புலிகளை பிடிக்க முடியாது!




விடுதலைப்புலிகள் தலை நகரான கிளிநொச்சியை, பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26&க்குள் கைப்பற்றி விடுவோம் என அறிவித்துதான் யுத்தத்தை தொடங்கினார்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். அவர்கள் கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் புலிகளின் கோட்டையைப் பிடிக்க இயல வில்லை. கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? அங்கிருக்கும் சிலருடன் பேசினோம்.

கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் சொல்கிறார்.

"கிளிநொச்சியை முற்றுகை யிட்டுள்ள இராணுவம் அதனைப் பிடித்தே தீருவதென்று நான்கு முனைகளில் இருந்தும் விடாப்பிடியாக கடுமையான யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கமும் வீராவேசமாக போராடுகிறது. இதனால் கிளிநொச்சி நகரம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

விமானங்களின் பேரிரைச்சலும் அது போடும் குண்டுகளின் சத்தமும் மக்களின் அவலக் குரலுமாகதான் வன்னிப்பகுதி முழுவதும் காட்சியளிக்கின்றது.

இந்த யுத்தத்தின் முடிவு எப்படி இருக்கும் என இப்பொழுது கூற முடியாது. ஆனால், புலிகளை முழுவதுமாக அழித்து, விரைவில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என இலங்கை அரசு கூறுவது சாத்தியமில்லை என்பதை, அவர்களே உணர்ந்துள்ளதாகத்தான் தெரிகிறது என்கிறார் தீபச்செல்வன்.

ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான இந்த யுத்தத்தில் எப்பொழுதும் போல் அப்பாவி மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுதான் சோகம். "அண்மையில் கிளிநொச்சியில் மக்கள் வாழும் பகுதியில் ஒரே நாளில் ஒன்பது தடவைகள் ராணுவ விமானம் குண்டுகளைப் பொழிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு குழந்தை இன்று காலையில் அந்த குண்டுச் சிதறலில் மாட்டிக்கொண்டது. ஒரு வாரத்துக்கு முன் நிகழ்ந்த விமானத் தாக்குதலில் தாயும் தந்தையும் பலியாகிப் போக இவன் மட்டும் தப்பினான். இப்போது இவனையும் எறிகணை தாக்கியிருக்கிறது. குண்டுவீசும் போர் விமானங்களை வேடிக்கை காட்டும் விமானமென எண்ணி பராக்குப் பார்த்த குழந்தைக்கு நேர்ந்த கதியிது. செல்லும் இடமெல்லாம் இதுபோன்ற காட்சிகளே கண்ணில் படுகின்றன என்கிறார் தீபச்செல்வன்.

"விமானத் தாக்கு தல்கள் நடைபெறுவதால் கிளிநொச்சியை விட்டு பெரும்பகுதி மக்கள் வெளியேறிவிட்டார்கள். அரசின் பொருளாதாரத் தடையும் நீடிப்பதால் பொருள்களின் விலை வாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டன.

ஒரு லிட்டர் பெட் ரோல் 700 ரூபாய்க்கும், மண்ணெண்ணெய் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ அரிசி 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை 400 ரூபாய்; மீன் 1000 ரூபாய். மின்சாரம் முற்றாக இல்லை. மரவள்ளிக் கிழங்கோடும் முருங்கை இலையோடும்தான் எங்கள் அனைவரின் வாழ்க்கையும் கழிகிறது என்கிறார், கிளிநொச்சியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஞானகுமாரன் குமாரலிங்கம். இவர் சென்ற வருடம்தான் ஜெர்மனியில் இருந்து வன்னியில் குடியேறியிருந்தாராம்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிகள்தான் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். புனர்வாழ்வுக் கழகம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் தமிழக நிவாரணப் பொருட்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இது மக்களின் பசியை ஓரளவு தீர்க்கிறது என்கிறார் தீபச்செல்வன்.

யுத்தம் சூழ்ந்துள்ள பகுதியில் நிலைமை இது என்றால் யாழ்ப்பாணம், கொழும்பு உட்பட மற்ற பகுதிகளில் இருக்கும் தமிழர்கள் வாழ்வும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது என்கிறார் கவிஞர் மடுவிலான். இவர் கிளிநொச்சியில் இருந்து வெளியேறி தற்போது கொழும்புவில் இருக்கிறார்.

