தலைவர் பிரபாகரனின் அன்பும் பாராட்டும் புலம்பெயர் இளையோரின் செயற்பாடுகளை மேலும் எழுச்சி கொள்ள வைக்கும் தூண்டு கோலாகட்டும்!


'(சிங்களம்) இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கின்றது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்."

2008 ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரனின் உறுதிமிக்க வெளிப்பாடு மேற்குறிப்பிட்டதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்தளத்தைச் சூழவும் சிறிலங்காப் படைகள் மூர்க்கத்தனமாகப் போர் புரிந்து கொண்டிருக்க இப்படியான ஓர் சூழலில் தலைவர் பிரபாகரன் என்ன பேசப் போகின்றார் என்ற தேடலும் அவாவும் தமிழ் மக்களிடம் இருந்ததை மறைத்தோ மறுத்தோ பேச முடியாது.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் உணர்வு பூர்வமாக மக்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் மாவீரர் நாள் உரையைக் கேட்க ஆவலாய் இருந்தது போலவே சுவிஸ் வாழ் தமிழிடரிடமும் அந்த ஆவல் குடிகொண்டிருந்தது. இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் என்ன தான் பேசப் போகின்றார் என எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் (சுவிற்சர்லாந்தில்) தலைவர் பிரபாகரனின் உரையை அவதானமாக பொறுமையாகக் கேட்டனர். தாம் எதிர்பார்க்கும் தகவலொன்றை தலைவரின் உரையில் தரமாட்டாரா? என்ற ஏக்கம் நிறைந்த கேள்வி மக்களிடம் இருந்து உணர முடிந்ததும். கூக்குரலிட்டு ஆரவாரமாக அனைவரும் ஒன்றாகக் கையைத் தட்டவில்லை. நினைத்து நினைத்துக் கையைத் தட்டினார்கள். சிறிலங்காப் படைகளின்; இடங்களை விரைவில் பிடிப்போம் என்றாவது உரையில் சொல்லியிருக்கலாமே என்று பேசியவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். எவருடைய எதிர்பார்ப்புக்கும் உட்பட்டவராகவும் எவராலும் எதிர்வு கூறமுடியாதவராகவுமே தலைவர் பிரபாகரன் இருக்கின்றார் அவரின் உரை கூட அப்படியானதே.

ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்கக் கூடாதோ அப்படியானவராக தலைவர் பிரபாகரனை யாரும் கருத முடியாது. உலகின் பெரியதொரு தேசிய இனத்தின் வீரம் மிக்க விவேக மிக்க தலைவராகவே இவர் காணப்படுகின்றார்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் உணர்வு பொங்கப் பேசுமளவிற்கோ களமுனைத் தளபதிகள் எதிர்ச்சமராடிக் களத்தில் நின்றபடி களத்தின் மெய்களை உணர்வு கொப்பளிக்கப் பேசுவார்களே... அதேபோன்றோ அல்லது அதற்கு மேலாகவோ தொனியை உயர்த்தி வெட்டுவேன். குத்துவேன் என்று பேசுவதற்கென்ன கூச்சப்படவோ அச்சப்படவோ வேண்டியவரா? ஆண்டுதோறும் மாவீரர் நாளில் தான் உரையாற்றுகின்றார். இதிலிருந்து தெரிவதென்ன? பேசுவதை விட செயல் முன்நிற்க வேண்டும் என்பது அவரின் கொள்கையோடு ஒட்டி நிற்கின்றது. இதுவரை காலமும் மாவீரர் நாள் உரைகளில் இல்லாத துணிச்சலை இந்தமுறை மாவீரர் நாள் உரையில் காண முடிந்தது.

இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம், என்று மக்கள் மீது முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கின்றாரே. இந்த நம்பிக்கை தான் உண்மையான மக்களின் தலைவர்கள் கொள்ள வேண்டிய நம்பிக்கையாகும்.

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டு தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்து சர்வதேசத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப் பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை. கவலைகூடத் தெரிவிக்கவில்லை என்று கூறும் அவர் தன் உரையில் உலகின் சமாதான விரும்பிகளானவர்களின் உண்மை நிலை பற்றிப் புட்டு வைக்கின்றார். இப்படியான எடுத்துக்காட்டல் மூலம் தமிழ்நாட்டிலுள்ள உறவுகளையும் புலம்பெயர் உறவுகளையும் வீச்சுடன் செயற்பட்டு உலகின் முன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை இடித்துரைக்க வேண்டிய பணி மேலும் உள்ளதென்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.

