மன்மோகன் சிங்கும் கருணாநிதியும் பதில்கூறக் கடமைப்பட்டுள்ள கேள்விகள்?---பழ.நெடுமாறன்


இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது.

சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன.

மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

இந்த சூழ்நிலையில் இந்திய அரசு தமது கடற்படையைச் சேர்ந்த மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்றை அந்தப்பகுதிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்தது. இத்துடன் நிற்கவில்லை. மேலும் ஐ.என்.எஸ். வீரட் என்னும் விமானம் தாங்கிக் கப்பலையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. மேலும் நான்கு போர்க்கப்பல்களை அங்கு அனுப்பவும் இந்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

"சோமாலியா கடற்கொள்ளையர்கள் சரக்குக்கப்பல்களை கடத்துவதேடு நிற்கவில்லை. அந்தக் கப்பலில் உள்ள மாலுமிகளையும் பிற பணியாளர்களையும் அடி?மாகளாக்கி கொள்வது, சித்திரவதை செய்வது, இனப்படுகொலை செய்வது பேன்ற அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது' என இந்திய கடற்படைத் தளபதிகளில் ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய கடலோரங்களை காவல் காக்கும் கடற்படையாக மட்டும் விளங்காமல் ஆழ்கடலில் சென்று எதிரிகளை தாக்கும் அளவிற்கு நமது கடற்படை புதிய வடிவம் கொள்ள வேண்டும் என பலகாலமாக கடற்படை தலைமை இந்திய அரசை வலியுறுத்தி வருவதன் அவசியத்தை சோமாலியா கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் லெபனானில் நடைபெற்ற உள்நாட்டு போரில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்திய கடற்படை கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டு வெற்றிகரமாக இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

சோமாலியா கடற் பகுதியில் வீர சாகசம் புரியும் இந்திய கடற்படை மன்னார் வளைகுடாப்பகுதியில் ஆமையாக,ஊமையாக அடங்கிக்கிடக்கிறது. உலகின் 5 ஆவது வலிமைவாய்ந்த கடற்படையாக திகழும் இந்திய கடற்படை ஆழ்கடலில் கூட எதிரிகளை வென்றடக்கும் வலிமையும் திறமையும் படைத்தது என மார் தட்டிக்கொள்கிறது. ஆனால் சின்னஞ்சிறிய சிங்களக்கடற்படை கடந்த 25ஆண்டு காலமாக தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவிக்கிறது. அதைத்தடுக்கவும் நமது மீனவர்களை காப்பாற்றவும் கடமைப்பட்ட இந்திய கடற்படைசெயலற்றுக்கிடக்கிறது.

சோமாலியா கடற்கொள்ளையர்கள் செய்து வரும் இனப்படுகொலை ,சித்திரவதை போன்றவற்றை சிங்கள வெறியர்கள் தமிக மீனவர்கள் மீது நடத்தி வருகிறார்கள். சோமாலியா மீது பாயும் இந்தியக் கடற்படை சிங்களவரிடம் பதுங்குகிறது.

தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன.

இம்மாவட்டங்களில் 590 மீனவ கிராமங்கள் கடலை மட்டுமே தங்கள் வாழ்வாத?ரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன. 1000 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த நெடிய கடற்கரையில் நாகப்பட்டினத்திலிருந்து குமரி வரை 750 கிலோ மீற்றர் தூரமாகும்.இந்தப் பகுதியில் 5 இலட்சம் மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அதேபோல எதிர்க்கரையில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிலாபத்திலிருந்து பருத்தித்துறை வரை 700 கிலோமீற்றர் நீளம் உள்ள கடற்கரையோரமாகவும் அருகிலுள்ள தீவுகளிலும் 3 இலட்சம் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இருகரைகளிலும் சுமார் 8 இலட்சம் தமிழ் மீனவர்கள் வாழ்கிறார்கள்.

தமிழகக் கரையோர மீனவர்கள் ஆண்டுக்குத் தோராயமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் கடல் உயிரினங்களையும் , இலங்கைத்தமிழ் மீனவர்கள் ஆண்டுக்குத் தோராயமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் தொன் கடல் உயிரினங்களையும் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மீன் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 21 சதவீதமாகும். இந்தியாவின் மொத்தக் கடற்பரப்பில் சிறுபகுதியே தமிழகத்தில் அமைந்திருந்தாலும் மீன் உற்பத்தியில் தமிழகம் முன்நிற்பதன் காரணம் நமது மீனவரின் தளராத முயற்சியும் அயராத உழைப்புமே தமிழக மீன் உற்பத்தியில் பெரும் பங்கை அளிப்பவர்கள் இராமேஸ்வரத்தை ஒட்டி வாழும் மீனவர்களே.

