்லப்பட்டது உண்மையதாக இருந்தால்கூட அதற்கு போர் தீர்வு இல்லை என்று திருவாய் மலர்ந்த இந்த இதழ் இப்போது பாகிஸ்தானை முன்னிறுத்தி 'கொல்லுவோம், அடிப்போம்" என்று ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறது.

அண்மையில் இதன் ஆசிரியர் குழுவிலிருந்து ராஜ் செங்கப்பா என்பவர் சிங்கள அரசின் ஆசியுடன் இராணுவத்தின் உதவியுடன் வன்னிக்களத்திற்கு சென்று 'பிரபாகரன் சுற்றி வளைப்பு" என்று 'கவர் ஸ்டோரி" எழுதினார். ஊடகத் தர்மத்தின் எந்த வரையறைக்குள்ளும் பொருந்தாத ஆய்வு அது.

புலிகளின் பகுதிக்கு செல்லாமல் அங்கிருந்த மக்கள் எவரையும் சந்திக்காமல் ஒற்றைத்தர்மத்தின் அடிப்படையில் தாக்க நியாயங்களை புறக்கணித்து எழுதப்பட்ட கோமாளித்தனமான ஆய்வு அது. சிங்களத்தின் தேவையையும் ஆசையையும் ஆய்வு என்ற பெயரில் உளறியிருந்தார். அது ஒருவகையில் இந்திய அதிகாரத்துவத்தின் ஆசையும்கூட என்பது எமக்குத் தெரியாததல்ல.

இதன் தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராக முன்பிருந்த வாசந்தி அம்மையார் ஒரு முறை எழுதியிருந்தார். 'மாவீரர் நாள் வரும்போது வீதியெங்கும் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு தாக்குதல் ஒளிப்பதிவுகள் காண்பிக்கப்பட்டு போலியான தேசியம் ஒன்று இளைஞர்கள் மத்தியில் வளர்க்கப்படும். அப்படியே போராட்டத்திற்கு புலிகள் ஆள்பிடித்துவிடுவார்கள்" என்று எழுதியிருந்தார். இப்போது மட்டும் இந்த குழுமம் மும்பைத்தாக்குதலை முன்னிறுத்தி செய்ய முற்படுவது என்ன? போலியான ஒரு இந்திய தேசியத்தை கட்டமைக்க முற்படுகிறார்கள். ஆனால் ஏற்கனவே அது தகர்ந்து போனதை மும்பைக்கு பின்னான சில நிகழ்வுகள் அடையாளம் காட்டியிருக்கின்றன.

'வெற்றியில்லாவிட்டால் நம்மால் பிழைத்திருக்க முடியாது" என்ற வின்ஸ்டன் சேர்ச்சிலின் புகழ் பெற்ற வாக்கியத்தை பொருத்தமற்ற முறையில் தமது ஆசிரியர் தலையங்கத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே மேற்படி வாசகம் எமக்கானது. ஆனால் நாம் பயன்படுத்தினால் அது பயங்கரவாதம். அவர்களுக்கு மட்டும் அது நீதிக்கான அழைப்பு. எத்தகைய முரண்பாடு.

மும்பைத் தாக்குதல் ஏன் நடைபெற்றது? அதன் மூலம் என்ன? என்ற நீதியான ஆய்வைத் தவற விட்டுவிட்டு போலியான ஒரு தேசியத்தை வளர்க்க முற்படும் இந்திய ஊடகங்களின் கோமாளித்தனத்தை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இந்தியா இதற்கு என்ன செய்யலாம்? என்பதற்கு தீர்வாக ராஜ் செங்கப்பா எழுதிய வழிகளைப் பாருங்கள்:

- பாகிஸ்தானிற்குள் சென்று பயிற்சி முகாம்கள் மீது விமானத் தாக்குதல்.

- இரகசியமான நடவடிக்கைளை பாகிஸ்தானில் மேற்கொள்வது.

- முக்கியஸ்தர்களை கடத்தி கொண்டு வந்து பிணைக் கைதி ஆக்கலாம்.

