இந்தியாவில் ஈழம்....


'இலங்கை என்பது சிங்களவர்களின் நாடு. இதில் மற்றவர்கள் உரிமை கேட்பதற்கு எதுவுமே இல்லை" என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன் சேகா கூறிவதில் இருந்தே சாதாரண சிங்களக் குடிமகனின் எண்ணம், எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை இந்தியத் தமிழனால் யோசிக்க முடிகிறது. மன்னார் வளைகுடாவை பாகிஸ்தானில் இருந்து தங்களுக்கான ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இலங்கை பயன்படுத்துகிறது. இது, இந்தியாவுக்கு எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவைவிட தமிழகம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. தினம், தினம் சுடப்பட்டு மடியும் இந்திய மீனவர்களுக்காக இந்த அரசு நீதி கேட்கத் தயாராக இல்லை என்பதும் இலங்கை அரசுக்கு துணிச்சலைத் தந்து கொண்டிருக்கிறது என்பதையும் உணரத் தொடங்கிவிட்டான் தாய்த் தமிழன்.

எனவேதான், இலங்கை அரசின் அழிச்சாட்டியத்தை நிறுத்தத் தவறினால், இந்திய எல்லைக்கும், தமிழக மீனவர்களுக்கும், ஈழத் தமிழர்களின் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது என்பதை ஆணித் தரமாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள். பகல், இரவாக விமான குண்டுகள் வீசப்படுகின்றன. அவை விழும் இடங்கள் புலிகளின் தளங்கள் எனவும், செத்துமடிவோர் எல்லோரும் புலிகள் என்றும், இராணுவம் தகவல் சொல்கிறது. அரச ஊடகங்களும் இதையே வழிமொழிகின்றன. இந்திய தேசத்தில் உள்ள சில பார்ப்பனீய ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்கின்றன.

'ஈழம் என்றாலே, புலிகள்; புலிகள் என்றாலே ராஜீவ் படுகொலை" என்கிற எண்ணத்தை இந்தியர்களின் - குறிப்பாக தமிழர்களின் - பொதுப் புத்தியில் தூவி விட்டிருக்கிறது, பார்ப்பனீய அரசியல். 'ஈழத்துக்கு சுயநிர்ணயம் கிடைத்துவிட்டால், தனித் தமிழ்நாடு கேட்பார்கள்" என்று ஆதாரமே இல்லாத ஒரு வடிகட்டிய பொய்யைப் பரப்பி வருகிறது, இதே பார்ப்பனீய கும்பல். 'ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலிகள் ஆதரவாளர்கள்". ஈழத் தமிழர்கள் மீதான அடுக்குமுறையை நியாயப்படுத்த இவர்களுக்குக் கிடைத்த அற்புத ஆயுதம் தான் ராஜீவ் படுகொலை. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயத்துக்கு மட்டுமின்றி தமிழக மக்களின் இன உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் இவர்களுக்குக் கிடைத்த சாக்கு போக்குதான் 1991 மே 21 ஆம் தேதி நடந்த அந்தப் படுகொலை.

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றி பேசுவோர் அனைவரும் இந்தியத் தேசத் துரோகிகள்; பிரிவினைவாதிகள். 'வேலூர் சிறையில் இருக்கும் நளினியைப் பார்க்க வந்ததன் மூலம் தமிழகத்தில் புலிகள் ஆதரவு தலைதூக்க ஆரம்பித்து விட்டது" என்கிறார், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி. 'சுப. தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா வாசித்த கருணாநிதியைக் கைது செய்ய வேண்டும்" என்றார், ஜெயலலிதா.

கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி தி.மு.க., திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், தமிழர் தேசிய இயக்கம் போன்ற இயக்கங்கள் தமிழீழ சிக்கலுக்கு நிரந்தத் தீர்வு தமிழீழ தனிநாடு தான் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

எம்.ஜி.ஆரின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும், அவர் உயிருடன் இருந்த வரையில் தமிழீழ தனிநாடு நிரந்தரத் தீர்வு என்றிருந்தது. ஆனால், அந்தக் கட்சியின் இப்போதைய பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து எந்தத் தெளிவும் நமக்கில்லை.

