அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்



ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது.

வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல் அவற்றை வெளியேற்ற எத்தனிப்பது போல் கடல் அலைகள் மூர்க்கமாக கரையை நோக்கி வந்து மோதிக்கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களாக இழுபறிப்பட்டு அன்றுதான் வந்த பணி முடிந்து ஆள் அரவமற்ற அத்தீவை விட்டு வெளியே போகும் சந்தோசத்தில் சக நண்பர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவிலிருந்து தொலைபேசியில் உரையாடிய நண்பன் ஒருவன் இணைப்பை துண்டிக்கும் முன் கூறிய இறுதி வாக்கியம் எனது நித்திரையை தொலைத்து விட்டிருந்தது. அது 'பாலாண்ணையின் நினைவு நாள் வருகுது". அந்த வரிகள் மன அடுக்குகளில் ஆழமாக உள்ளிறங்கி எண்ணற்ற நினைவலைகளை உருவாக்கிவிட்டிருந்தன. இந்த எண்ணவோட்டத்துடன் கடல் அலைகளை பார்க்கும் போது அவையும் பாலாண்ணையின் நினைவுகளையே கரையை நோக்கி எடுத்துவருவது போல் ஒரு பிரம்மை... என் வாழ்நாளின் நிம்மதியற்ற இரவுகளில் அதுவும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது.


இரண்டு வருடங்கள். போராட்டத்தின் தாங்கு தூண்களில் ஒன்றும் அதன் இயங்கு சக்திகளின் மையமுமாகிய ஒருவர் இல்லாமலேயே கடந்து விட்ட காலங்கள் இவை. ஒரு வகையில் கொடுமையான நாட்கள்.

காலம் என்பது பல நினைவுகளை தின்று செரித்துவிடக்கூடியது. ஆனால் சில இழப்புக்களும் பிரிவுகளும் காலத்தால் தின்று தீர்த்துவிட முடியாதவை. கால உடைப்பில் சிதறுண்டு போகாத அத்தகைய ஒரு பேரிழப்புத்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடையது. அவரின் இழப்பினூடாக விழுந்த வெற்றிடம் என்றுமே இட்டு நிரப்பப்பட முடியாதது. ஆனால் நிரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அந்த வெற்றிடம் அப்படியே வெறுமையாகவே கிடக்கிறது.

போராட்டம் மிக முக்கியமான வரலாற்றுக் கால எல்லைக்குள் பிரவேசித்திருக்கிற தருணம். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவர் இல்லையே என்ற ஏக்கமும் கவலையும் இயல்பாகவே தொண்டைக்குள் வந்து பந்தாய் அடைத்துக் கொள்கிறது. பாலசிங்கத்திற்கான நினைவுக்குறிப்பாய் இந்த பத்தியை எழுதி முடிக்கலாம். ஆனால் அவருக்கான உண்மையான அஞ்சலியும் நினைவும் அதில் தங்கியிருக்கவில்லை.

அவர் தன் வாழ் நாளில் எத்தகைய பணியை மேற்கொண்டிருந்தார். அது இன்று எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை ஆராய்வதும் அதிலுள்ள தேக்கங்களைக் கண்டடைந்து அதைக் களைய முற்படுவதும்தான் நாம் அவருக்குச் செய்யும் நிஜமான அஞ்சலியாகும். இதையொட்டி இந்தப் பத்தியினூடாக பன்முக ஆளுமை கொண்ட அவரது பணியின் ஒரு சிறு பகுதியை விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

இக் கட்டுரையின் தலைப்பு frantz fanon இன் wretched of earth நூலுக்கு jean paul satreஎழுதிய முன்னுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராட்ட வடிவங்களை விபரிக்கும் frantz fanon இன் இந்நூல் உலகப் பிரசித்தி பெற்றது. அதைவிடப் பிரசித்தம் அந்நூலுக்கு satre எழுதிய முன்னுரை. உலக வரலாற்றிலேயே நூலின் உள்ளடக்கத்திற்கு நிகராக எதிர்வினையை எதிர்கொண்டதும் சிலாகிக்கப்பட்டதும் அனேகமாக சர்த்தரின் இந்த முன்னுரையாகத்தான் இருக்க முடியும்.

'நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி" என்ற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒடுக்கப்ட்டவர்களின் விடுதலையின் அடிநாதமாக இருக்கும் வன்முறையை சிலாக்கிக்கும் கசயவெண frantz fanon இன் நூலுக்கு முன்னுரை எழுதப்புகும் ளயசவசந பல படிகள் மேலேபோய் வன்முறையின் உச்சமாக நிகழும் பயங்கரவாதத்தை தூக்கிப்பிடிக்கிறார். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் sartre ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். பிரெஞ்சு வேர்ச் சொல்லிலிருந்து பிரித்தெடுத்து "terror" என்ற வார்த்தைக்கு ஒரு புதிய வியாக்கியானத்தை வழங்கியவர் சர்த்தார்.

சர்தாரினதும் பனானினதும் வியாக்கியானப்படி அரசின் வன்முறைக்குள்ளாகி ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் ஒரு இனத்திலிருந்து அந்த அடக்குமுறைக்குள்ளிருந்தே திமிறியெழுந்து வன்முறையின் துதிபாடியபடி வரலாறு ஒன்று மேலெழும் என்பது ஒரு கோட்பாடாகக் கட்டவிழ்கிறது. அப்போது அந்த வரலாற்றின் மீது பேரொளி ஒன்று வந்து குவிகின்றது. அப்போது ஒடுக்கப்பட்ட அந்த இனம் மட்டுமல்ல எதிரிகள் உட்பட ஒட்டுமொத்த உலகமுமே அந்த வரலாற்றுப் பேரொளியின் தரிசனத்தைக் காண்கிறார்கள். அது ஒரு முடிவிலி. அந்த இனத்தின் வரலாறாகவும் வழிகாட்டியாகவும் அது இயங்கிக் கொண்டேயிருக்கும். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி. தமிழினத்தின் இயங்கியலும் வரலாறும் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

கால நீரோட்டத்தில் தமிழினத்தின் இயங்கியலையும் வரலாற்றையும் இனங்கண்டு அதனோடு இணைந்து இசைந்து அந்த வரலாற்றினது 'குரல்" ஆக பரிமாண மாற்றமடைந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஒரு வகையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அந்த இயங்கியல் வரலாற்றினுள் வெடித்துக் கிளம்பியவர் என்றுதான் தற்போது தோன்றுகிறது.

காலனியாதிக்கத்திற்கெதிராக தனது வாழ்வின் இறுதிவரை போராடிய கறுப்பின வீரரான பிரான்ஸ் பனானை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை சர்த்தாரையே சாரும். இருவரும் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல பனான் இறந்த பிற்பாடும் அவரது கோட்பாடுகளை - கொள்கைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த பெருமையும் சர்த்தாரையே சாரும். அதன் அடையாளம் தான் jean paul satre தொகுத்த frantz fanonஇன் wretched of earth நூல்.

கால வெளியில் வைத்து யோசித்துப் பார்க்கும் போது ஒரு கோணத்தில் பனானுக்கு ஒரு சர்த்தார் போல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு அன்ரன் பாலசிங்கம் என்று இப்போது புரிகிறது. வரலாறு என்பது எவ்வளவு அற்புதமானது. சும்மாவா சொன்னான் ஜெர்மானிய தத்துவக் கிழவன் கேகல் (hegal) 'வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும்" என்று...

"war and terror" என்ற பெருங்கதையாடல்களுடன் 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்" புரியக் கிளம்பியிருக்கும் மேற்குலக வல்லரசுகளின் ஒற்றை அறத்தையும் நீதியையும் இன்று எதிர்கொள்ள எம்முடன் பனானும், சர்த்தாரும் இல்லாமல் போனது ஒரு வகையில் துரதிர்ஸ்டவசமானதுதான். இதை ஒரு வகையான காலக்குழப்பம் என்றுதான் கூற வேண்டும். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன் வாழ்நாள் பணியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது விழத் தொடங்கியிருந்த 'பயங்கரவாத" சாயத்தை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்ட வண்ணமிருந்தார். அவருடைய அந்த பணியின் ஆழத்தைத்தான் இன்று நாம் சர்த்தரினதும் பனானினதும் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

விடுதலைப் போராட்டங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி 'அழகு" பார்க்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சர்த்தாரின் மீள் வருகை ஒன்றை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் ஈழச்சூழலின் உச்சத்தில் நிறுத்தப்பட வேண்டிய சர்த்தார், பனான் போன்றவர்கள் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பின் தட்டடையான ஒற்றையான வழிநடத்தலினால் மறக்கடிக்கப்பட்டதும் காணாமல் போனதும் துரதிர்ஸ்டவசமானது.

