மனித வெடிகுண்டு தாக்குதல் புலிகளுக்கு மறந்து விட்டதோ?' என்ற சந்தேகம் பலருக்கு முளை விட்டிருந்த நிலையில், இலங்கைத் தலைநகரம் கொழும்பு அருகே வத்தளை என்ற இடத்தில் ஒரு மனிதகுண்டு தாக்குதலை நடத்தி அதிர வைத்திருக்கிறார்கள் புலிகள். அந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்கள் ஆறு பேர் பலியாகி, பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர். வன்னிப்பகுதியில் வகைதொகை இல்லாமல் ராணுவம் குண்டுமழை பொழியும் நிலையில், ஓர் எச்சரிக்கையாக புலிகள் தரப்பிடமிருந்து வெடித்திருக்கிறது இந்த மனித வெடிகுண்டு.
இதற்கிடையே நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது ஒரு வீடியோ காட்சி. `இதயபலம் இருந்தால் மட்டும் பாருங்கள்' என்ற எச்சரிக்கையுடன் அதை அனுப்பியிருந்தார் இலங்கை வாசகர் ஒருவர். அந்த வீடியோ காட்சியை நாம் பார்த்தபோது, கிளிநொச்சியில் விழுந்து வெடிக்கும் ஆயிரமாயிரம் குண்டுகளின் அதிர்வை விட நம் நெஞ்சில் பேரதிர்வு!
அந்த வீடியோ காட்சியில் பதுங்கு குழிகளுக்குள் சில பெண்புலிகள் சடலமாக விழுந்து கிடக்கிறார்கள். அவர்களைச் சுற்றிசுற்றி வந்து எகத்தாளமாக குரல் எழுப்புகிறார்கள் சிங்கள ராணுவத்தினர். பெண் புலிகளின் உடைகளை உரித்து, முழுநிர்வாணமாக்கி அதை சிறியரக கேமராவில் படம்பிடித்தபடி சிரிக்கிறார்கள். ஒரு சிங்கள `வீரன்' சடலமாய் கிடக்கும் பெண்புலியின் மீது அமர்ந்து, கேமராவைப் பார்த்து வெறியுடன் கெக்கலிக்கிறான். அவன் என்ன செய்திருப்பான் என்பது நமக்குப் புரிந்து போக உள்ளமே அருவருப்பாகிறது நமக்கு.
மீண்டும் கேமரா பெண்புலிகளின் உடல்களைக் காட்டுகிறது. அங்கே அவர்களின் மார்பகம், பிறப்புறுப்புகளில் கத்திமுனையால் ரத்தக் கோலம் போடப்பட்டிருக்கிறது. சற்றுத் தொலைவில் மேலும் இரண்டு பெண்புலிகள் சடலமாகக் கிடக்கிறார்கள். `அந்த உடைகளையும் கழட்டுடா கழட்டுடா' என சிங்களம் கலந்த தமிழில் ஒருவன் கத்துகிறான். கேமரா, இலக்கில்லாமல் பெண் புலிகளின் நிர்வாணத்தின் மீது மேய்கிறது. இறந்த பெண்புலிகளின் உடல்கள்மீது ஆபாச வெறியாட்டம் நடத்தி...... இல்லை, இதற்குமேல் நம்மால் சொல்ல முடியவில்லை. சிங்கள சிப்பாய்களின் சிரிப்புச் சத்தத்தோடு முடிகிறது அந்த வீடியோ. சர்வதேச விதிமுறைகள் ஒருபுறமிருக்க, சாதாரண மனிதகுணங்கள் கூட மகிந்த ராஜபக்ஷேவின் ராணுவத்திற்கு இருக்காதா? என்ற சந்தேகத்தில் நமது விழிகள் அப்படியே நிலை குத்தி நிற்கின்றன.
சிங்களச் சிப்பாய்களின் இந்த சின்னப்புத்திக்கு என்ன காரணம்? என்ற நம் கேள்விக்கு வன்னிப் போர் நிலவரம் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு விளக்கமளித்தனர் இலங்கை வட்டாரத்தினர் சிலர்.
``இந்தியாவிலிருந்து போர்நிறுத்தம் என்ற கோரிக்கையுடன் பிரணாப் முகர்ஜி வருவதற்குமுன் எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட வேண்டும்' என்பது சிங்கள ராணுவத்திற்கு பிரதமர் ராஜபக்ஷே இட்டிருக்கும் கட்டளை. பிரணாப் முகர்ஜியின் வருகை தாமதமாவதற்கும் இதுதான் காரணம். இந்நிலையில், கிளிநொச்சியைப் பிடிக்க, சந்திரசிறீ, ஜெகத், ஜெயசூரிய என்ற மூன்று மேஜர் ஜெனரல்கள், ஐந்து பிரிகேடியர்கள், ஏழு கர்னல்கள், பதினேழு லெப். கர்னல்கள் மற்றும் பல்வேறு டிவிஷன்களைச் சேர்ந்த எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் அங்கே குவிக்கப்பட்டனர்.
