தமிழர் போராட்டத்தை அடக்க கச்சை கட்டி நிற்கும் சிங்களம்



பிரிவினைக்கு ஆதரவாகச் செயற்படமாட்டோம் என நாடாளுமன்றத்தில் செய்துகொண்ட தமது சத்தியப்பிரமாணத்துக்கும், அரசமைப்புக்கும் எதிராகச் செயற்பட்டார்கள் என்று தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத்துறையினர் தாக்கல் செய்த முதனிலை அறிக்கையை (b report) ஒட்டித் தாம் கடந்த வெள்ளியன்று காலை விடுத்த உத்தரவை அன்று மாலையே வாபஸ் பெற்றுக்கொண்டு விட்டார் கொழும்பு பிரதம நீதிவான்.

மட்டக்களப்பு எம்.பிக்களான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், யாழ். மாவட்ட எம்.பிக்களான செல்வராஜா கஜேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம் ஆகிய நால்வரையும் இவ்விடயத்தை ஒட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்புவதற்கு முதலில் கட்டளையிட்ட நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி, மாலையில் அந்த உத்தரவை வாபஸ் பெற்றதுடன், இவ்விடயம் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று மேல் நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத்துறைப் பொலிஸாரைப் பணித்தார் என்றும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

இந்த உத்தரவு திடீர் வாபஸானமைக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச ரீதியில் சூடு பிடித்திருக்கும் இச்சமயத்தில், தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு எதிராகச் சட்டத்தின் பெயரால் கத்தியை நீட்டுவது விரும்பத் தகாத நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று அரசுத் தலைமை கருதியதால், குற்றப் புலனாய்வுத்துறையால் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை குறித்து அறிந்ததும், அதில் தலையிட்டு அதை இடைநிறுத்தி வைக்க அரசுத் தலைமை வழிப்படுத்தியிருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், அது தவறு.

ஈழத் தமிழரின் அரசியல் விவகாரத்தில் பலத்த சர்ச்சைகளையும், நெருக்கடிகளையும், பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரத்தை, அரசத் தலைமையின் முன் அனுமதியும், பச்சைக்கொடி சமிக்ஞையும் பெறாமல் குற்றப் புலனாய்வுத்துறை இந்நடவடிக்கையை ஆரம்பித்து, அதை நீதிமன்றுக்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு நகர்த்தியிருக்காது என்பது வெளிப்படை.

அப்படியானால், இவ்விடயத்தில் நீதிவான் தமது முடிவை மாலைக்கு இடையில் மாற்றும் சுழல் ஏன் வந்தது என்று ஒரு கேள்வி எழுகிறது.

நீதி நிர்வாகத்துறையினர் உயர் மட்ட ஆலோசனையின் பேரிலேயே இந்நடவடிக்கை - முடிவை மாற்றும் நீதிவானின் செயற்பாடு - அமைந்ததாக சில வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

பிரிவினைக்கு ஆதரவான செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினுடையது என்கின்றன சட்ட வட்டாரங்கள். ஆகவே, அந் நீதிமன்றத்தின் உத்தரவு பெறவேண்டிய நிலையில், தவறுதலாக இந்த விடயத்தை நீதிவான் நீதிமன்றுக்குக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கொண்டு போய்விட்டனர் என்றும், இந்தத் தவறினால் - அடிப்படைப் பிழையினால் - வழக்கு அடிபட்டுப் போவதைத் தவிர்ப்பதற்காகவே விரைந்து மாலைக்கு இடையில் நிலைமை சீர்செய்யப்பட்டது என்றும் சட்ட வட்டாரங்களில் பேச்சடிபடுகின்றது.

இதன் காரணமாகவே, இவ்விடயத்தில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரைத் தம்பாட்டில் செயற்படாமல், சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்று அவரின் வழிகாட்டுதலில் செயற்படும்படி தமது பிந்திய உத்தரவில் நீதிவான் கட்டளையிட்டார் என்றும் கூறப்பட்டது.
ஆகவே, தமிழர்களின் பெருவாரி நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களுக்கு எதிராகச் சட்டத்தின் பெயரால் கத்தியை வலுவாகத் தீட்டித் தயாராகி வருகிறது கொழும்பு என்பது திண்ணம்.

1983 இல் ஜூலைக் கலவரத்தை அடுத்து, இலங்கை இனப்பிரச்சினை சூடு பிடித்தபோது, இப்படித்தான் அரசமைப்புக்கு ஆறாவது திருத்தத்தை - பிரிவினைக்கு எதிரான ஏற்பாடு என்ற பெயரில் - ஒரு தலைப்பட்சமாகக் கொண்டுவந்த சிங்கள ஆட்சிப்பீடம், அதன் மூலம் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அப்போது இல்லாமல் செய்து வறிதாக்கியது.

தமிழர்களின் நாடாளுமன்றப் போராட்டத்துக்குக் கதவடைப்புச் செய்ததன் மூலம் விடுதலைக்கான அவர்களின் ஆயுதப் போராட்டம் வீறு கொள்ள அப்போது வழி செய்தது சிங்களம்.

இப்போதும் அதே தவறை இழைத்து மீளவும் ஒரு மோசமான விபரீதத்துக்கு அது அழைப்பு விடுக்கின்றது போலும்.

அதே அரசமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தைத் தமிழ் எம்.பிக்கள் மீது திரும்பவும் இப்போது ஏவிவிட்டு அவர்களின் நாடாளுமன்ற பிரசன்னத்தை இல்லாமலாக்க ‘மஹிந்த சிந்தனை’ அரசு தயாராகி வருவதையே குற்றப் புலனாய்வுப் பொலிஸாரின் இந்த நடவடிக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது.

கடந்த வருடம் வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் நெருக்கடியை அரசு எதிர்கொண்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களின் நெருங்கிய உறவினர்கள், சகாக்கள் கடத்தப்பட்டு, அந்த அச்சுறுத்தலின்பேரில் வாக்கெடுப்பு சமயம் அந்த எம்.பிக்கள் சபைக்கு வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது.

இப்போதும் அதே வாக்கெடுப்பு நெருக்கும் சமயத்தில் நீதிமன்றில் மோசமான சட்ட விவகாரத்தை எழுப்பி, சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் நாடு திரும்பினால் சிக்கல் என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டு, அவர்களது நாடாளுமன்றப் பிரசன்னத்தைத் தடுக்க எத்தனிக்கப்படுகின்றது போலும்.

வரலாற்று உரிமையையும், நீதி, நியாயத்தையும், கௌரவ வாழ்வையும் கோரி தமிழினம் நடத்தும் போராட்டத்தைப் பூண்டோடு அழித்து, அந்த இனத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி ஆள்வதில் வெறியாக நிற்கும் சிங்களம், அதற்காக எல்லா மார்க்கங்களையும் ஒரே சமயத்தில் நாடுவதில் தீவிரமாக - பெரு முனைப்பாக - நிற்கிறது.

பெரும் போரைத் தொடுத்து இராணுவ ரீதியிலும் -
ஒட்டுக்குழுக்கள், துணைப்படைகள், துரோகக் கும்பல்கள் போன்றவற்றைக் களத்தில் இறக்கி அரசியல் ரீதியிலும் -
இப்போது நீதிமன்றங்களை நாடி சட்ட வழியிலும் -
தமிழர் போராட்டத்தை அடக்கி, ஒடுக்க சிங்களம் கச்சைக் கட்டி நிற்கின்றது.


Comments