‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானது மாதிரி’ - ‘உலக்கை தேய்ந்து உளிப்பிடியானமை போல’ - இலங்கையின் பொருளாதாரம் குட்டிச்சுவராகிப் போய் நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளப் போகின்றது என்ற நெருடலான செய்தியை நாசூக்காகத் தெரிவித்திருக்கின்றது உலகவங்கி.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டில் - 2008 இல் - 7.5 வீதமாக இருக்கும் என இலங்கையின் பொருளாதாரப் பண்டிதர்கள் எதிர்வு கூறிய நிலையில் அது இப்போது 6 வீதத்தைக் கூட எட்டவில்லை என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நிதி அமைச்சர் என்ற முறையில் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசின் ‘சிறந்த’ பொருளாதாரத் திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வீதம் 2009 இல் 7.5 வீதமாக இருக்கும் என்று பீற்றியிருந்தார்.
ஆனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்தத் தசாப்தத்தில் மிக மோசமான கட்டத்தை எட்டி, அது 2009 இல் 4 வீதத்துக்கு வீழ்ச்சியடையும் என்ற அதிர்ச்சித் தகவலை உலகவங்கி நேற்று முன்தினம் விடுத்திருக்கின்றது.
‘2009 ஆம் ஆண்டிற்கான பூகோள பொருளாதார சாத்தியங்கள்’ என்ற தனது அறிக்கையிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சிவீதம் 2008 இல் 6.3 இல் இருந்து 2009 இல் 4 வீதமாக வீழ்ச்சியடையும் என்று மதிப்பீடு செய்திருக்கின்றது உலக வங்கி.
"உலக ரீதியாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளின் பின்புலத்தில் இலங்கை நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்து, எங்களின் எதிர்வுகூறல்களை எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதி வெளிப்படுத்துவோம்." - என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் கூறுகின்றார்.
அவரும் அவரது மத்திய வங்கிப் பொருளாதார நிபுணர்களும் மணலைக் கயிறாகத் திரித்தாலும் கூட பொருளாதார விடயத்தில் மரண அடியை எதிர்நோக்கவிருக்கும் இலங்கையை அதிலிருந்து மீட்பதோ, காப்பதோ இயலாத காரியம் என விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகள் இதுகாறும் இலங்கைக்கு வழங்கிவந்த ‘ஜி.எஸ்.பி.பிளஸ்’ என்ற ஏற்றுமதிச் சலுகை நீடிக்கப்படுமா என்ற விடயம் அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. மனித உரிமைகளைத் துச்சமாக மதித்து, காட்டுத் தர்பார் நடத்திவரும் இந்த அரசுக்கு அத்தகைய பொருளாதாரச் சலுகையை ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை என்பது பொதுவான கருத்து.
ஏற்கனவே நாட்டின் ஏற்றுமதிச் சந்தை நெருக்கடிகளை எதிர்கொண்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ‘ஜி.எஸ். பி. பிளஸ்’ சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தும்போது - அது பெரும்பாலும் அடுத்த ஆண்டு முற்பகுதியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது - தற்போது தள்ளாடும் நாட்டின் பொருளாதாரம் நிரந்தரமாகப் படுத்துவிடும்.
ஏற்றுமதிப் பெறுமதி குறைந்து ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான பெறுமதி வேறுபாடு வேகமாக அதிகரித்துவரும் இச்சமயத்தில், வெளிநாட்டு நாணயச் சேமிப்பும் கரைந்து வருகின்றது.
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை செயற்கைத் தனமாகத் தொடர்ந்து பேணுவதற்காக தனது நாணயச் சேமிப்பை அதிகம் கரைத்து வருகின்றது மத்திய வங்கி.
பணவீக்கம் அதிகரித்து, வாழ்க்கைச்செலவு எகிறி, சகல மட்டங்களிலும் பொருளாதார நெருக்கடி வீங்கிப் பருத்து வருகின்றது.
நிலைமையைச் சமாளித்து, அரசின் அன்றாட காரியங்களைத் தொடர்வதற்காக கண்மூடிக்கொண்டு அரசு விதிக்கும் வரிகள் பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவுகளையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய பொருளாதார வீழ்ச்சி அல்லது நெருக்கடி என்பது தென்னாசிய வட்டகைக்கு இன்றைய நிலையில் பொதுவானது என்றாலும், இலங்கை அந்தப் பொது நிலையையும் விட மோசமான பின்னடைவுகளைச் சந்திக்கப் போகின்றது என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
தென்னாசிய வட்டகையில் 6.3 வீதமாக இருந்த இந்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் அடுத்த ஆண்டில், 2009 இல், 5.8 வீதமாக வீழ்ச்சியடையப் போகின்றது என்று எதிர்வு கூறப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அது அடுத்த ஆண்டில் நான்கு வீதத்தை எட்டுவது கூட துர்லபமே என்று எச்சரிக்கப்படுகின்றது.
இலங்கை இத்தகைய மோசமான கட்டத்தை எட்டுவதற்கு ‘மஹிந்த சிந்தனை’ அரசின் பொறுப்பற்ற போக்கும், தெளிவற்ற கொள்கைகளும், தூரநோக்கற்ற திட்டங்களும், பேரினவாதச் சிந்தனையில் அமைந்த செயற்பாடுகளுமே பிரதான காரணங்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
பௌத்த - சிங்கள மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காகத் தனது இலங்கைத் தீவின் வளம் கொழிக்கும் பிரதேசம் மீது பெரும் போரைத் தொடுத்து, தனது தேசப் பொருளாதாரத்தைக் கரியாக்கும் சிங்கள அரசு, மறுபுறத்தில் அந்தப் போரியல் கொடூரத்தால் வளத்தையும் அபிவிருத்தியையும் நாசமாக்கித் தீவைக் குட்டிச்சுவராக்கி நிற்கின்றது.
போரும் அதன் பேரழிவுக் கொடூரங்களும் நாட்டை ஒருபுறம் நாசப்படுத்துகின்றன என்றால் மறுபுறம் தூரநோக்கற்ற பொருளாதார முயற்சிகளும், ஊழல், மோசடிகள், முறையற்ற செயற்பாடுகள் நிறைந்த ஆட்சி நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார நிலையை நடு வீதிக்குக் கொண்டுவந்து விட்டன.
‘யுத்த வெற்றி’ என்ற மாயையில் - பகல் கனவில் - மூழ்கிக் கிடக்கும் தென்னிலங்கைச் சிங்களத்துக்கு, பொருளாதார நெருக்கடி சூடு காய்ச்சிய இரும்புக்கோல் போலப் படும்போதுதான் அதன் வேதனை துணுக்கென உறைக்கும்.
ஆனால் அச்சமயம், மீளமுடியாத பெரும் அதலபாதாள நெருக்கடிக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து புதைந்து விட்டிருக்கும் என்பது நிச்சயம்.
Comments