"இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும்.
ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள இராணுவத்திற்கு இராணுவ ரீதியான உதவி எதையும் இந்திய அரசு செய்யக்கூடாது".
மேற்கண்ட இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாத காலத்திற்கு மேலாக கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தமிழகமும் போராடி வருகிறது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்துக் கொண்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசைச் செயல்படவைத்தன.
ஈழத் தமிழர் பிரச்சினை தனக்கு எதிராகத் திரும்பும் அபாயத்தை உணர்ந்த தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். இக்கூட்டத்தில் சம்பிரதாயமான சில தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றி மனிதச் சங்கிலி ஒன்றை நடத்திமுடிப்ப தென அவர் வகுத்திருந்த திட்டத்தைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும் பாலான தலைவர்கள் ஏற்கவில்லை. அவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம், இந்திய அரசு இராணுவ உதவி நிறுத்தம் ஆகியவற்றை இருவாரகாலத் திற்குள் இந்திய அரசு செய்ய முன்வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என முடிவுசெய்யப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம் டெல்லியிலும் கொழும்புவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையை இத்தீர்மானம் ஊட்டியது.
அனைத்துக் கட்சிகளின் வற்புறுத் தலின் பேரில் இத்தீர்மானத்தை நிறை வேற்றவேண்டிய கட்டாயத்திற்கு ஆளான முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் இதிலிருந்து எப்படி நழுவுவது என்பதில் அக்கறையாக இருந்தார்.
டில்லியில் இப்பிரச்சினையைத் திசைதிருப்ப திட்டமிட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டது. இலங்கை அரசின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட மூன்றாம் தரப்பேர்வழியான பசில் இராசபக்சே வுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து முதல்வரிடம் பேசியபிறகு டில்லிக்குப் பறந்தார். மேற்கண்ட இருகோரிக்கைகள் குறித்து அவர் எத்தகைய வாக்குறுதியும் அளிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி இந்திய அரசின் நடவடிக்கைகள் மனநிறைவை அளிப்ப தாகத் தெரிவித்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் திட்டத்தை அறவே கைவிட்டார்.
முதலமைச்சரின் இந்த நட வடிக்கை சிங்கள அரசிற்கு ஊக்கம் அளித்தது. அதன் விளைவாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை சிங்கள இராணுவம் தீவிரப்படுத்தியது.
இந்திய அரசின் தவறான கொள்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைத் திசை திருப்புவதில் முதலமைச்சர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர் களுக்கு நிதி திரட்டுவதுதான் முக்கிய மான கடமை என்பதுபோல அவர் செயல்படத் தொடங்கினார். போர் நிறுத் தம் ஏற்படாத வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகளால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை அவர் உணர்ந்தும் உணராததுபோல செயல்பட்டார்.
தமிழ்நாட்டு அரசியலைச் சூதாட் டக் களமாக மாற்றிவிட்ட தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளின் பகடைக்காயாக ஈழத்தமிழர் பிரச்சினை மாற்றப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. வரப்போகிற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் யார் எந்தப் பக்கம் அணிசேர்வது என்பது குறித்த காய் நகர்த்தல்களும் திரைமறைவில் நடைபெறத் துவங்கின. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடைத்தெறிந்து காங்கிரசுடன் தான் கூட்டுச்சேர ஜெயலலிதா விரும்புகிறார். எனவே தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் பிரச்சாரத்தை தீவிரமாக பின்பற்றுவதின் மூலம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டைத் தகர்த்து விடலாம் என அவர் கனவு கண்டு அந்த அடிப்படையில் தீவிரமாகச் செயல் பட்டார். காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள ஜெயலலிதா ஆதரவாளர்கள் திடீரென ராஜிவ் கொலையைப் பற்றியும் அதில் புலிகளின் பங்கு குறித்தும் காரசாரமான அறிக்கைகளை வெளியிட்டனர். இவ்வாறு அவர்கள் செயல்படுவதற்கு பின்னணியில் அ.தி.மு.க. இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மையாகும். இலங்கையில் போரின் விளைவாக சொல்லமுடியாத துன்பங்களுக்கு ஆளாகிக் கதறும் தமிழர்களின் அவல நிலை குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எதிர்காலத் தேர்தல் ஆதாயம் ஒன்றையே மனதில் கொண்டு இத்தகைய வெட்கங்கெட்ட நடவடிக்கை களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