இவர்களின் பரிச்சயம் ஈழச்சூழலுக்கு பழக்கப்பட்டிருந்தால் இன்றுள்ளது போல் தற்போதைய மோசமான களநிலவரங்களை முன்வைத்து ஒரு ஈழத்தமிழன் பிதற்றிக் கொண்டிருக்கமாட்டான். புலிகள் தமது பின்னகர்வினூடாக போராட்டத்தைத் தக்க வைப்பதையும் போராட்ட வடிவத்தை புலிகள் மாற்றிக் கொண்டிருப்பதையும் சுலபமாக இனங்கண்டிருப்பான். தமிழ்த் தேசிய ஊடகங்கள் இனியாவது தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து தமது பன்முகத் தன்மையை கட்டிக்காக்க முன்வரவேண்டும்.

இந்த வரலாற்றுப் பின் புலத்திலிருந்து துதி பாடலாக இல்லாமல், மிகையுணர்ச்சி சார்ந்து இயங்காமல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தோற்றுவாயை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தோற்றுவாயுடன் பொருத்தப்படுவதை ஒரு கட்டத்தில் அவதானிக்கலாம்.

வெற்றியின் விளிம்பில் நின்று ஆரவாரங்களுடன் ஒரு ஆய்வை முன்வைப்பதை விட தற்போதுள்ள இந்த இக்கட்டான சூழலில் ஒரு தேடலை நிகழ்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதுதான் உண்மையானதாகவும் இருக்கும்.

இதை எழுதிக்கொண்டிருக்கும் போது மகிந்தவின் படைகள் குமுழமுனை, அலம்பில் தொடங்கி மாங்குளம் கனகராயன்குளம் வரை நீண்டு பரந்தன் வரை ஒரு பிறை வடிவ முற்றுகைக்குள் புலிகளை அடக்கி வைத்திருக்கும் செய்தி வந்து சேர்கிறது. ஒரு வகையில் உண்மையிலேயே இது ஒரு அற்புதமான தருணம். ஏனெனில் ஒரு விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கக்கூடிய இடமும் காலமும் இதுதான்.

போராட்டத்தின் தேவை என்பதே அழிவிலும் துயரத்திலும் இருந்துதான் பிறக்கிறது. எனவே ஒரு போராட்டத்தின் முடிவை- வீழ்ச்சியை ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதனூடாக, அழிவை ஏற்படுத்துவதனூடாக அந்த இனத்தின் துயரத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை கோமாளித்தனம் என்பதைவிட வேறு வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை.

பனானின் மொழியில் கூறினால் 'இந்த நிலைக்கு அஞ்சத் தேவையில்லை. அடக்குமுறையாளனின் இந்த வழிமுறைகள் வழக்கொழிந்தவை. சில சமயங்களில் அவை விடுதலையைத் தாமதப்படுத்த இயலும், ஆனால் தடுக்க முடியாது." இதை நாம் எமக்கு தெரிந்த வேறு ஒரு மலினமான சொல்லாடலில் தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் குறிப்பிட்டால் 'சின்னப்புள்ளத்தனமா இல்லை".

