ஈழச்சிக்கலும் தமிழர் கடமையும்



ஈழத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற தமிழின அழிப்புப் போரின் செய்திகள் அறியப்பட்ட அளவுக்கு இச்சிக்கலுக்கான வேர்கள் பலரால் அறியப்படாமல் இருக்கின்றது. இன்னமும் ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டிலிருந்து பிழைக்கப் போனவர்கள் என்றும், இப்படிப் பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்பது நியாயமா என்றுமே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நினைப்பதற்குக் காரணம் உண்டு. ஈழச்சிக்கல் ஒரு நீண்ட காலச்சிக்கலாக இருந்து அது 1970-களிலிலேயே உலகறிய கவனம் பெற்று விட்டது. இக்கவனம் தொடங்கி முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது 35, 40 அகவைக்கு உட்பட்ட நடுத்தர வயதினர் மற்றும் இளைஞர்கள், அதற்குப் பிறகு பிறந்தவர்கள் அல்லது அப்போது சிறுவர்களாயிருந்தவர்கள் என்பதால், இவர்கள் கடந்த கால வரலாறாக அதைப் படித்துத்தான் அறிய வாய்க்குமே அல்லாது சமகால செய்தியாக அதைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இச்சிக்கல் குறித்த புரிதல் முதலில் முக்கியம்.

srilanga இலங்கைத் தீவின் ஒரு பகுதி ஈழம் என்பதும், இலங்கைத் தீவின் அமைவிடமும் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த இடத்தின் உலகளாவிய முக்கியத்துவம் குறித்து பிறகு பார்ப்போம். இப்போதைக்கு இலங்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது. இது சுமார் 66 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஒரு குட்டித் தீவு. இதன் மக்கள் தொகை சமீபத்தைய கணக்கீட்டின்படி சுமார் 2 கோடி. இதில் 74 விழுக்காட்டுப் பிரிவினர் சிங்களர்கள். இவர்களது மதம் பௌத்தம். 25 விழுக்காட்டுப் பிரிவினர் தமிழர்கள். இவர்களது மதம் இந்து. இவ்விரு பிரிவினரிலும் சிறுபான்மைக் கிறித்துவர்களும், இசுலாமியர்களும் உண்டு. ஏனைய ஒரு விழுக்காட்டுப் பிரிவினர் பிறர்.

இங்குள்ள தமிழர்களில், ஈழத்தைத் தங்கள் பூர்வீகத் தாயமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் “ஈழத் தமிழர்கள்” எனப்படுவர். இவர்களன்றி ஆங்கில ஆட்சியின் போது, அவர்களது காலனி நாடுகளில் கொத்தடிமைகளாக வேலை செய்ய தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் உண்டு. இவர்கள் “மலையகத் தமிழர்கள்” எனப்படுவர். இதில் ஈழத்தைத் தங்கள் பூர்வீகத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த ஈழத் தமிழர்கள், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் வாழ்வுரிமை சிங்களப் பேரினவாத அரசால், பறிக்கப்படுவதை எதிர்த்து அவ்வுரிமைக் காக போராடி வருவதும் அவ்வுரிமைப் போரை சிங்கள இனவெறி அரசு கொடூரமாக ஒடுக்கி வருவருமான நிலையே ஈழச்சிக்கலின் வேராக இருந்து வருகிறது.

தமிழர் தாயகம் : தற்போது நாம் தமிழீழம் என்று குறிப்பிடும் தமிழர் வாழும் பகுதியையும், சிங்களர் வாழும் பிற பகுதிகளையும் உள்ளடக்கிய இலங்கை தொல்காலம் முதலே தமிழர்களால் ஆளப்பட்டு வந்ததாகவும், அப்போது அவர்கள் நாகவழிபாட்டை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்ததால் நாகர்கள் என அழைக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். பண்டையக் காலத் தமிழ் இலக்கியங்களில் முடிநாகனார், இளநாகனார் எனப்பெயர்கள் அறியப் பெறுவதும், நாகர்கோயில், நாகப்பட்டிணம் என ஊர் பெயர்கள் விளங்குவதும் தற்போதும் நாகப்பன், நாகராசன், நாகமுத்து என நாகம் சார்ந்த பெயர்கள் வழங்கப்பெறுவதுமான வழக்குகளை சமூகவியலாளர்கள் இதற்குச் சான்றளித்துக் காட்டுவர்.

