ஒபாமா நிருவாகத்தின் கொள்கையிலும் பாரிய மாறுதலைக் காண்பது சாத்தியமில்லை என்ற அபிப்பிராயமும் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளை மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கான பராக் ஒபாமாவின் குறிக்கோளைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் பெரிய அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆனால், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான போட்டியிலே முன்னாள் முதற்பெண்மணி ஹிலாரி கிளின்டன் ஒபாமாவுக்கு பாரிய சவாலாக விளங்கினார். அந்தப் போட்டியில் தோல்வி கண்ட பின்னர் ஹிலாரியும் கணவர் பில் கிளின்டனும் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர். ஒரு கட்டத்தில் தனது உபஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரியை ஒபாமா தெரிவு செய்யக் கூடும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் ஒபாமா தனது நிருவாகத்தை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். ஒபாமாவுக்கு வெளியுறவுக் கொள்கை அனுபவமில்லை என்று வேட்பாளர் நியமனத்துக்கான போட்டியின் போது குற்றஞ்சாட்டிய ஹிலாரியிடமே அவர் தனது நிருவாகத்தின் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். வெளியுறவுக் கொள்கையை பொறுத்த வரை ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கடும் போக்காளர்களில் ஹிலாரியும் ஒருவர். நியூயோர்க் செனட்டரான அவர் ஈராக்கிற்கு எதிரான போருக்கு அதிகாரமளிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததை கடுமையாகக் கண்டனம் செய்தவர் ஒபாமா. ஹிலாரியை இராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு அவரை தனது முழுமையான நம்பிக்கைக்குரிய "பிரமிக்கத்தக்க உயர்த்தியான' ஒரு பெண்மணி என்று ஒபாமா வர்ணித்திருக்கிறார். உலகின் பல தலைவர்களை அறிந்து வைத்திருக்கும் ஹிலாரி ஒவ்வொரு தலைநகரிலும் பெரும் மதிப்பைப் பெறக் கூடியவர் என்றும் ஒபாமா இப்போது பெருமிதப்படுகிறார்.

ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் 8 வருட கால ஆட்சியில் அமெரிக்க நிருவாகம் கடைப்பிடித்த ஒருதலைப் பட்சமான கொள்கையும் இராணுவ வாதப் போக்கும் சர்வதேச சமூகத்தின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்திருக்கின்றன. ஒபாமாவின் வெற்றியை அடுத்து உலக விவகாரங்களில் குறைந்தளவு கர்வத்தனமான ஒரு அமெரிக்க நிருவாகம் அமையக்கூடிய சாத்தியம் இருப்பதாக உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கை தோன்றியதைக் கண்டோம். ஆனால், மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக அமெரிக்கர்களுக்கு வாக்குறுதி அளித்துக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஒபாமா இராஜாங்க அமைச்சராக ஹிலாரியை நியமித்ததன் மூலமாக அமெரிக்க சமுதாயத்தில் இருக்கக் கூடிய கூடுதலான அளவுக்குக் கடும் போக்கைக் கொண்ட சக்திகளுக்கு நம்பிக்கையூட்டுகின்ற கைங்கரியத்தைச் செய்திருப்பதாக பெரும்பாலான சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். ஹிலாரி இஸ்ரேலின் கடுமையான ஆதரவாளர். அத்துடன் ஈரானையும் அவர் கடுமையாக விமர்சித்துவந்திருக்கிறார். அத்தகைய பின்னணியிலே மத்திய கிழக்கு தொடர்பான ஒபாமா நிருவாகத்தின் கொள்கையிலும் பாரிய மாறுதலைக் காண்பது சாத்தியமில்லை என்ற அபிப்பிராயமும் கிளம்ப ஆரம்பித்திருக்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தனது நிருவாகத்தில் அமைச்சராக்கப்படுவார் என்று உறுதியளித்த ஒபாமா புஷ் நிருவாகத்தில் பாதுகாப்பு அமைச்சராக தற்போது இருக்கும் றொபேட் கேற்ஸை தனது நிருவாகத்திலும் அதே பதவியில் தொடருவதற்கு அனுமதித்திருக்கிறார்.