சர்த்தார் இன்னும் அழகாகக் குறிப்பிடுகிறார், 'தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்ட ஒரு போரில் தங்கள் முழுப் படைபலத்தையும் பிரயோகித்து எதிரி நிலத்தை ஆக்கிரமித்து வெற்றுக்கூச்சலிடுகிறான். இந்த செயல் முழுவதும் வரலாற்றை எழுதப்புகுந்து விட்ட சுதேசிகளின் விடுதலை நிறைவேற்றத்தை தாமதப்படுத்துவதே ஒழிய. முற்றாகத் தடுப்பதல்ல." எத்தகைய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

இந்த தீர்க்கதரிசனங்களை தின்று செரித்து வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம். அதுதான் அவரால் இறுதிவரை 'பயங்கரவாத" பூச்சாண்டிகளுக்கு அஞ்சாமல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை உலக அரங்கில் துணிச்சலுடன் முன்மொழிய முடிந்தது. அன்ரன் பாலசிங்கத்தின் வழி ஒவ்வொரு தமிழனும் வரலாற்றினுள் வெடித்தெழுவோம். நமது தாக்குதலால் அவ் வரலாற்றை உலகளாவியதாக மாற்றுவோம். நாம் போராடுவோம். நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் பிரச்சினையில்லை- ஆயுதங்கள் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை - காத்திருக்கும் கத்திகளின் பொறுமை போதும். அன்ரன் பாலசிங்கத்திற்கான நிஜமான அஞ்சலிக்குரிய வார்த்தைகள் அவை. ஏனெனில் சர்த்தார் குறிப்பிடுவது போல் தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்டான் எதிரி.

அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மதியுரைஞர், கோட்பாட்டாளர் என்று நாம் கூறிக்கொண்டாலும் அவர் குறித்து ஒரு தட்டையான வாசிப்பே ஈழத்தமிழ்ச் சூழலில் இருக்கிறது. நாம் அவருடைய தோற்றுவாயை ஆராயத் தவறிவிட்டோம். பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு வந்த அவர் எப்படி ஆயுதம் தரித்த குழுக்களை ஆதரித்து அதன் பின் நின்றார் என்ற யதார்த்த புறநிலையை ஆராயவும் அடையாளங் காணவும் தவறி விட்டோம்.

இத்தவறுகள்தான் இன்றைய போராட்டம் குறித்த தவறான புரிதலுக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட புறநிலைகளின் தோற்றுவாய்களை பிரக்ஞை பூர்வமாக நாம் தேடத் தொடங்கினால் அத் தேடல் எம்மை சர்த்தாரிலும் பனானிலும் கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியே அன்ரன் பாலசிங்கம்.
அந்த ஆய்வின் தொடர்ச்சி பயங்கரவாதம், புரட்சிகர வன்முறை, வன்முறையின் அறவியல் தொடர்பான கோட்பாடுகளை உய்ந்துணர்ந்து கொள்வதுடன் மட்டுமல்ல தற்போதைய களநிலவரங்களின் கன பரிமாணத்தை உணர்த்துவதுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாய வடிவ மாறுதலையும் இனங் காட்டும்.

அன்ரன் பாலசிங்கம் குறித்து இன்னும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் இல்லை என்று நிறுவ முயன்றார் என்பதுதான் அது. இதைத்தான் நாம் தவறு என்கிறோம். ஏனெனில் அவர் அவ்வாறு செய்ய முற்படவில்லை என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் மேற்குறிப்பிட்ட கூற்றுக்களை முன்வைத்து ஒரு முக்கியமான விடயம். பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரை முன்வைத்து இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் விடயம் மிகச் சிக்கலானது மட்டுமல்ல நுட்பமானதுமாகும். எமது போராட்டத்தின் மீது தொடர்ச்சியாகத் தடவப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த 'சாயத்தை" கேள்விக்குள்ளாக்குவதுடன் அதிலிருந்து வெளியேறும் நோக்குடனுமே நாம் இது குறித்து தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே இந்த சிறு பத்தியினுடாக நாம் தேடும் விடயத்தின் பன்முக பரிமாணத்தை துல்லியமாக - விரிவாக ஆய்வு செய்து உலகத்தின் முன்வைக்க வேண்டிய பெருங்கடமை ஈழத்து அறிவுஜீவிகளின் முன் கிடக்கிறது. வரும் நாட்களில் அப் பணியை சேர்ந்து முன்னெடுப்போம். இப்போது நாம் விடயத்திற்கு வருவோம்.

