சரியான சந்தர்ப்பத்தை நழுவவிட்ட தமிழர்களும், அதற்காக் விலைகொடுத்துப் போராடும் தமிழர்களும்.

அதாவது 1505 ஆம் ஆண்டு போத்துக்கீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில், இலங்கையின் வட பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் வாழ்ந்து வந்த தமிழர்கள், தனித்துவரும் வீரமும் கொண்ட அரசியல் முறைமைகளையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் கொண்டிருந்தனர். அச்சமயம் இலங்கை, கோட்டை, மலையகம், யாழ்ப்பாணம் என்ற மூவகை இராச்சியங்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டன.

அன்றும், யாழ்ப்பாணத்தின் ஒரு பிரிவாக வன்னி இராச்சியம் விளங்கியது. போத்துக்கீசர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியதுடன், யாழ்ப்பாணத்தையும், சங்கிலிய மன்னனைத் தோற்கடித்துத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 1560 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் முற்றுமுழுதாகப் போத்துக்கீசரின் கட்டுப்பாட்டினில் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாண்மையில் துணிச்சல் மிக்க சுதந்திர இராச்சியமாக வன்னி இராச்சியம் இருந்தது.

1658 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும், யாழ்ப்பாணத்திலும், ஆதிக்கம் செய்துவந்த போத்துக்கீசர் ஒல்லாந்தர்களினால் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இடங்கள் ஒல்லாந்தர் வசமாயின. இவர்கள் போத்துக்கீசர் போல் யுத்தத்தில் கூடிய கவனம் செலுத்தாது வளங்ளைப் பெற்றுக்கொள்வதில் நாட்டம் காட்டினர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் மேலாண்மையால் துணிச்சல் கொண்ட சுதந்திர இராச்சியமாக வன்னி இராச்சியம் இருந்தது. யாழ்ப் பாணத்தின் வீழ்ச்சியால் வன்னி இராச்சியம் தளர்வுகண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்தர் பல தடவைகள் வன்னி அரசின் மீது மேலாண்மை செலுத்த முனைந்து தோல்வியுற்ற நிலையில் தந்திரமான அரசியல் வர்த்தக முறையையே வன்னியுடன் கையாண்டு வந்தனர். ஆயினும், யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்தர்களினால் வன்னி மக்கள் பெரும் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதன் போது வன்னியிலுள்ள ஆண்கள் எல்லோரும் மன்னனின் படையணியில் இணைந்திருந்தனர்.

ஒல்லாந்தர் போத்துக்கீசரின் நிர்வாக முறைகளில் மாற்றங்கள் செய்யாத போதிலும், புரட்டஸ்தாந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பதவி வழங்கல், பொருளாதாரச் சலுகை வழங்கல் போன்ற சலுகைகளை வழங்கித் தம்முடன் இணைத்துக் கொண்டனர்.காலனித்துவத்தில் ஆசை கொண்ட ஆங்கிலேயர்களும், ஒல்லாந்தர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி 1796 ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றினர். ஆனால் கண்டி இராச்சியத்தையும், வன்னி இராச்சியத்தையும் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. வன்னி இராச்சியம் பண்டாரவன்னியனால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் வன்னியையும் கைப்பற்றுவதற்கான தருணமொன்றைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கும் தென் இலங்கைக்குமான தரைவழிப்பாதை ஒன்று அத்தியாவசியமானதாக இருந்தது. இந்த வகையில் வன்னி ஊடான தரைவழிப்பாதை திறக்கப்பட்டுப் பயணித்தபோது பிரித்தானியப் படைகள் பண்டாரவன்னியன் படைகளின் அதிரடித்தாக்குதலுக்கு இலக்கானார்கள். ஆங்கிலேயர் இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றப் பதினொரு வருடங்கள் கடந்தும் வன்னி மக்கள் போராடிக் கொண்டே இருந்தனர். நவீன படைத்தளபாடங்கள், பீரங்கிகள் ஆங்கிலேயரிடமிருந்தும் பண்டார வன்னியனைத் தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. வீரமும், தியாகமும், விவேகமுமே வன்னி மக்களின் ஆயுதங்களாகக் காணப்பட்டன. கடைசியாக காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் பிரித்தானியப் படைகளுடன் நேருக்கு நேராகப் போரிட்டு 1803 ஆம் ஆண்டு வீரமறவன் பண்டாரவன்னியன் வீர மரணத்தைக் கற்சிலைமடு என்னும் கிராமத்தில் தழுவிக்கொண்டான்.

சுதந்திர இராச்சியமாக விளங்கிய வன்னி பண்டாரவன்னியனின் வீரமரணத்தால் அடிமை இராச்சியமாக்கப்பட்டது. தேடுதல் என்ற பேரில் பல்லாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். மேலும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அடிமைத் தொழிலாளராக்கப்பட்டனர். வீடு, வாசல்கள், பயிர் செடிகள், காணிகள், குளங்கள் யாவும் அழிக்கப்பட்டன. 1815 ஆம் ஆண்டு இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசமாக்கப் பட்டது.

பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட போதிலும், வன்னி மக்கள் அடிபணியாது காணப்பட்டனர் என்பதற்கு ஆதாரமாக கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை நிறுவ முடியாமல் போயுள்ளதை இன்றும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆயின் தம்மோடு ஒத்துவராதவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்து ஆட்கொண்டனர் என்ற வரலாறு உண்டு.

இவ்வாறான காலகட்டத்தில் வேர்செயில்ஸ் உடன்படிக்கை கிட்லரினால் கிழித்தெறியப்பட்டு, நேசநாட்டுப் படைகளுக்கெதிராகப் பெரும் போர்தொடு க்கப்பட்டபோது, கிட்லருக்கு ஆதரவாக யப்பான் படைகள் பிரித்தானியாவிற்கு எதிராகவும், தெற்கு தென் கிழக்காசிய பிரித்தானிய காலனித்துவ நாடுகளுக்கெதிராகவும் போரை ஆரம்பித்தது. இவ்வேளையில் சுதேசிகளின் போராட்டமும் பிரித்தானியர்களுக்கெதிராக வலுப்பெற்றிருந்தது.பிரித்தானியாவிற்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட நாடுகளிலுள்ள மக்களின் ஆதரவு கோரப்பட்டது. நீங்கள் இச்சண்டையில் எங்களுக்கு ஆதரவு நல்குங்கள் நாங்கள் உங்களுடைய சுயாட்சிக்கு ஏற்ற ஆதரவைத் தருகிறோம் எனக் கூறினார்கள்.

இவ்வாறான இக்காலகட்டத்தில் இலங்கையில் தமிழர் சிங்களவர் உறவு பெரும் பாதிப்பிற் குட்பட்டும், சிங்கள மேலாண்மை தமிழர் தரப்பை ஒடுக்குமுறை நிலைக்கு எடுத்துச் செல்லும் நிலையும் இருந்தது. இவ்வாறான நிலை ஒன்றின் போதுதான் ஜி.ஜி. பொன்னம் பலம் அவர்கள் 50:50 பிரதிநிதித்துவத்தைக் கேட்டிருந்தார். ஆயின் சனநாயக ஆட்சி முறைக்கு, இப்பிரதி நிதித்துவம் எதிர்மறை நிலையை ஏற்படுத்திவிடும் என்ற காரணம் கூறப்பட்டு சோல்பரி அரசமைப்பில் 29 ஆவது சரத்து இணைக்கப்பட்டு இது சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிங்கள தமிழர் முறுகல்நிலை, தமிழ்த் தலைவர்களால் நன்கு உணரப்பட்டுள்ளது. 29 ஆவது சரத்தை வழங்கிய பிரித்தானியர்களும் இந்நாட்டின் இனமுரண்பாட்டை விளங்கி இருந்தனர். இந்தவேளை, பிரிந்திருந்த தமிழர் இராச்சியத்தையும், சிங்கள இராச்சியத்தையும் இணைத்த பிரித்தானியர்களிடம் நீங்கள் இந்நாட்டைக் கைப்பற்றும் போது இருந்த மாதிரியே எமது தமிழ்ப் பிரதேசத்தைப் பிரித்துத் தந்துவிட்டுச் செல்லுங்கள் என உரத்துக் கூக்குரலிட்டாலே, எமது பிரதேசத்தை இரத்தம் சிந்தாமலே பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தன.

அன்றைய தலைவர்கள், சுகபோக வாழ்விலும், குடும்பப்பாரம்பரிய கௌரவத்திலும் பிரித்தானிய ஆட்சியாளர்களினதும் சிங்களத் தலைவர்களினதும் எஜமான விசுவாசத்திலும், பெரும்போர் மூளலாம் என்ற தீர்க்கதரிசனக் கண்ணோட்டமில்லாமலும் இருந்தார்களா? அல்லது வலுவான போராட்டமொன்றின் மூலம் உரிமைகளைப் பெற ஏற்பட இருக்கும் துன்ப துயரங்களுக்கு முகம் கொடுக்கமுடியாத சோர்வு நிலையுடன் இருந்தார்களா? அல்லது தம் முடைய நலன் ஒன்றே மக்கள் நலனிலும் மேம்பாடானது எனப் போலிவேசம் காட்டினார்களா? அல்லது தாம் எதைச் செய்தாலும் மக்கள் அதைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என எண்ணினார்களா?

இவ்வாறான இனமுரண்பாட்டின் மத்தியில், ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றிற்காகக் குரல் கொடுக்காது, இருந்ததை பின் நாளைய சந்ததி தம்மைத் தூற்றாதா? என்ற ஆதங்கங்களிற்கு ஏற்ற பதில் கண்டாலும், அவற்றினால் நடைபெறப்போவது ஒன்று மில்லை. ஆகவே இனிமேலுள்ள நடவடிக்கைகள் தீர்க்கதரிசனத்துடன் சரியானபாதையில் எடுத்துச் செல்ல வேண்டிய மானசீகப் பொறுப்பு இன்றைய தமிழர்களுக்குண்டு.

