வன்னியில் மக்களின் அவலத்தை கண்டும் உலக நாடுகளின் மௌனம் கவலைக்குரியது


வன்னியில் மக்கள் படும் அவலத்தைக்கண்டும் வெளிநாடுகள் மௌனம் சாதிப்பது கவலையளிக்கின்றது என வடக்கு கிழக்கு ஆயர்கள் விடுத்துள்ள நத்தார் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இராஜப்பு யோசப் விடுத்துள்ள செய்தியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்துலக சமூகத்திடம் மன்றாட்டமாகக்கேட்ட எதுவும் கிடைக்கவில்லை. வன்னியில் தொடர்கின்ற போரினால் மக்கள் 10 தொடக்கம் 15 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது இடம்பெயர்ந்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் தொடரும் குண்டுவீச்சுக்கும், எறிகணைத்தாக்குதல்களுக்குமிடையில் அழுது புலம்பும் காட்சிகளையே காணக்கூடியதாகவுள்ளது.

ஐந்து கத்தோலிக்க ஆயர்கள் கூட்டாக முன்வைத்த சமாதான முன்னெடுப்புக்கான தற்காலிக போர் நிறுத்தத்தையேனும் கடைப்பிடிக்க வேண்டியதற்கான மனுவை சிறிலங்கா சனாதிபதியிடம் நேரடியாகக் கையளித்தும் போரில் துன்பப்படுகின்ற மக்களுக்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கப் பெறாமையானது கவலைக்குரியது எனக்குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் விடுத்துள்ள அறிக்கையில் வன்னியிலுள்ள மக்கள் போரினால் தொடர்ந்தும் இடப்பெயர்வுகளைச் சந்தித்து வருகின்றனர். அத்துடன் மழைவெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவர்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றைக்கண்டு வெளிநாடுகள் மௌனம் சாதித்துவருவது கவலையளிக்கின்றது. மனித உரிமை மீறல்களும் கொடூரச்செயல்களும் அதிகரித்து மனிதமாண்பை மதிக்கும் செயல்கள் முற்றாக இழந்துபோயுள்ளமை கவலைக்குரியது. அமைதியும் நீதியும் இழந்துள்ள இலங்கைக்கு நீதியுடன் கூடிய அமைதி கிடைக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் படுகொலைச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணம் இன்று கொலைக்களமாக மாறிவருகிறது. சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்கள் படுகொலை செய்யப்படுகின்ற அளவிற்கு நிலைமை மோசமடைந்துசெல்கிறது. சர்வதேச தொண்டு நிறவுனம் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அவசியம் யாழில் சர்வதேசப் பணியாளர்களைக் கொல்வது மட்டக்களப்பு படுகொலையை நினைவூட்டுகிறது எனக்குறிப்பிட்டுள்ளர்.

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட துணை ஆயர்.பொன்னையா யோசப் விடுத்துள்ள செய்தியில். சமாதானத்திற்கான போரென்ற முரசறையுடன் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழியப்படுகின்றது. நத்தார் நாளை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது இலட்சக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி இத்தயை ஆண்டுகள் தாம் கட்க்காத்த உடமைகள் அனைத்தையும் இழந்தவர்களாக தொடர்போரினாலும் வன்செயல்களினாலும் இடம்பெயர்ந்து அகதிகளாக ஒடுங்கிக்கிடக்கின்றார்கள்.

மனித உரிமைகள் மீறப்பட்டு மனிதவாழ்வு சிதைக்கப்பட்டு காணாமற்போதல், கடத்தப்படுதல், கொலைகள் என்பன நாடு முழுவதும் அதிகரித்த வண்ணமாயுள்ளன. நீதிக்காக உரத்துப்பேசியவர்கள் எல்லோரும் இன்று ஊமைகளாகிவிட்டனர். உண்மை நிலைமையைச் சுட்டிக்காட்டி உரக்கப்பேசுபவர்கள் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சுகின்றனர். பேச்சுச்சுதந்திரம், ஊடக சுதந்திரம் எல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டன. அங்கும் இரு உண்மைகள் மறைக்கப்பட்டு பொய்ப்பரப்புரைகள் அரங்கேறுகின்றன. கொடூரமான போர் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.


Comments