மேற்கண்ட வரிகளை முன்வைத்து ஒருவர் அப்படியென்றால் 'புலிகள் என்ன பயங்கரவாதிகளா? பாலசிங்கம் அதை முன்மொழிந்தாரா?" என்று கேட்டு வாதாட முன்வரலாம். இது ஒரு ஒற்றைப் பார்வை. பன்முகக் கோணத்தில் அது உண்மையல்ல. இதன் அடிப்படையில்தான் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் போன பயங்கரவாத கூறுகளை ஒரு அறவியல் வடிவமாக இனங்கண்டு அதை நியாயப்படுத்தினார் - கொண்டாடினார்.

ஏனெனில் நிராயுதபாணிகளாக - நிர்க்கதியாக நின்ற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டது. இதை அவர் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகத்துடன் பேச முற்பட்டார். எந்தக் கட்டத்திலும் அவர் இதிலிருந்து இறங்கவேயில்லை.

சர்த்தாரின் மொழியிலேயே எமது 'பயங்கரவாதத்திற்கு" நாம் வியாக்கியனம் கூறினால், எமது வன்முறை வெறும் கோபக் குமுறல் அல்ல, வன்மத்தின் விளைவுமல்ல, அது எம்மை நாமே திருப்பி படைப்பது. எந்த ஒரு நளினத்தாலும் மேன்மையாலும் சிங்களத்தின் வன்முறையை அழிக்க முடியாது. எமது வன்முறையால் மட்டுமே அதை அழிக்க முடியும். ஆயுதத்தின் முலம் ஆக்கிரமிப்பாளனை நாம் வெளியேற்றுவதன் மூலம் அடக்குமுறை மனநோயிலிருந்து எம்மை குணப்படுத்திக் கொள்கிறோம். எமது கையில் இருக்கும் ஆயுதம் எமது மனிதத்தன்மையின் அடையாளம். ஒரு சிங்கள ஆக்கிரமிப்பாளனை சுட்டு வீழ்த்துவதன் மூலம் ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக் கட்டுகிறோம். எமது காலடியில் கிடப்பது ஒரு பிணம். ஆனால் அங்கு எழுந்து நிற்பது சுதந்திரமான ஒரு ஈழத்தமிழ் உயிரி.

தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அடக்குமுறைகள் எம்மை பணியச் செய்வதற்கு பதிலாக தாங்கிக் கொள்ள முடியாத முரண்பாட்டிற்குள் அழுத்துகின்றன. இதற்குத்தான் நாம் பதில் சொல்கிறோம். அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை இன்று நாம் வெளிப்படுத்துகிறோம். இப்போது எங்களை பயங்கரவாதிகள் என்கிறீர்கள். எங்களுக்கு வன்முறையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறீர்கள். ஆமாம், உண்மைதான். ஆனால் ஆரம்பத்தில் அது எதிரியினுடையது. விரைவில் நாம் அதை எமதாக்கிக் கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாம் வன்முறையின் குழந்தைகள்.

அன்ரன் பாலசிங்கம் பேசிய - கொண்டாடிய 'பயங்கரவாதம்" இதுதான். ஆனால் இந்த அறத்தையும் நீதியையும் தவற விட்டுவிட்டு கேடுகெட்ட சர்வதேச சமூகம் ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் மீது நியாயத் தீர்ப்புக்களை வழங்குவதற்கு முண்டியடிப்பது காலத்தின் விசித்திரம் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. பிரச்சினையின் மூலத்தையும் வேரையும் விட்டுவிட்டு அதற்கு தீர்வை முன்வைக்காமல் 'பயங்கரவாத" பட்டியலிடும் சர்வதேச்தின் மனச்சாட்சிகளோடு நாம் தொடர்ந்து போராடுவோம். பாலசிங்கத்திற்கான அஞ்சலி அதில்தான் தங்கியுள்ளது. அவர் முன்னெடுத்த பணியும் அதுதான்.

அவர்களின் கதவு இறுகச் சாத்தப்பட்டிருக்கிறது என்பது எமக்குத் தெரியும். அவர்கள் திறக்கவில்லை என்பதற்காக நாம் தட்டுவதை நிறுத்த வேண்டாம். நாம் தொடர்ந்து தட்டுவோம். என்றாவது ஒரு நாள் அது திறந்தே தீரும்.