ஜெயலலிதாவின் சூழ்ச்சி வலையில் காங்கிரஸ் சிக்கிவிடுமோ என்ற அச்சம் கருணாநிதிக்கு எழுந்தது. காங்கிரசை திருப்திப்படுத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கண்ணப்பன், திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றோரை ஈழத்தமிழர் ஆதரவு பேச்சுகளுக்காக கைது செய்து சிறையிலடைக்க அவர் தயங்கவில்லை. இதன் மூலம் காங்கிரசுக்கு தான் விசுவாச மாக இருப்பதாக அவர் காட்டிக் கொண்டார். ஈழத்தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்துவதைவிட மத்தியிலும் மாநிலத்திலும் தங்கள் கட்சியின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதே இப்போது முக்கியமானது என கருதி அவர் செயல்படுகிறார்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் கோரிக்கைகள் எதனையும் மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில் மத்திய அரசைக் கண்டிக்க வேண்டிய கருணாநிதி அந்த அரசைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இதுவரை இல்லாத வகையில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. டெல்லியோடு அவர் செய்துகொண்ட அதிகார சமரசத்தின் விளைவாக ஈழத்தமிழர் பிரச்சினையை ஆழக் குழிதோண்டிப் புதைக்க அவர் முயற்சி செய்தார். அவரின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் சூழ்ச்சிக்கும் சிங்கள வெறியர்களின் இராஜதந்திரத் துக்கும் கிடைத்த தற்காலிக வெற்றி யாகும். சிங்கள இனவெறி அரசின் தமிழின ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்திய அரசு வழங்கிய அங்கீகாரத்திற்கு முதலமைச்சர் கருணாநிதியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
அதே வேளையில் ஈழத்தமிழர் களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்துள்ள கொதிப்புணர்வைத் திசை திருப்புவதிலும் அவர் ஈடுபட்டார். "ஈழப் போராளிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சகோதரயுத்தம்தான் இப்போது அப்போராட்டத்தின் பின்னடைவுக்கு காரணமாகும். இதற்காக இந்திய அரசை குறை சொல்வதால் எந்தப் பயனும் இல்லை" என்று கூறினார். அத்துடன் அவர் நிற்கவில்லை. போர்நிறுத்தம் செய்யவேண்டுமென சிங்கள அரசை மட்டும் வற்புறுத்திப் பயனில்லை. விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய முன்வரவேண்டும் என புலிகள் மீது பழிசுமத்துகிற வகையிலும் அறிக்கை வெளியிட்டார்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத் தம் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை யாக இருந்தது. இரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்தபோது போர் நிறுத்தம் செய்யப்பட்டபோது விடுதலைப்புலிகள் அதை ஏற்றுக்கொண்டு தாமாகவே போரை நிறுத்தினார்கள். ஆனால் சிங்கள இராணுவம் 6 மாதகாலமாக போரை நிறுத்த மறுத்தது. சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க போரை நிறுத்த வேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகாலமாக நீடித்து வந்த இந்தப் போர்நிறுத்தத்தை இராஜபக்சே அரசு தன்னிச்சையாக முறித்துக்கொண்டு போர் தொடுத்தது. ஆனாலும் புலிகள் போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டதாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளையே புலிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு புலிகள் போரை நிறுத்த மறுப்பது போன்ற ஒரு தோற்றத்தை கருணாநிதி உருவாக்க முயன்றார்.
போர் நிறுத்தம் செய்யவேண்டு மென இலங்கை அரசை வற்புறுத்துமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கருணாநிதி அதிலிருந்து தப்புவதற்காக பிரச்சனையை திசை திருப்ப முயன்றார்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநில செயலாளரான தா. பாண்டியன் அவர்கள் சிங்கள அரசு போரை நிறுத்தினால் விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த முன்வரவேண்டு மென 7-11-08 அன்று அறிக்கை வெளியிட்டார்.
அன்றிரவே விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் போர் நிறுத்தத்தை புலிகள் எப்போதும் வரவேற்பதாகவும் சிங்கள அரசு போர் நிறுத்தத்திற்கு இசைந்தால் தாங்களும் ஒப்புக்கொள் வதாகவும் திட்டவட்டமாக அறிவித்தார். புலிகளின் இந்த அறிக்கையை தமிழக அரசியல் தலைவர் பலரும் பாராட்டினார்கள்.
எனவே முதல்வர் கருணா நிதியின் காய் நகர்த்தல்கள் வெற்றிபெற வில்லை. வேறுவழியே இல்லாமல் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வேண்டு கோள் விடுத்து அறிக்கை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக தமிழக சட்டமன்றத்திலும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு இந்திய அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. அ.தி.மு.க. - காங்கிரஸ் உட்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது முக்கியத்துவம் நிறைந்ததாகும்.
