ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துக்கொண்டும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இழிவுபடுத்தி வரும் சிங்கள கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் திமிர் பேச்சை கண்டித்து கொடும்பாவியை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.
சமீபத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், அங்கே போர் நிறுத்தம் செய்ய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையை கோமாளித்தனமானது என்று சிறிலங்கா அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா திமிராக பேசியுள்ளார். இது ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அமைப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக தமிழர்களையும் இழிவுபடுத்துவதாகும்.
சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய அரசு இராணுவ உதவி, பொருளாதார உதவி, தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே சிங்கள இராணுவ தளபதி பொன்சேகா ஆணவமாகப் பேசியிருக்கிறான். இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது, தமிழக தலைவர்களும், தமிழர்களும் கோமாளிகள்தான் என்று இந்திய அரசு கருதுவதாகத்தான் பொருள்.
எனவே,
* தமிழர்களை இழிவுபடுத்திய சிங்கள இனவெறி அரசின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கோர வேண்டும்
* சிங்கள அரசின் இனவெறிப் போரை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்
* தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்
* சிங்கள இனவெறி அரசுக்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது
* சிங்கள அரசுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்
* இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை இழுத்து மூட வேண்டும்
என வலியுறுத்தி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை புரட்சிகர இளைஞர் முன்னணியினர் எரித்தனர்.
சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் இன்று புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் சீராளன் தலைமை தாங்கினார்.
இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிங்கள இனவெறி அரச தலைவர் ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர்.
சிங்கள அரசுக்கு எதிராகவும், இந்திய அரசு சிறிலங்கா அரசுடனான உறவைத் துண்டிக்கக் கோரியும், போரை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.
Comments