02 ஆம் உலக மகாயுத்தத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு கிட்லரினால் தொடுக்கப் பட்ட போரும், காலனித்துவ ஆட்சிக்கெதிரான சுதேசிகளின் போராட்டமும், பிரித்தானியர்களை, அந்நாடுகளை விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளியது. இந்த நேரத்தில் எமது மண்ணை எம்மிடம் தாருங்கள் என்று கேட்கக் கூடிய தலைமை ஒன்றைத் தமிழர் பெற்றிராதுவிட்டது பெரும் துர்அதிர்ஷ்டமேயாகும்.ஏற்படக் கூடாத இத்துர் அதிர்ஷ்ட நிலை ஏற்பட்டதால்தான், தமிழர்கள் 1948 ஆம் ஆண்டு தொடக்கம், இன்றுவரை அவர்களின் அரசியல் வழிமுறை கடினமான பாதையொன்றினூடாக, சர்வதேச அரசியல் நெறிமுறைகளின் பாதையில் அவதானமாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு கிட்லரினது உலகுக்கான ஓரரசுக் கொள்கை பெரும் சவாலாகவே காணப்பட்டது. இதைத் திடமாக நம்பிய கிட்லரின் செயற்பாட்டினால் காலனித்துவ வாதிகளினால் அடிமைப்படுத்தப் பட்ட நாடுகளை விட்டுவிலகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காலனித்துவ வாதிகளின் விலகலே அந்நாடுகளுக்கான சுதந்திரம் எனக் கூறப்படுகின்றது. காலனித்துவவாதிகளினால் வளர்த்தெடுக்கப்பட்ட படித்த உயர்தரவர்க்கத்தினர் தங்களது முயற்சியினாலேயே நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகவும் அவ்வாறு நாட்டுக்காகப் பாடுபட்டவர்கள் போற்றுதற்குரியவர்கள் என்றும் போற்றப்படுகின்றார்கள்.

காலனித்துவம் பீதி கொண்டு பின்வாங்கும் தருணத்தில் - தமிழ்த்தேசியம் தூங்காமல் விழிப்படைந்திருந்தால் தமிழர் தாயகம், பிரித்தானியர்களால் பிரிக்கப்பட்ட நிலையிலேயே, இலங்கையை விட்டு வெளியேறி இருப்பர். தமிழர்கள் தூங்கியதால்தான் சிங்களப் பேரினவாத அரசு வலுவடையவும், தமிழர்கள் தமக்கான தன்னாட்சியைப் பெறமுடியாத நிலையும் ஏற்பட்டது.

பிரித்தானியர்கள் இனங்களுக்கிடையேயான இனமுரண்பாட்டைத் தெளிவாக அறிந்து, அதற்கேற்ப பிரித்தாலும் தந்திரோபாய ரீதியிலேயே அவர்களது 150 ஆண்டுகால ஆட்சியில் நடந்துகொண்டனர் என்பது அவர்களால் காலத்திற்குக் காலம் வழங்கப்பட்ட அரசியலமைப்பில் இருந்து புரிந்துகொள்ளலாம். இதன் ஓர் ஏற்பாடாகத்தான் 1948ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அரசியமைப்பில் எந்தவோர் இனத்திற்கும் எதிராகச் சட்டப்பிரேரணை ஒன்றை இச்சபையில் கொண்டுவர முடியாது என்ற பாதுகாப்புடன் கூடிய ஏற்பாட்டை இடம்பெறச் செய்தனர்.

வலுவடைந்த பேரினவாத அரசு சிறுபான்மை இனத்தவர்களுக்குச் சம உரிமை வழங்குதல் சிங்கள மேலாண்மைக்கு அச்சுறுத்தல் என்ற மனோசுபாவத்துடனேயே போரையே மூலதனமாக்கி என்னவிலை கொடுத்தும் போரில் வென்றுவிட வன்னியைச் சுற்றி வளைத்துத் தமிழ்மக்களை அழித்து வருகின்றது.

இவ்வின அழிப்புப்போரை என்னவிலை கொடுத்தும் தமிழரின் தலைவிதியை மாற்ற வேண்டியதும், தமிழர்களைத் தலைநிமிரவைக்க வேண்டியதும், மாவீரச் செல்வங்களின் தியாகங்களை மதிக்க வேண்டியதுமான பொறுப்பு வன்னிவாழ் மக்கள் மீதே சுமத்தப் பட்டுள்ளது. மனிதனின் பிறப்பு- இறப்புக்கே என்ற உண்மையை விளங்கிக்கொண்டு- பிறக்கிறோம் - சாகிறோம் என்ற இருட்டறைக்குச் செல்லாது பிறக்கிறோம். வரலாறு எழுதுகிறோம் என்ற மனவெழுச்சியுடன் எமக்காக எழுச்சிகொண்டு நிற்கிற பத்துக்கோடி தமிழர்களுக்காகவும், எங்களுக்காகவும், எமது தலைவர் வழியில் நின்று தூங்கிக் கிடக்காது, அடுத்த சந்ததிக்கும் இப்போரை விட்டுச் செல்லாது எமது தலைவன் காலத்திலேயே வென்றெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமே தமிழர்களின் இப் போராட்டமாகும்.

-கிருஸ்ணபிள்ளை-

தமிழ்க்கதிர்


Comments