மும்பை நகரில் கடந்த புதின்கிழமை ஆரம்பித்த தீவிரவாதிகளின் தாக்குதல் இதுவரை இந்தியா சந்தித்திராத தாக்குதலாகும். தீவிரவாத தாக்குதலின் புதிய வடிவத்தை இன்று திகிலுடன் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் இந்திய மக்கள். இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் என்றழைக் கப்படும் மும்பையை ஒட்டுமொத்தமாக பீதிக்குள்ளாக்கியிருக்கும் இந்தப் பயங்கரத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியும் சோகச் சுவடுகளும் மறைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து படகு மூலம் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து, கடற்படையினரின் கண்களில் மண்ணைத் தூவி மும்பைக்குள் திட்டமிட்டு நுழைந்திருக்கிறார்கள் இருபதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள். கடந்த புதன்கிழமை மாலை நேரத்தில் மும்பை கடற்கரைப் பகுதியில் சத்தமில்லாமல் வந்து சேர்ந்தன. சில அதிவேக சிறு படகுகள். அதிலிருந்து பரபரப்புடன் இறங்கிய இளைஞர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் பெரிய மூட்டை. அந்த மூட்டைக்குள் இருப்பது ஏ.கே. 47 ரக இயந்திரத் துப்பாக்கிகள் என்பதோ, அந்த இளைஞர்கள் எல்லோரும் அடுத்த சில நிமிடங்களில் மும்பையை உலுக்கிப் போட வந்திருக்கும் தீவிரவாதிகள் என்பதோ யாருக்கும் அப்போது தெரியாது.
இரவு சுமார் 9.15 மணிக்கு "லியோ போர்ட் கபே' என்கிற மும்பையின் பிரதான பகுதியில் முதல் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நரிமன் ஹவுஸ், அடுத்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளிக்கொண்டே தங்களுடைய அடுத்த இலக்கு நோக்கி முன்னேறினார்கள். மொத்தம் பத்து இடங்களில் தாக்குதல்களை நடத்தியவர்கள் இறுதியாக மும்பையின் இதயப் பகுதியில் உள்ள தாஜ், டிரைடென்ட், ஒபரோய் ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள் புகுந்து அங்கு தங்கியிருந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விருந்தினர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர்.
அதன் பிறகு சுமார் 72 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்களை சுட்டு வீழ்த்தி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது மகாராஷ்டிர மாநில அரசு. மிக உச்சபட்ச பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் மும்பைக்குள் தீவிரவாதிகள் இப்படி வெளிப்படையாக, அதிரடியாக தாக்குதல் நடத்தியது எப்படி? இந்த தாக்குதலுக்கு உண்மையான காரணகர்த்தாக்கள் யார்? எந்த அமைப்பு இந்தப் பாதகச் செயலைச் செய்தது? என்பதெல்லாம் இனி நடைபெறவுள்ள புலன் விசாரணையின் இறுதியில்தான் தெரியவரும்.
"நாங்கள்தான் தாக்குதலை நடத்தினோம்" என்று வியாழக்கிழமை அறிவித்தது டெக்கான் முஜாஹிதீன் என்கிற அமைப்பு. ஆனால் இந்திய அரசு இதை நம்பவில்லை. பாகிஸ்தானில் இயங்கி வரும் பிரிவினைவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன்தான் இப்படியொரு புதுப் பெயரில் செயல்பட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை கருதுகிறது. "எந்த அமைப்பாக இருந்தால் என்ன? பரபரப்பான மும்பை நகருக்குள் கடல் மார்க்கமாக உள்ளே நுழைந்துள்ளனர் தீவிரவாதிகள்.
இந்திய அரசும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. சாதாரண பொதுமக்கள்கூட படகுகளில் வந்திறங்கிய தீவிரவாதிகளைப் பார்த்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேட்கிறார்கள் பாதுகாப்பு வல்லுநர்கள். உண்மைதான். தாக்குதல் தொடங்கிய சில மணிநேரத்திலேயே இந்திய தொலைக்காட்சிகள் பொதுமக்களில் சிலரைப் பேட்டி கண்டன.
அவர்கள் எல்லாருமே தீவிரவாதிகள் படகுகளில் வந்திறங்கியதைப் பார்த்தகாகக் கூறியது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. பின்னர் சாவதானமாக இந்திய கடற்படையும் இதை ஒப்புக் கொண்டது. ஆனால், தீவிரவாதிகள் பயன்படுத்திய படகை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கடற்படை அறிவித்ததுதான் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில் கடற்படையின் செயல்பாடு இப்படி இருக்கலாமா எனும் விமர்சனங்கள் எழுந்தன.