தற்போது நடந்து வரும் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து முதல் முதலில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. அதைத் தொடர்ந்து திராவிட கழகம் சார்பில் சென்னையில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது. பா.ம.க.வின் ஆர்ப்பாட்டம் உணர்ச்சிகரமானது என்றால் தி.க.வின் மறியல் போராட்டம் எழுச்சிகரமானது. அதிலும் குறிப்பாக, தி.க.தலைவர் கி.வீரமணியுடன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மறியல் போராட்டத்துக்காக கைகோர்த்து நின்றது கண்கொள்ளா காட்சி.
'அனைவருக்கும் சமமான உரிமை வழங்கிடும் கூட்டாட்சி மலர வேண்டும்" என்கிற நிலைப்பாட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தது. காந்தி ஜெயந்தியன்று தமிழக மாவட்டத் தலைநகரங்களில் இந்த உண்ணாவிரதமும் நடந்தது. நீண்ட நெடுங்காலத்துக்குப் பின் அதாவது 1983, 84 களில் காணப்பட்டதைப் போல் மீண்டும் தமிழக அரசியல் கட்சிகளின் பார்வை ஈழத் தமிழர்கள் பக்கம் திரும்பக் காரணமாக அல்லது ஆரம்பமாக இருந்ததும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்று சொன்னால் சிலர் மறுக்கக் கூடும். ஈழப் பிரச்னையில் சின்ன அளவில் தயக்கம் இல்லாமல் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வரும், பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், தேசியவாத காங்கிரஸ், லட்சிய தி.மு.க., தேசிய முஸ்லிம் லீக், உலகத் தமிழர் பேரவை போன்ற அரசியல் இயக்கங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளித்து மற்றொரு நல்ல திருப்பம் எனலாம்.

கம்யூனிஸ்ட் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, சென்னை மாங்கொல்லையில் ஈழப் பிரச்னையில் தி.மு.க. நிலையும், மத்திய அரசுக்கு வேண்டுகோளும் என்ற தலைப்பில் முதல்வர் தலைமையில் அக்டோபர் ஆறாம் தேதி பொதுக் கூட்டம் நடந்தது. அதில், 'காந்தியடிகளின் உருவமும் பெரியாரின் உள்ளமும் கொண்ட தந்தை செல்வா ஈழத்தில் உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினார். அதற்காக ஆதரவு கேட்டு தமிழகத்துக்கு அவருடன் வந்தார், தோழர் அமிர்தலிங்கம். அவர்களெல்லாம் இன்றில்லை. காரணம் ஆராய வேண்டாம். அதற்காகக் கண்ணீர் விட்டும் பயனில்லை. செல்வாவின் மரணத்துக்குப் பின் இளைஞர்கள் தோன்றினார்கள். சிறையில் உயிர் விட்டார்கள். அப்படிப்பட்ட தியாகமும் அவர்கள் விதைத்த விடுதலை உணர்வும் இன்றும் பட்டுப்போகாமல் இலங்கையில் இருக்கிறது" என்று நா தழுதழுக்கப் பேசினார் கலைஞர்.

அதை நிரூபிக்கும் விதமாகவே, அந்தப் பொதுக் கூட்டத்துக்கு முதல் நாள், முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று 'இலங்கை ராணுவத் தாக்குதல் - தமிழ் இனப் படுகொலை - தடுத்து நிறுத்திட இந்திய அரசு தலையிடுமாறு வேண்டுகோள்" என்று குறிப்பிட்டு, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு லட்சக்கணக்கான தந்திகள் பறந்தன.

