தில்லியில் நரசிம்மராவ் ஆட்சியை அடுத்து வாஜ்பேய் ஆட்சியும், தமிழகத்தில் ஜெ ஆட்சியை அடுத்து கருணாநிதி ஆட்சியும் நடைபெற்ற தருணத்தில் தினமணி நடுப்பக்க கட்டுரைக்காக அப்போது 27.05.96 அன்று எழுதி அனுப்பி, அந்நாளேடு வெளியிட மறுத்த கட்டுரை இது. ஈழம் பற்றி இதுபோன்றி அவ்வப்போது எழுதி தினமணி வெளியிட மறுத்த கட்டுரைகள் பல என்றாலும், சில தகவல் முக்கியத்துவம் கருதி இதுமட்டும் இங்கே வெளியிடப்படுகிறது.
கடந்த பல்லாண்டுகளாக அன்றாடம் விமானக் குண்டு வீச்சுக்கும், வெடி மருந்ததின் நெடிக்கும் மத்தியில் வாழ்ந்து வரும் ஈழ மக்கள் தங்கள் வாழ்வின் விடியலுக்கு வழிகாண ஆதர வற்ற நிலையில் கடும் துன்பத்திலும் துயரத்திலும் நாட்களைக் நகர்த்தி வருகிறார்கள். சிங்கள இனவெறி அரசு சென்ற ஆண்டு நவம்பரில் சூரியஒளித் தாக்குதல் ஒன்று நடத்தி, அப்பாவித் தமிழர் களைக் கொன்று குவித்தது போதா தென்று, இந்த ஆண்டு மார்ச்சில் சூரிய ஒளித் தாக்குதல் இரண்டு என்னும் அடுத்த தாக்குதலைத் தொடங்கி யுள்ளது. முதல் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் நகரை விட்டு வெறியேறி வட மராட்சி தென்மராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் அமைத்து அங்கு வாழ முற்பட்ட ஈழ மக்களை அங்கேயும் நிம் மதியாக வாழ விடாமல் இரண்டாவது தாக்குதல் நடத்தி வருகிறது சிங்கள அரசு.
நமக்கு மிக அண்டை நாட்டில் நடைபெற்று வரும் இத்தனை அமளி களுக்கும் இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படும் எதிர்வினை என்பது பெரும்பாலும் தில்லி அரசின் நிலைபாட்டிற்கு ஏற்பவும், அதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த நலன்கருதி மேற்கொள்ளுகிற நிலைக்கேற்பவும், ஏற்ற இறக்கங்களுடனேயே வெளிப்பட்டு வந்துள்ளன. ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழக, இந்திய மக்களின் மீது எப்படி தாக்கம் விளைவிக்கிறதோ அதேபோல தமிழக, இந்திய மக்களின் எதிர்வினைகளும் தமிழீழ மக்கள் மீதும் அம்மக்கள் மேற்கொண்டுள்ள விடுதலைப் போராட்டத்தின் மீதும் பாதிப்பு ஏற்படுத்தவே செய்கிறது.
ஈழமக்களின் தாய் மொழியான அதே தமிழைத் தங்களது தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழக மக்களை தமிழகத்தை ஒரு மாநிலமாக கொண்டுள்ள இந்தியா தங்களது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லாமல் சிங்கள அரசுக்கு துணை போவதாக இருக்கிறதே என்கிற குறை தமிழீழ மக்களுக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தொடக்க முதலே தில்லி அரசு ஈழப்பிரச்சனையை தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையைக் காத்துக் கொள்ளும் நோக்கிலேயே அணுகி அதற்கேற்பவே உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறது. தில்லி அரசின் இந்த உத்திகளுக்கு ராஜீவ் மரணம் பிரச்சார நோக்கில் சில வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, ஈழப் போராட்டத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கும் நேரடியாகவே அதை எதிர்ப்பதற்கும் இந்திய அரசு முன் வைக்கும் கருத்துக்கள் வருமாறு.
1. விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள். அது ஒரு பயங்கரவாத அமைப்பு.
2. அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி தமிழக இளைஞர்களைத் தூண்டி விட்டு கிளர்ச்சிகளை ஏற்படுத்தி தமிழீழம் தமிழகம் உள்ளிட்ட ஒரு அகண்ட தமிழகத்தை அமைக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
இவ்விரண்டு கருத்துக்களைத் தவிர ஈழ விடுதலையை - விடுதலைப் போராளிகளை எதிர்ப்பதற்கு வேறு எதுவும் காரணங்கள் இருப்பதாக தில்லி அரசு சொல்லவில்லை. கூடுதலாக வேறு எதுவும் காரணங்கள் சொல்லப் பட்டாலும் அது இவ்விரண்டு காரணங் களையும் மையப்படுத்தியதாகவே இருக்குமேயன்றி வேறு புதிய காரணம் ஏதும் இருப்பதாகச் சொல்ல முடியாது. இக்காரணங்கள் எந்த அளவுக்கு சரி என்பதைப் பார்ப்போம்.
1. ராஜீவ்காந்தி மரணத்திற்கு யார் காரணம் என்பது இன்னமும் மெய்ப்பிக்கப்படவில்லை. அச்சம்பவத்தையொட்டி நியமிக்கப்பட்ட வர்மா மற்றும் ஜெயின் குழுக்களின் விசாரணை எந்தெந்த திசைகளிலெல்லாமோ நோக்கிச் செல்வதையும், அவ்விசாரணை இன்றுவரை முற்றுப் பெறாமல் நீள்வதையும், இதில் ஒரு குழுவின் அறிக்கையே முன்னாள் பிரதமரின் மேசையிலிருந்து காணாமல் போய் தேடப்பட்டு வருவதாக பேசப்பட்டு வருவதையும் இவ்விசாரணை கொள்ளும்புதுப்புதுப் பரிமாணங்கள் பலரையும் திகைப்படையச் செய்வதாக இருப்பதையும் நாடே அறியும். இந்த நிலையில் இதற்கு புலிகள் அமைப்பு மட்டுமே காரணம் என்பது எந்த வகையிலும் நியாயமாயிருக்க முடியாது..
அப்படி புலிகளே காரணம் என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வதானாலும் உலக வரலாற்றில் அரசியல் கொலைகள் என்பது ஒன்றும் புதிதல்லை.
அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன், கென்னடி, இஸ்ரேல் பிரதமர் உறிட்ச்காக் ரபேல், ஏன் இந்தியாவிலேயே மகாத்மாகாந்தி, இந்திரா காந்தி எனப் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏன் இலங்கைக் கடற்படைச் சிப்பாய் ஒருவனே, அணிவகுப்பு மரியாதையின் போது ராஜீவ் காந்தியைத் தீர்த்துக் கட்டும் நோக்குடன் தாக்குதல் நடத்தவில்லையா.. அந்த தாக்குதலுக்கு ராஜீவ் பலியாகியிருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
இப்படிச் சொல்வதால் இந்த அரசியல் கொலைகளை, கொலை முயற்சிகளை எல்லாம் நியாயப்படுத்துவதாக பொருள் கொண்டுவிடக் கூடாது. இதற்கெல்லாம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வழக்கு கொடுத்து விசாரணை நடத்தி குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் அது அதற்குரிய தண்டனை வழங்க வேண்டும். அதுதான் முறை என்பதே நமது வாதம்.
ஆனால், அப்படி நடவடிக்கை எடுப்பதை விட்டு இந்த ஒரு நிகழ்வை மட்டுமே காரணமாக வைத்து ஒரு இயக்கத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்குமே எதிராக, விரோதமாகச் செயல்படுவது என்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. அது நியாயமுமாகாது. மகாத்மாவைக் கொன்றவன் ஒரு இந்து மதவெறி அமைப்பைச் சேர்ந் தவன் என்பதால், முற்றாக இந்து மத வெறி அமைப்புகளின்பாலோ, இந்திராவைக் கொன்றவன் ஒரு சீக்கியன் என்பதால் முற்றாக ஒட்டுமொத்த சீக்கிய இனத்தின்பாலோ யாரும் குரோதம் காட்டவில்லை. வெறுப்பை உமிழவில்லை. பகைமை பாராட்டவில்லை. இந்தியப் பிரதமரைக் கொல்ல முயன்ற கடற்படைச் சிப் பாயைத் தன்னகத்தேக் கொண்ட சிங்கள அரசுக்கு இந்திய அரசும் உதவிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மெய்ப்பிக்கப் படாத ஒரு குற்றச் சாட்டை வைத்துக் கொண்டு தில்லி அரசு புலிகள் அமைப்பின் பேரில் பகைமை பாராட்டி ஈழத் தமிழர்களின் நலனை முற்றாகப் புறக்கணித்து வருகிறது. அல்லது இப் புறக்கணிப் புக்கு ராஜீவ் மரணத்தை தனக்கு சாக்காகப் பயன்படுத்தி வருகிறது. இது எந்த வகையில் நியாயம் என்பது தான் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரின் கேள்வியும்.