தீவிரமான கொள்கைமாறுதல்களைக் கொண்ட ஒரு ஒபாமா நிருவாகத்தை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றத்தைத் தரக்கூடியதாகவே அமெரிக்க நிகழ்வுப் போக்குகள் அமைந்திருப்பதாகவும் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இடம் பெறுகின்ற போர்களை ஒபாமா நிருவாகம் எவ்வாறு கையாளும் என்பதைப் பொறுத்தே அதன் எதிர்கால அணுகுமுறை களைப்பற்றிய அபிப்பிராயங்களைக் கூறக்கூடியதாக இருக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற பதம் புதிய நிருவாகத்தினால் பயன்படுத்தப்படுமோ இல்லையோ போரைத் தொடருவதற்கான அறிகுறிகளை ஒபாமாவின் அண்மைக்கால பேச்சுக்களில் தெளிவாகக்காணக் கூடியதாக இருக்கிறது. திரிபுபடுத்தப்பட்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாதிகளினால் அப்பாவிகள் கொல்லப்படுகின்ற ஒரு உலகை சகித்துக்கொள்ள முடியாது என்று மும்பையில் கடந்தவாரம் இடம் பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்குப் பிறகு ஒபாமா வெளியிட்ட கருத்து கவனிக்கத் தக்கதாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற ஒரு பல்லவியை மாத்திரம் வைத்துக்கொண்டு மக்களின் மற்றைய சகல பிரச்சினைகளையும் மூடிமறைக்கின்ற அரசியலைச் செய்கின்ற சக்திகளுக்கு ஒபாமாவின் மேற்படி கருத்து தேனாக இனிக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை.

இராஜங்க அமைச்சராக இப்போது ஒபாமாவினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஹிலாரி ஒருவருடத்துக்கு முன்னர் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் பயங்கரவாதம் குறித்து தெரிவித்திருந்த கருத்துகள் எதற்கெடுத்தாலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரைப் பயன்படுத்தி அரசியல் பேசுகின்ற சக்திகளுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன. அந்த அரசியல் சக்திகளும் அவற்றுக்கு ஒத்தூதும் ஊடகங்களும் பயங்கரவாதம் தொடர்பான ஹிலாரியின் கருத்துக்கள் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் அவர் மேற்கொள்ளக் கூடிய தீர்மானங்களில் செல்வாக்கைச் செலுத்திவிடக் கூடாது என்று இப்போதே வலியுறுத்த ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

லண்டன் கார்டியனுக்கு ஹிலாரி கிளின்டன் பயங்கரவாதம் பற்றித் தெரிவித்திருந்த கருத்துகளை இத் தருணத்தில் மீண்டும் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம் "குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக பயங்கரவாதம் சரித்திரம் பூராவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சில இலக்குகள் கோட்பாட்டு ரீதியானவையாகவும் வேறுசில இலக்குகள் நிலப்பரப்புடன் சம்பந்தப்பட்டவையாகவும் இருக்கின்றன. தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கான பயங்கரவாத இலக்குகளும் இருக்கின்றன. சகல பயங்கரவாதிகளையும் ஒன்றாக நோக்க முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற போராட்டமும் ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினைவாதிகள் நடத்துகின்ற போராட்டமும் ஈராக்கில் அல்அன்பார் கிளர்ச்சியாளர்களின் போராட்டமும் தந்திரோபாயத்தில் மாத்திரமே தொடர்புடையவையாக இருக்கின்றன. கோட்பாட்டு அடிப்டையில் அவர்களிடையே பொது நோக்கு பெரும்பாலும் இல்லை. ஒரு பரந்த தூரிகையைப் பயன்படுத்தி சகல இயக்கங்கள் மீதும் பயங்கரவாத வர்ணம் பூசியமை நாம் இழைத்திருக்கும் தவறுகளில் ஒன்று என்று நான் நினைக்கின்றேன். தங்களது இலக்குகளை அடைவதற்கு பயங்கரவாதத்தை நாடுபவர்களைப் பொறுத்தவரை நாம் எதற்கு எதிராக நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்தப் பரந்த தூரிகை உதவி செய்வதாக இல்லை. பயங்கரவாதிகள் தோன்றியமைக்கான மூல காரணங்கள் மற்றும் அவர்களின் செயல் நோக்கம் ஆகியவற்றை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது'.


Comments