மானிட தர்மம் மறந்து விட்ட உலக அரசுகள் பேசும் மனித உரிமைகள்! யாருக்காக இவர்களின் மனித உரிமைகள்?

நடப்பதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. யார் யார் மனித உரிமை மீறல்களைச் செய்கிறார்களோ, அவர்கள்தான் கூரை மேல் ஏறி நின்று மனித உரிமைகள் பற்றிக் கொக்கரிக்கிறார்கள். அதனால் பல உண்மைகள் ஆழப் புதைக்கப்படுகின்றன.

இந்தப் புண்ணியவான்களால் தினம் தினம் புதைக்கப்படும் உண்மைகளின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு உயிர்கள் பறிக்கப்பட்டு உடலங்கள் புதைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் பூமியிலிருந்து பலவந்தமாக அகற்றப்படுகின்றன. இத்தனைக்கும் இந்த மனித உயிர்கள் பறிக்கப்படும் முன்னரே அனைத்துவித மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று விடுகின்றன.

அவசரகாலச் சட்டம், தடா, பொடா போன்ற சட்டங்களை தேசிய நலன் என்ற போர்வையில் ஆட்சி அதிகார வர்க்கம் தனது குறுகிய சுயவிருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பச் ஆக்குவதும் அவற்றை தமது எதிரிகளை அடக்கவும் ஒடுக்கவும் தேவைப்பட்டால் ஒழித்துக்கட்டவும் பயன்படுத்துகின்றன.

அரசியல் காரணங்களுக்காக ஒருவரைத் தடுத்து வைப்பதோ அல்லது நேர்மையான நீதி விசாரணை நடத்தி நியாயமான தீர்ப்பு வழங்கத் தவறுவதோ மனித உரிமை மீறலே. இவற்றைச் செய்யும் நபர்களைச் சட்டப்படி தண்டிக்காமல் விடுவதும் மனித உரிமை மீறலாகும். பத்திரிகை மற்றும் கருத்துச் சுதந்திரம் அவற்றை வெளியிடுவதும் பிரச்சாரப்படுத்துவதும் தனிமனித சுதந்திரங்களாகும்.

ஆனால், இவை எல்லாம் இலங்கை போன்ற நாடுகளில் தினம் தினம் இரவு-பகல் நடக்கும் நிகழ்வுகளாகும்.

தேசிய ஒருமைப்பாடு என்றும் அதன் பொருட்டு மனித உரிமை மற்றும் தனிமனித சுதந்திரங்களை மறுப்பதோ, தடைப்படுத்துவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ மனித உரிமை மீறல் என்றே கொள்ளப்பட வேண்டும்.

ஒரு இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுப்பதும் அவர்களுக்கு இறையாண்மை இல்லை என்பதும் எப்படி இவர்களை மனித உரிமை பேணுபவர்கள் எனக் கொள்ள முடியும்?

இத்தனைக்கும் தனி மனித உரிமைகள் பற்றிய சட்டம் ஜே.ஆர். தீட்டிய அரசமைப்பு விதிகளில் உள்ளன. ஆனால், அவற்றை மறுதலிக்கும் விதமாக ஏனைய சரத்துக்களை உள்ளடக்கித் தமது பாண்டித்தியத்தைக் காட்டியுள்ளார்.

ஆயினும், இன்றும் அங்கே அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் பதிவாகின்றன. சிலவற்றில் தீர்ப்புகளும் சரியாக வழங்கப்பட்டும் உள்ளன. ஆனால் வழக்கு யாரால் யார் மீது தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் எந்த நீதிபதி விசாரிக்கிறார் என்பதிலுமே வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இத்தனை நடைமுறைச் சிக்கலும் வழக்குப் பதிவு செய்பவர் ஒரு தமிழரோ முஸ்லிமோ அல்லது ஆளும் தரப்புக்கு எதிரான சிங்களவரே ஆயினும் எதிர்நோக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

இவ்வேளையில் இலங்கையில் மனித உரிமைகளுக்கான அமைச்சரும் நூற்றுவரில் ஒருவராக உள்ளார். இவர் சட்டம் படித்தாரோ பட்டம் எடுத்தாரோ என்ற அடிப்படைத் தகுதிகளுக்கு அப்பால் ஐ.நா. சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தனிமனித சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றி கேள்விப்பட்டும் இருப்பாரா என்பது அவர் விடுக்கும் அறிக்கைகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

இன்னொரு அறிவுஜீவியாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேகுணவர்த்தனா விளங்குகிறார். இவருக்கு முன்னால் இருந்த அடிதடி அமைச்சர் எனப் பெயர் பெற்ற போல் அல்லாது இவர் அடிதடி போடுவதில்லை.

