மும்பைத் தாக்குதலும் கிளஸ்டர் குண்டுகளும்

இலங்கை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் ரஷ்ய தயாரிப்பு OFAB - 500 (Cluster) கிளஸ்டர் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

கொத்துக் தொத்தாக மக்களைக் கொல்லும் இப் பேரழிவு ஆயுதம், காலங் கடந்தும் தனது திறமையைக் காட்டும் வல்லமை கொண்டது. அடைமழையால் குளங்கள் உடைப்பெடுக்கின்றன.

இராணுவ எறிகணை வீச்சுகளால் உள்ளக இடப்பெயர்விற்குள்ளான வன்னி மக்கள், பேரவலத்தை எதிர்கொள்ளும் போது உலகளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசுகிறது இலங்கை அரசாங்கம் இதைத் தட்டிக் கேட்பதற்கு எவருமில்லை.

கடந்த புதன்கிழமை, ஒஸ்லோவில் கூடிய 107 நாடுகள், இக் குண்டுகளைத் தயாரிப்பது களஞ்சியப்படுத்துவது, பாவிப்பது என்பவற்றிற்கெதிரான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன. பயங்கரவாதம் மனித உரிமை மீறல் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளும் உலகின் ஜனநாயக ஜாம்பவான்களான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் கையொப்பமிட மறுத்துள்ளன.

அமெரிக்கா வீசிய வெடிக்காத கிளஸ்டர் குண்டுகளின் சிதறல்கள், இன்னமும் வியட்னாமில் மக்களை முடமாக்குகின்றன. கடந்த மே மாதம் அயர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு முழு வடிவம் கொடுத்து நோர்வேயில், கிளஸ்டர் குண்டுப் பாவனைக்கு எதிராக, சாசனம் வரையப்பட்டுள்ளதாகப் பெருமை கொள்கிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நடுத்தர, நீண்ட தூர அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை ஒழிப்பதற்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்து கொண்ட உடன்பாடு போன்று இந்த கிளஸ்டர் குண்டுக் குவியலை இப்பூவுலகிலிருந்து அகற்றுவதற்கும் ஒரு உடன்பாடு தேவை.

உலகப் பொருளாதாரச் சிக்கலில் மாட்டியிருக்கும் அழிவாயுத உற்பத்தி வல்லரசு நாடுகள், கையிருப்பில் இருக்கும் கிளஸ்டர் குண்டுகள் (Cluster Bomb) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்ட விரும்பும். எண்ணெய் போன்று ஆயுத வியாபாரமும் கஜானாவை நிரப்பும் பொருண்மியப் பலம் கொண்டதென்பது புரிந்துகொள்ளப்படக் கூடியது. இன்று வன்னி நிலப்பரப்பில் என்ன நடக்கிறது? இயற்கை அனர்த்தங்கள், மரத்தடி வாழ்வையும் சிதைத்துள்ளன. அடைமழையால் குளங்கள் உடைப்பெடுத்து நிலந்தெரியாத தேசமாகிவிட்டது வன்னி மண்.

கூரைத் தகடுகளைப் பயங்கரவாத ஆயுதமென்று அதுவும் உள்நுழைய விடாமல் தடுக்கிறது அரசாங்கம். மனித குல வரலாற்றில் இத்தகைய கொடூரமான அவலங்களை எதிர்கொள்ளும் வன்னி மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகளை வீசிக் கொல்வது அப்பட்டமான பயங்கரவாதமாகும். சிங்கள தேசத்தின் இன அழிப்பு வன்ம உளவியலில் இருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும். விடுதலைப் புலிகளை அழித்த பின்னர், எத்தகைய தீர்வினை தமிழ் மக்களுக்குச் சிங்களதேசம் வழங்குமென்பதை கிளஸ்டர் குண்டுகள் புரிய வைக்கின்றன. ஆயினும் ஒவ்வொரு மாவீரர் தின உரையிலும் புலிகளின் தேசியத் தலைவர் விளக்கும் புத்தரின் போதனைகளைச் சிங்கள தேசம் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்திரிப்பதற்கு படாதபாடு படுகிறது பெருந்தேசிய இனம். மும்பைத் தாக்குதலோடு விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்த ஒற்றைக் காலில் நின்று பரப்புரை வேறு செய்கிறது. ஆனாலும் கிளஸ்டர் குண்டுக்கும் மும்பாய் தாக்குதலிற்கும் ஒருவித ஒட்டுறவு உண்டென சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டு குவியலின் விநியோகத்தரும் தாக்குதலின் பின்புலச் சக்தியும் ஒரே நபர் என்பதுதான் அச்செய்தி. நவம்பர் 26 இல் மும்பாய் நகரம் முற்றுகை இடப்பட்டதும் அதில் கலந்து கொண்ட தாக்குதலாளிகள், கறுப்பு நிற ஆசிய இனத்தவர் போல் தோற்றமளிப்பதால் விடுதலைப் புலிகளே இத்தாக்குதலைத் தொடுத்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதன் எதிரொலி, மிக ஆரவாரமாக தென்னிலங்கைப் பெரும்பான்மையின ஊடகங்களில் வெளியிடப்பட்டது. ஆனாலும் இந்தியா அக் குற்றச்சாட்டினை அடியோடு நிராகரித்து லஷ்கர் ஈ தொய்பா என்கிற பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் பயங்கரவாத அமைப்பே இத்தாக்குதலை நிகழ்த்தியது என கூறத் தொடங்கியது. ஏற்கனவே அல் கைதாவிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே ஆழமான உறவு இருப்ப தாக சிங்கள தேசம் பரப்புரை நிகழ்த்தியும் எந்த வல்லரசும் அதனை நம்ப மறுத்தது.

