ஈழச் சிக்கலில் தமிழகத்தின் கொந்தளிப்பு தில்லி அரசுக்கு நெருக்கடி தரத் தொடங்கியதிலிருந்து தில்லி ஆட்சியாளர்கள் புதிதாக ஒரு கருத்தை உதிர்த்து வருகிறார்கள். “ஈழச் சிக்கலுக்கு ராணுவத் தீர்வு சாத்தியமல்ல. அரசியல் தீர்வே சாத்தியம்” என்பதாகப் பேசி வருகிறார்கள். இது ஏதோ பெரிய கண்டுபிடிப்பு போலவோ, அல்லது புதிய கருத்து போலவோ பலரை மயக்கியும் வருகிறது. தேசிய இனங்களின் விடுதலை போராட்டச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு, ராணுவத் தீர்வு என்று தனித்தனியாக ஏதும் இல்லை. எல்லாத் தீர்வும் அரசியல் தீர்வுதான். இலக்கும் அதுதான். ஆனால் அந்த அரசியல் தீர்வை பேச்சு வார்த்தை மூலம் எட்டப் போகிறோமா அல்லது ராணுவ நடவடிக்கைகள் மூலம் எட்டப் போகிறோமா என்பதே கேள்வி.
வரலாற்றில் சில விடுதலை போராட்டங்கள் சுமூக சூழ்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுகின்றன. செக்கோஸ்லாவியா, செக் என்றும் ஸ்லாவியா என்றும் பிரிந்தது சுமூக சூழ்நிலையில், சுமூக உடன்பாட்டில்தான். ஆனால் யுகோஸ்லாவியாவிலிருந்து செர்பியா, போஸ்னியா, கொசாவா பிரிந்தது, பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது எல்லாம் ராணுவ நடவடிக்கை மூலமே. பேச்சு வார்த்தைக்கான வாய்ப்பே இல்லை. அதற்கான சுமுக சூழ்நிலையே இல்லை என்னும் நிலையிலேயே இந்த ராணுவ நடவடிக்கைகள், மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் எந்தச் சூழ் நிலையிலும் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பிருந்தால் அதன் வழியும் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
ஆகவே தீர்வு எல்லாவற்றுக்கும் அரசியல் தீர்வுதான். அதை பேச்சு வார்த்தை மூலம் எட்டப் போகிறோமா அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் எட்டப் போகிறோமா என்பதே பிரச்சினை. தற்போது இலங்கையில் சுமுக சூழலுக்கான வாய்ப்பு இல்லை. இலங்கை அரசு முரண்டு பிடிவாதமாய் தமிழர்கள் மீதான தாக்குதலை நடத்துவதால் போராளிகள் அங்கு தற்காப்பு யுத்தம் நடத்த வேண்டியிருக்கிறது. பேச்சு வார்த்தைக்கு வழி பிறந்தால் அதற்கும் போராளிகள் தயாராகவே இருக்கிறார்கள். இதுதான்பிரச்சினை.
நிலைமை இப்படியிருக்க தில்லி ஆட்சியாளர்கள் இப்போதுதான் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல, ராணுவத் தீர்வு சாத்தியமல்ல, அரசியல் தீர்வுதான் சாத்தியம் என்று சொல்வது, நன்கு தெரிந்தே செய்கிற ஊரை ஏமாற்றுகிற வேலை. இப்போது வந்த இதைச் சொல்கிற தில்லி அரசு இவ்வளவு காலமும் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்வது ஏன் ? படைப் பயிற்சிகள் அளிப்பது ஏன் ? நேரடியாகவே இந்தியப் படையினரை அங்கு அனுப்பியது ஏன்? தமிழர்களைக் கொல்லத்தானே. இதுவெல்லாம் ராணுவ நடவடிக்கைகள் இல்லையா..? சரி போனது போகட்டும். இப்போது வந்து அரசியல் தீர்வு பற்றி பேசும் தில்லி அரசு அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வைத்து பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே. அதைவிட்டு அரசியல் தீர்வு என்று யாருக்கு உபதேசம்?
கொல்பவனை விட்டுவிட்டு தற்காப்பு யுத்தம் நடத்துகிறவனைப் பார்த்து, அரசியல் தீர்வு என்றால், இச்சிக்கலில் முதலில் ஆயுதம் எடுத்தது யார்? உரிமைப் போரை வன்முறை கொண்டு ஒடுக்கியது யார்? தில்லி அரசுக்கு இதெல்லாம் தெரியாதா. அப்படியிருக்க இதை யெல்லாம் மறைத்து இப்போது வந்து அரசியல் தீர்வு என்று பேசுவது யாரை ஏய்க்கிற வேலை என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தில்லி அரசு மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் தில்லி அரசின் இன்னொரு குரலாய் ஒலிக்கும் சி.பி.எம். கட்சியும் இதே பல்லவிதான். பாரத மாதா பஜனை கோஷ்டிகளாகவும், பக்த கோடிகளாகவும் விளங்கும் இவர்கள், அடிக்கடி சொல்வதும் ‘பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்பதுதான். இப்பேரண்டத்தில் நிலவும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிற அரும் பெரும் தீர்வு இது. ஏதோ உலக மகா தத்துவம் போல் எதற் கெடுத்தாலும் இதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். காவிரிச்சிக்கலா, முல்லைப் பெரியாறு சிக்கலா, ஈழச் சிக்கலா எதுவானாலும் பேசித் தீர்க்க வேண்டும். சரி, யார் பேச மாட்டேன் என்றது. பேசிப் பேசிப் பார்த்து பேச்சு புளித்துப் போய்ப் பிரச்சினை தீராததனாலேதான் நீதிமன்றம், வழக்கு, போராட்டம், ஆர்ப்பாட்டம், யுத்தம் எல்லாம் நிகழ்கிறது. இதுவெல்லாம் இந்த மேதாவிகளுக்குத் தெரியாதா...
மார்க்சியத்தை அதன் புனிதம் கெடாமல் பாதுகாப்பதாகச் சொல்லும், இந்த பரிசுத்த ஆவிகள், சாந்தி, சமாதானம், பேச்சுவார்த்தை என்று உபதேசிக்கிற இந்த மார்க்சிய மடாதிபதிகள் கொரியாவிலும், வியட்நாமிலும், தென்னாப்பிரிக்காவிலும் இன்னபிற உலக நாடுகளிலும் விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்ற போது இந்த உலக மகா தத்துவத்தை உபதேசித்திருக்க வேண்டியதுதானே. ஒன்றை மட்டும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது இப்படி பேச்சுவார்த்தை பஞ்சு மிட்டாய் வழங்கும் இவர்கள், வரலாற்றில் நாளை ஈழம் வென்றால் முதலில் வந்து நின்று நாங்கள் அந்த நாளிலிருந்தே ஈழத்துக்கு ஆதரவாக ஜலந்தர் மாநாட்டிலேயே தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறோம் என்று சொல்லி, ஈழ வெற்றி விழா நிதி தாரீர் என நன்கொடைப் புத்தகத்துடன் கடைத் தெரு வசூலில் இறங்குபவர்கள் இவர்களாகவே இருப்பார்கள் என்பதே அது.
Comments