வன்னிக்களம்: உண்மையும் நடப்பியலும்,இனிப் பொய்கள் கலையும் காலம்


2008 இன் டிசம்பர் முதல் வாரத்தில் சிறிலங்கா அரசினதும் அதன் படைகளினதும் ஊடகப்பிரிவுகள் சுறுசுறுப்பாகத் தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தன.

நவம்பர் நடுப்பகுதியில் பூநகரியை 58 ஆவது படையணிக் கொமாண்டோக்கள் கைப்பற்றிய செய்தியை வெளியிட்டதைப்போன்று மகிமை மிக்கதொரு தகவலை வெளியிடுவதற்கான முன்னோட்டம் போன்று அவை காணப்படும் அதேவேளை டிசம்பர் 7 ஆம் திகதி கொழும்பின் வார ஏடுகள் அனைத்துமே எஞ்சியுள்ள மாகாண சபைகள் ஐந்தும் கலைப்படுவதற்கான ஏற்பாடுகளில் ஜனாதிபதி ஈடுபட்டிருப்பதையும் அதற்கான அறிவித்தல் நாற்பத்தெட்டு அல்லது எழுபத்தியிரண்டு மணிநேரத்திற்குள் அநேகமாக வெளிவரக் கூடுமெனவும் ஆரூடம்கூ றும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதற்கான அரசியல் நிர்ப்பந்தம் என்னவெனில் நவம்பர் கடைசி வாரத்தில் எட்டப்பட்டு விடும் என ஜனாதிபதியின் சகோதரரும், அவரது மிக நெருங்கிய சகாவான இராணுவத் தளபதியும் வெளியிட்டிருந்த இராணுவ எதிர்வு கூறல்கள் களத்திலே எட்டப்படாமற்போன துன்பியலை மறைப்பதாகும்.

அதாவது, கிளிநொச்சியை வீழ்த்தியமை குறித்த செய்தியை நவம்பர் 26 இல் அல்லது 27 இல் வெளியிடுவதற்குக் காத்திருப்பதாக அவர்கள் கூறியிருந்தது ஏமாற்றத்தில் முடிந்திருந்த காரணத்தால் அதிலிருந்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.

எனவேதான் ஏ-9 பாதையிலுள்ள சிறு நகரங்களைக் கைப்பற்றுவதான செய்திகளை அடுத்தடுத்து வெளியிட்டு அசத்திக்கொண்டிருக்கிறது இராணுவம். இவை சந்திரிகா அம்மையார் காலத்து ஜயசிக்குறுய் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினரது குருதியில் சேறாகிப்போன இடங்கள் என்பது சிறிலங்காவின் மக்களால் இலகுவில் மறக்கப்பட முடியாததாகையால் அதை, அந்த மனநிலையைத் தொடக்கூடிவகையில் இந்தச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், கனகராயன்குளம் கைப்பற்றப்பட்ட செய்தியை டிசம்பர் 6 ஆம் திகதி வெளியிட்ட இராணுவம் மறுநாள் மன்னகுளம் வீழ்ந்து விட்டதாகவும் அறிவித்ததாகும்.

பல மாதங்களாகவே வன்னிவிளாங்குளத்துக்குக் கிழக்காக இராணுவ முன்னரண் வரிசை அமைந்திருந்த நிலையில், மாங்குளம் நவம்பர் நடுப்பகுதியில் இராணுவத்தாற் கைப்பற்றப்பட்டிருந்தது.

டிசம்பர் 6 ஆம் திகதி கனகராயன்குளமும் வீழ்ந்துவிட்ட நிலையில் ஏ-9 இற்கு மேற்காகவுள்ள மன்னகுளம் என்பது எந்தவித முக்கியத்துவமற்ற பகுதியாயிருப்பினும், அதனைக் கைப்பற்றியதாகவும் இராணுவம் அறிவித்தது ஒரு பகட்டாரவாரமான நடவடிக்கையேயன்றி வேறில்லை. இதன் இலக்கு ஜயசிக்குறுய் கால நினைவுகளை மீட்டுகின்ற, அவற்றுக்கு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தென்னிலங்கையிலே போர் வெற்றி பற்றிய எதிர்பார்ப்புகளை உச்சம்பெறச் செய்வதே.

ஆனால் போர் இனிமேற்தான் அதனது உண்மையான கோரவடிவத்தைப் பெறப்போகிறது என்பதை கொழும்பின் ஆட்சிப்பீடமும் அதனது இராணுவ இயந்திரமும் வசதியாக மறைத்து வருகின்றார்கள்.