அதே வேளையில் தமிழக மெங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதர வான போராட்டங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன. சகல தரப்பினரும் இப்போராட்டத்தில் குதித்தார்கள். இப்போராட்டத் தீயை அணைப்பதற்கு இந்திய அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக் கைகள் வெற்றிபெறவில்லை. தமிழக எல்லைகளைக்கூட கடந்து டெல்லிவரை இந்தப் போராட்டம் விரிவடைந் தது. ஆயிரக்கணக்கான தமிழக மாண வர்கள் உட்பட பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த மாணவர்களும் இணைந்து டில்லி நாடாளுமன்றத்திற்கு முன்னாள் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கு முதலமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்ட கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் பங்கெடுத்தன. போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் மத்திய அரசு அலுவ லகங்களுக்கு முன்னால் மறியல் போராட் டங்கள் நடத்துவது என முடிவுசெய்யப் பட்டது. அதற்கிணங்க 25-11-2008 அன்று நடைபெற்ற மறியல் போராட் டத்தில் 50,000க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். தமிழக மெங்கும் மிகுந்த எழுச்சியுடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது. எனவே வேறுவழியில்லாமல் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி கூட்டினார். முதலில் அவர் கூட்டிய சர்வ கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல கட்சித் தலைவர்களை தவிர்க்கும் நோக்கத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் என்ற பெயரில் அவர் கூட்டிய கூட்டத்தில் பெரும் பாலான கட்சிகள் கலந்துகொள்ள வில்லை. அந்தக்கூட்டத்தில் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நான்கே நான்கு கட்சித் தலைவர்கள் மட்டும் கலந்துகொண்ட தால் இத்தகைய குறைந்த எண்ணிக்கை யினருடன் டில்லி செல்வது கேலிக் குரியதாகிவிடும் என்ற காரணத்தினால் சட்டமன்றத்தில் இல்லாத பல்வேறு கட்சித் தலைவர்களையும் அழைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தக் தூதுக்குழு பிரதமரைச் சந்தித்ததால் போர் நிறுத்தம் குறித்தோ இராணுவ உதவி நிறுத்தம் குறித்தோ எத்தகைய வாக்குறுதியும் அவரிடம் பெறமுடியவில்லை. தமிழக மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமாகவே இது நடைபெற்று முடிந்தது.
போர் நிறுத்தம் பற்றி பேசுவதற்கு பிரணாப் முகர்ஜியை அனுப்பவேண்டும் என முதல்வர் கருணாநிதி பிரதமரிடம் வேண்டிக்கொண்டார். அவரும் அதை ஏற்றார். ஆனால் பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வது இன்னமும் உறுதியாகவில்லை.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டால் சிங்களப் பகுதிகளில் பெரும் போராட்டம் வெடிக்கும் என ஜே.வி.பி. கட்சி எச்சரித்துள்ளது. உண்மையில் இராசபக்சே கூறிய இரகசிய தகவலின் அடிப்படையிலே ஜே.வி.பி. இவ்வாறு அறிவித்துள்ளது. இதைக் காட்டி போர் நிறுத்தம் செய்தால் தனக்கு சிங்களர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகும் என இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார். எனவே இலங்கை அரசை தாங்கள் வற்புறுத்த முடியாத நிலையில் இருப்பதாக இந்தியப் பிரதமர் கூறுகிறார்.
ஆனால் இது அல்ல உண்மை. கிளிநொச்சியை தாங்கள் கைப்பற்றி விடக்கூடிய நிலைமை இருப்பதாகவும் அது நடைபெற்று முடிந்தவுடன் போர்நிறுத்தம் செய்வது குறித்து யோசிக்கலாம் என சிங்கள அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி யைப் பிடித்துவிட்டால் சிங்கள மக்கள் மத்தியில் அதைப் பெறும் வெற்றியாகக் காட்டி சமாதானப்படுத்திவிடலாம் என்றும் இராஜபக்சே கருதுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல.
நாச்சிகுடா, முறிகண்டி, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய புலிகளின் கட்டுப் பாட்டுப்பகுதிகளில் மிகநெருக்கமாக நிற்கும் சிங்கள இராணுவம் பல வாரங்கள் கடந்தபின்னும்கூட இன்னும் இப்பகுதி களை பிடிக்கமுடியாதது ஏன்? மிகப் பெரிய அளவுக்கு இராணுவத் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 2 டிவிசன் இராணுவ வீரர்கள் களத்தில் இறந்தோ அல்லது படுகாயமடைந்தோ போர் முனையிலிருந்து அகற்றப் பட்டுள்ளனர்.