தவிர, கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் எல்லாளன் என்னும் தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டு வந்ததாகவும், துட்டகை முனு என்னும் சிங்கள இளவரசன், சூழ்ச்சியால் எல்லாளளை வென்று ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாகச் சுட்டுவர். இத்துடன் தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய சோழப் பேரசுகள் ஆட்சிக் காலத்திலும், பின் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் நேரடியாக இம்மன்னர்களது ஆளுகைக்கு உட்பட்டோ அல்லது இவர்களது ஆதரவு பெற்றவர்களுக்கு உட்பட்டோ இலங்கை தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது. இந்த வரிசையில் கடைசியாக 16ஆம் நூற்றாண்டு வாக்கில் சங்கிலியன் என்னும் தமிழ் மன்னன் யாழ்ப்பாணம் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்திருக்கிறான்.

இப்படி இலங்கையைத் தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கும், அவர்கள் தமிழகத்தோடு நெருக்கமாக இருந்ததற்கும் இன்றும் தமிழகத்தின் தஞ்சை, வேலூர், பகுதிகளில் உள்ள இலங்கை மன்னர்களது கல்லறைகளும், கல் வெட்டுப் பதிவுகளும் சான்றாக உள்ளன. இத்துடன் நாக வழிபாட்டைக் கொண்டிருந்தத் தமிழர்கள், பின்னாளில் நாக வழிப்பாட்டோடு தொடர்புடைய சிவ வழிபாட்டில் ஈடுபட்டதற்கும் சிவன் கோயில்களைக் கட்டி வணங்கி வந்ததற்குமான சான்றுகளும் நிலவுகின்றன. ஆக, இவ்வாறு இன்றைய இலங்கை எனப்படுவது தொல் காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்த பகுதியாகவே இருந்து வந்தது என்பதும், ஈழத்தமிழர் எனப்படுவோர் அம்மண்ணின் பூர்வ குடிகளே அன்றி தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களோ அல்லது பிழைக்கச் சென்றவர்களோ அல்லர் என்பதும் முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது.

சிங்களவர் தோற்றம் :

கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவில் - குறிப்பாக வங்கத்தில் அல்லது ஒரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டோ அல்லது புலம் பெயர்ந்தோ இலங்கை வந்த ‘விசயன்’ என்னும் மன்னனிலிருந்து சிங்கள வரலாறு தொடங்குவதாக புத்தமத நூலான ‘மகாவம்சம்’ குறிப்பிடுகிறது. இப்படி வந்த விசயன் என்பான், இலங்கையிலிருந்த வளர்ச்சியுறாத பழங்குடிகள் குலக்குழுக்கள் மத்தியில் காலூன்றி, அக்குலத்தில் குவேனி என்கிற பெண்ணை மணந்து தனக்கான தளத்தை நிறுவி சிற்றரசாக அதிகாரம் பெற்றதாகவே வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆரிய இனத்தவனாகக் கருதப்படும் விசயன் தன்னுடைய பிராக்ருத மற்றும் பாலி மொழியுடன் இலங்கைப் பழங்குடிகள் பேசிவந்த ‘எழு’ என்னும் மொழியும் கலந்து பேச இதிலிருந்தே 12ஆம் நூற்றாண்டு வாக்கில், சிங்கள மொழி உருப்பெற்றதாக மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். பிறகு 15ஆம் நூற்றாண்டு வாக்கில், மலேயர், மலையாளிகள், போர்ச்சுக்கீசியர், தூத்துக்குடி மீனவர் என பல இனக் குழுக்களும் குடியேறி சிங்களராக அடையாளம் பெற்றுள்ளனர்.
ஆக, இப்படி விசயன் வழியிலேயே சிங்கள இனம், சிங்கள அரசு, சிங்கள மொழி என்பன உருவாகி படிப்படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்று ஆதிக்க நிலைக்கு வந்துள்ளதாகக் கொள்ளலாம்.