மக்களது புத்தியைச் செயற்படவிடாது போதையேற்றும் போர் வெற்றிச் செய்திகளையே தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரபாயம் குறித்து அவர்களைச்; சிந்திக்காமற் தடுக்க விளைகிறது அரசு.

இராணுவத்தின் தளபதியும் அதிகாரிகளும் அதற்கு பூரணமாக ஒத்துழைக்கின்றனர். ஆட்சியாளரும் போரை நடத்துபவரும் சகோதரர்களாயிருப்பதும்; இராணுவத்தளபதி போரை நடத்துகின்றவரான ஜனாதிபதியின் சகோதரரின் நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பதும் இந்த அபாயகரமான அரசியல் விளையாட்டுக்கு வாய்ப்பாக அமைகின்றன.

இதன் அர்த்தம் இராணுவத்தளபதியும் இந்த அரசியல் விளையாட்டின் பங்காளி என்பதாகும்.

அதேவேளை இராணுவத்தளபதிக்கும் தீவிரமான அரசியல் அபிலாசைகள் இருப்பதாகவும் அது குறித்து அரசியற் தலைமைக்கு உள்ளுர தமது இருப்புக்குறித்த அச்சமும் வழிப்புணர்வும் இருப்பதாகவும் உள்ளிடத்தகவல்கள் மூலம் கொழும்பின் இராஜதந்திர வட்டாரங்களினால் அறியப்பட்டுள்ளது.

தமது ஆட்சியின் இருப்பின் அடிப்படையே இராணுவ வெற்றிகள்தான் என்பதிலே தெளிவுடனிருக்கும் ஆட்சியாளர்கள், அதனை எட்டுவதற்கு தற்போதைய இராணுவத் தளபதியையே நம்பியிருக்கின்ற போதும்; அதன் காரணமாக அவர் பெறுகின்ற நட்சத்திர அந்தஸ்தை, தேசிய வீரன் என்ற கௌரவத்தை அரசியல் மூலதனமாகத் தளபதி மாற்றிக்கொண்டு விடக்கூடாது என்பதில் தீவிர விழிப்புடனிருப்பது இராஜதந்திர வட்டாரங்களின் அவதானிப்பாகும்.

நாங்கள் போரின் தாக்கபூர்வ வளர்ச்சி பற்றிக் கவனிப்போம். புலிகள் தமது இருப்பை இப்போது மிக வரையறுக்கப்பட்ட நிலைகளுக்குள் நிலைப்படுத்திக்கொண்டு விட்டனர் என்பது தகவல்களை வெகு மேலோட்டமாகப் பகுப்பாய்வு செய்பவருக்குக்கூட நன்கு புரியும்.

கிழக்குக் கரையிலே முல்லைத்தீவு நகருக்குத் தெற்காக அளம்பிலை முன்னரங்காகக்கொண்டு முள்ளியவளைக்கும் ஒட்டுசுட்டானுக்கும் தெற்குப் புறமாக அம்பகாமம் பகுதியூடாகச் செல்லும் புலிகளின் முன்னரண் வரிசை, கிளிநொச்சியை முறிகண்டியையொட்டி மேவி புதுமுறிப்பு, சிவநகர், குஞ்சுப்பரந்தன் ஊடாகக் கடல் நீரேரியைச் சென்றடைகிறது. இதற்குத் தெற்கான அவர்களது நிரந்தர நிலைகள் பின்வலிக்கப்பட்டு அங்கே நடமாடும் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த அணிகளுக்குப் புறம்பாக விசேட நடவடிக்கைகளுக்கான பல்வேறு அணிகள் நடமாடுகின்றன.

தமது முன்னரண் வரிசைக்குப் பின்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட மண்ணரண்களை அப்பகுதிகளின் புவியில் நிலைகளுக்கு ஏற்ப அமைத்துள்ள புலிகள், ஒவ்வொரு பகுதிகளிற்கும் மூத்த, கட்டளையதிகாரிகளின் கீழ் நன்கு பயிற்றப்பட்ட துருப்புக்களை நிறுத்தியுள்ளனர்.