வன்னியில் நிலங்களை ஆக்கிரமித்து மண்ணின் மைந்தர்களை வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்து சொத்துக்களை சூறையாடி பெரும் மனிதப் பேரவலத்தை உருவாக்கி விட்டிருக்கிறது சிங்கள இனவாதம். தொண்டு நிறுவனங்களும் இல்லை. துயர் துடைக்க நாதி இல்லை. விச ஜந்துக்களோடு காட்டில் காலம் கழிகிறது. போதாததற்கு இயற்கையின் சீற்றம் வேறு. எறிகணைகளும் குண்டு வீச்சு விமானங்களும்தான் தினமும் துயிலெழுப்புகின்றன. போததற்கு 'கிளஸ்ரர்" குண்டுகளை வேறு சிங்களம் வீசத் தொடங்கியிருக்கிறது. உலகம் கண்ணை மூடிப் பாhத்துக் கொண்டிருக்கிறது. இது 'பயங்கரவாதம்" இல்லையாம்.

'அவமானமும் பசியும் வலியும் என்னவென்று எங்களுக்கு ஆக்கிரமிப்பாளன் முன்பு கற்பித்த போது எழுந்த அழுத்தத்திற்கு சமமான சீற்றமான உணர்வை அன்று நாம் வெளிப்படுத்தினோம். எம்மை 'பயங்கரவாதிகள்" என்றீர்கள். இப்போது அதனிலும் பன்மடங்காக எதிரி எமக்கு கற்பிக்கிறான். இதை ஏன் உங்களால் கண்டு கொள்ள முடியவில்லை. அது 'பயங்கரவாதம்" இல்லையா!" ஈழத்திலிருக்கும் ஒவ்வொரு ஆத்மாவிலிருந்தும் எழும் குரல் இது.

எல்லா சமன்பாடுகளையும் கலைத்துப் போட்டு எதிரியானவன் விளையாடிக்கொண்டிருக்கிறான்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அத்தாக்குதலை முன்னிறுத்தி பிரபல பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்திரியா "டந அழனெந" பத்திரிகையில் ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் 'ஒரு அதிகார அரசும் ஒரு அமைப்பும் நடத்திய விளையாட்டில் மறு தரப்புக்கு சீட்டுக்களை சரியாகப் பகிர்ந்தளிக்காமல் அதிகார அரசு விளையாட்டை ஆரம்பித்தது. விளைவு மறு தரப்பு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்கு தள்ளப்பட்டது. விளைவு இரட்டைக் கோபுரம் தகர்ந்தது. மாற்றப்பபட்ட அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவை இறுதியானவை என்பதால்" என்று குறிப்பிட்டார். இன்றும் சிங்களம் இதைத்தான் நமக்கு எதிராகச் செய்கிறது.

இப்போது தமிழீழத்திலும் விளையாட்டின் விதிகள் மாற்றப்படவேண்டிய புறநிலை உருவாகியிருக்கிறது. அன்ரன் பாலசிங்கம் இருந்திருந்தால் தெளிவாகச் சொல்லியிருப்பார். இது வன்முறையின் மூன்றாம் கட்;டம். தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதிலிருந்து 'கிளஸ்ரர்" குண்டுகள் வரை உலகின் மௌனம் தொடர்கிறது. இன்று நிராயுதபாணிகளாக - நிர்க்கதியாக நின்கிற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. மிஞ்சி இருப்பது உயிர் மட்டுமே. நாளை அவையே அவர்களுக்கு ஆயுதம். அவர்களது உயிர்கள் ஆயுதங்களாக வெடிக்கும் போது மட்டும் உலகின் யோக்கியர்கள் 'பயங்கரவாத பட்டியலை" காவிக்கொண்டு ஓடி வரலாம். அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது. இது சிங்கள ஏகாதிபத்தியயம் வீசிய வளைதடி. அதை நோக்கி திரும்பும் காலம் நெருங்குகிறது. அன்ரன் பாலசிங்கத்தின் இன்றைய நினைவு நாளில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அதைச் சாத்தியமாக்குவோம். இதுதான் அவருக்கான அஞ்சலி மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனின் வரலாற்றுக் கடமையும் கூட.

-பரணி கிருஸ்ணரஜனி-

புகைப்படத் தொகுப்பு




Comments