கிளிநொச்சியைச் சுற்றி மலையாளபுரம், குஞ்சு பரந்தன், புலிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு இடங்களில் நள்ளிரவு தாண்டி இரண்டுமணியளவில் கடும்மழையில், கும்மிருட்டில் இந்தப் படைகள் காத்திருந்தன. யாழ் மாவட்டம் கிளாலியில் ஒரு தாக்குதலைத் தொடங்கி புலிகளின் கவனத்தை அங்கே திசைதிருப்பி விட்டு, இந்த நான்கு முனைகள் வழியாகவும் புகுந்து கிளிநொச்சியைப் பிடிப்பது ராணுவத்தினரின் திட்டம்.
அதன்படி கிளாலியில் போர் தொடங்கியதாகப் போக்குக் காட்டிவிட்டு, இந்த நான்கு இடங்களிலும் புலிகளின் முன்னணி காவலரண்களை உடைத்துக் கொண்டு ஆரவாரமாக முன்னேறியது சிங்கள ராணுவம். அவ்வளவுதான், அவர்கள் மேல் ஆக்ரோஷமாக வந்து அடித்தது ஒரு புலியலை! சுதாரிப்பதற்குள் சுனாமியாக வந்து அடித்தது மற்றொரு அலை. அந்த பலத்த அடியால் பஞ்சு பஞ்சாகச் சிதைந்து, சின்னாபின்னமாகிப் பறந்தது சிங்களப் படை.
அதிகாலை நேரம்! `கிளிநொச்சி பிடிபட்டது' என்ற இன்பச் செய்திக்காக காதுகளைத் தீட்டிக் கொண்டு கொழும்பில் காத்திருந்தது ராணுவ உயர்வட்டம். ஆனால் ஹெலிகாப்டர்கள் இரைச்சலோடு பறக்க, ஆம்புலன்ஸ்கள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓட, சண்டையின் ரிசல்ட் என்ன என்பது ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்குப் புரிந்து விட்டது.
அடம்பன் பகுதியில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிய ஐநூறு பேர் அடங்கிய ராணுவம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. முறிகண்டியில் முழுக்க முழுக்க பெண்புலிகளின் அணி மட்டுமே களமாடி பலத்த உயிர்ச்சேதத்தை ராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் புலிகளின் மண் அரண்களை ஒட்டிய அகழித் தண்ணீரில் செத்து மிதந்து கொண்டிருந்தன சிங்களச் சிப்பாய்கள் பலரது உடல்கள். எதிர்பார்க்காத மரண அடி இது!
நான்காவது ஈழப்போர் என்று கூறப்படும் இந்தச் சண்டையில் இதுவரை பன்னிரண்டாயிரம் சிப்பாய்கள் பலியாகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பி. பாலித்த ரங்க பண்டார என்பவரே கூறியிருக்கிறார். புலிகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிடும் இவரே இப்படிக் கூறியிருப்பது அதிர்ச்சியின் உச்சம். இன்னொரு எம்.பி.யான மங்கள சமரவீர என்பவரோ, கொழும்பு, அநுராதபுரம் மருத்துவமனைகளில் முறையே 1,265 மற்றும் 700 படையினர் இருப்பதாகக் கூறியுள்ளார். பொல நறுவை, காலி, காரம்பிட்டிய, களுத்துறை, நாகொட, வவுனியா, மன்னார் மருத்துவமனைகளில் உள்ள ராணுவச் சிப்பாய்களின் கணக்கு அவருக்குக் கிடைக்கவில்லை போலும்.
``இதுவரை பதினான்காயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதில் பன்னிரண்டாயிரம் பேர் புலிகளின் பீரங்கி மற்றும் மார்ட்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் மீண்டும் களத்திற்குச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்'' என்று சொல்லியிருக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகாவின் ஊடகர் திஸ்ஸ ரவீந்திர பெரேரா. இதன்மூலம், எஞ்சிய ஆறாயிரம் பேர் இனி நடமாட முடியாதவர்கள் என அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு `தெளிவாக' அடிவாங்கிய பிறகும் `கிளிநொச்சியைப் பிடித்தே தீருவோம்' என்று கொழும்பில் பாதுகாப்பாக உள்ள அரசு உயர்வட்டம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்க, களத்தில் தொடர்ந்து அடிவாங்கும் ராணுவத்தினரோ ஆற்றமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறார்கள். அந்த வெறித்தனம், கோபம், கொந்தளிப்பைத்தான் வீரமரணமடைந்த பெண்புலிகளிடம் அவர்கள் `காட்டி' வருகிறார்கள். இப்படிச் சில்லுண்டித்தனம் செய்வதற்காகவே சிங்கள சிப்பாய்கள் பலர் சிறிய ரக கேமராக்களைச் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்'' என்றார்.