இருபத்து நான்கு மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு ஒருவழியாக, தீவிரவாதிகளைக் கொண்டு வந்து இந்திய கடற்பகுதிக்குள் விட்டுச் சென்ற இரண்டு படகுகளைப் பிடித்துவிட்டோம் என்கிற கடற்படையின் அறிவிப்பு வெளியானது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புத்தான் தாக்குதலுக்கு காரணம் என்று ஆளாளுக்கு கூறி வந்த நிலையில், இத்தாக்குதலின்போது இந்தியாவில்தான் இருந்தார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்.
பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி கண்டபோது, "தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை நீங்களாக யூகப்படுத்த வேண்டாம். கராச்சியிலிருந்து அவ்வளவு சுலபமாக மும்பைக்கு கடல்மார்க்கமாக வந்திறங்க முடியும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அதிலும் இவ்வளவு சிறிய படகுகளில் அவ்வளவு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியுமா?' என்று கேள்வி கேட்டவர், "எனினும் இத்தகைய கொடூரமான தாக்குதலை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது' என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கேள்விகளுக்கு இந்திய காட்சி ஊடகங்கள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தபோதிலும், அக்கேள்விகளுக்கான விடைகளை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை என்றும் கருத்து தெரிவித்தன. புதன்கிழமை இரவு தொடங்கிய தாக்குதல் விடியவிடிய தொடர்ந்தது. உடனடியாக இந்திய மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மும்பை விரைந்தார்.
மறுநாள் காலையிலேயே மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசின் அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை வரை நடைபெறவில்லை. சுமார் மூன்று மணியளவில்தான் அமைச்சரவை கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்தது. "நாட்டையே உலுக்கிப்போட்டுள்ள தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிப்பதற்குக்கூட இவ்வளவு காலதாமதம் செய்யலாமா?" என்று பலதரப்பிலிருந்தும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்திய கமாண்டோ படை வீரர்கள் சுமார் இருநூறு பேர் உடனடியாக மும்பைக்கு விரைந்து செல்ல வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்கும் உத்தரவு பறந்தது. ஆனால் மூன்று மணிநேரத்திற்குப் பிறகுதான் இந்த அதிரடிப்படை வீரர்களால் புறப்பட முடிந்தது. அவர்கள் புறப்பட தயாராக இருந்தாலும், அவர்களைச் சுமந்து செல்ல விமானங்கள் தயாராக இல்லை. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் விமானங்கள் தயார்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி உள்துறை அமைச்சு உத்தரவிட்டும் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகுதான் மும்பைக்குப் பறந்து வந்திருக்கிறார்கள் அதிரடிப்படை வீரர்கள். ஏன் இந்த தாமதம் என்பதற்கு இந்திய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் இல்லை. தாஜ், டிரைடென்ட், ஒபரோய் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டவர்கள்தான் அதிகம் தங்கியிருப்பார்கள் என்பது உலகறிந்த விஷயம். தீவிரவாதிகள் இந்த ஹோட்டல்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலும்கூட, "வெளிநாட்டவர்கள் யாரும் தீவிரவாதிகளிடம் சிக்கவில்லை" என்று தீவிரவாத தடுப்புப் பிரிவு அறிவித்தது.
பிறகு நேரம் செல்லச்செல்ல, ஐந்து பேர், பத்து பேர், என்று எண்ணிக்கையை அதிகரித்தபடியே இறுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் தீவிரவாதிகளிடம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஏன் இந்த குழப்பம்? தாஜ் ஹோட்டலின் பத்தொன்பதாவது தளத்திலிருந்த தீவிரவாதிகள் திடீரென்று குண்டுகளை வெடிக்கச் செய்ததில் ஹோட்டலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து மளமளவென மற்ற பகுதிகளுக்குப் பரவத் தொடங்கியது. இச்சமயம் ஹோட்டலுக்குள் நுழைந்த கமாண்டோ படை வேகமாக முன்னேறிச் சென்று இருபதாவது தளம் வரை ஆங்காங்கு ஒளிந்திருந்த தீவிரவாதிகளில் ஐந்து பேரை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியானது.
"ஆனால் இத்தகவல் வந்த சில மணிநேரத்தில் மீண்டும் பதினான்காவது தளத்தில் சில குண்டுகள் வெடித்து தீ பரவியது. அப்படியானால் இருபதாவது தளம் வரை சென்ற கமாண்டோ வீரர்கள் தங்களது நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ளவில்லையா?" என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பின. எதனால் இப்படி முரண்பட்ட தகவல்கள் வெளியாகின? ஒருவேளை தொலைக்காட்சி அலைவரிசைகள் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தி, தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனவா? என்ற பேச்சும் எழுந்தது.