ஆனால் எதிர்பாராத மற்றொரு திருப்பமும் நடந்தது. 21.10.08 அன்று சென்னையில் மறுமலர்ச்சி திமுக சார்பில் நடந்த 'என்ன நடக்கிறது ஈழத்தில்?" என்ற கருத்தரங்கில் 'இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிக் கொண்டே சிங்கள ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவியும், பயிற்சியும் அளித்து வருகிறது. ஆயுத உதவியோடு நிதி மற்றும் ராணுவத் தொழில்நுட்ப உதவிகளையும் செய்கிறது, இந்திய அரசு. நம்மினத்தை அழிக்க நம் வரிப்பணத்தைப் பயன்படுத்துகிறது. தமிழினத்தை அழிக்கும் மத்திய அரசின் இந்த செயல்பாடு தொடர்ந்தால், தனித் தமிழ் நாடு என்ற எண்ணமும், உணர்வும் மேலோங்கி விடும்" என்று எச்சரிக்கை விடுத்த வைகோவையும், அவைத் தலைவர் கண்ணப்பனையும் கைது செய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால்... மே 21, 1991 இல் அந்தச் சம்பவம் நடந்ததும் (கருணாநிதியின்) தி-.மு.க.வினர் மீது கொலைவெறித் தாக்குதலை காங்கிரஸார் நடத்தினார்கள். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பழிவாங்க சுமார் பல லட்சம் தி.மு.க.வினரின் உடைமைகளை எரித்து சாம்பலாக்கினர். கவிஞர் வைரமுத்துவின் கார் எரிக்கப்பட்டது ஒரு உதாரணம். ராஜீவ் காந்தி படுகொலைக்காக தி.மு.க.,வினர் தண்டிக்கப்படுவதை விரும்பிய காங்கிரஸார், அமைதிப் படையினரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்காக யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைக்குத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் யார்? என்று வேலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன் சொன்னால் நன்றாக இருக்கும்.

ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்துக்குப் பழிவாங்கப்பட்ட தி.மு.க.,வினரின் இன்றைய நிலை என்ன? இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, தில்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சிக் குழுவில் தமிழுணர்வாளர் பழ நெடுமாறன் பங்கேற்கவில்லை! 'இப்பிரச்னை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தது நான்தான். அதுபோன்ற இக்கட்டான நிலை என்னால் உருவாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வில் முதல்வர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை" என்று விளக்கம் கொடுக்கிறார் நெடுமாறன்.

அரசியல் தான் இப்படி என்றால்... பார்ப்பன கும்பல் ஊடகங்கள் மூலமும் ஈழத் தமிழர்களின் உரிமைக்கு எதிராகவே தொடர்ந்து கொடிபிடித்து வருகின்றன. சில நாட்களாக, 'கிளிநொச்சியை நெருங்கியது, இலங்கை ராணுவம்" என்கிறது, பார்ப்பன ஏடுகள். ஆனால், இதே ஏடுகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 'கிளிநொச்சியைக் கைப்பற்றியது, இலங்கை ராணுவம்" என்ற செய்தியை வெளியிட்டு தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொண்டன. உண்மையில், ஈழத்தில் எத்தனை கிளிநொச்சிகள் இருக்கின்றன? என்று இவர்கள் தெளிவு படுத்தினால் தேவலாம்.

ஈழத் தமிழர்கள் மீதான அடக்குமுறையை நியாயப்படுத்த 1991 மே 21 ஆம் தேதிக்கு முன்பும் இவர்களுக்குக் காரணங்கள் இருந்தன. ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தில் இருந்து இன்று வரை ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்க ராஜீவ்காந்தி மரணம் இவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. தமிழக காங்கிரஸாருக்கு தமிழணர்வைக் காட்டுவதைவிட, ராஜீவ் குடும்பத்திடம் தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதே முக்கியமாக இருந்து வருகிறது.

ராஜீவ் சாவுக்குப் பழிவாங்கும் விதமாக சிங்களவனுக்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து ஈழத் தமிழன் மீது போர்த் தொடுக்கச் செய்கிறது இந்திய அரசு. காயம் பட்ட ஈழவன் அழுதால் தொப்புழ் கொடி உறவுகள் ஆறுதல் சொல்லக் கூடாதாம். சொன்னால் தேசத் துரோகிப் பட்டம் காத்திருக்கிறது. பார்ப்பனீய சூழ்ச்சியில்... பதவி ஆசையில்... ஈழத் தமிழனைத் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் தான்.

மொத்தத்தில் 'புத்தனுக்கே வெளிச்சம்!"

தமிழகத்திலிருந்து நிலவரத்துக்கக வெற்றி


Comments