மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாவிடின் இறைமை குறித்து பேச முடியாது-சம்பந்தன் எம்.பி.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில் அங்கு நாள்தோறும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எமது பூர்வீக மண்ணில் வாழும் உரிமை எமக்குண்டு. நாம் நாட்டில் சமமாக வாழ்வோம் அல்லது தனித்து வாழ்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச நியமங்களை ஏற்றுக் கொள்ளாவிடின் இறைமை பற்றி பேச முடியாது. இறைமைக்குள்ளே மனித உரிமையும் அடிப்படை உரிமைகளும் அடங்குகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுகள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தெடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அங்கு ஒவ்வொரு நாளும் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 4ஆம் திகதி நவம்பர் 2009 அன்றிலிருந்து நவம்பர் 29ஆம் திகதிவரை 22 பேர் நீதிக்குப் புறம்பான முறையில் பலியெடுக்கப்பட்டுள்ளனர். யூன் மாதம் முதல் இன்றுவரையிலும் அம்பாறை மாவட்டத்தில் 20 பேர் பலியெடுக்கப்பட்டதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது. நாட்டில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றன. சட்டத்திற்கு முரணான ரீதியில் மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். இது வடக்கு, கிழக்கில் விசேடமாக இடம்பெறுகின்றது. வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரபட்சமாகவே நடத்தப்படுகின்றனர். அங்கு மனித அவலம் அரங்கேறுகின்றது. அவர்கள் மீது விமானக் குண்டு வீச்சுகளும் பல்குழல் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது

வன்னிக்கு ஊடகவியலாளர்கள் செல்ல முடியாது பயமுறுத்தப்பட்டுள்ளனர். தாமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படலாம் என்பதனால் அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். இலங்கை அரசாங்கத்தின் மீது ஐ. நா. பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித உரிமை விடயத்தில் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணைக்குழு சுயாதீனத்தின் நடு நிலைமையை இழந்து பெறுமதியற்றதாகவே இயங்குகின்றது.

நோபல் பரிசு பெற்றவர்கள் கவலை

மனித உரிமைகள் தொடர்பில் நோபல் பரிசு பெற்றவர்களான தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் கவலை கொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் உண்மையிலிருந்து மாறி வருவது கவலைக்குரியதாகும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

15 ஊடகவியலாளர்கள் பலி

சிங்கள ஊடகவியலாளர் உட்பட 15 ஊடகவியலாளர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். குற்றவாளி ஒருவருக்கு எதிராகவேனும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. 15 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு அவசரகாலச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போதல் கைது செய்தலும் தொடர்கின்றன.

ஐ.நா. முகவர்களைவெளியேற்றியது ஏன்? வன்னியில் அவதிப்படுகின்ற மக்களுக்கான உணவு இந்தியாவினால் ஐ.சி.ஆர்.சி.யூடாக வழங்கப்படுகின்றது. ஐ.நா. வின் முகவர்களை வெளியேற்றி விட்டு என்ன செய்கின்றீர்கள்?

அங்கு அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படுகின்றது. ஐ.சி.ஆர்.சி. 600 தொன் உணவுப்பொருட்களை எடுத்துச் செல்கின்றது. அங்கு உணவின் தேவையோ அதிகமாகும் என்பதனால் நீண்டகால உணவுத் திட்டம் தேவையாகும்.

கிடுகு வழங்கப்பட்டதா? வன்னியில் 20 ஆயிரம் குடும்பங்கள் உறைவிடம் இன்றி இருக்கின்றனர். கிடுகு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அம்மக்கள் திறந்த வெளியிலேயே வாழ்கின்றனர். உகந்த உறைவிடமின்றியும் அடிப்படை வசதிகளான குடிநீர், மலசலகூட வசதிகள் இன்றியும் மக்கள் அல்லல்படுகின்றனர். மக்கள் மரக்கிளைகளுக்கு இடையில் சாக்குகளை கட்டி அதன் கீழே வாழ்கின்றனர். எனினும் புலிகள் இராணுவ நோக்கத்திற்காக பயன்படுத்தலாம் என்பதனால் கூடாரங்களுக்கு தேவையான பொருட்களை மட்டுப்படுத்துமாறு இராணுவ பேச்சாளர் கோரி நிற்கின்றார். எனினும் உறைவிடங்களுக்கான வசதிகள் தேவைப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

குடும்பமே இலக்காகும் நிலை கிழக்கு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற போதும் அங்கு ஒவ்வொரு நாளும் கொலைகள், கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இது அரசாங்கத்திற்கே வெட்கக்கேடானதாகும். காணாமல் போதல் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு அஞ்சுகின்றனர். ஒருவருக்காக முறைப்பாடு செய்தால் குடும்பமே இலக்காகும் நிலை, காணாமல் போகும் நிலை ஏற்படலாம் என்று அஞ்சுகின்றனர்.