இதையடுத்து, சில முக்கிய தொலைக் காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாக தீவிரவாத தாக்குதல் குறித்த செய்திகளைத் தந்த செய்தியாளர்கள், திடீரென தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டனர். "இந்தத் தாக்குதல் தொடர்பாக பரபரப்புச் செய்திகள் என்ற போர்வையில் தவறான தகவல்களை வெளியிடமாட்டோம். நடப்பவற்றை மட்டுமே செய்தியாகத் தருவோம்' என்று நேயர்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் பாட்டீல் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திலேயே சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டார். ஆனால் மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்ரிக்கிடமிருந்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. "குறைந்தபட்சம் தாஜ் ஹோட்டலில் ஒரு தளம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த மாநில தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கையில் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் மாநில காவல்துறை உயரதிகாரிகள் முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டிருந்தால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருப்பார்கள். இதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு மாநில முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆக மாநில அரசு செயலிழந்துவிட்டது' என்கிறார் கள் அரசியல் வல்லுநர்கள். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஒபரோய் ஹோட்டலில் இருந்த மூன்று தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தி ஹோட்டலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வந்ததாக அறிவித்தார் தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர்.
இதையடுத்து பாகிஸ்தான் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், "உடனடியாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவரை புதுடில்லிக்கு அனுப்ப வேண்டும். தீவிரவாதிகள் குறித்த தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார். இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நகரங்களில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இத்தகைய வெடிகுண்டுத் தாக்குதல்களின்போது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துப் பின்பு வெடிக்கச் செய்தனர். ஆனால் இப்போதுதான் முதன் முறையாக நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு அதிர்ச்சி தந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களைப் பணயக் கைதியாகப் பிடிப்பது, ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் நுழைவது ஆகிய செயல்கள் இந்தியா இதுவரை பார்த்திராதவையாகும். முன்பு இந்திய விமானத்தை கந்தகார் நகருக்கு கடத்திச் சென்றதைவிட இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் காஷ்மீர் மாநிலத்தில்கூட இப்படிப்பட்ட தாக்குதல்கள் இதுவரை நடந்ததில்லை. சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் தற்போதைய நோக்கமாகியிருக்கிறது. கடந்த இரு வருடங்களில் இந்தியப் பங்குச் சந்தை பெரும் ஏற்றத்தை சந்தித்தது. பிறகு சர்வதேச பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக அண்மைக்காலத்தில் பங்குச் சந்தை பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியா அதிகம் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தீவிரவாதிகளில் நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையை குறிவைத்து தாக்கியிருப்பதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? "வேறென்ன... இந்தியாவும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். தாக்குதலையடுத்து இந்திய பங்குச் சந்தை ஒருநாள் மூடப்பட்டது அவர்களுக்குக் கிடைத்த வெற்றிதான்.
வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சி கண்டன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்" என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 130க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் காவல்துறையினர் பலரும் அடங்குவர். குறிப்பாக தீவிரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் கர்காரே தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
1982ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவில் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்த கர்காரே, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் விசாரணை நடத்தி துப்பு துலக்கியவர். கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. ஆனால் மறுநாள் தீவிரவாதிகளின் செயலை முறியடிப்பதற்காக நேரடியாகக் களமிறங்கினார் கர்காரே. குண்டு துளைக்காத ஆடையும் தலைக்கவசமும் அணிந்து சென்றபோதிலும்கூட, தீவிரவாதிகள் சராமரியாகச் சுட்டதில் அவரது உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்து உயிரைப் பறித்துவிட்டது.
"நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்' என்று இந்தியப் பிரதமர் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது உருக்கமாகக் குறிப்பிட்டார். ஆனால் தீவிரவாதிகளை ஒடுக்கு வதற்காக கர்காரே போன்ற அதிகாரிகள் வீரத்துடன் மட்டுமல்லாமல் சுறுசுறுப்புடனும் மிகுந்த வேகத்துடனும் செயல்பட்டதைப் போல இந்திய அரசும் செயல்பட்டிருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
"விடுதலைப்புலிகளை தீவிரவாத அமைப்பு என்று கூறி தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் புலிகள் இத்தகைய கொடூரத் தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிராக நிகழ்த்தியதில்லை. ஆனால் இன்று பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை குறித்து அங்குள்ள தீவிரவாத அமைப்புகளை உள்ளிட்ட அமைதிக் குழு ஒன்றை ஏற்படுத்தி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் வலியுறுத்துகிறது.
ஆனால் அதே அணுகுமுறையை இலங்கைப் பிரச்சினையில் முன்னெடுக்க இந்திய அரசு மறுப்பது எந்த வகையில் நியாயம்?" என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த அமைதிப் பேச்சுவார்த்தையும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும்தான் சிறந்த வழி என்றால் இலங்கைப் பிரச்சினையிலும் அதே நடைமுறையைப் பின்பற்றுவதுதான் புத்திசாலித்தனம். மும்பையில் நிகழ்ந்துள்ள இந்தக் கொடூரமான தாக்குதல் நமக்கு உணர்த்தியிருக்கும் பாடங்களில் இது மிக முக்கியமானது.
- தமிழகத்திலிருந்து இந்திரன்
Comments