அத்தோடு தரைத்தோற்றத்துக்கு ஏற்றவாறு அதிநவீன, கனரக ஆயுதங்களை முன்னுதாரணமற்ற முறையில் பயன்படுத்துவதற்குத் தயார் நிலையில் விசேட அணிகளையும் நிறுத்தியுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளிவரும் பகிரங்க, உட்சுற்று ஊடகங்கள், பிரசுரங்களில் வெளியாகும் புகைப்படங்களைக் கவனிக்கும் அவதானிகள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவேதான் 2009 இற்குரிய தனது கொள்கை விளக்க உரையிலே திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன், தற்போது எதிர்கொள்ளப்படும் நெருக்கடி எமக்குப் புதிதுமல்ல, பெரிதுமல்ல என அழுத்தமாகத் தெரிவித்துள்ளார் என புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

'ஒரு அரண் இழக்கப்பட்டால் அதற்குப் பின்னே அடுத்ததை அமைத்துப் போரிடுவோம்" எனப் புலிகளின் தளபதிகளும், அரசியல்துறைப் பொறுப்பாளரும் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கூற்றுக்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக உடல் வலுவுள்ளவர்கள் அனைவரும் அடிப்படை இராணுவப் பயிற்சிகளைப் பெறவேண்டுமென்ற நியமத்தைப் புலிகள் கொண்டு வந்திருக்கின்றனர்.

போர்க்கால வேகத்தில் நடைபெறும் இந்நடவடிக்கைமூலம் சில வாரங்களுக்குள்ளேயே பல்லாயிரம் பேர் காவற்கடமைக்கும் அதனோடிணைந்த இராணுவத் தேவைகளுக்கும் தயார்படுத்தப்பட்டுள்ள நிலைமை வன்னியிலே தோன்றிவிட்டது கவனிக்கத்தக்கது.

கடந்த 1999 இல் புலிகளின் புகழ்பெற்ற ஓயாத அலைகள்-03 நடவடிக்கைக்கு முன்பாகவும் வன்னியிலே இதே நிலையே காணப்பட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நடவடிக்கையிலே இராணுவம் தனது 53 ஆவது, 56 ஆவது படையணிகளுடைய தலைமையகங்களையும் இழந்து ஒருவாரத்துள் பலநூறு சதுர கிலோ மீற்றர் பரப்பிலிருந்து - இப்போது செய்திகளில் அடிபடும் ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி - புளியங்குளம் - மாங்குளம் - மடு பகுதியிலிருந்து ஓட விரட்டப்பட்டது. இதன் காரணமாக இராணுவத்தின் இரண்டு டிவிசன்களின் தளபதிகள் இராணுவ நீதிமன்றினால் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதும் கவனிக்க வேண்டியதாகும்.

களமுனையிலே இராணுவத்தின் நகர்திறனும் இழப்புகளும் எவ்வாறுள்ளன? இராணுவம் புலிகளின் அரண் வரிசைகளுடனோ, அல்லது வலுவான படைப்பிரிகளுடனோ நேரடியாக மோதுவதைத் தவிர்த்து; இடைவெளிகளுடாகச் கசிந்து நுழைந்து பின்புறமாக மேவுகின்ற, ஒருவித கெரில்லாப்பாணித் தாக்குதல் உத்தியையே மாவிலாற்றிலிருந்து அளம்பில், பூநகரி வரைக்கும் பின்பற்றி வருகிறது.

8 வீரர்களைக் கொண்ட சிறுகுழுக்கள் இதில் முக்கிய பங்காற்றுகின்ற அதேவேளை ஆழ ஊடுருவும் அணிகள் தாக்குதல், வேவு ஆகிய இரட்டைப்பணிகளையும் ஆற்றுகின்றன.

புலிகள் பரந்து விரிந்த, காடு சார்ந்த பகுதிகளைக் கட்டுப்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் இந்தக் கெரில்லா உத்தியை எதிர்கொள்வதிலே குறிப்பிடத்தக்களவு சிரமங்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டிருந்தனர்.

அதன் விளைவாகப் பெருமளவு நிலப்பகுதிகளை படையினரிடம் முன்னுதாரணமற்ற வகையில் இழந்துமிருக்கின்றனர். ஆனால், இப்போது புலிகளின் பகுதிகள் வெகுவாகச் சுருங்கிவிட்ட நிலையில் இந்த உத்திகள் மேலும் பலனளிக்குமா? என்ற கேள்வி இராணுவ விற்பன்னர்களால் எழுப்பப்படுகிறது.