சில உலக நாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக் கொடுத்து இராணுவப் பயிற்சிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழரிற்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்கின்றது.
உலகின் சில நாடுகள் செய்யும் தவறுகளை துணிவுடன் சுட்டிக் காட்டுகின்றார். 13.12.1937 அன்று சீனாவில் நான்ஜிங் படுகொலை நடந்தது. இதில் இரண்டு லட்சம் சீன மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 09.08.1945 அன்று யப்பானில் நாகசாகி, ஹிரோசிமா ஆகிய இடங்களில் அணுகுண்டு வீசப்பட்டது. லட்சக்கணக்கில் மக்கள் பலியெடுக்கப்பட்டனர். இப்படியான போரின் வலி என்னவென்று தெரியாத உலக வல்லாதிக்க நாடுகள் உண்டா? இரண்டு உலகப் போரிலும் கோடிக்கணக்கான போர் வீரர்களும் கோடிக்கணக்கான மக்களும் பலியானார்கள். எனவே போரின் தாக்கம் என்னவென்று உலக நாடுகளிற்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை. ஆனால், நினைவூட்ட வேண்டிய தேவையுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றித் தமிழரே உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் தலைவரின் உரை அமைகின்றது.

'எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கின்றோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி காத்திரமான உறவைக் கட்டியெழுப்புவதற்கு காத்து நிற்கின்றோம்."

இந்தியாவும் உலகமும் தலைவரின் இந்த வேண்டுகையின் மெய்த்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். மிக நீளமான காலத்தைக் கடந்து வந்துள்ள தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுண்மைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல எம்மை நோக்க வேண்டும். ஏற்க வேண்டும் என்பதே தலைவரின் மனம் திறந்த கோரிக்கையாகும். இந்தியப் பேரரசுடான அறுந்து போன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக் கொள்ள விரும்புகின்றோம் என்றுரைத்துள்ளவை பற்றி நிச்சயமாக இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் அண்மையில் நடைபெற்ற கோரச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உயிர்களைச் சாட்சியாக வைத்து பயங்கரவாதம் எது? விடுதலைப் போராட்டம் எது? என்பதைப் பாகுபடுத்திப் பார்க்க வேண்டும் மும்பையில் நடந்தது போல் கொடூரமாக மக்களைக் கொலை செய்வது தான் பயங்கரவாதம். தமிழீழத்தில் நாளாந்தம் மக்களைக் கொலை செய்பவர்கள் பயங்கரவாதிகளா? மக்களைக் காப்பாற்றுவதற்காக உயிர்களை ஈகம் செய்து போராடுபவர்கள் பயங்கரவாதிகளா?

'தவறுகளை ஒத்துக் கொள்ளும் வலுவும் அதனைத் திருத்திக் கொள்வதற்கான வலுவுமே வெற்றி பெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்" என்று லெனின் எடுத்துரைக்கின்றார்.

இது தமிழீழ இந்திய நட்புறவிற்கும் பொருந்தும். நிச்சயமாக இந்திய மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்தியாவின் தென்திசையில் அமைந்துள்ள தமிழீழத்தை இந்தியா நேச சக்தியா கருத வேண்டும். தமிழின அழிப்பைத் தடுப்பதற்கு
இந்தியா நீதியான முடிவையெடுக்க வேண்டும். செமியாக்குணத்துடன் இரை மீட்டி பழையதை பல்லுக்குப் பதமாக்குவது அவசியமற்றது. சரியான முடிவு தடையகற்றிப் புதுவுறவு கொள்வதே அன்றி வேறெதுவும் உகந்ததல்ல.

தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு இந்தியாவிற்கும் எமது இயக்கத்திறகும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டுகின்றேன். என்று தமிழ்நாட்டு உறவுகளிடம் தலைவரின் வேண்டுகை விடும் செய்திக்கு அமைவாக தமிழ்நாட்டிலுள்ள உறவுகள் மூழுமூச்சாகச் செயற்படுவார்கள். அங்கு அனைவரிடமும் தமிழீழத் தனியரசு என்ற ஆதரவு பொங்கி ஆர்ப்பரிக்கின்றது.

கொலை வாளினை எடடா - மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் உறு புலியே - உயர்
குணம் மேவிய தமிழா

என்ற பாரதிதாசனின் கவி வரிக்கமைவாக ஈழத் தமிழன் எழுந்துள்ளான். அவனது வீரதீரச் செயலுக்கு ஊக்கம் கொடுத்து உலகத் தமிழினமே எழ வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாட்டுத் தமிழரிடம் தாராளமாகவே காணப்படுகின்றது. எனவே, தலைவரின் எண்ணம் அவரின் உரையூடாக மேலும் தமிழ்நாட்டு உறவுகளின் செவிகளைச் சென்றடைந்திருக்கும் அது இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் நிச்சயமாக மாற்றத்தை கொண்டுவரும் காலம் வரையிலும் அவர்களை உற்சாகப்படுத்தி இலக்கை எட்டும் வேளையில் பெருமிதம் கொள்ள வைக்கும்.

தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் சிந்தனைக்கான படையல். உலகத் தமிழரே தனக்கென்று ஏன் நாடொன்றில்லை? இருந்த தனியரசுகளிற்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்தறிந்து செயல்வீரராக இருக்க வேண்டும். புலர்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் உறவுகள் இயலுமான உதவிகளைச் செய்து வருவது யாவரும் அறிந்த விடயம் தான். பொருளாதார, அரசியல் ரீதியிலான ஆதரவு என்பது எமக்கு நாமே உதவி என்பதற்கு அமைவாக இருக்க வேண்டியுள்ளது. இதில் இளையோர்களின் செயற்பாடுகள் காலத்தின் கடமை. இளையோர்கள் பலவிடயங்களைச் செய்து வருகின்றார்கள் என்பது தெரிந்து விடயம் தான். இன்னுமின்னும் அவர்களின் பணிகள் தேவைப்படுகின்றன இதனை உணர்ந்து அவர்கள் நேரமொதுக்கிப் பணிபுரிய வேண்டும்.

பல நாடுகளிலும் இளையோரின் தாயக உறவுகள் மீதான பரிவு துடிப்புக்கொண்ட செயற்பாடுகள் முற்றுப்புள்ளியிடக் கூடியதல்ல. சுவிஸ் பேர்ண் நகரில் பாராளுமன்றத்திற்கு முன்பாக இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் வரவேற்கத்தக்கவொன்று. வெளிநாட்டவரிற்கு அவர்களின் மொழியில் எமதினத்தின் விடுதலைப் போராட்டம் சிங்களப் பேரினவாதிகளால் எமது இனம் அழிக்கப்படுவது பற்றிப் பேசுவது காலத்தின் தேவை கருதிய செயலாகும். இது போன்றவை தொடராகச் செயல் வடிவமாக்கப்பட வேண்டும். மாநில ரீதியாகவும் மீண்டும் நாடு தழுவிய ரீதியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றி எடுத்துக் கூற வேண்டும். தலைவர் பிரபாகரன் அவர்களின் உரையில் உலக அங்கீகாரத்தின் தேவை பற்றி நிறையவே கூறியுள்ளார்.

இளையோர் இவ்வளவு காலமும் செய்தவற்றிற்கு அன்பையும் பாராட்டையும் கூறியுள்ளார். இது இளையோரை எழுச்சி கொள்ள வைக்கும் ஊக்கத்திற்கான தூண்டுகோலாக இளையோர்கள் மனதுள் படிய வைத்துச் செயற்பட வேண்டும்.

உலக நாடுகளின் தலையீடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்துக் கொண்டு நுளையக்கூடிய வகையிலும் மாறும் வகையிலும் புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் இளையோர்கள் செயற்பட வேண்டும். முழுவெற்றிக்கான பாதையில் பயணிக்கும் விடுதலைப் போராட்டத்தில் இளையோர் புலம்பெயர் நாடுகளில் முக்கிய சக்தியென்பதை கூர்ந்து கவனித்தப் பணிபுரிய வேண்டும்.

புலம்பெயர் உறவுகளுடன் உரிமையோடு தலைவர் பிரபாகரன் கேட்டதைப் பற்றிச் சிந்திப்பது தான் அனைத்திலும் முக்கியமானது. இம்முறை உரையை நரம்புகளை முறுக்கேற்றும் உரையாக எதிர்பார்த்தது தவறல்ல. ஆனால் கொள்கைப் பிடிப்போடு நிதானமாக உறுதியாக மனங் குழம்பாது. உலகின் தேசிய இனமொன்றின் பெருந்தலைவராக நின்று உரையாற்றினாரே அது மென்போக்கான நிலையான பிடிப்புக் கொண்ட விடுதலைப் போராட்டத்தின் உயரிய பண்பைக் கொண்டது. விரிவாக அல்லாமல் சுருக்கமாகவே அவரின் உரையைப் பார்த்துள்ளேன்.

உலகத் தமிழினமே சிந்தியுங்கள். சிலர் (ஒருசிலர் மட்டும்) கூறுகின்றனர் என்ன பெரிய உரை நிகழ்த்துகின்றார் என அவர்களிற்கு ஒன்றைச் சொல்ல வேண்டும் நீங்கள் யாராவது பேசுங்கள் உங்கள் பேச்சைக் கேட்க இவ்வளவு தொகை மக்கள் கூடி செவிகளைக் கூர்மையாக வைத்திருப்பார்களா?

மக்கள் திரள்கின்றனர் எதை நோக்கி என்பது தான் முக்கியம். சலிப்பொன்று ஏற்படுவது உண்மை தான். அந்தச் சலிப்பைத் தாண்டினாலே வெற்றி கனியும். எனவே, சிந்திப்பதும் செயற்படுவதும் ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

-கனகரவி-

நன்றி: நிலவரம் (12.12.08)


Comments