பாரிய ஆளணி, தொழில்நுட்ப வளங்களோடு இயங்கும் சி.ஐ.ஏ. , மொசாட் போன்ற புலனாய்வு அமைப்புக்கள் அறிந்திராத விடயத்தை தாம் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்தால் அதை நம்பும் அளவிற்கு எவரும் இல்லையென்பதையும் தென்னிலங்கை அரச ஊடகப் பிரசாரப் பீரங்கிகள் புரிந்து கொள்வதில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற போர்வைக்குள், இன அழிப்புப் போரை நிகழ்த்தும் அரசாங்கத்திற்கு அச் செயற்பாட்டை தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டிருக்க ஏதாவது புதிய சான்றுகள் தேவைப்படுகிறது.

ஆனாலும் மும்பாய் தாக்குதலானது தென்னாசியப் பிராந்திய இராணுவ அரசியல் நிலைமைகளில் புதிய பரிமாணங்களை தோற்றுவித்துள்ளதென்பதை இனங்காண வேண்டும். அடுத்த மாதம் அமெரிக்காவில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம் தென்னாசியாவில் ஏற்படுத்தப் போகும் பாதிப்புக்களையும் அதேவேளை இந்திய அரசியலில் உருவாகும் ஆட்சி மாற்றத்தினையும் இந்த மும்பாய் தாக்குதல் ஊடாக மதிப்பீடு செய்யலாம். புஷ் ஆட்சியோடு செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம், இறுக்கமானதொரு உறவினை உருவாக்கினாலும் பில் கிளின்டனின் முந்தைய உயர்நிலை அதிகாரிகள் பங்கு கொள்ளும் பராக் ஒபாமாவின் புதிய ஆட்சி பீடம், அதேவகையான உறவினை தொடர்ந்தும் பேணுமாவென்கிற சந்தேகம் இந்திய உயர் அதிகார கொள்கை வகுப்பாளர்களிடம் காணப்படுகிறது.

ஹிலாரி கிளின்டனை இராஜாங்க அமைச்சராகக் கொண்ட ஒபாமாவின் நிர்வாகம், காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் கையிலெடுக்கலா மென்கிற சந்தேகம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே மும்பாய்த் தாக்குதலை மேற்கொண்டவர்கள் லஷ்கர் ஈ தொய்பா (Lashkar - E- Taiba) அமைப்பினர் என்பதனை ஆணித்தர மாக தெரிவிக்கிறது இந்தியா. 1989 இல் தோற்றம் பெற்ற எம்.டி.ஐ. (Markaz - Al- Dawah wal - Irshad) என்கிற பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்பின் இராணுவப் பிரிவே இந்த லஷ்கர் ஈ தொய்பா.

இந்தியாவிற்கெதிராக காஷ்மீரில் போராடும் மூன்று பெரிய அமைப்புகளில் இதுவும் ஒன்று. 1993 இலிருந்து இற்றைவரை, இந்திய இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் எதிராக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பல தாக்குதல்களை இத் தீவிரவாத அமைப்பு நடத்துகிறது. அசாத் காஷ்மீர், பாகிஸ்தான், டோரா பிரதேசம், காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு காஷ்மீரின் தென் பகுதிகளில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பிற்கு பல தளங்கள் உண்டு. இந்தியா பாகிஸ்தானிற்கிடையே மூண்ட மூன்று யுத்தங்களில் இரண்டு காஷ்மீர் சிக்கலால் எழுந்தவை.

