நாடாளுமன்றத்தில் ஐக்கியதேசியக் கட்சி யுத்தத்தை ஆதரித்துத் தீவிரமாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் ஆதரவும், வாக்குகளும் ஆளும் கட்சிக்குக் கிடையாது. ஆனால் தமிழர்களின் ஆதரவையும், வாக்குகளையும் எதிர்பார்க்கும் ஐக்கிய தேசியக் கட்சி, யுத்தத்தை முற்று முழுதாக ஆதரிக்க முடியாது. இதை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யுத்த ஆதரவு நிலைப்பாட்டினால் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:
''ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என நாம் உடனடியாக எதிர்பார்க்கவில்லை. அரசின் பாணியிலே தீவிரமாக யுத்தத்தை ஆதரித்து கருத்துகளைத் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரங்க பண்டார, கடந்த இரண்டு வருடங்களில் இராணுவத்தில் 12 ஆயிரம் பேர் மரணமடைந்தும், 12 ஆயிரம் பேர் காயமடைந்தும் உள்ளதாகக் கூறியிருந்தார். இக் கருத்துகள் யுத்தத்தின் கோர வடிவை அடையாளப்படுத்தின. ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்தை ஒரேயடியாக ஆதரித்திருப்பது இதற்கு முரண்பாடாக இருக்கின்றது.
இத்தகைய கருத்து யுத்தத்தினால் துன்பமடையும், தமிழ் மக்களின் மனங்களைப் பெரிதும் வேதனைப்படுத்துகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் வரலாற்று நடைமுறையில் உள்ள ஒரே ஒரு அதிகாரப் பரவலாக்கல் சட்டத்தை அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாகக் கொண்டு வந்திருந்தது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியே கடந்த ஆட்சியின்போது போர்நிறுத்த உடன்பாட்டைக் கொண்டு வந்திருந்தது. இத்தகைய காரணங்களினாலேயே ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றது என்பதனைத் தெளிவுபடக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இன்றைய அரசும் யுத்தத்தைத் தவிர அனைத்துத் துறைகளிலும், தோல்வியடைந்து விட்டது. யுத்த கோஷம் ஒன்றுதான் இந்த அரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது. அரசு தோல்வியடைந்துள்ள ஏனைய விடயங்களைப் பற்றி சிங்கள மக்களிடம் விளக்கிச் சொல்லத் தேவையில்லை. அது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். எனவே அரசின் யுத்த நோக்கத்தில் உள்ள உண்மை நிலைமைகளை சிங்கள மக்களுக்கு விளக்க வேண்டும்.
யுத்தத்தின் மூலமாக தேசிய இனப்பிரச்சினையையும், பயங்கரவாதத்தையும் அழித்துவிட முடியாது என்ற உண்மையை எடுத்துக்கூற வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டத்திலே வழங்கப்பட்டுள்ள பொலிஸ், காணி அதிகாரங்களை முழுமையாக மாகாண சபைகளுக்கு வழங்கும்படி நிர்ப்பந்திக்க வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பால் செல்லும் ஒரு அதிகாரப் பரவலாக்கல் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி அரசை வலியுறுத்த வேண்டும். இதை நாம் தெளிவுபடுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். யுத்தத்தில் காட்டும் முனைப்பை விடுத்து தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்லும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி எடுத்துக்கூற வேண்டும். இவற்றையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்'' இவ்வாறு அவர் கூறினார்
Comments