சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதற்காக இத்தாலி, துருக்கி சென்றிருந்தார்?


கடந்த 25 வருடத்திற்கு மேலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நாம் யாவரும் அறிந்து கொண்ட, உணர்ந்து கொண்ட, கண்டறிந்த உண்மை என்னவெனில் - புலம்பெயர் நாடுகளிலும் சர்வதேச அரங்குகளிலும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் உண்மைச் சம்பவங்கள், புள்ளி விபரங்கள் அடங்கிய அறிக்கைகளுடன் தமது வேலைத் திட்டங்களை தமிழீழ மக்களை அடக்கி ஆளும் சிறிலங்கா அரசு மீது மேற்கொள்ளுகின்றனர்.

ஆனால், தொடர்ந்து தமிழீழ மக்களின் அடிப்படை உரிமைகளான அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார உரிமைகள் அடங்கிய சுயநிர்ணய உரிமையை நசுக்கி வரும் சிறிலங்கா அரசுகள், அரசு என்ற அடிப்படையில் தமது பொய்யான, நீதி நேர்மையற்ற சர்வதேச பிரச்சாரங்களை மிக இலகுவாக தமது தனிப்பட்ட நட்பு, செல்வாக்கு ஆகியவற்றுடன் பல கோடி பணத்தைச் செலவழித்து உண்மைகளை பொய்யாகவும், நடந்தவற்றை நடக்காதவையாகவும் காண்பித்து, சர்வதேச அரங்குகளில் செய்ய முடியாதவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றனர். இதனடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிறு சிறு இடையூறுகளை சர்வதேச நாடுகளில், அரங்குகளில் சந்தித்துள்ளது. ஆனால் உலக நியதிகளுக்கு அமைய, நீதி நேர்மை எப்பொழுதும் வெல்லும். முன்பும் வென்றுள்ளது.

உண்மையென்னவெனில், இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை தமிழ் மக்களின் அபிலாசைகளை தாம் எப்படியாக அலட்சியம் செய்யலாம், புறக்கணிக்கலாம், திரிபுபடுத்தலாம் என்ற வழிவகைகளை தேடுவதில், சிறிலங்காவின் ஆட்சியாளர்களால் செலவிடும் நேரங்கள், இவற்றை எப்படியாக சுமூகமாக, நேர்மையாக, சமாதானமாக தீர்த்து வைக்கலாம் என்பதை விட பலமடங்கு கூடியது.

இந்த அடிப்படையில் சர்வதேச நாடுகளிடமிருந்து 'பயங்கரவாதத்தை" அடக்குவதற்கு ஆயுதம் வேண்டும் என்று கேட்பதும், தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் போன்று வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டங்களை அடக்கும் தந்திரங்களை தெரிந்து கொள்வதும், அப்படியான நாடுகளுடன் உறவுகொள்வதும், உலகில் சர்ச்சைக்குரிய நாடுகளுடன், ஐ.நா.வில் தமது வாக்குரிமை பலத்தைக் காட்டி கூட்டுச்சேர்வதும், சிறிலங்கா அரசுகளுக்கு கைதேர்ந்த கலை ஆகிவிட்டது.

இந்த ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்ற காலம் தொட்டு - கியூபா, சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற பல சர்ச்கைக்குரிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தற்பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி, இந்தியாவின் தலைநகர் டில்லியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது என்பதை நாம் யாவரும் அறிவோம். இவற்றைக்கண்டு ஈழத் தமிழர்கள் பெருமிதமடைந்துள்ள இவ்வேளையில், இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற சவாலை சிறிலங்கா அரசு எதிர்நோக்கியுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள தொப்பிள் கொடி உறவினால் ஏற்பட்டுள்ள தமிழ் நாட்டின் எழுச்சியோ, இந்தியாவில் எந்த சக்தியை பாவித்தும் தவிர்த்துக்கொள்ள முடியாது என்பதை சிறிலங்கா அரசு நன்கு அறியும். இதன் காரணமாக ஜனாதிபதி இத்தாலி, துருக்கி வரை செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசில் மிக செல்வாக்கு நிரம்பிய திருமதி சோனியா காந்தி மீது தனிப்பட்ட உறவு செல்வாக்குகளை பாவிக்க விரும்புவோர் இவரது பிறப்பிடமான இத்தாலியில், இவரது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மூலம் சோனியா காந்தியை தமது வசப்படுத்துவதலாம். இந்த முயற்சியில் ராஜபக்சவும் இவரது தூதரகங்களும் தொண்டர்களும் முயற்சிக்க மாட்டார்களா? முயற்சிக்கவில்லையா?

அடுத்து உலகில் விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதிலும், மனித உரிமைகளை அலட்சியம் பண்ணும் நாடுகளில் துருக்கியும் முன்னணியில் உள்ளது. ஐந்து (ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆசர்பையான்) நாடுகளுக்கிடையில் பிரிந்திருக்கும் குர்தீஸ் மக்களின் விடுதலைப் போராட்டம் துருக்கியில் மிகவும் மோசமான பின்னடைவுகளை பெற்றுள்ளது.

இம்மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பி.கே.கே என அழைக்கப்படும் குர்திஸ் தொழில் கட்சியின் தலைவர் திரு. அப்துல்லா ஒசலான் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரது விடுதலைப் போராட்டத்துக்குள் பல பிரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

இதில் விசேடம் என்னவெனில், குர்திஸ் தொழில் கட்சியின் தலைவர் திரு அப்துல்லா ஒசலானை ஆபிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டத்தற்கு இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான ~மொசாட்| உதவியதாக ஒரு கதையும் உண்டு. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தை வேண்டி நிற்கும் துருக்கியின் மனித உரிமை மீறல்கள் மிகவும் கொடுமையானவை.

இந்த ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் தாம் அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தாலி இருந்து - துருக்கி வரை சும்மா செல்லவில்லை ~சோழியன் குடும்பி சும்மா ஆடாது|. உலகில் பொதுவாக, சுயநிர்ணைய உரிமை பற்றிய உடன்பாடான கொள்கைகளை கொண்டுள்ள ஸ்கெண்டினேவியன் நாடுகளுக்கு கூடிய விரைவில் இவர் தனது விஜயத்தை மேற்கொள்வார் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்பார்கின்றனர்.

- பிரான்சிலிருந்து ச.வி.கிருபாகரன் -


Comments