மும்பை தாக்குதலின் பின்னணியும் தீவிரவாத வலைப்பின்னலும்



கடந்த வார மும்பை நகரத் தாக்குதல்கள் இந்தியாவின் வரலாற்றில் அழியாத கறையை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் இந்திய சமூகத்தில் ஆழமாக வேர்விட்டுள்ள தீவிரவாதத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தி, இந்திய உளவுத்துறையின் ஆற்றலையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. இந்திய மண்ணில் பாரிய தாக்குதல்கள் புதியவை அல்ல. இந்த ஆண்டு மாத்திரம் இத்தகைய ஆறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் பெரும்பாலும் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 200 ஐ எட்டுகிறது. 2003 இலும், 2006 இலும் மும்பையில் இடம்பெற்ற தாக்குதல்களும் பயங்கரமானவை. ஒவ்வொரு சம்பவத்தின் பின்னரும், தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றிய பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டன. சில தாக்குதல்களுக்கு கடும்போக்கு அமைப்புக்கள் உரிமை கோரியிருந்தன. ஆனால், கடந்த வார பன்முனைத் தாக்குதல்கள் முக்கியமான இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? அவர்களின் உண்மையான நோக்கம் என்ன? இந்தியாவின் பல ஊடக நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ள "டெக்கன் முஜாஹிதீன்' என்ற குழு, தாமே தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. இந்தக் குழு பற்றி இந்தியாவின் பலம்வாய்ந்த புலனாய்வு அமைப்புக்கள் கூட அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. பெயரை வைத்து ஆராய்ந்தால், இதற்கு "இந்தியாவின் தென்பிராந்தியத்தில் (டெக்கன் தக்ஷின் என்பதன் திரிபு) புனிதப் போரில் இணைந்திருப்பவர்கள் (முஜாஹிதீன்)' என்ற அர்த்தம் தொனிக்கும்.



எங்கிருந்து வந்ததென்று தெரியாத இஸ்லாமிய அமைப்பொன்று இத்தகைய பலம் எப்படி கிடைத்ததென புலனாய்வுத் துறை நிபுணர்கள் வியந்தார்கள். உண்மையில், மும்பை பன்முனைத் தாக்குதல்கள் பல வழிகளிலும் வித்தியாசப்படுகின்றன. தாக்குதலுக்காக தெரிவு செய்யப்பட்ட களங்கள் முக்கியமானவை. வரலாற்றுச் சிறப்பு மிக்க ரயில் நிலையம், இந்திய சுற்றுலாத் துறையின் மையமாக அமையக்கூடிய இரு ஹோட்டல்கள், யூதர்கள் வாழும் குடியிருப்பு போன்றவை இலக்கு வைக்கப்பட்டிருந்தன.

பொது இடங்களில் மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த ஆயுதபாணிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டவர்களை அதிலும் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் பிரஜைகளை தேடிக் கொன்றிருக்கிறார்கள். மஹாராஷ்டிர பொலிஸின் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு தலைமை தாங்கியவரான ஹேமந்த் கார்கரேயும் கொல்லப்பட்டுள்ளார். ஆயுதபாணிகளாக மும்பை நகருக்குள் பிரவேசித்தவர்களில் பல வெளிநாட்டவர்களும் இருந்தார்கள்.

இந்த நபர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் நவீனமானவை. இவர்கள் தாஜ்மஹால், ட்ரைடென், ஒபரோய் ஹோட்டல்களின் கட்டமைப்புடன் நன்கு பரிச்சயமானவர்களாகவும் தென்படுகிறது. இவற்றை வைத்துப் பார்த்தால், இந்தத் தாக்குதல் பல மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறதென மும்பை பொலி ஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறும்போது, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் லஷ்கார்ஈதொய்பா முதலான அமைப்புக்கள் மீது விரல் நீட்டப்படுவது வழக்கம்.

சிமி என்றழைக்கப்படும் இந்தியாவின் இஸ்லாமிய மாணவர்கள் இயக்கமும் சில தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பும் உரிமை கோரியிருக்கிறது. பங்களாதேஷ் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஹர்க்கத்துல் ஜிஹாதி இஸ்லாமி என்ற அமைப்பை சம்பந்தப்படுத்தியும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதுண்டு.

சில சமயங்களில், இவை அல்கொய்தா வலைப்பின்னலின் வேலையாக இருக்குமோ என்ற கேள்விகளும் எழுப்பப்படும். ஆனால், டெக்கன் முஜாஹிதீன் பற்றி அறிவிக்கப்படுவது இது தான் முதற் தடவை. இந்த அமைப்புக்களின் பின்னணியை ஆராய்ந்தால், அவற்றின் நோக்கங்களும் வித்தியாசப்படுவதை அறியலாம். புனிதர்களின் சேனை என்ற அர்த்தம் தொனிக்கும் பெயரையுடைய லஷ்கார்ஈ தொய்பா, தெற்காசியப் பிராந்தியத்தின் மிகவும் மோசமான இஸ்லாமிய தீவிரவாத அமைப்பாக சித்திரிக்கப்படுவதாகும். அதன் பிரதான நோக்கம், காஷ்மீர் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதாகும்.

சிமி இயக்கம், மேற்குலக உலோகாயுதவாத கலாசார ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்து, அதனை இஸ்லாமிய சமூகமாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1977ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் உச்சநீதிமன்றம் சிமி மீது மீண்டும் தடைவிதித்தது. அமெரிக்கா தலைமையிலான மேற்குல ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது அல்கொய்தா வலைப்பின்னலின் பிரதான இலட்சியமாகக் கருதப்பட்ட போதிலும், அதன் கோட்பாடுகள் பிராந்திய மட்டத்தில் வித்தியாசப்படுவதைக் காணலாம்.

இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் இல்லை. கடந்த ஆண்டு இதன் பெயர் உளவுத்துறை வட்டாரங்களில் அடிபடத் தொடங்கியது. ஜூலை மாதம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரில் நிகழ்ந்த தொடர் தாக்குதல்களின் பின்னர், இந்த அமைப்பின் மெய்யான சுயரூபம் வெளிப்பட்டது. இந்தத் தாக்குதல்களுக்கு சற்று முன்னதாக, இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் 14 பக்க கொள்கைப் பிரகடனம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தப் பிரகடனத்தின் தொனிப்பொருள் ஜிஹாத் போராட்டத்தின் உதயம் என்பதாகும். அறுபது வருடகாலம் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்தியாவுக்கு எதிராக பகிரங்கப் போரை ஆரம்பிப்பதாக அவ்வமைப்பு எச்சரித்திருந்தது. 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் குஜராத்தில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

கடந்த மே மாதம் ராஜஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு உரிமை கோரியபோது, சர்வதேச அரங்கில் அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை இந்தியா சுற்றுலா நிறுத்திக் கொள்ளாவிட்டால் சம்பந்தமான சகல இடங்களும் தாக்கப்படுமென இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு குறிப்பிட்டிருந்து. கடந்த செப்ரெம்பரில் புதுடெல்லித் தாக்குதல்களுக்கு உரிமை கோரி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சலில், பாதுகாப்பான நகரங்களையும் தாக்கும் வல்லமை தமக்குண்டு என்று கூறியிருந்தது.

கடந்தவார பல்முனைத் தாக்குதல்களின் இலக்குகளையும், நோக்கங்களையும் அவதானிக்கும்போது, இவற்றுடன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவருவதாக பயங்கரவாத தடுப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தக் கருத்தை நியாயப்படுத்தும் வகையிலான மற்றுமொரு விளக்கமும் முன்வைக்கப்படுகிறது. இந்திய முஜாஹிதீன் தான் டெக்கான் முஜாஹிதீன் என்ற ரீதியில் பரிணாமம் பெற்றிருக்கிறது என்பது தான் அந்த விளக்கம்.

உண்மையில், இந்திய அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட சிமி இயக்கமும், பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்ட லஷ்கார்ஈ தொய்பாவின் அங்கத்தவர்களும் ஒன்று சேர்ந்ததுதான் இந்திய முஜாஹிதீன் இயக்கம் என்று பரவலாக நம்பப்படுகிறது. சிமியின் உயர்மட்ட உறுப்பினர்கள் இந்திய புலனாய்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணையில் ரகசியங்களை அம்பலப்படுத்தி விடலாம் என்பதால் புதிய வடிவத்துடனும் கட்டமைப்புட னும் இயங்கவேண்டியது அவசியமெனக் கருதி சிமியின் அங்கத்தவர்கள் இந்திய முஜாஹிதீன் என்ற புதிய பெயரை வரித்துக் கொண் டிருக்கலாமென்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த அமைப்பு தனது போராட்டத்தை சர்வதேச தளத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில், லஷ்கார்ஈ தொய்பா, ஹர்க் கத்துல் ஜிஹாதி இஸ்லாமி முதலான இயக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி டெக்கான் முஜாஹிதீன் என்ற புதியதொரு அவதாரத்தை எடுத்திருக்கக் கூடுமென்ற விளக்கங்களும் கூறப்படுகின்றன. இவற்றைப் போன்ற எத்தகைய வாதங்களை முன்வைத்தபோதிலும், மும்பை நகரத் தாக்குதல்களை இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் தனியொரு அமைப்பு மாத்திரம் நடத்தியிருக்க முடியாது என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும்.

தாக்குதலை நடத்த வந்த ஆயுதபாணிகள் மும்பை நகருக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்து இறங்கி, சிறிய படகுகள் மூலம் தான் மும்பை நகருக்குள் பிரவேசித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக, இவர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து புறப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கருத்தானது, பிரச்சினையை மென்மேலும் தீவிரப்படுத்தியுள்ளதென்றே கூற வேண்டும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவுக்கு வெளியேயுள்ள குழு வொன்றுதான் தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரிவித்திருப்பதும், அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், தீர விசாரித்த பின்னர்தான் எதையும் கூற வேண்டுமென வலியுறுத்தியிருப்பதும் பிரச்சினையின் போக்கைத் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதிக்கும் பிரச்சினை என்ற மட்டத்தில் இருந்து, இரு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கடந்தகால பகைமையைத் துாண்டும் நெருக்கடியாக மாறியிருக்கிறது.

எனவே, மும்பை தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டறிந்து, கடும்போக்கு வலைப் பின்னலின் சிக்கலைத் தீர்ப்பது சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். இது இந்திய பாகிஸ்தான் உறவுகள் மீண்டும் பழுதடைந்து விடாமல் பாதுகாப்பதுடன், கடும் போக்குவாதத்தைக் கட்டுப்படுத்தி, பயங்கரவாதத்தின் ஆணிவேர்களைக் களைவதற்குரிய வழிகளையும் காட்டும்.

- சதீஸ் கிருஸ்ணபிள்ளை


Comments