2) அடுத்தது புலிகள் அமைப்பு அகண்ட தமிழகத்தை அமைக்கத் திட்ட மிட்டிருக்கிறார்கள். அதை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது. தமிழகத்தில் எங்கோ சில இளைஞர்கள் தமிழர் மீட்சிப் படை என்கிற பெயரில் செயல்பட்டார்கள் என்பதை வைத்து மத்திய மற்றும் தமிழக புலனாய்வுத் துறையினர் கட்டி விட்ட புனை கருட்டு இது. புலிகள் தங்கள் இதழ்களிலும் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் சரி எங்கும் அகண்ட தமிழகத்தைப் பற்றி பேசவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பக்கத்துக்குப் பக்கம், பேச்சுக்குப் பேச்சு, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம், இது தமிழீழ மக்களின் பிறப்புரிமை” என்பது தான். இப்படித் தான் சொல்லியிருக்கிறார்களே தவிர அவர்கள் ஒருபோதும் அகண்ட தமிழ கம் பற்றிப் பேசவேயில்லை. அது கோட்பாட்டு ரீதியில் சரியற்றது என்பதோடு மட்டுமல்ல அது புவியியல் ரீதி யிலும் சரி வரலாற்று ரீதியிலும் சரி நிச்சயமாய்ச் சாத்தியமற்றதும் கூட.
காரணம், ஈழத் தமிழர்கள் தனி தேசிய இனம். தமிழகத் தமிழக்கள் தனி தேசிய இனம். ஈழ மக்கள் தங்களுக்கு தனி தாயம் வேண்டும் என்று கோருவது அவர்களது பிறப்புரிமை. ஐ.நா. மனித உரிமை சாசனம் பிரிவு 15இன் படி உலகில் உள்ள எந்த தேசிய இனமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையுள்ளது. இதன்படி அது தன் மேல் தொடுக்கப்படும் ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போராடவும் அதிலிருந்து விடுதலை பெறவும் உரிமை உடையது. அந்த அடிப் படையில் ஈழத் தமிழர்கள் அவர்கள் சொந்த மண்ணில் அவர்களது உரிமைகளுக்காக போராடி வருகிறார்களே தவிர, அவர்கள் எந்த நாளிலும் அகண்ட தமிழகம் பற்றிப் பேசவுமில்லை யாரிடமும் அதைக் கோரவுமில்லை. அவர்கள் கோருவ தெல்லாம் தமிழீழம் ஒன்றுதான்.
இப்படி மெய்ப்பிக்கப்படாத இந்த குற்றச் சாட்டுகளை வைத்துதான் இந்திய அரசு 1992ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் அமைப்பைத் தடை செய்தது. சட்ட விதிமுறைகள் படி அந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்பதால் 94ஆம் ஆணடு அதை மேலும் இரண்டாண்டு களுக்குப் புதுப்பித்ததோடு இந்த ஆண்டு 1996ஆம்ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அதை அடுத்த இரண் டாண்டுகளுக்குப் புதுப்பித்து ஆணை பிறப்பித்துள்ளது.
எந்த ஒரு அரசும் அது எடுக்கும் நடவடிக்கையில் மக்கள் ஒரு தார்மீக நியாயத்தை அல்லது கொள்ளை கோட் பாடு சார்ந்த நெறிமுறைகளை எதிர் பார்ப்பது இயல்பானது. அது நியாய மானதும் கூட.
அவ்வகையில் இந்திய மக்களுக்கு என்று இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கென்று எழும் சில கேள்விகள் :
1) கடந்த ஆண்டு நவேலியில், நீர்வேலியில், கோப்பேயில் சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களை முதியவர்கள் என்னும் பச்சிளம் குழந்தை என்றும் பாகுபாடு இல் லாமல் கொன்று குவித்தபோது பதற்றமடையாத, கலக்க மடையாத அவர்கள் மேல் கரிசனம் காட்டாத இந்திய அரசு, கொழும்புவில் எண்ணெய்க் கிணறுகளை புலிகள் தகர்த்து எல்லாம் தீப்பற்றி எரிகின்றன என்னும்போது மட்டும் உடனடியாக தீயை அணைக்க வாயுவையும், வல்லுநர்களையும் அனுப்பி வைத்ததே அது ஏன்?
