| |
சிறிலங்கா வான்படையினர் நடத்தும் இந்த புதிய வகை "பரசூட்" கொத்து குண்டுகள் நிலத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறி பொதுமக்களுக்கு பாரிய சேதங்களை உண்டாக்குகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இரண்டு தடவைகள் "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்றிரவு 10:15 நிமிடமளவில் ஒரு தடவையும் இன்று காலை 8:00 மணியளவில் இன்னொரு தடவையும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்க கன்னியர் மடம், பொதுமக்களின் பல வீடுகள், வணிக நிலையங்கள் என்பன சேதமடைந்துள்ளதுடன் கால்நடைகள் பலவும் கொல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்திருந்த மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்தும் இன்று காலை 8:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் பொதுமக்களின் இரண்டு வீடுகள் சேதமாகியுள்ளன.
இத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் காலைவேளை கடற்றொழில் பாதிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு கூட இதேபோன்ற "பரசூட்" கொத்துக் குண்டுகளை கிளிநொச்சி மருத்துவமனைக்கு அருகிலும் பரந்தன் கல்லாறு பகுதியிலும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வீசின என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை மற்றும் கேப்பாபுலவுப் பகுதிகள் மீது சிறிலங்கா தரைப்படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முள்ளிவளையில் இருந்து இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இக்கிராமங்களில் தங்கியிருந்த நிலையில் அப்பகுதி மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை குமாரபுரம் பகுதியில் தனது வீட்டினைப் பார்த்து வரச் சென்ற ஒருவர் அங்கு பதுங்கியிருந்த சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குமாரபுரத்தில் உள்ள தனது வீட்டை இன்னொருவருடன் கடந்த சனிக்கிழமை (20.12.08) பார்வையிடச் சென்ற போதே படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
இதில் சோமசுந்தரம் தில்லைநாதன் (வயது 42) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து அவருடன் சென்றவர் தப்பி வந்துவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சோமசுந்தரம் தில்லைநாதனுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவரவில்லை.
செய்தி:புதினம்
Comments