ஆனால், அடிதடி நடக்கும் போது முழுமையான ஜனநாயகம் சாத்தியப்படாது என்று மனித உரிமைகள் தினத்தில் பேசி இருக்கிறார். இவர்களின் கிடுக்கி பிடிக்குள் சிக்கித் தவிப்பது மனித உரிமை மட்டிலும் அல்ல அதற்காக ஏங்கும் தமிழ் மக்களும்தான்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தமது மனித உரிமை தினப் பேச்சில், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கம் போராடும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என மிகச் சரியாக விளக்கம் அளித்துள்ளார். நசுக்கப்படும் இனமாக, எமது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் இனமா நாம் இருக்கையில் உலக வித்தகர்களின் கருத்துக்களைப் பார்ப்பது அவசியமாகிறது.

இவர்களில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கொண்டலீசா றைஸ் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உறுதிப்பாட்டுக்கு அமெரிக்கா முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளது எனக் கூறியுள்ளார். இதன் மூலம் பல உண்மைகளை அவர் ஏற்றிருக்கிறார்.

அதாவது, 2006 இல் இலங்கை அரசு கிழக்கில் தொடக்கிய இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஆதரவு இருந்துள்ளது. தமிழ் மக்களை எறிகணை வீச்சுக்களால் கொன்றும் விரட்டியும் பிரெஞ்சு உதவி நிறுவனமான பாகைம் தொண்டர்கள் 17 பேரைக் கொலை செய்த அரச படையின் மனித உரிமை மீறலுக்கும் அமெரிக்க அங்கீகாரம் இருந்துள்ளது.

அமெரிக்க தேசம் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு அரணாக விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் உலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது எவ்;வாறு மனித உரிமைக் காப்பாளன் எனக் கூறுவது?

கிழக்கிலே மக்களால் தெரியப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கொலைகளுக்கும், துப்பாக்கி வேட்டுக்களின் மூலம் பெறப்பட்ட தேர்தல் வெற்றியை அமெரிக்க அரசு ஜனநாயகம் எனக் கூறுகிறது. கிழக்கின் மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி விட்டு அங்கே அந்நிய நாடுகளின் முதலீடுகளும் சிங்கள மக்களின் குடியேற்றமும் எப்படி ஜனநாயகமோ மனித உரிமையோ ஆகிவிட முடியும்?

தமிழனாய்ப் பிறந்த எவனும் ஆட்சியாளருக்கு அடிமையாக அல்லாது இலங்கையின் எந்தப் பாகத்திலும் வாழ முடியாத நிலைதான் இன்று இருக்கிறது. வன்னி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இலங்கை இராணுவமும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களும் தமது காட்டுமிராண்டி ஆட்சியால் இரவு, பகல் வெள்ளை வான் கடத்தல், கப்பம், கொலை, கொள்ளைகள் என ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதில் இலங்கை அரசும் சிங்கள மக்களும் முழுமையான பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர்.

இன்று நடைபெற்று வரும் போரில் வன்னி மக்களும் யாழ். குடாநாட்டில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களும் விமானக் குண்டு வீச்சு, பல்குழல் எறிகணை வீச்சுகளால் தினம் தினம் அழிக்கப்பட்ட வருகிறார்கள். இவற்றுடன் பொருளாதார மருந்து மற்றும் சகல உணவுப் பொருட் தடையினால் பட்டினியால் வதைக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இவற்றின் உச்சகட்ட மனித உரிமை மீறலாக உலக நாடுகளால் கண்டிக்கப்படும் படுமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் கொத்தணிக் குண்டுகளை வீசி அப்பாவி மக்களையும் சுற்றுச் சூழலையும் கெடுக்கிறது.

இத்தனை கொடுமைகளுக்கும் ஆசியாவின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலக வல்லரசும் ஜனநாயக வாத்தியாருமான அமெரிக்கா, அதன் நண்பர்கள் இஸ்ரவேல், பாகிஸ்தான், எதிரியும் நண்பனும் அல்லாத ரஸ்யா, உக்ரெய்ன், சீனாவுடன், பரிசுத்த பாப்பரசரும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் இவர்களிடம் மனிதம் இருக்கிறதா? மனித உரிமை பேசும் அளவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இப்படிக் கேட்பவர் உலகில் எவருமே இல்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு பக்கம் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆணையாளர் லூயிஸ் மைக்கல சென்ற வாரம் பேசுகையில், இலங்கையில் 2006 முதல் 29 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதால் பெரிதும் விசனம் கொண்டுள்ளேன் எனத் தெரித்துள்ளார்.

