வன்னிப்போர் நடவடிக்கை எதுவரைக்கும்?


கடந்த ஒன்றரை வருடங்களாக வன்னிமீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை திறப்பு, கிளிநொச்சியைக் கைப்பற்றுதல், புலிகளை அழித்தொழித்தல் என படைநடவடிக்கையின் இலக்குகள் பலவாறாக மாற்றமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை ஏ32 வீதி கைப்பற்றப்பட்ட பின்னும் இதனூடான போக்குவரத்துப் பாதை திறக்கப்படவில்லை. தற்போது ஏ9 வீதியூடான பாதைதான் பாதுகாப்பானது. ஏ9 வீதியை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு கிளிநொச்சி தொடக்கம் முகமாலை வரையான பகுதியை கைப்பற்ற வேண்டும்.

அதற்காகவே கிளிநொச்சி மீது படைநடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டிருக்கிறது என இலக்குகளையும், திட்டங்களையும் அடிக்கடி மாற்றியமைத்தாலும் போரின் போக்கானது படைத்தரப்பின் நோக்கங்களுக்கு மாறாக ஒரு தொடர்ச்சியான அபாயகரமான கட்டத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதாகவே தென்படுகிறது.

கடந்த வாரம் கிளாலி மற்றும் முகமாலைக்கு இடைப்பட்ட வட முன்னரங்கப் பகுதியிலும் கிளிநொச்சியை அண்மித்த பகுதியிலும் அடுத்தடுத்து சிறிய இடைவெளியினுள் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு பலத்த இழப்புக்களுடன் முடக்கப்பட்டிருக்கிறது. பருவமழையுடன் போட்டி போட்டுக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இப்படை நடவடிக்கையானது முதலாவதாக கிளாலிப் பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டது.

புலிகள் அமைத்திருந்த போலிக் காப்பரண்களினூடாக (டம்மி) உள்நுழைந்த படையினர் புலிகள் விரித்து வைத்திருந்த வலையினில் மாட்டிக் கொண்டனர். இங்கு நடந்த சண்டையில் படையினரின் எட்டுச் சடலங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன மேலும் பல சடலங்கள் இரு பகுதியினருக்கும் இடைப்பட்ட சூனியப்பிரதேசத்தில் கிடப்பதாகவும், 40 படையினருக்கு மேல் கொல்லப்பட்டதாகவும் புலிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். எப்பகுதியிலாவது ஒரு துண்டு நிலத்தையேனும் கைப்பற்றுவது மிகப்பெரும் இராணுவ வெற்றி என்ற நோக்கில் நிலம் கைப்பற்றலை மட்டும் கருத்தில் கொள்வது எவ்வளவு இராணுவப் பின்னடைவுகளைத் தரும் என்பதற்கு கிளாலியில் நடந்த சண்டை மிகச்சிறிய ஒரு உதாரணமே.

வன்னியில் பருவமழை சற்று ஓய வெடித்தது மிகப்பெரும் போர். கிளிநொச்சியை மையப்படுத்தி முறிகண்டி, மலையாளபுரம், புதுமுறிப்பு, குஞ்சுப்பரந்தன், புலிக்குளம் ஆகிய முனைகளினூடாக பெருமெடுப்பிலான படைநடவடிக்கை ஒன்றை மிகுந்த நம்பிக்கையுடன் படைத்தரப்பு மேற்கொண்டது. ஆனால் படைத்தரப்பு எதிர்பார்த்ததற்கு மாறாக புலிகள் மேற் கொண்ட சடுதியான ஆனால் உக்கிரமான முறியடிப்புத் தாக்குதல் படைத்தரப்பிற்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.


பூநகரிப்பகுதியில் உள்ள யாழ்க்குடாக் கடல் நீரேரிப் பகுதியிலிருந்து ஆரம்பித்து குஞ்சுப்பரந்தன், உருத்திரபுரம், புதுமுறிப்பு, ஏ9 வீதி இரணைமடுச்சந்தி ஊடாக இரணைமடுக் குளத்தின் மேற்குப்புற நீர்ப்பிடிப்பு பகுதி வரையான "ட' வடிவில் வளைந்து செல்லும் புலிகளின் வலுவான முன்னரங்கப் பகுதிகளை உடைத்துக் கொண்டு உள் நுழையும் நோக்கில் பல முனைகளினூடாக படையினர் நகர்ந்த போது புலிகளின் சிறப்புப் படையணிகள் மேற்கொண்ட உக்கிரமான முறியடிப்புச் சமருக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

மேற்குறிப்பிட்ட" ட' வடிவில் கிளிநொச்சியைப் பாதுகாப்பதற்காக புலிகள் அமைத்திருக்கும் முன்னரங்கக் காப்பரணை உடைத்துக் கொண்டு உள்நுழைவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதொன்றாகவே மாறிவருகின்றது. கிளிநொச்சி நகரம் பல படையெடுப்புக்களையும், அழிவுகளையும் சந்தித்திருக்கிறது. இவ்வாறு மூன்று மிகப்பெரும் படையெடுப்புக்களை சந்தித்து அழிந்து மண்மேடாகிய நகரம் சாம்பல் மேட்டிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போன்று மீண்டும் நிமிர்ந்து நின்ற வேளை நான்காவது தடவையும் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு நிற்கிறது.

மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வன்னிப்படை நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான எதிர்த் தாக்குதலை நடத்தி படையினரின் முன்னணி படைப்பிரிவுகளை எவ்வளவு அதிகமாகச் சிதைக்க முடியுமோ அவ்வளவுக்கு சிதைப்பதனையே நோக்காகக் கொண்டுபுலிகள் செயற்பட்டுள்ளனர் . புலிகள் இன்று கிளிநொச்சியைத் தக்கவைப்பதற்கான தடுப்புச்சுவரை தற்போது வலுவாக நிறுவியிருக்கின்றனர். இவ்வாறு கிளிநொச்சியைப் பாதுகாப்பதற்காக தடுப்பரணை நிறுவியிருக்கும் புலிகள் இதையும் விட்டு பின்வாங்குவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

கிளிநொச்சியை இழப்பதென்பது வன்னியின் இருப்பை தலைகீழாக மாற்ற மடையச் செய்துவிடும். எனவே எச்சந்தர்ப் பத்திலும் கிளிநொச்சியை விட்டுப் பின்வாங்குகின்ற முடிவை புலிகள் எடுக்க மாட்டார்கள் என்றே கருதலாம். ஆகவே கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான படைநடவடிக்கை என்பது தொடர்ந்து நிகழத்தான் போகிறது. இதேவேளை கிழக்கு வன்னியின் தென்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளுக்கான தயார்ப்படுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக படைத்தரப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மாங்குளத்தைக் கைப்பற்றி நிலைகொண்டடிருக்கும் TF3 படையணி கிழக்கு நோக்கி நகர்ந்து ஒலுமடு, புலுமைச்சிநாதகுளம், அம்பகாமம், தச்சடம்பன் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ34 வீதியில் ஆறாவது மைல்கல்லுக்கு அண்மையில் கரிப்பட்டமுறிப்புக்கு நெருக்கமாக நிலைகொண்டுள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட சண்டைகளுக்குப் பின்னர் இப்பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வழிமறிப்புத் தாக்குதல்கள் எதனையும் புலிகள் மேற்கொள்ளவில்லை. எனவே இவ்வீதி வழியான முன்னகர்வை தடுத்து நிறுத்துவதற்கான புலிகளின் முன்னரங்கப் பகுதியை படையினர் தொடவில்லை என்றே கருதலாம்.

புளியங்குளம், கனகராயன்குளம், பகுதியில் நிலைகொண்டிருக்கும் TF 2 படையணிகள் கனகராயன் குளத்திலிருந்து ஆரம்பிக்கும் பழைய கண்டிவீதிவழியே கற்கிடங்கு ஊடாக நகர்ந்து கரிப்பட்ட முறிப்புக்கு அண்மையில் TF 3 படையணிகளுடன் இணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர். பழைய கண்டி வீதி என்பது கனகராயன்குளத்தில் ஏ9 வீதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கி கற்கிடங்கு, கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம், பீலிக்குளம் ஊடாக இரணை மடுக்குளத்தின் கிழக்குப்புறமாகச் சென்று வட்டக்கச்சி ஹட்சன் வீதியில் இணைகிறது. இவ்வீதியின் கரிப்பட்டமுறிப்பிலிருந்து இரணைமடுக்குளம் வரையான பகுதியின் கிழக்குப்புறம் எப்போது படையினர் நகர முயற்சிக்கின்றனரோ அப்போதுதான் புலிகள் கடுமையான முறியடிப்புத் தாக்குதலை மேற்கொள்வர் என எதிர்பார்க்கலாம்.