அடப்பாவிகளா இதைத்தானடா அந்தத் தீவிரவாதிகள் உங்கள் நாட்டில் செய்திருக்கிறார்கள். இப்படி மும்பைத்தாக்குதலுக்கு முன்பே சில இரகசிய வேலைத்திட்டங்களை இந்தியாவிற்கு வெளியில் நீங்கள் மேற்கொண்டதற்கான எதிர்வினைதான் மும்பைத்தாக்குதல். அதாவது உங்களது மோசமான வெளிவிவகாரக் கொள்கை. அதை மாத்திறதை விட்டுவிட்டு அடிப்போம், கொல்வோம் என்று ஊடகங்களே அலறுவது அபத்தமாக இருக்கிறது.
இந்த இதழ் வழியே இவர்களது போலித் தேசியம் அம்பலாமானதுதான் சுவாரசியமானது. பாருங்கள், பின்லேடனைத் தேடுவதற்கான சி.ஐ.ஏ இன் முன்னாள் தலைவரான Michael F. Scheuer இடம் இருந்து 'அவர் நம்மாள்தானே" என்று நினைத்து ஒரு கட்டுரை வேண்டி வெளியிட்டுள்ளார்கள். இவர் தனது பணியின் காரணமாக கோணங்கித்தனமாக உளறக்கூடிய ஆள். அவருடைய 'பயங்கரவாதம்" குறித்த நூல்களை வாசித்தவர்களுக்கு அது தெரியும். ஆனால் மனுசன் இப்ப செம தெளிவு. (ஆள் திருந்தவில்லை. பின்லேடனை பிடிக்க முடியாமல் போனதால் வந்த விரக்தி) விடயம் தெரியாமல் "India Today" அவரிடம் கட்டுரை கேட்டு வெளியிட்டு தனது 'தேசியத்தை" தானே அம்பலப்படுத்தியிருக்கிறது. மும்பபைத் தாக்குதல் ஏன் நடந்தது என்பதற்கு அவர் கூறும் காரணங்களைப் பாருங்கள்: 'மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கும் வெறியர்கள் அல்ல என்பதையும் மிகவும் பயிற்சி பெற்ற, தீவிரமாகத் திட்டமிட்டு, கட்டுப்பாட்டுடன், ஒரு குறிக்கோளை மையமாகக் கொண்ட ஒரு இராணுவத்திற்கு நிகரானவர்கள் என்பதை இந்தியா ஏற்கவேண்டும். 2,000 இற்கு பிறகு இந்தியா தொடர்ந்து தாக்கப்பட்டதற்கு இந்திய அரசின் நடவடிக்கைகளே தூண்டுதல் என்பதை இந்தியத் தலைவர்கள் தங்கள் வாக்காளர்களிடம் தெரிவிக்க வேண்டும்...

காஸ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் மோசமான நடவடிக்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்திற்கு வழங்கும் ஆதரவு, ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் இந்திய தலையீடு, இஸ்ரேலுடனான இந்திய இராணுவ ஒத்துழைப்பு, முக்கியமாக கடந்த 10 வருடங்களாக இந்திய அரசியலில் இத்துத்துவ தேசியவாத தொனி தலைதூக்கி இருப்பது, இந்திய முஸ்லீம்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பது" என்று அவர் காரணங்களை அடுக்கியிருக்கிறார். தொடர்ந்து 'எனவே தீவிரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் எனின் இந்திய அரசியல்வாதிகளும், வாக்காளர்களும் இந்திய அரசின் கொள்கைகளை, நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்." என்று எழுதியிருக்கிறார்.

எனக்கு தெரிந்த வரையில் Michael F. Scheuer வாழ்க்கையில் முதல் முறையாக கூறிய அர்த்தம் பொதிந்த வாசகங்கள் அவை. மும்பைத்தாக்குதலுக்கு இவைதான் காரணம். இவற்றை இந்தியா மறு பரிசீலனை செய்யாத வரையில் 'மும்பை"கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இன்னொரு வேடிக்கை "India Today" இன் இந்த இதழில் நடந்திருக்கிறது. இந்தியாவின் கறை படிந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில் விதிவிலக்காக வாழ்ந்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். அவரது மரணத்தை இந்திய அதிகார ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன.

ஏனெனில் பிரதமராக இருந்த மிகச் சிறிய காலப்பகுதியில் இந்தியாவை பல் இன, பல மொழி பேசும் மக்கள் வாழும் ஒரு தேசமாக அடையாளபப்படுத்தி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் சாசனத்தை முன்மொழிந்தவர். கிட்டத்தட்ட இந்திய தேசியத்தை நிராகரித்தார். எனவே அவர் மீது சேறடிக்கும் முகமாக ; "India Today" ஒரு சிறிய அஞ்சலிக்குறிப்பை வெளியிட்டிருந்தது.

'இந்திய தேசியத்தை வாழ வைப்போம். பயங்கரவாத்தை தோற்கடிப்போம்" என்று பக்கம் பக்கமாக எழுதியிருந்ததை மக்கள் ஏற்கவேயில்லை. மாறாக அரைப்பக்கத்திற்கு வி.பி.சிங் மீது காழ்ப்பை கொட்டியதற்காக "India Today" இதழ் நாடெங்கும் மாநில வாரியாக தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒன்று புரிகிறது. இந்திய உபகண்டத்தில் வாழ்வது இந்தியத் தேசியம் அல்ல. இனங்களின் தேசியம் மட்டுமே...