1971 இல் நிகழ்ந்த பங்களாதேஷ் யுத்தம், சற்று மாறுபட்டது. மும்பை தாக்குதலில் அமெரிக்காவின் ஜென்ம விரோத அல் கொய்தா ஈடுபடவில்லையென்றும் காஷ்மீர் தீவிரவாத இயக்கமான லஷ்கர் ஈ தொய்பாவே ஈடுபட்டதென இந்தியா அடித்துக் கூறுவது புதிய அரசியல் சிக்கலிற்குள் தம்மை மாட்டி விடலாமென ஆட்சிப் பொறுப்பேற்கும் புதிய அமெரிக்க அரசு கருத இடமுண்டு. பாகிஸ்தானின் வட மேற்கு பகுதிகளில் பழங்குடி இன மக்களோடு கலந்திருக்கும் தலிபான் அல் கொய்தா தீவிரவாதிகளை அழித்திட பாகிஸ்தானின் ஆதரவு அமெரிக்காவிற்கு மிக அவசியமானது.

அதேவேளை பாகிஸ்தான் இந்திய எல்லைகளில் உருவாகும் மோதல் நிலை, தலிபானிற்கெதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை பலவீனப்படுத்தி விடுமென்பதே அமெரிக்காவிற்கு இருக்கும் பெருங்கவலை. இன்னமும் ஒரு மாதத்தில் பதவியை விட்டுச் செல்லும் கொண்டலீஸா ரைஸை, மத்தியஸ்தராக அனுப்பி முறுகல் நிலையைத் தணிக்கும் நகர்வினை அமெரிக்கா மேற்கொள்வதாக இந்தியா கருதுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டினை அமெரிக்கா எடுக்க வேண்டுமென்கிற இந்திய எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடிய சாத்தியப்பாடுகள் இல்லையென்றே கூறலாம்.

இவைதவிர இந்திய ஆய்வாளர் பி.இராமன், இத்தாக்குதல் தொடர்பாக புலனாய்வுத் துறை மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அரசியல் பின்புலத்தில் அவதானிக்க வேண்டும். அதாவது இந்தியப் புலனாய்வு மையம் (IB) மற்றும் றோவின் (R.A.W) பாதுகாப்புத் தோல்வியாகவே இத்தாக்குதலை இவர் கருதுகிறார். இந்த இரு உளவு நிறுவனங்களும், செப்டெம்பர் மாதம் வழங்கிய தாக்குதல் குறித்த எதிர்வு கூறல் அறிக்கையை அடுத்து மும்பை காவல் துறையினரால் தாஜ்மஹால் விடுதியிலும் மும்பை கரையோரப் பகுதிகளிலும் காவல் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

ஆனாலும் அதனைத் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு மேலாக இது குறித்த தொடர் பறிக்கைகளை இவ்விரு உளவு நிறுவனங்களும் சமர்ப்பிக்கத் தவறியதால் தாக்குதல் அச்சம் அகன்றுவிட்டதெனக் கருதியே மும்பை பொலிஸார் தடுப்பு மையங்களை அகற்றி விட் டனர். தாக்குதல் திட்டம் குறித்த தகவலை அமெரிக்க உளவு நிறுவனமும் இந்தியாவிற்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்திய புலனாய்வுத் துறை மீதான பி. இராமனின் குற்றச்சாட்டில் பலவிதமான சந்தேகங்களும் சதித்தத்துவங்களும் புதைந்திருப்பதை ஊகிக்கலாம்.

லஷ்கர் ஈ தொய்பா மீது இந்தியா நீட்டும் கரங்கள், காஷ்மீர் விவகாரத்தை அமெரிக்கா தூக்கிப் பிடிக்காமல் தடுக்கும். பி. இராமனின் கூற்றுப் பிரகாரம், மும்பைத் தாக்குதலை தடுக்காமல், அனுமதித்த சதிப் பின்னணியொன்று இருப்பது போல் உணரப்படுகிறது. ஆனாலும் இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பிற்கு பாகிஸ்தானிடமிருந்து பல வழிகளில் ஆபத்து ஏற்படுமென்பது உண்மை. இந்தியாவின் தென் பிராந்தியங்களிலேயே படைக்கல உற்பத்தி மையங்கள் அதிகமுண்டு. வைகோ கூறுவது போன்று தமிழர் தாயகமானது தென்னிந்தியாவிற்கான பாதுகாப்பு அரணாகத் திகழுமென்பதை மும்பை தாக்குதல் இலேசாக உணர்த்துகிறது.

- சி. இதயச்சந்திரன்

Comments