பின்னகர்வது வீழ்வதற்கல்ல...ஒரு நிரந்தரமான நிமிர்விற்கு

விடுதலைக்கான போர், கொடிய தடங்களை அழித்து தனது விழுதுகளை விசாலித்த போது, ‘சமாதானம்', ‘போர்நிறுத்தம்' என்கிற சிங்களத்தை காக்கும் கவசங்களை காவிக்கொண்டு வந்தது, சர்வதேசம் என்று அழைக்கப்படும் மேற்குலகம்.
பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை, ‘மனித உரிமை மீறல்கள்’ என்கிற பொதுக் கோட்பாட்டினுள் உள்ளடக்கும் அதேவேளை,

தேசியத் தலைமை முன்னெடுக்கும் ஆயுதப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்கிற வரையறைக்குள் பொருத்திக் கொள்வதுதான் பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்களின் போக்காக அமைகிறது.
அதாவது அரச பயங்கரவாதம் ‘மனித உரிமை’ சம்பந்தப்பட்டது, உரிமைப்போர், பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதே நவீன உலகில் ஆட்சிசெலுத்தும் அரசியல் சொல்லாடலாக மாறி உள்ளதெனக் கூற லாம். தமது பூகோள, பிராந்திய நலனிற்கு முரணான போராட்டங்களை, பயங்கரவாதத் துள் இணைப்பதைத் தவிர, இவர்களுக்கு வேறு மார்க்கமில்லை.

அதேபோன்று, விடுதலைப் போராட்டங் களை தமது நலனிற்குச் சாதகமாகப் பயன் படுத்தி, ஒடுக்கும் அரசுகளை கட்டுக்குள் கொண்டு வரும் நகர்வு முழுமையடைந்ததும், போராட்ட சக்திகளை சிதைக்கும் அடுத்த கட்ட நகர்வு முன்னெடுக்கப்படுவதனை வரலாறு முழுவதும் காணக்கூடியதாகவிருக்கிறது. சிறீலங்கா இனப்பிரச்சினை விவகாரத்தில் கால்பதித்த இந்தியா, இதற்கொரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

சிங்களத்தோடு 87ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், தமிழர் தரப்பினை இணைக்காமல் தவிர்த்துக்கொண்ட விடயத்திலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய வல்லரசாளர்களின் தந்திரோபாயச் சூத்திரத்தினை, மிகத் தெளிவாக உணர்ந்துகொண்டவர்தான் தேசியத் தலைவர், வே.பிரபாகரன். தேசியத் தலைமை மீது திணிக்கப்பட்ட அமைதிப்படையினர் மீதான யுத்தம், இந்திய பிராந்திய ஆதிக்கத்தின் சுயரூபத்தை அம்பலமாக்குகையில், பயங்கரவாதமாக்கப்பட்டது.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்ட வடிவத்தை, பயங்கரவாதமாகச் சித்தரிப்பதாலேயே, சிங்களத்துடன் ஒட்டிக் கொண்டிருக்க இந்தியாவால் முடிகிறது. விடுதலைப் புலிகள் குறித்த இந்தியாவின் பயங்கரவாதம் என்கிற நிலைப்பாடே, அத்தகைய அரசியல் பார்வையை சர்வதேசத்தின் மீதும் படியவைத்துள்ளது. சீனா, பாகிஸ்தான் போன்ற நிரந்தர நண்பர்களின் பரிபூரண ஆதரவு சிறீலங்காவிற்கு இருந்தாலும், பூகோள அரசியலில் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தவும், பயங்கரவாதிகளாகக் காட்டவும் இந்தியத் துணை மிக அவசியமென்பதை சிங்களம் புரிந்துகொள்கிறது.

இவைதவிர, இந்தியாவின் வெளிப்படையான ஆயுத உதவியைப் பெறுவதற்கும், அதனூடாக பாரதத்தின் ஆசீர்வாதம் தனக்கு உண்டென சர்வதேசத்திற்கு உணர்த்துவதற்கும், சீனாவிடம் செல்வோமென்கிற அச்சுறுத்தலை, சிங்கள ஆட்சியாளர்கள் தொடர் ச்சியாக இந்தியா மீது செலுத்தி வருகின்றனர். அதேவேளை சிங்களத்தின் சீனக் கயிற்றை விழுங்குவது போல் பாசாங்கு செய்யும் இந்தியா, தான் ஆடா விட்டால் சீனத்தசை ஆடிவிடுமென்று, அச்சங்கொள்வது போல் நடித்து, தமிழகத் தலைவர்களுக்கு புதிய வியாக்கியானங்களை அளிக்கிறது.

