ராஜீவ் பற்றி விமர்சனம்: டைரக்டர் சீமான் காருக்கு தீவைப்பு

thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts
Seeman
சென்னை: இலங்கை விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை டைரக்டர் சீமான் விமர்சித்துப் பேசியதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தமிழர் எழுச்சி உரை வீச்சு என்ற தலைப்பில் ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை ஆதரித்தும் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி விமர்சனம் செய்தும் பேசினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் உள்பட பலரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஏற்கனவே ராமேஸ்வரத்தில் தமிழ்திரை உலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.
இந் நிலையில் சென்னையில் சீமான் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காருக்கு நேற்று தீ வைக்கப்பட்டது.

வளசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகில் சீமானின் வீடு உள்ளது. நேற்று இரவு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது காருக்கு யாரோ தீவைத்து விட்டு தப்பிவிட்டனர். இதில் அந்தக் கார் முழுவதும் எரிந்து போனது.

இது குறித்து சீமானின் உதவியாளர் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.

காங்கிரசார்தான் அவரது காருக்கு தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பழனிச்சாமி ஈரோடு டவுன் போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா, சோனியா ஆகியோரை விமர்ச்சித்தும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலி இயக்கத்தை ஆதரித்தும் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அவருடன் இந்த கூட்டத்தில் பேசிய தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியின் மாவட்ட பொது செயலாளர் மணியரசன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல ராகுல் ரத்ததான கழக தலைவர் வக்கீல் பிரம்மா டி.ஜி.பி.யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், பயங்கர வாதத்தை தூண்டும் வகையில் பேசிய சீமான் மீது சட்டப்படி வழககு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

thats tamil

Comments