04.

தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான சிக்கலான உறவுகளை இந்திய ஆளும் வர்க்கம் குறுக்கிப்பார்க்கிறது. அண்மையில் தமிழகத்தில் நடந்து வரும் ஈழ ஆதரவு போராட்டங்களை கவனத்தில் கொள்ளாது தமது குறுகலான தேசிய நலன் சார்ந்து சிங்களத்துடன் கைகோர்த்திருக்கிறது இந்திய அதிகாரம். இது ஒரு மோசமான வெளியுறவுக்கொள்கை. தமது தேசத்திலுள்ள ஏழரைக்கோடி மக்களின் விருப்பை கவனத்தில் கொள்ளாது ஒரு குறுகிய சிந்தனை வட்டத்துக்குள் நின்று இந்திய அதிகாரம் வரையும் வெளியுறவுத் தீர்மானங்கள் அந்தத் தேசத்திலிருந்து அந்த மக்களை வேறு பிரித்து பார்க்கும் சாத்தியத்தை உருவாக்குகிறது. அரசியல் கட்சிகளை கொண்டு அந்த மக்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறது மத்திய அரசு.

தமிழ் நாட்டில் இரண்டு நாட்களுக்குக்கூட மும்பைத்தாக்குதல் நின்று பிடிக்கவில்லை. மக்களிடம் பெரிதாக எந்த ஆரவாரமும் இல்லை. இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறினார். 'தமது ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாத கோபம் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. அதை அவர்கள் வெளியாகக் கூறாவிட்டாலும் இந்தியத் தேசியம் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர்களை அறியாமலேயே மாறிக்கொண்டிருக்கிறார்கள். இதை ஒரு புள்ளிவிபரமாக எடுத்தால் அதன் துல்லியத்தை அறிய முடியும். ஆகையால் அவர்களால் மும்பையை விட கிளிநொச்சியில் கூடுதல் கவனத்தைக் குவிக்க முடிகிறது. மத்திய அரசு வெற்றிகரமாக அவர்களின் எழுச்சியை அடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் சத்தமில்லாமல் அவர்கள் இந்தியத் தேசியத்திலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அது மறந்து கொண்டிருக்கிறது.

அத்தோடு ஈழப்பிரச்சினையில் மத்திய அரசை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற கோபத்தை இனிவரும் காலங்களில் நாம் வேறு வழிகளில் அடையாளம் காணலாம்.

அதாவது, காவிரி நதி நீர் பிரச்சினை, ஒகேனக்கால் பிரச்சினை என்று ஏதாவது இனி வரும் போது அது பெரும் வன்முறையில்தான் போய் முடியும். அப்போது கன்னட தேசியமும் , தமிழ்த்தேசியமும் மட்டுமே வாழும் - அந்த இடத்தில் இந்தியத் தேசியம் சாகும்." என்றார்.

இது உளவியல். ஒரு பிரச்சினையில் கிடைக்காத நியாயத்தையும் கோபத்தையும் வேறு ஒரு நிகழ்வினூடாக அடைய முயல்வது, காட்டிக் கொள்வது. மும்பைத்தாக்குதலினூடாக இந்தியா படிக்க வேண்டிய பாடம் நிறைய. 'பயங்கரவாத" பூச்சாண்டி வகுப்பெடுக்கிறதை நிறுத்தி பல்லின, பலமொழி பேசும் மக்கள் வாழும் ஒரு தேசத்தில் அத் தேசிய இனங்களை முன்மொழிந்து அரசியல் சாசனத்தை மாற்றி உரிமைகளை பகிர்வதனூடாகவே அது இந்தியத் தேசமாக இருக்க முடியும். ஆiஉhயநட கு. ளுஉhநரநச எழுதியுள்ளது போல், இந்திய அரசியல்வாதிகளும், வாக்காளர்களும் இந்திய அரசின் கொள்கைகளை, நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் இந்தியா துண்டு துண்டாக உடைந்து தனித்தேசங்களாக மாறும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அது உள்ளுக்குள்ளேயே தன்னளவில் சுக்குநூறாக உடைந்துகொண்டேயிருக்கும். அதற்குள் ஆயிரம் 'மும்பை" களை அது சந்தித்திருக்கும். அது பெயரளவில் ஒரு தேசமாகவும் செயலளவில் ஒரு நோயாகவும் இருக்கும்.

-பரணி கிருஸ்ணரஜனி-


Comments