இன்றும் சிங்களவர், விசய துங்கே, விசயவீர எனப் பெயர்கள் வைப்பதும், சிங்கள அரசு வழங்கும் விருதுகளில் ‘விசய’ என பொறிக்கப்படுவதுமான நடைமுறைகள் பெருமளவு இவற்றை மெய்ப்பிப்பதாக உள்ளன. இப்படி உருப்பெற்ற சிங்கள மக்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில், இந்தியாவில் கலிங்கத்தை வெற்றி கொண்டு மனம் மாறிய அசோகர் ஆட்சிக் காலத்தில் புத்த மதத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்ட அவரது மக்கள் வழி அதைத் தழுவி பௌத்தர்கள் ஆகியிருக்கிறார்கள்.

இவ்வாறு தொன்றுதொட்டு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்த இலங்கை என்பது, சிங்களர் என்னும் ஒரு பிரிவினர் உருப்பெற்று, அவர்களும் பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் இலங்கையாக மாற்றம் பெற்றது. அதாவது இலங்கை என்னும் குட்டித் தீவு தமிழ் பேசும் சிவ வழிபாடுடைய தமிழ் மக்களாலும் சிங்களம் பேசும் பௌத்த வழிபாடுடைய சிங்கள மக்களாலும் ஆளப்படும், இருவேறு மொழி, இருவேறு மதம், என இருவேறு இனங்களைக் கொண்ட பகுதியாக மாறியது.

ஆங்கில ஆட்சி :

16ஆம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பாவிருந்து வெளிக்கிளம்பி உலகை, குறிப்பாக அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஐரோப்பியர்கள் 17ஆம் நூற்றாண்டுகளில் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளைப் பெருமளவு கைப்பற்றினர். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் தொடக்க நாட்களில் மேலாதிக்கம் பெற்றிருந்த போர்ச்சுக்கீசியர்கள் இலங்கையில் முதன் முதலாக, ஈழத்தைக் கைப்பற்றி, அதை ஆண்டு கொண்டிருந்த, நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட சங்கிலிய மன்னனைச் சிறைப்பிடித்து, இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளுள் ஒன்றான கோவாவுக்குக் கொண்டு வந்து 1619 இல் தூக்கிலிட்டார்கள்.

கி.பி. 1638இல் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த ஒல்லாந்தியர் எனப்படும் டச்சுக்காரர்கள் மட்டக்களப்புத் துறைமுகத்தையும், 1656இல் கொழும்புவையும் தாக்கிக் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். பின், ஏற்கெனவே போர்ச்சுக்கீசியர்களால் கைப்பற்றப்பட்டிருந்த ஈழப் பகுதிகளையும் 1658 வாக்கில் வென்று தங்கள் வசமாக்கிக் கொண்டார்கள். அதன்பின், ஐரோப்பிய நாடுகளின் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புப் போரில் வலிமை பெற்று விளங்கிய ஆங்கிலேயர் 1795இல் திரிகோண மலைப் பகுதிகளையும் 1815இல் கண்டிப் பகுதிகளையும் கைப்பற்றி, ஏற்கெனவே டச்சுக்காரர்கள் கைப்பற்றிய பகுதிகளையும் வென்று தங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர ஏறக்குறைய இலங்கை முழவதுமே ஆங்கில ஆட்சிக்கு அடிமைப்படுத்தப்பட்டது.