ஆனால், கடந்த 25 ஆண்டுகாலமாக இவர்களின் நிலைமை என்ன? நமது மீனவர்கள் கடலில் தங்களின் தொழிலைச் செய்ய முடியவில்லை. இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கக்கூடாது என சிங்கள அரசு தடை விதித்துள்ளது. மொத்தத்தில் இரு கரையிலும் வாழும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

1983 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை இந்த 25 ஆண்டு காலத்தில் நமது மீனவர்கள் மீது சிங்கள கடற்படை சுமார் 300 தடவைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளது. 400 க்கும் மேற்பட்ட நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பலநூறு கோடி ரூபா பெறுமதியான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இந்தியக் கடற்படையும் கடலோரக் காவல்படையும், சிங்கள கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்கவோ, நமது மீனவர்களைக் காப்பாற்றவோ எதுவும் செய்யவில்லை.

அதே வேளையில் இலங்கையின் தென்கிழக்குக் கோடியில் வாழும் 2 இலட்சம் சிங்கள மீனவர்கள் எவ்வித தடையுமில்லாமல் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். இந்திய கடற்படையோ அல்லது கடலோரக் காவல்படையோ அவர்களை விரட்டியடிக்க எதுவும் செய்யவில்லை.

தமது கடற்பகுதியில் நமது மீனவர்களைத் தாக்கிய சிங்களவர்கள் அத்துமீறி தனுஷ்கோடியில் உள்ள ஓலைக்குடா என்னும் மீனவ கிராமத்தில் புகுந்து குடிசைகளையெல்லாம் கொளுத்தி மீனவர்கள் சிலரைச் சுட்டுக் கொன்றனர். அவர்களின் படகுகளும் வலைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இந்திய மண்ணுக்குள்ளேயே நுழைந்து இந்திய குடிமக்களையே தாக்கும் துணிவு சிங்களவருக்கு ஏற்பட்டது.

இந்தியாவின் இறையாண்மை இவ்வாறு அப்பட்டமாக மீறப்பட்ட போது அதைத் தடுக்கும் துணிவோ அல்லது நமது குடிமக்களைக் காப்பாற்றும் திறமையோ இல்லாமல் இந்திய கடற்படை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கடந்த 25 ஆண்டு காலத்தில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சிங்கள கடற்படை வீரர்கள் ஒருவரைக் கூட இந்திய கடற்படையினர் சுட்டதுமில்லை, சிறைப்பிடித்ததுமில்லை.

1983 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் நடைபெற்ற போது தங்களின் சொந்தப் படகுகளில் குடும்பங்களுடன் ஏறி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான 500 க்கும் மேற்பட்ட படகுகளை இந்தியக் கடற்படை பறிமுதல் செய்தது. அவைகளெல்லாம் இப்போது சிதிலமாகி அழியும் நிலையில் உள்ளன.

வீடுகளை இழந்து சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் உயிர்களைக் காக்க தமிழகம் நோக்கி ஓடிவந்து தஞ்சம் புகுந்த அகதித் தமிழர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதில் வீரம் காட்டிய இந்தியக் கடற்படை அத்துமீறிய சிங்கள கடற்படையின் ஒரு சிறு கப்பலைக் கூட இதுவரை பறிமுதல் செய்ததில்லை.

31.5.07 அன்று இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சென்னைக்கு வந்து தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தமிழக மீனவர்களை இனி சிங்கள கடற்படை சுடாதென உறுதி கூறினார்.

அதன் பிறகு 14.10.08 அன்று தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை இந்திய அரசை வற்புறுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் இலங்கை அதிபருடன் பேசி இனித் தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என வாக்குறுதி அளித்தார். ஆனாலும் இன்னமும் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடக்கின்றன.

சோமாலியாக் கடலில் வீரசாகசம் காட்டும் இந்திய கடற்படை, மன்னார் கடலில் முடங்கிக் கிடப்பது ஏன்?

அதன் கரங்களைக் கட்டிப்போட்டது யார்? கொல்லப்படுபவர்கள் தமிழர்கள் தானே என்ற அலட்சியம் காரணமா?

இந்தக் கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள்.


Comments