இராணுவ ரீதியான போர்களிலும் வெற்றிபெறமுடியவில்லை. அதேவேளை யில் வான் புலிகளின் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக் கின்றன. வான்புலிகளின் விமானங்களை இயக்கக்கூடிய தளவசதி, எரிபொருள் எல்லாம் புலிகளிடம் நிறைய உள்ளன. கொழும்பு, பலாலி, அனுராதபுரம், திரிகோணமலை, வவுனியா, மணலாறு, மன்னார் போன்ற பல முக்கியமான இடங்களை வான்புலிகள் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். புலிகளின் விமானங்களை தடுக்கும் திறனும் அவற்றை அழிக்கும் வலிமையும் சிங்கள விமானப்படைக்கு இல்லை என்பது நிருபணமாகிவிட்டது. வான்புலிகளின் தாக்குதல்கள் குறித்த அச்சம் இராணுவத்தினரிடம் மட்டுமல்ல. சிங்கள மக்களிடமும் இருக்கிறது.
கடற்புலிகளின் தாக்குதல்களும் அதிகமாகி வருகின்றன. சிங்களக் கடற்படையின் விநியோகக் கப்பல் ஒன்று தகர்க்கப்பட்டது. கடல் பகுதியில் கடற்புலிகளின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. வான்புலிகள் மற்றும் கடற்புலிகள் ஆகியவை தரும் நெருக்கடிகளும் விடு தலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்களும் சிங்கள இராணுவத்தை நிலைகுலைய வைத்துள்ளன. புலிகளின் எதிர்த் தாக்குதல் தொடங்கியுள்ளது. வன்னிப் பகுதியில் நீண்ட தூரத்திற்கு சிங்கள இராணுவத்தை முன்னேற அனுமதித்த விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்து எதிர் தாக்குதலை நடத்திவருகின்றனர். விரைவில் தமிழர் தாயக மண்ணிலிருந்து சிங்களப் படையினர் விரட்டியடிக்கப் படுவார்கள் என்பது உறுதி.
களத்தில் விடுதலைப்புலிகள் நிலை நிறுத்திவரும் இந்த வெற்றிகளை தமிழகத்திலும் உலக நாடுகளிலும் வாழும் தமிழர்கள் உறுதிசெய்ய உதவவேண்டும். இது அவர்களின் தலையாய கடமை யாகும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள 6 கோடி தமிழர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. சிங்கள இராணுவம் நடத்தும் இந்த வெறிபிடித்த போருக்கு பின்னணி யில் இந்திய அரசு இருக்கிறது என்ற உண்மையை மறந்துவிடக்கூடாது. இந்தி யாவின் ஆதரவு இல்லையென்று சொன் னால் சிங்கள வெறியர்களுக்கு இவ்வளவு துணிவு ஒருபோதும் வந்திருக்காது. இந்திய அரசு ஆயுத உதவி செய்ய வில்லை என மறுப்பதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி வக்காலத்து வாங்குகிறார். ஆனால் கீழ்க்கண்ட புள்ளிவிவரங்கள் அப்பட்டமான உண்மைகளை தெரிவிக்கின்றன.
"சிங்கள இராணுவத்தில் உள்ளவர் களின் 53 சதவீத வீரர்களுக்கு அதாவது 65,390 பேருக்கு இந்தியா இதுவரை இராணுப் பயிற்சி அளித்துள்ளது. 2006-2007 ஆம் ஆண்டு 870 சிங்கள வீரர்கள் இந்திய இராணுவ பயிற்சி முகாம்களில் பயிற்சிபெற்றனர். 2008ஆம் ஆண்டு 2579 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய கடலோரக் காவல்படை சிங்களக் கடற்படைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
சிங்களக் காவல்துறை அதிகாரி கள் 465 பேருக்கு இந்தியாவில் 2005ஆம் ஆண்டு பயிற்சியளிக்கப் பட்டது. 2008ஆம் ஆண்டு 400 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இன்னமும் பயிற்சி தொடர்கிறது.
மேற்கண்ட உண்மைகளை இந்திய அரசோ அல்லது இந்தியப் பிரதமரோ தமிழக முதல்வரோ மறுக்க முடியுமா?
இலங்கையில் நமது சகோதரத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு இந்திய அரசு துணை நிற்கிறது என்பது தான் அதிர்ச்சி தரும் உண்மையாகும். ஆயுதங்களை அள்ளிக்கொடுப்பதோடு மட்டுமல்ல அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் அனுப்பி உதவிவருவது அம்பலமாகிவிட்டது. எனவே சிங்கள வெறியர்களுக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது மட்டுமல்ல. இந்திய அரசுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதும் போராடு வதும் மிக மிக முக்கியமானதாகும். இந்திய அரசோடு இணைந்து செயல் படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர் கள் அப்பட்டமான தமிழினப்பகைவர்கள் அவர்களைத் தமிழகம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.
- பழ. நெடுமாறன்-
தென்செய்தி
Comments