இவ்வாறு இலங்கையின் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளும், சிங்களர் வாழும் மத்திய மற்றும் தெற்கு, மேற்கு பகுதிகளும் முற்றாக ஆங்கிலேயர் வயப்பட்டன. அதாவது வரலாற்றில் நீண்ட நெடுங்காலம் இருமொழி பேசி வந்த, இருமதங்களை வழிபட்டு வந்த இரு தேசிய இன மக்களும், வேறொரு புதிய மொழியான ஆங்கிலத்துக்கும், புதிய மதமான கிறித்துவத்துக்கும் அறிமுகப்பட்டு பிரித்தானிய ஆட்சியின் ஒரு குடையின் கீழ், ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

சிங்கள சுதந்திரம் :

இலங்கையின் சுதந்திரப் போராட்ட வரலாறும் அதன் விடுதலையும் ஏறக்குறைய இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் அதன் விடுதலையை நிகர்த்ததாகும்.
இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் சுதந்திரம் பெற்று 1950 ஜனவரி 26 இல் குடியரசாகியது என்றால் இலங்கை 1948 பிப்ரவரி 4இல் சுதந்திரம் பெற்று அதே ஆண்டு மே 22 இல் குடியரசாகியது. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்துள் வாழ்ந்த பல்வேறு மொழி பேசும், பல்வேறு தேசிய இன மக்களையும் தங்கள் நிர்வாக வசதிக்காகவும், ஆதிக்க நலனுக்காகவும் ஒருங்கிணைத்து ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பிரித்தானியர்கள் இதற்கு சுதந்திரம் வழங்கியபோது எப்படி இத்தேசிய இனங்களின் விருப்பத்தைக் கேட்டறியவில்லையோ அதேபோல இலங்கையிலும் கேட்டறியவில்லை.

அதாவது இந்திய, இலங்கை மக்களாகிய நீங்கள் எங்கள் ஆதிக்கத்துக்கு முன் இருந்தது போல் தனித் தனி அரசுகளாக இருக்கப் போகிறீர்களா அல்லது ஒன்றாக இணைந்து இருக்கப் போகிறீர்களா? அப்படி இருப்பதானால் எந்த அடிப்படையில் எனக் கேட்டறியாது, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியினிடத்திலும், இலங்கையில் பெரும்பான்மை சிங்கள இனத்திடமும் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றது. விளைவாக, இந்தியாவில் தமிழ், தெலுங்கு, வங்கம், மராத்தி, பஞ்சாபி முதலான பல்மொழி பேசும் பல் தேசிய இன மக்களும் ஒன்றுபட்ட இந்தியா என்பதன் பெயரால் இங்கு தில்லிப் பேராதிக்கத்தின் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது போல், அங்கு இலங்கையிலும் தொன்றுதொட்டு தனித்தன்மையோடு, தனி அரசாக அம்மண்ணை ஆண்டு வந்த தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கை என்பதன் பேரால் சிங்கள அரசுக்கு அதன் பேரினவாத ஆட்சிக்கு அடிமைப்படுத்தப்பட்டனர். அதிகாரம் கைக்கு வரப்பெற்ற சிங்கள அரசு, அந்த நாள் தொட்டு தன் சிங்கள மேலாதிக்க தமிழின, ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.

ஆதிக்க நடவடிக்கைகள் :

1948இல் சுதந்திரம் பெற்ற இலங்கை அதற்கு அடுத்த ஆண்டே சிங்கள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்கள மக்களை வலுவந்தமாக குடியமர்த்தி அங்கு சிங்களர் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தியதுடன் 10 இலட்சம் மலையகத் தமிழர்கள் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியது. அதாவது, இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில், ரப்பர்க் காடுகளில் உறிஞ்சும் அட்டைகளுக்குத் தம் குருதியைக் கொடுத்து இலங்கையை வளப்படுத்தி, அதன் பொருளாதார வளர்ச்சியில் கடும் பங்காற்றிய மலையகத் தமிழர்கள் அனாதையாக்கப்பட்டனர்.