கடந்த வாரம் வாங்கிய உச்சகட்ட அடிக்குப் பிறகு வான்வழித்தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது இலங்கைப்படை. பெரும்பாலும் இரவுநேரத்தில் பறந்து முதலில் ஒரு வெளிச்ச குண்டையும், பிறகு நிஜ குண்டையும் அது வீசிவருகிறது. முன்பு விமானத் தாக்குதல்களின் போது வன்னித் தமிழர்களுக்குப் பதுங்கு குழிகள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தன. இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. `பாராசூட் குண்டு' என்ற பெயரில் விமானப்படை வீசும் புதுவகை குண்டுகள் தரையிலிருந்து மேலே ஐம்பது மீட்டர் தொலைவிலேயே வெடித்துச்சிதறி கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பாராசூட் குண்டு விழுந்து வெடித்தால் தரையில் படுத்திருப்பவர்கள், பதுங்கு குழிகளில் இருப்பவர்கள் கூட தப்ப முடியாது. கடந்த வியாழனன்று விசுவமடு என்ற இடத்தில் வீசப்பட்ட பாராசூட் குண்டால் பல வீடுகள் சேதமாகின. ஓடிப் பதுங்க முடியாத எண்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் கொத்துக்கொத்தாக மடிந்து போயின.
இதற்கிடையே புலிகள் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசன், ``வன்னி நிலப் பரப்பிற்கு ஊடாக வரும் ராணுவத்தினரை மீள திரும்ப விடுவதற்கில்லை. அந்த சபதத்தை ஏற்று புலிகள் நிற்கிறார்கள். இது இறுதியான காலகட்டம்'' என்று பேசி, ராஜபக்ஷே தரப்புக்கு மேலும் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்.
நிலைமை இவ்வாறிருக்க, புலிகளின் பிரதம ஆயுத முகவரான கண்ணாடி பத்மன் (கே.பி.) என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், அவர் பங்குக்கு ஓர் அதிரடியை நடத்திக் காட்டியிருக்கிறார். மூன்று புலி பிரதிநிதிகளை கனடாவிலிருந்து உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி, அதிநவீன ஆயுதங்களை வாங்கிய அவர், ஒரு கப்பல் மூலம் அவற்றை முல்லைத்தீவு கடல்பகுதியில் மர்மமான முறையில் இறக்கிக் காட்டியிருக்கிறார். தகவலை தாமதமாகத் தெரிந்து, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படைக் கப்பல்கள் அங்கே விரைந்த போது அந்த `ஆயுதக் கப்பல்' மாயமாகி விட்டது. அதில் அதிநவீனரக ஆயுதங்களைத் தவிர, புலிகளின் விமானப் படைக்குத் தேவையான எரிபொருளும் வந்து இறங்கியிருப்பதாகக் கேள்வி. இலங்கைப் படையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு புலிகள் எப்படி ஆயுதங்களை இறக்கினார்கள் என்று புரியாமல் விழிக்கிறார்கள் சிங்கள அதிகாரிகள்.
இந்தநிலையில,் கடந்த சனிக்கிழமை காலை ஐந்து மணியளவில் முல்லைத்தீவை நோக்கி பெரும்படையை நகர்த்தி அங்கும் முதுகு முறிபட்டுத் தவிக்கிறது சிங்கள ராணுவம். அங்கு நடந்த சண்டையில் அறுபது ராணுவத்தினர் பரலோக பிராப்தியடைந்து, எழுபத்தைந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் விமான குண்டுவீச்சு நடத்தியிருக்கிறது இலங்கைப்படை.
வன்னிப் போர் உச்சகட்ட நிலையை அடைந்திருக்கும் இந்தநிலையில், இந்திய `ரா' உளவு அமைப்பின் முன்னாள் செயலாளரான பி.ராமன், ``ராணுவத்தினருக்கு மரண முற்றுகைக் களமாக கிளிநொச்சி இருக்கிறது'' என்று கருத்துக் கூறியிருக்கிறார்.
``இனிமேலும் தாங்காது என்ற நிலையில் தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் `போர் நிறுத்தம்' என்று இலங்கை அரசு பெருங்குரலெடுத்து கத்தப்போவது நிஜம்'' என்கிறார்கள் வன்னிப் போரை உன்னிப்பாக கவனித்து வரும் போர்க்கள அவதானிகள். நாமும் அதைப் பார்க்கலாம்.
ஸீ
Comments