2) வியட்நாம், கொரியா, தென் னாப்பிரிக்கா, நமீபிய பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்களையெல் லாம் ஆதரித்து அதன் தலைவர்களை யெல்லாம் விருந்தினர்களாக அழைத்து வைத்து அரசு மரியாதை கொடுத்த, கொடுக்கும் இந்திய அரசு, அவ்வளவு ஏன், இந்தியத் துணைக் கண்டப் பரப்புக்குள்ளேயே யாஹி யாகானின் கொடுங்கோலாட்சிக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் போராடிய போது ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டி நேடியாகவே இராணுவத்தை அனுப்பி, வங்க தேசத்தை உருவாக்கி முஜிபர் ரஹ்மான் கையில் கொடுத்த அரசு, தமிழீழத்துக்கு மட்டும் எதிராகச் செயல்படுவது ஏன்? வங்கத்துக்கு ஒரு நீதி தமிழீழத்துக்கு மட்டும் வேறொரு நீதியா?
3) புலிகள் அமைப்புக்கு நார்வேயில், ஸ்வீடனில், ஜெர்மனியில், பாரீசில், கனடாவில் இங்கிலாந்தில் எங்கும் தடையில்லாத போது அவர்கள் அங்கங்கே அலுவலகம் அமைத்துச் செயல்படும் போது, அவ்வளவு ஏன் அவர்கள் அன்றாடம் போராடி வரும சொந்த மண்ணில் இலங்கையிலேயே அவ்வமைப்பு தடை செய்யப்படாத போது - இது தொடர்பாக இந்தியா ஏடு ஒன்றுக்கு சந்திரிகா அளித்த பேட்டி ஒன்றில் “இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியைத் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கும் புலிகள் அமைப்பைத் தடை செய்து விட்டு அவர்களோடு நான் பேச்சு வார்த்தை நடத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியிருக்கும் போது இந்தியாவில் மட்டும் புலிகள் அமைப்புக்குத் தடை, அவ்வப் போது தடை நீட்டிப்பு என்பதற்கான அவசியம் என்ன? இப்படிப்பட்ட கேள்விகள் சாதாரண மக்கள் மத்தியில் நியாயவுணர்வுள்ளவர்கள் மத்தியில் எழுவது தவிர்க்க முடியாதது. இதற்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.
ஏற்கெனவே ஜெயவர்த்தனே பற்றிக் கூறிப்பிடும்போது இந்திய அரசு ராஜீவ் ஜெயவர்ததனே ஒப்பந்தத்தைச் சுட்டிக் காட்டி, இந்திய அரசு தூக்குப் போட்டுக் கொள்ள கயிறு தயாரித்துத் தந்தவர் ஜெயவர்த்தனே என்று குறிப்பிட்டிருக்கிறார் சந்திரிகா. இந்திய அரசு இன்னும் அந்தத் தூக்கு கயிற்றையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கப் போகிறதா இல்லை அதிலிருந்து மீண்டும் வேளியேறப் போகிறதா என்பதே இப்போதைய நம் கேள்வி. தற்போது போராளிகள் மீது நடவடிக்கை என்ற பெயரில் தமி ழினத்தையே கூண்டோடு அழித்து விடுவது என்கிற நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது சிங்கள இன வெறி அரசு. கிலாலி தரைவழிப் பாதையைக் கைப்பற்றி யாழ் நகர், வடமராட்சி கிளிநொச்சி பகுதிகளின் மேல் ஏவுகணைத் தாக்குதால் நடத்தி குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இம்மக்கள் இத்தாக்குதலுக்குப் பயந்து வன்னிப்பகுதிக்கு இடம் பெயர் வதாக புலிகள் அமைப்பு கூறுகிறது. ஆனால் அம்மக்கள் புலிகள் கட்டுப் பாட்டுக்கு உடன்பட்டு மறுத்து யாழ் நகருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார் கள் என்கிறது இலங்கை இராணுவம்.
ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகவும், மூனறாவது தரப்பினூடே போர் நிறுத்தத்தையும் பேச்சு வார்த்தையும் கோருவதாகவும், அனைத்துலகத் தொடர்பு சாதனங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறா னவை என புலிகள் தலைமை நிலையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதோடு குடா நாட்டில் இராணு வம் நிலை கொண்டிருக்கும் வரை அந்த இராணுவ அழுத்தத்தின் கீழ் பேச்சு வார்த்தை நடத்த முடியாது இராணுவத் தைத் திரும்பப் பெறாமல் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை எனவும் புலிகள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை, இராணுவத்தைத் திரும்பப் பெறுவது பேச்சுவார்த்தை நடத்துவது என்கிற நிலைப்பாட்டை இலங்கை நவ சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு குருனாரத்தை மே தின நிகழ்ச்சிகளையொட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் எந்த நாளி லும் தாங்கள் இந்திய அரசின் மீது பகைமை பாராட்டியதாகச் சொல்வ தில்லை. தேவையில்லாமல் அப்படி ஒரு நிலைக்கு அவர்கள் செல்ல வேண்டிய அவசியமுமில்லை. சமீபத்தில் கூட விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வ தேசப் பேச்சாளர் லாரன்ஸ் திலகர் தமிழக பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடும் போது “தமிழீழம் இந்தியாவுடன் நட்புறவு கொண்டு ஒரு பலமான நாடாக இருக்கவே விரும்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுவே இன்றைய ஈழ விடுதலைப் போராட்டத்தின், தமிழீழ விடுதலைப் போராளிகளின் இலக்கு. ஆனால் இதைத்தான் இந்திய அரசு முற்றாக மறைத்து, அவ்விடுதலைப் போராட்டத்திற்கும், போராளிகளுக்கும் எதிராக அவதூறு பரப்பி அபாண்டமாக அவர்கள் மீது பழி சுமத்தி வருகிறது. உலக வரலாற்றில் விடுதலைப் போர்கள் தோற்றதில்லை என்பதும், அவ்வப்போது அது பின்னடைவு களுக்கு வேண்டுமானால் ஆளாகலாமே தவிர அப்போராட்டத்தை முற்றாக அழித்து விட முடியாது என் பதும் அனைவரும் அறிந்த உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியாதது அல்ல. எனவே, இன்னமும் விடுதலைப் புலிகள் மேல் பகைமை பாராட்டி, ஈழ மக்கள் படும் சொல்லொணாத்துயர் பற்றி பொருட்படுத்திக்காமல் இருப் பதோ அல்லது அம்மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு துணை போவதோ இந்திய அரசுக்கு நல்லதல்ல.
ஈழ மக்கள் துயர் துடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். சிங்கள அரசுக்கு செய்து வரும் இராணுவ உதவி உள் ளிட்ட அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும். ஈழ மக்களுக்கு அம்மக்களின் கோரிக்கையான தன் னுரிமையை வழங்கி, தமிழீழத்தை அங்கீகரித்து, அப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டு அம்மண்ணில் சமரசத்தை ஏற்படுத்தாதவரை இந்திய அரசு இலங்கை அரசுடான ராஜிய உறவுகளை நிறுத்தி வைக்க வேண்டும். இந்திய அரசு இப்படிச் செய்யத் தவறினால் இந்திய மக்கள் இதுபற்றி கண்டு கொள்ளாமல் இருந்தாலும் தமிழக மக்கள் இதைத் கண்டு கொள்ளாமல் சும்மாயிருக்க மாட்டார்கள்.
மனதில் உள்ளதை வெளிப் படுத்த முடியாமல் மௌனப் பார்வையாளர்களாக இருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் ஜெ அரசின் எதேச்சாதிகார ஊழல் ஆட்சியை யாரும் எதிர்பாராத வண்ணம் வெகுண்டெழுத்து வீழ்த்தி எப்படி முற்றாகத் துடைத்தெறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்களோ அதைப் போலவே தில்லி ஆட்சிக்கு எதிராகவும் ஒரு நாள் வெகுண்டெழுவார்கள். ஆனால் அது நாடாளுமன்ற நடவடிக்கைக்கு உட்பட்ட வெறும் தேர்தல் களப்போராட்டமாக இருக் காது. மாறாக அதுதேர்தல்களைப் புறக்கணித்து தெருக்களில் நடைபெறும் களப் போராட்டமாக, வெறுப்படைந்த மக்கள் விரத்தியின் விளிம்பில் நின்று நடத்தும் போராட்டமாக இருக்கும். அப்படி ஒரு நாள் வராமல் இந்திய அரசு இப்போதே நேரத்தில் தன் கடமையைச் செய்யப் போகிறதா அல்லது தானாக அந்த நாளை வரவழைத்துக் கொள்ளப் போகிறதா என்பதே தற் போது இந்திய அரசின் முன் உள்ள கேள்வி.
Comments