பின் 1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்கிற சட்டத்தைக் கொண்டு வந்து, இதே ஆண்டில்தான் இங்கு தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது - இலங்கையில் தமிழரெல்லாம் தமிழ் படித்தால் மட்டும் போதாது அவர்கள் சிங்களம் படித்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்கிற நிலையை உருவாக்கி அரசு பணிகளில் சிங்களவர் ஆக்கிரமிப்பை உருவாக்கியது. அதன்பின் 1970இல் தரப்படுத்துதல் என்கிற சட்டத்தைக் கொண்டு வந்து குறைவான மதிப்பெண் பெற்ற சிங்களவர் கல்வி, வேலை வாய்ப்புகளில் முதலிடம் பெறவும், அதே வாய்ப்பைப் பெற, அவர்களுக்கு இணையாக போட்டியிட தமிழர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியதுமான ஒரு ஏற்றத் தாழ்வான நிலையை ஏற்படுத்தியது.

அடுத்து 1972இல் இலங்கை அரசு புதிதாக உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தில் புத்தமதம் மட்டுமே அரசு மதம் என்று அறிவித்து அதை ஆதிக்க நிலையில் வைத்து இந்து மதத்தை இரண்டாம் பட்சமாக்கியது. பிறகு 1978இல் மீண்டும் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி குடியரசுத் தலைவருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதன் மூலம் தமிழின ஒடுக்கு முறையை மக்கள் பேராளர்களின் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கியது. இவ்விரண்டு அரசமைப்புச் சட்டத்திருத்தங்களையும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பேராளர்களின் பங்களிப்பின்றியே செய்தது.

இப்படி தொடர்ச்சியாக சிங்கள அரசு தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அப்போதைய இந்நடவடிக்கைகளின் உச்சமாக, 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் நிறைவு நாளன்று ஏற்பட்ட சிறு சலசலப்பை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 9 தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவ்வாறான தொடர்ச்சியான தமிழர் விரோத நடவடிக்கைகள் காரணமாகவே, தனி ஈழத்திற்கான கோரிக்கையும், அதற்கான ஆயுதமேந்திய போராட்டங்களும் முகிழ்த்தெழுந்தன.

இனப்பகைமை :

சிங்கள அரசு இப்படிப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு சிங்களர்க்கு தமிழர்கள் மீதான தொன்று தொட்டு நிலவி வரும் வரலாற்று ரீதியான இனப்பகைமை மிக முக்கிய காரணமாகும். வரலாற்றுக் காலம் முதலே தமிழர்கள் கல்வியறிவிலும், நாகரிகத்திலும் முன்னேறியவர்களாக, சமூக நடவடிக்கைகளிலும் செயல் திறனும் அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக விளங்க, சிங்களவர் மிகவும் பின்தங்கிய சமூக நடவடிக்கைகளில் திறனோ பெரும் பங்களிப்போ அற்ற தாழ் நிலையில் இருந்திருக்கிறார்கள்.

இப்படி இவர்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததற்கு வரலாற்றுச் சூழல்களும், பௌத்த மடங்களும், பிற புறநிலைமைகளும் தான் காரணமே யன்றி தமிழர்கள் எந்த வகையிலும் காரணமல்ல என்றாலும் சிங்களர்க்கு உடடினயாக தங்கள் முன்னேற்றத்துக்கு எதிரான பொறாமைக்குரிய சக்தியாக தமிழர்களே கண்ணுக்குத் தெரிந்தனர். இதனால் இந்தப் பகையுணர்வு தொடக்க முதலே இருந்து வந்திருக்கிறது. சிங்களத்திலே ஒரு கூற்று உண்டு. ஒரு தாய் தன் மகனைக் பார்த்து “ஏனப்பா இப்படி கைகால்களை மடக்கி சுருட்டி கூனிக்குறுகிக் கொண்டு படுத்திருக்கிறாய்” என்று கேட்கிறாளாம். அதற்கு மகன் ‘என்னம்மா செய்வது வடக்கேயும், கிழக்கேயும் தமிழர்கள். தெற்கேயும், மேற்கேயும் கடல்கள். நான் எப்படியம்மா கை கால்களை நீட்டிப் படுக்க முடியும்’ என்கிறானாம். இப்படித் தொன்று தொட்டு நிலவிய பகையுணர்ச்சிதான் அந்நிய ஆட்சிக் காலத்தில் மேலும், கூர்மையுற்றது.

