தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் இப்போது தேர்தல் ஜுரம் தொற்றிவிட்டது. அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திப்பதற்கான வியூகங்களை வகுக்கின்ற முயற்சியில் முக்கிய கட்சிகள் இறங்கியுள்ளன. 2009 நடுப்பகுதிக்கு முன்னர் ஐந்து மாகாணசபைகளின் ஆயுட்காலம் நிறைவடைவதால் அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்று அரசாங்கம் எப்போதோ பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டது.
அதாவது ஆளும் கூட்டணிக் கட்சிகளை உசார்நிலையில் வைத்திருப்பதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கிறது. மாகாணசபைத் தேர்தலுக்கும் அப்பால் பொதுத்தேர்தலையோ, ஜனாதிபதித் தேர்தலையோ நடத்தும் திட்டம் அரசாங்கத்துக்கு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. அதைவிட இப்போது பொதுத்தேர்தலுக்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்புச் செய்கின்ற வழிமுறை பற்றிய பேச்சுக்களும் அடிபடுகின்றன.
உண்மையில் அடுத்த வருடம் எந்தத் தேர்தல் தான் நடக்கப் போகிறது என்று குழம்பிப் போகின்றவர்களே அதிகம். இது தொடர்பாக அரசாங்கத் தரப்பில் யாரிடமாவது கேள்வி எழுப்பினால் "நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலா? அப்படியான திட்டம் ஏதும் இல்லை. ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றனவே அதற்கு முன்னர் எதற்காக தேர்தல்? என்று பதில்கேள்வி வருகிறது.
அடுத்த வருடத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கப்போவது உறுதி. இப்போது வடக்கில் அரச படைகள் போரில் முக்கியமான இலக்குகளை எட்டி வருவதால் 5 மாகாணசபைகளையும் கலைத்து ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. 5 மாகாணசபைகளிலும் நடக்கின்ற தேர்தல் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த நாட்டின் கருத்தை அரசாங்கத்தின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் என்பது பொதுவான கணிப்பு.
அரசாங்கத்துக்கு இப்போது பொதுத்தேர்தலை அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடைசியாக நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் போது அரசாங்கத்துக்கு 45 மேலதிக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. எனவே இப்போதைக்கு அரசாங்கம் கவிழும் நிலையோ அதற்கு ஆபத்தோ ஏற்படாது. இந்தக் கட்டத்தில் பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அவசியம் இருக்கவில்லை.
ஐ.தே.கவின் 42 உறுப்பினர்கள் இப்போது அரசின் கையில் இருக்கிறார்கள். ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற 11பேரும், ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்தின் தீவிர விசுவாசிகளாக புலிகள் மீதான போர் தொடரும் வரை இருப்பார்கள். இப்போது அரசாங்கத்துக்கு தலைவலியாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐ.தே.கவின் பலவீனப்பட்ட நாடாளுமன்ற அணியும்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் அரசாங்கத்தின் ஒரே தலைவலி.
அவர்களை எப்படியாவது வெளியே அனுப்பிவிட்டால் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள் என்பது அரச தரப்பின் நோக்கம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றுவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? அதற்காக மட்டும் அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க முன்வராதென்றே தெரிகிறது. அரசாங்கத்துக்கு தோள் கொடுக்கின்ற ஜாதிக ஹெல உறுமயவோ, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியோ அல்லது கரு ஜெயசூரிய தலைமையிலான அணியினரோ அரசாங்கத்தை நிரந்தரமாக ஆதரிப்பார்கள் என்று நம்புவதற்கில்லை.
போர் நிறுத்தப்பட்டால் புயலாகக் கிளம்புவோம் என்று விமல் வீரவன்ச எச்சரித்து வருகிறார். ஜாதிக ஹெல உறுமயவும் கூட மகிந்த சிந்தனையை மீறினால் ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம் என்கிறது. கரு ஜெயசூரிய தரப்போ இப்போதும் ஐ.தே.க.வுடன் இணைவது தொடர்பாக திரைமறைவில் பேச்சுக்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் இதே போக்கில் நீண்டகாலத்துக்கு நிலைக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் மாற்றங்கள் தெரியவரும்.