அதாவது தன்னைத் தவிர, விடுதலைப் புலிகளோ அல்லது சீனாவோ சிங்கள அரசின் மீது எதுவித அழுத்தங்களையும் செலுத்தக் கூடாதென்பதே காந்தி தேசத்தின் பிராந்தியப் பேராசையாகும். இந்நிலையில், சிறீலங்கா அரசின் இறைமைக்குப் பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் விடுதலைப்புலிகளை, அழிப்பதற்கு தம்மாலான சகல படைக்கல தொழில்நுட்ப உதவிகளையும் செய்வதற்கு இந்தியா முன்னிற்கிறது. செய்யப்படும் உதவிகளுக்கு, காத்திரமான பெறுபேறுகளை இந்தியாவிற்கு காட்ட வேண்டிய தேவையும் சிங்களத்திற்கு உண்டு. அதேவேளை யுத்தக் களங்களில் ஆளணி இழப்புக்களை அதிகம் சந்தித்தாலும், அதனை மூடி மறைத்து, கைப்பற்றப்படும் இடங்களில் சிங்கக்கொடி ஏற்றி இந்தியாவை குளிர்விக்க முனைகிறார் மகிந்த இராசபக்ச.

இந்தக் கொடிஏற்றும் நாடகத்தால், இரு வகையான அரசியல் அநுகூலங்களைச் சிங்களம் பெற்றுக்கொள்கிறது. ஒன்று, இச்தியாவின் நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இரண்டாவதாக, அரசியல் அதிகாரத்தை வலிமையாக்கும் சிங்கள மக்களின் பேராதரவு உச்ச நிலையைத் தொடுகிறது. 80 வீதமான சிங்கள மக்களின் மனோ நிலை, போருக்கு ஆதரவாகவும் அதே வேளை தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படக் கூடாதெனவும் மாற்றமடைந்துள்ளது.

பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கருத்துநிலை வளர்ச்சி, தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிக ஆழமாக வியாபித்து, இனங்களுக்கிடையிலான முரண்நிலையை, பகைமைத் தளத்திற்கு இழுத்துச் செல் வதை அவதானிக்கலாம். மறுபடியும் ஒட்டாத நிலை நோக்கி நகர்ந்து, நிரந்தரப் பகையுணர்வை மகிந்த ரின் இராணுவ முனைப்பு நிலைநிறுத்தப் போகிறது. விடுதலைப் புலிகளை வெல்ல முடியுமென்கிற திடமான நம்பிக்கையை, மறுபடியும் சிங்கள உளவியலில் நிறுவ முற்படும் நில ஆக்கிரமிப்புக்கள், பூநகரியோடு அதிகரிக்கின்றன. இதன் எதிர்வினையாக, தமிழ் மக்கள் மத்தியில் பதட்டம் உருவாகின்றது. தேசியத் தலைமையானது, இராணுவ ரீதியில் சிங்களத்திடம் தோற்கக் கூடாதென்கிற விடுதலை உணர்வின் வெளிப்பாடாகவே இதனைப் புரிதல் வேண்டும்.

ஒவ்வொரு இராணுவ நகர்விலும் சிங்களத்திற்கொரு அரசியல் நோக்கமுண்டு. கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாவிட்டால், எவ்விலை கொடுத்தாவது பூநகரியை கைப்பற்று என்பதே சிங்கள அரசியல்பீடம், இராணுவத்திற்கு வழங்கும் உத்தரவு. படைத்துறை வெற்றிகளை, அரசியல் அதிகாரத்திற்கான மூலதனமாகக் கொள்வது அரசியல்வாதிகளுக்கு தேவையான விடயம். இதனை சற்று விரிவாக, நிகழ்கால தென்னிலங்கை அரசியலோடு ஒப்பீட்டாய்வு செய்தால், கிளிநொச்சி ஆக்கிரமிப்போடு, ஜனாதிபதி தேர்தலை நடாத்த, மகிந்தர் வகுத்திருக்கும் திட்டத்தினை விளங்கிக் கொள்ளலாம்.