பங்காளிகள் கொலைகள் இடம்பெறுகின்றன, கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடருகின்றன. மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர். கொலை செய்பவர்களும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் அரசாங்கத்துடன் இணைந்தவர்களாக பங்காளிகளாக கூட்டணியாக இருப்பதனால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

ஆதாமின் இறுதி நிலை நாடு பாலும் தேனும் சொர்க்காபுரி என்றனர். எனினும் தமிழ் மக்கள் ஆதாமின் இறுதி நிலைக்கு சென்றுள்ளனர். மரக்கிளைகளுக்கு கீழ் வெள்ளம், பாம்புக் கடி என்பவற்றுக்குள் அகப்பட்டு அல்லற்படுகின்றனர். இன்பம் மிகுந்த பூமி என்றனர். எனினும் பாதுகாப்பும் சுதந்திரமும் இங்கில்லை.

இந்தியாவிற்கு வழங்கியஉறுதிமொழிகள் இந்தியாவிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ வழங்கிய உறுதி மொழிகள் என்ன? அதிகாலை வேளைகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கின்றபோதே விமானக் குண்டு வீச்சுகள் அதுவும் அகதி முகாம்களின் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றன.

மக்களை வன்னியிலிருந்து விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு அதிகாலையில் அகதி முகாம்களில் குண்டுகள் வீசப்படுகின்றன. இழந்த விடுதலையை நாம் நம்ப வேண்டுமா? நம்புமாறு கூறுகின்றனர். மக்களை விடுதலை செய்வதாக கூறிக் கொண்டு பல்குழல், விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை மேற்கொள்வது ஏன்?

இறைமை பற்றி பேச முடியாது

சர்வதேச மனித உரிமை நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாவிடின் இறைமையை பற்றி பேச முடியாது. இறைமைக்குள்ளே மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளும் அடங்குகின்றன. முரண்பட்ட விடயமாகும்

இராணுவம், பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட சகலரும் மனித உரிமைகளை மீறிக்கொண்டே இருக்கின்றனர். பாராளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. சட்டமா அதிபரின் பாத்திரம் நிறுவனப்படுத்தப்படுகின்றன. ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்குவது முரண்பட்ட விடயமாகும்.

மாயமான சட்டமூலம்

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்ட மூலம் சபையில் விவாதிக்கப்பட்டது. எனினும் இடையில் மாயமாகி விட்டது. சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெறவேண்டும் என்று கூறப்பட்டது. எனினும் இடை நடுவிலேயே சட்ட மூலம் மாயமாகி விட்டது.

மூடி மறைக்க முடியாது

சர்வதேச தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேசரீதியில் விசாரணைகள் நடைபெறுகின்றன. உண்மைகளை யாருமே மறைக்க முடியாது, என்றோ ஒரு நாள் அது அம்பலமாகும். குப்பையில் போடுவேன்

ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறிக்கொண்டே கடிதங்களை சிங்களத்தில் அனுப்புகின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது. இக்கடிதத்தை குப்பையிலேயே போடுவேன்! வடக்கிற்கும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் உதவியை செய்யுங்கள். திருகோணமலையில் பலியெடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. எனினும் அங்கு பலியெடுக்கப்பட்ட தமிழர்கள் 261 பேருக்கும் நட்ட ஈடு வழங்கப்படவில்லை. நாட்டில் சமமாக வாழ வேண்டும் அல்லது தனித்து வாழ்வோம். அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் நடத்தலாம், வாக்கெடுப்பு நடத்தலாம். ஆனால் பூர்வீக மண்ணில் வாழும் உரிமை எமக்குண்டு.


Comments