ஏனெனில் புலிகள் தமது ஆளணியை இயன்றளவு சேதமின்றிப் பேணிய படியும், ஆயுத பலத்தைப் பொத்தினாற் போன்று தக்கவைத்தபடியும் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து பின்வாங்குவதென்பது படையினரது இந்த உத்திக்கான பதிலிறுப்பாகத்தான் என்பது அவர்களது கணிப்பு.

வரையறைக்குட்பட்ட நிலப்பகுதியில் வலுப்படுத்தப்பட்ட அரண் வரிசைகளில் நெருக்கமாகவும் ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க ஆயுத பலத்துடனும் சூட்டு வலுவுடனும் புலிகள் நிலைகொள்ளும்போது இராணுவத்தின் உத்திகள் பலனளிக்காமற் போகும் என்பதே புலிகளது கணக்கு. இதனைக் கடந்த இரண்டரை வருடங்களாக உறுதியாக நிற்கும் கிளாலி – முகமாலை – நாகர்கோவில் முன்னரங்குகளும் (இங்கே 12 கிலோமீற்றர் முன்னரங்கில் இரண்டு முழு டிவிசன்கள் பூரண பலத்தோடு முயன்றும் புலிகளை அசைக்க முடியவில்லை), தற்போது களத்திலே இராணுவம் சந்திக்கும் இழப்புக்களின் அளவும் மெய்ப்பிக்கின்றன.

கடந்த சில வாரங்களாகக் களத்திலே காயமடையும் படையினரது எண்ணிக்கை சடுதியாக உயர்ந்திருக்கிறது. இந்தக் காயங்களும் படையினரைக் களத்திலிருந்து நிரந்தரமாகவோ, நீண்ட காலத்துக்கோ அகற்றி விடுமளவுக்குப் பாரதூரமானவையாகவே இருக்கின்றன.

இதற்கு காரணம் புலிகள் பெருமளவு கனரக ஆயுதங்களை மரபு ரீதியற்ற முறையிலே பாவிப்பதாகும். உதாரணமாகக் கடலிலே இடம்பெறும் சமர்களிலே பாவிக்கப்படும் 23 மி.மீற்றர், 30 மி.மீற்றர் கனரகப் பீரங்கிகளைத் தரைத்தாக்குதலுக்குப் பாவிக்கின்றனர். இவற்றின் எறிகணைகள் மோதல் தலத்திற்கு அப்பால் பின்தள வேலைகள், தளவேலைகளில் ஈடுபடும் படையினரது உயிர்களையும், உடல் அவயவங்களையும் பறிக்கவல்லன.

இவற்றின் எறிகணைகள் இலக்கிலே பட்டதும் வெடிக்கும் இயல்புடையவையாதலால் அவற்றால் தாக்கப்படும் படையினர் கொல்லப்படுவதோ அல்லது மிகக் கடுமையாகக் காயமடைவதோ நிச்சயமாகும். மட்டுமன்றி, இவை படையினரது காவலரண்கள், வழங்கல் வாகனங்கள், உலங்குவானூர்திகள் போன்றவற்றைத் துவம்சம் செய்து விடவல்லன.

ஒரு நடைமுறை அரசாங்கத்தை (னுநகநஉவழச ளவயவந) நடத்தும், சர்வதேச ரீதியான பங்கேற்பு – பேச்சு – ஒப்பந்தம் என்றளவுக்குச் சென்றுவிட்ட புலிகள் இன்னொரு முறை கொரில்லாக்களாகிக் காடுகளில் கரந்துறையவும் மறைந்திருந்து சிறு சிறு தாக்குதல்களில் ஈடுபடவும் நேரிடுமளவுக்குத் தமது நிலைமை சீரழிவதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்பதுவும், எதிர்வரக்கூடிய நிலைமைகள் தொடர்பான தெளிவான முன்னுணர்வு – கணிப்பீடு – திட்டமிடலும் தயார்நிலையும் என்பன மூன்று தசாப்தங்களாக போரிடும் புலிகளிடம் நிச்சயம் இருக்கும் என்பதுவும் ஆட்சியாளர்களாலும் அவர்களது பகட்டாரவாரமான தகவல்களை அப்படியே விழுங்குபவர்களாலும் சந்தர்ப்பவசமாக மறக்கப்பட்டுவிட்டன. இந்த மறதியானது வரலாற்றில் என்றும் அழியாத துன்பியலைப் பிரசவித்துவிடக்கூடும்.

-பு.சத்தியமூர்த்தி-

நன்றி: உலகத் தமிழர் கனடா (12.12.08)

Comments