பொருளாதார நெருக்கடிகள் உச்சத்தை தொடும்போது அரசாங்கத்தின் தீவிர போர்க்கொள்கையில் மாற்றங்கள் தென்படலாம். அப்போது விமல் வீரவன்சவோ, கரு ஜெயசூரியவோ, ஜாதிக ஹெல உறுமயவோ அரசாங்கத்தை காப்பாற்ற முன்வராவிட்டால் என்ன செய்வது? இந்த கவலை தான் இப்போது அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதனால் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு நல்ல நாள் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டால் கூட்டமைப்பையும் துரத்தி விடலாம். பெரும்பான்மை பலத்தையும் பெற்றுவிடலாம். அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். இந்நிலையில் டிசம்பர் 9ம் திகதி நல்ல நாளில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தி தென்னிலங்கையில் பரவியிருக்கிறது. நாடாளுமன்றக் கலைப்புக்கு நல்ல நாள் பார்த்ததாக கூறப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நாடாளுமன்றப் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நாடாளுமன்றக் கலைப்பு உடனடிச் சாத்தியமான விடயமாக இருப்பினும் சர்வஜன வாக்கெடுப்பு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே கருதலாம். காரணம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய குறுகிய காலம் இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியும். ஆனால் இப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுற நீண்டகாலம் இருக்கின்ற போது அதன் பதவிக்காலத்தை நீடிக்க கருத்துக்கணிப்பு ஒன்று நடத்துவதற்கான அவசியம் இருக்காது.
அவ்வாறு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் எஞ்சியிருக்கின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது சட்டரீதியாகச் செல்லுபடியாகுமா என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது. வன்னிப் போர்க்களத்தில் குறிப்பிடத்தக்க இலக்குகளைக் கைப்பற்றியிருக்கின்ற அரபடைகளின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கிக் கொள்வதில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. எனவே கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னர் நாடாளுமன்றக் கலைப்புக்கு அரசாங்கம் திட்டமிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேவேளை பலம் குன்றாத புலிகளின் எதிர்தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பது, நாடாளுமன்றக் கலைப்பின் பின்னர் போர்க்கள நிலைமைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் என்ன செய்வதென்ற அச்சமும் அரசாங்கத்துக்கு இருக்கக் கூடும். எனவே குறுகிய காலத்துக்குள் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டலாம். அதேவேளை அரசாங்கத்தை வம்புக்கு இழுப்பது போன்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தக் கோரியிருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.
அடுத்தடுத்து தேர்தல்களில் தோல்வி கண்ட ஐ.தே.க. இப்போது உடனடி பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசாங்கம் அதற்குத் தயாரற்ற நிலையில் இருப்பதாலேயே என்ற கருத்தும் உள்ளது. முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தடல்புடலாக ஈடுபட்டிருப்பினும் குறுகிய காலத்துக்குள் சர்வஜன வாக்கெடுப்புக்கோ பொதுத்தேர்தலுக்கோ, ஜனாதிபதி தேர்தலுக்குகோ வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அரசாங்கம் இப்போதைய இராணுவ வெற்றிகளை வைத்து ஒரு தேர்தல் வெற்றியைப் பெற நினைக்குமேயானால் அது இராணுவ வெற்றி மீதான அவநம்பிக்கைக்கு உள்ளாகி விட்டதென்றே பொருள். ஏனெனில் இதற்கு மேல் இராணுவ வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பின் அதை வைத்து பெரும் அரசியல் வெற்றியைப் பெறவே அரசாங்கம் முனையும்.
எனவே அவசரப்பட்டு தேர்தல் நடத்த விரும்புமேயானால் இதற்கு மேல் இராணுவ வெற்றி பெறுவது கடினமென்று அரசாங்கம் உணர்ந்து விட்டதென்றே கருதமுடியும். இதனால் இப்போதைய தேர்தல் ஜுரம் மழைக்கால வைரஸ் காய்ச்சலைப் போன்று விரைவிலேயே தணிந்து போய்விடலாம்.
- சத்திரியன்

Comments