நிலங்கள் விழ, கொடிகள் ஏற, சிங்கள எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆதரவுத்தளம் ஆட்டங்காண்கிறது. மகிந்தரின் களமுனை வெற்றிகளை மக்களிடம் காவிச்செல்லும் பரப்புரையாளர்களாக விமல் விரவன்சவும், ஹெல உறுமயக்காரர்களும் மாற்றமடைந்துள்ளனர். ஆனாலும் விடுதலைப்புலிகள், இராணுவ பலத்தைச் சிதைத்தவாறு பின்னகர, பேரினவாத அரசியல்மையச் சக்தியானது, “மகிந்தரின் பின்னால் அணி திரளும்” போக்கில் பயணிக்கிறது.

ஆகவே நில ஆக்கிரமிப்பில், கொடியேற் றுவதன் ஊடாக தென்னிலங்கை சாதிக்கும் அரசியல் வெற்றியோடு, பின்னகர்வதால் விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களையும் நோக்க வேண்டும். இங்கு புரியப்படவேண்டிய விவகாரம் என்னவென்றால், பின்னகரும் விடுதலைப் புலிகளுக்கு, ஒரு தீர்க்கமான அரசியல் குறிக்கோள் உண்டென்பதும், அதன் நுண்ணரசியலில் சர்வதேச, பிராந்தியப் பார்வை யும் உள்ளடங்கியுள்ளதென்பதையும் எமது மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். இத்தகைய பின்னகர்வுகளை, பலவீனத்தின் வெளிப்பாடாகவே எதிரிகூறுவான். அவ்வாறு கூறுவதன் ஊடாக தமது பலத்தை அதிகரிக்கலாமெனக் கற்பிதமும் கொள்கிறான்.

விடுதலைப் புலிகளின் பலம் சிதைக் கப்படவில்லையென்பதை, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் விடுதலைப்புலி வீரர் உடலங்களின் எண்ணிக்கையிலிருந்தும், சிங்களம் வெளியிடும் கைப்பற் றப்பட்ட ஆயுதங்களின் பட்டியல்களில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம். முகமாலைச் சமரில் காணாமல் போன இரண்டு பற்றாலியன் (ஏறத்தாள 1300 பேர்) படையினர் பற்றிய தகவலை இராணுவம் மூடி மறைப்பதிலிருந்து, அவர்கள் கொடுக்கும் விலையினை சிங்கள மக்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். மகிந்தர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் தொடக்கம் இற்றைவரை தப்பியோடிய 25 ஆயிரம் படையினரில், அதிகமானோர் யுத்த களமுனைகளில் கொல்லப்பட்ட செய்தியும் மறைக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, இழப்புகளை மறைத்துவிடுமென மகிந்தர் எண்ணுகிறார். இழந்த நிலங்கள் மீட்கப்படும் பொழுதே, தமது மைந்தர்களின் இழப்புக்களை சிங்களம் தெரிந்துகொள்ளும். பிரி.தமிழ்செல்வன், பிரி.பால்ராஜ் அவர்களை நினைவில் இருத்தி பாரிய புதிய படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆகவே விடுதலைப் புலிகளின் பலம் சிதைக்கப்படவில்லையென்பதை, சரியான தருணத்தில் தேசியத் தலைவர் சிங்களத்திற்கு உணரவைப்பார். சில நிலங்களை இழந்ததலைமை, பலத்தை இழக்கவில்லை. எல்லா இராணுவ மூலோபாய, தந்திரோபாய நகர்வுகளும் - உத்திகளும், அரசியல் குறிக்கோளை அடைவதனை நோக்கியே பிரயோகிக்கப்படுகின்றன என்கிற யதார்த்தத்தைப் புரிந்தால், விடுதலைப்புலிகளின் சமகால நகர்வுகளை விளங்கிக் கொள்ளலாம். விதைக்கப்பட்ட 22 ஆயிரம் மாவீரர்களின் தாயகக் கனவை நிஜமாக்க, ஓரடி பின்னால் நகர்கிறோம். பின்னகர்வது வீழ் வதற்கல்ல... ஒரு நிரந்தரமான நிமிர்விற்கு.

- இதயச்சந்திரன்-

Comments