ஏனெனில் இப்பகுதியிலிருந்து கிழக்குப்புறம் நகர்ந்தால் முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான் பகுதி படையினரின் நெருக்குதலுக்கு உள்ளாகும். மேலும் ஏ34 வீதியின் (மாங்குளம் முல்லைத்தீவு வீதி) தென்பகுதியிலிருந்து புலிகள் முற்றாக வெளியேறிவிட்ட நிலையிலும் வவுனியா வடக்கின் மிகப்பெரும் பகுதி சூனியப்பிரதேசமாகவே இன்றுவரை கிடக்கிறது. மணலாற்றுப் பிரதேசத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் 59 ஆவது டிவிசன் படையினர் தட்டாமலை, தண்ணிமுறிப்பு, குமுழமுனை, அளம்பில், செம்மலை ஆகிய பகுதிகளை கைப்பற்றி முல்லைத்தீவை நோக்கி நகர்வதாக படைத்தரப்புக் கூறிக்கொண்டாலும் இப்பகுதியில் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு இன்னும் படையினர் முகம்கொடுக்கவில்லை என்று சொல்லாம் அளம்பிலிலிருந்து வடக்கே முல்லைத்தீவை நோக்கி கடற்கரையூடாக நகர்வதென்பது இலகுவானதொன்றல்ல.

எனவேதான் குமுழமுனையிலிருது தண்ணீரூற்று, முள்ளியவளை நோக்கி நகரமுனைகின்றனர். ஆனால் படையினர் முள்ளியவளையைக் கைப்பற்றினாலோ அல்லது முல்லைத்தீவை அண்மித்தாலோ வன்னியில் ஏற்படப் போகும் விபரீதம் பற்றி புலிகள் நன்கறிவர். எனவே இப்பகுதியினூடான நகர்வு முயற்சிக்கு எதிராகப் புலிகள் கடும் முறியடிப்புத் தாக்குதல்களை வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம். தற்போது 59 ஆவது படையணி தண்ணீரூற்றுக்கு அண்மையிலுள்ள பூதன்வயல் கிராமத்துக்கு நெருக்கமாகவே நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தண்ணீரூற்று, முள்ளியவளைப்பகுதிகள் மீதுபடையினர் மேற்கொண்ட கடும் எறிகணைத் தாக்குதல்களினால் இப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு வன்னியின் மும் முனைகளிலும் நிகழும் சண்டைகளினால் மக்கள் இடம்பெயர்ந்து ஒரு குறுகிய பிரதேசத்தினுள் ஒடுக்கப்பட்டு விட்டனர். இடம்பெயர்ந்த மக்களினால் புதுக்குடியிருப்புப் பகுதி நிரம்பி வழிகிறது. அவ்வாறானதொரு நிலையே ஒட்டுசுட்டான் பகுதியிலும் ஏற்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

அத்தோடு வழக்கத்திற்கு மாறாக கொட்டித்தீர்க்கும் பருவமழையும் வன்னி மக்களை வாட்டிவதைத்துக் கொண்டிருக்கிறது. புதுவருடத்திற்குள் கிளிநொச்சியில் கொடியேற்றும் படையினரின் திட்டம் தற்போதைய நிலையில் நிறைவேற வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. எனவே கிளாலி, நாகர்கோவில் முன்னரங்கப்பகுதியிலும் கிளிநொச்சிச் சுற்றுவட்டத்திலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வெற்றிகளைப் பெறமுடியாத சூழ்நிலை வன்னிக் களமுனையில் ஏற்பட்டிருப்பதனால் வரும் வாரங்களில் முல்லைத்தீவு நோக்கிய 59 ஆவது டிவிசனின் முன்னகர்வு நடவடிக்கை நிகழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளது.

இது இல்லாவிடத்து TF 2, TF 3 படையணிகள் அம்பகாமம், கரிப்பட்டமுறிப்புப் பகுதியிலிருந்து கிழக்காக ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கியோ அல்லது பழைய கண்டி வீதிவழியே பீலிக்குளம் ஊடாக இரணைமடுக்குளத்தின் பின்புறமாக நகர்ந்து வட்டக்கச்சி நோக்கியோ நகர முனையலாம். ஆனால் இப்பகுதியின் ஊடான நகர்வின் பலாபலன்கள் மிகப்பாரதூரமானதாகவே அமையப் போகின்றது என்பது மட்டும் கசப்பான உண்மை.

அம்பகாமம், கரிப்பட்டமுறிப்பு பகுதியிலிருந்து மேற்கொள்ளப்படும் படைநடவடிக்கையும், 59 ஆவது டிவிசனின் முல்லைத்தீவுக்கான படைநடவடிக்கையும் நெடுங்கேணியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி TF 4 (64ஆவது டிவிசன் அண்மையில் உருவாக்கப்பட்டது) படையணியும் நகர்ந்து புலிகளின் முன்னரங்கப் பகுதியாகிய இறுதி எல்லைக்கோட்டை அடைகின்ற போது புலிகளின் நிகழ்ச்சி நிரலின் இறுதிக்கட்டம் அரங்கேற்றப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

நன்றி: வீரகேசரி

Comments