"பத்திரிகையாளர்கள் உட்பட வெளியுலகத் தொடர்புள்ளவர்கள் என ராணுவம் சந்தேகப்படும் எல்லா தமிழர்களின் போன்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. விசாரணை என்னும் பெயரில் தமிழ் ஊடகவி யலாளர்களை ராணுவம் அழைத்துச் செல்வது சர்வசாதாரண மாகிவிட்டது. கடந்த பதினைந்தாம் தேதி நடு இரவு இரண்டரை மணிக்கு என் வீட்டுக்குள் ஆயுதம் தாங்கிய எஸ்.டி.எஃப். படையினர் நுழைந்தனர். என்னைக் கைது செய்து அழைத்துச் சென்று, மூன்று நாள்கள் ஒரு இடத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். வைகோ, பழ. நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களுடன் தொடர்பு உள்ளதா எனக் கேட்டுத் தாக்கினார்கள். எனது கம்ப்யூட்டர், போன் புக், டயரி எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள் என்கிறார் மடுவிலான்.

"இவ்வளவுக்குப் பிறகும் போர் விரைவில் முடிந்து அமைதியான வாழ்க்கை திரும்பும் என்று நம்புகிறோம். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்தான் எங்கள் நாட்களை நகர்த்துகின்றன என்கிறார் தீபச்செல்வன்.

இவர்கள் நம்பிக்கை நனவாக வேண்டும்..

- தளவாய் சுந்தரம்

இந்தியா நினைத்தால் முடியும்

விடுதலைப்புலிகள் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனிடம் பேசினோம்.

விரைவில் புலிகள் பகுதியை முழுவதுமாக கைப்பற்றிவிடுவோம். அப்பொழுது ஒளிந்துகொள்ள இடம் இல்லாமல் கடலுக்குள் சென்றுதான் புலிகள் தற்கொலை செய்யவேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டிருக்கிறாரே?

புலிகள் இயக்கம் கடலுக்குள் குதித்து அழியவேண்டும் அல்லது சயனைட் அருந்தி சாகவேண்டும் என்று சிங்கள பேரினவாதிகள் ஆசைப்படுவது புதிதல்ல. சந்திரிகா காலத்தில் இராணுவ அமைச்சராக இருந்த ஜெனரல் ரத்வத்தவும், அதற்கு முன்னர் பண்டைய சிங்கள மன்னனான துட்டகாமினியும் தமிழர்களை கடலுக்குள் தள்ளியழிக்க ஆசைப்பட்டிருந்தார்கள். இதனை புலிகள் இயக்கமும் எமது மக்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இழப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவம் முன்னேறி வருவதுடன், நிலங்களையும் கைப்பற்றி இருக்கிறதே?

கணிசமான நிலங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு அகலக்கால் வைத்து சிங்களப்படைகள் பலவீனமடைந்திருக்கின்றன என்பதும் உண்மை. ஒரு விடுதலை இயக்கத்தின் பலம், அது வைத்திருக்கும் நிலப்பரப்பென்பதைவிட அதனிடம் இருக்கும் படைபலம் தான் உண்மையான பலமாகும். எனவேதான் நெருக்கடிகள் ஏற்படும் பொழுது நிலத்தை விட்டுக்கொடுத்து தமது படைபலத்தைத் தக்கவைத்துக் கொள்வதை ஒரு மரபாக விடுதலை இயக்கங்கள் கொண்டிருக்கின்றன.

தனது சொந்த பலத்துடன் நின்றபடி எம்முடன் சிங்களப்படைகள் மோதுவதாகவிருந்தால் ஒரு குறுகிய காலத்தில் வெற்றிபெற்று எமது இலக்கை அடைவோம் என்பது திண்ணம். ஆனால், நாங்கள் சிங்களப்படைகளுடன் மட்டும் மோதவில்லை. பல நாடுகளுடன் மோதியே எமது விடுதலையைப் பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம். சில நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிங்கள இராணுவத்துக்கு உதவிகள் புரிகின்றன.

புலிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்?

நாம் உலகின் சகல நாடுகளிடமும் அரசியல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இந்திய அரசுடனும் எமது நட்புறவை மீளக் கட்டியெழுப்ப விரும்புகின்றோம். இந்தியா ஒரு பலமான நாடு மட்டுமல்ல, இந்தப் பிராந்தியத்தின் வல்லரசுமாகும். இந்திய மத்திய அரசு நினைத்தால் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான புறச்சூழலை உருவாக்க முடியும்.

நன்றி: குமுதம், Dec 31, 2008



Comments