அதேசமயம், உதவிப் பணியாளருக்கு இலங்கை மிகவும் ஆபத்தான நாடு எனத் தெரிவித்துள்ளார்.

மறுபக்கமாக ஐரோப்பிய ஒன்றியம் பல தொண்டர் நிறுவனங்கள் மற்றும் தமிழர் அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கைக்கு தைத்த ஆடைகளின் ஏற்றுமதிக்கான வரிச் சலுகையை மேலும் நீடித்து 4.6 பில்லியன் யூரோ மேலதிக வருவாய்க்கு இலங்கைக்கு வழி வகுத்துள்ளது.

ஏற்கனவே பல அடாவடி அறிக்கைகளால் ஐரோப்பிய மற்றும் மனித உரிமை பேசும் நாடுகளை ஈவு இரக்கம் இன்றிக் கண்டித்து வருகிறது இலங்கை அரசு. அதன் மனித உரிமை மீறல்களுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையில் இத்தகைய வரிச்சலுகை அமைவது எந்த வகையில் நியாயம்? இதுவும் தமிழின அழிப்புப் போருக்குத் தானே உதவப் போகிறது.

மானம், ரோசம் என்றால் என்ன எனத் தெரியாத ஈனப் பிறவிகளுக்காக இந்தச் செய்தி வருகிறது. இலங்கைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் விஜித ஹேரத் தெரிவிக்கையில், தன்னார்வத் தொண்டர் உதவி நிறுவனங்கள் இலங்கையின் தேசிய நலன்களுக்கு ஆபத்தாகச் செயற்படுகின்றன. அவற்றைக் கண்காணிக்க தனி அமைப்பாக ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு பகுதியிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன அழிப்புக்கு எதிரான ஐந்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து பிரபலமான சுயாதீனக் கண்காணிப்பு அமைப்புகளின் ஆய்வுகளை உள்ளடக்கிய அறிக்கையை ஐ.நா.வின் 60 ஆவது இன அழிப்புக்கு எதிரான மாநாட்டுக்குச் சமர்ப்பித்தது. அதில் இன இழிப்பு நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட அல்லது அதனோடு ஒத்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள 33 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் பாகிஸ்தான், மியன்மார், சோமாலியாவுடன் சிறிலங்காவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நேரம் எமது மக்களுடன் பல வருடங்கள் உதவி வழங்கிய மனித நேயத் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடைசி வரை எமது மக்களுடன் இருந்து அவர்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அனைவருக்கும் வார்த்தைகளால் நன்றி கூறிவிட முடியாது.

உடன் பிறப்புகளான எம்மால் கைவிடப்பட்ட அந்த உயிர்களுக்கு அவர்களின் பங்களிப்பு கொஞ்ச நஞ்சம் அல்ல. 2009 ஜனவரி முதல் சுயவிருப்பின் பேரில் வெளியேறுகிறோம் எனக்கூறி விடைபெறும் நோர்வேயின் மக்கள் உதவி நிறுவனம் காண்பிக்கும் பெருந்தன்மை சிங்களத்துக்கு நிறைவு தருமாம். ஆனால், நாகரீகம் தெரிந்தவருக்கு சிங்களத்தின் சின்னத்தனம் மிகப் பெரும் பூதாகாரமாக என்றோ வெளிப்படும்.

இத்தனைக்கும் மத்தியில் உலகில் சிறிலங்காவில் மட்டும்தான் தமிழ்ப் பொதுமக்கள் மீது கொத்தணிக் குண்டுவீச்சும், பல்குழல் எறிகணைத் தாக்குதல்களும், சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கப்பம், கடத்தல், கொலைகள், கொள்ளைகள் என்பன இடம் பெறுகின்றன. இதுதான் 21 ஆம் நூற்றாண்டில் மனிதம் அறியாத மனித உரிமை மீறல்களாக இடம்பெறும் மிகப்பெரும் மனித அவலமாகப் பார்க்கப்பட வேண்டியதாகும்.

த.எதிர்மனசிங்கம்


Comments