காரணம், ஏற்கெனவே தமிழ்ச் சமூகத்தில் முன்னேறிய நிலையில் இருந்த ஒரு உயர் பிரிவினர் ஆங்கில ஆட்சியின் போது ஆங்கிலம் கற்று அவர்களே நிர்வாகத்தின் உயர் மற்றும் நடுத்தட்டுப் பிரிவுகளில் கணிசமாக பணியிலிருந்தனர். பெரும்பாலும் இலங்கை முழுவதும் இது சிங்களவர் மத்தியில் தங்களைத் தமிழர்களே ஆள்வதான மனநிலையை ஏற்படுத்தியது. இப்படி சிங்களவர்க்கு அந்நிய ஆட்சியின் பால், ஆங்கியேர்கள் பால் ஏற்பட வேண்டிய பகையுணர்ச்சி தமிழர் பால் ஏற்பட்டதாலேயே சிங்கள ஆதிக்க சக்திகள் மத்தியில் தமிழர்கள் மீதான பகையுணர்ச்சி தொடர்ந்தது. இந்தப் பகையுணர்ச்சியை மூலதனமாக்கியே, சுதந்திரம் பெற்ற சிங்கள அரசும், சிங்கள அரசியல் கட்சிகளும், தமிழின எதிர்ப்புணர்வைத் தூபமிட்டு வளர்த்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை
மேற்கொண்டன.

போராளி அமைப்புகள் :

இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் தமிழர்களும், சிங்களர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டாலும், இலங்கை சுதந்திரத்திற்குப் பின் சிங்கள அரசின் ஆதிக்க நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களுக்கான கட்சிகள் தனித்து செயல்படத் தொடங்கின. 1948 சிங்களக் குடியேற்றம், 1949 குடியுரிமைத் திருத்தச் சட்டம், இவற்றின் விளைவாக ‘அனைத்து சிலோன் தமிழ் காங்கிரஸ்’ என்னும் அமைப்பிலிருந்து தந்தை செல்வா எனப்படும் செல்வநாயகம் தலைமையில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என்னும் அமைப்பு தனிப் பிரிந்து இயங்கத் தொடங்கியது.

அப்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளான தன்னாட்சி பெற்ற தமிழ்ப் பகுதிக்கான கோரிக்கையையே இது முன்வைத்து, கூட்டாட்சி அரசுக்குள் தமிழர் தன்னாட்சி அமைப்பை இது வலியுறுத்தியதன் காரணமாக இது கூட்டாட்சிக் கட்சி எனப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தைத் தொடர்ந்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் காக்க ‘அரசாங்க எழுத்து வினைஞர்கள் சங்கம்’ என்னும் அமைப்பு 1961இல் ஏற்படுத்தப்பட்டது.

70இல் தரப்படுத்தல் சட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட அதையடுத்து, ‘தமிழ் மாணவர் பேரவை’ என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இப்படித் தோற்றம் பெற்ற மாணவர் அமைப்பும் அதன் பிறகான இளைஞர் அமைப்புகளுமே தமிழர் உரிமைக்கான முனைப்பான போராட் டங்களை முனனெடுத்தனர்.
அமைதியான சனநாயக வழி முறைப்பட்ட இப்போராட்டங்களை சிங்கள அரசு வன்முறை கொண்டு ஒடுக்கியதன் விளைவாகவே இவ்விளை ஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்படித் தொடர்ந்த இனவெறித் தாக்குதலின் விளைவாக இனி சிங்களவரும் தமிழரும் சேர்ந்தே வாழ முடியாது என்கிற நிலையில்தான் ஏற்கெனவே கூட்டாட்சி அமைப் புக்குள் தன்னாட்சி பெற்ற தமிழ்ப் பகுதி என்கிற கோரிக்கை, தனி ஈழம் என்ற கோரிக்கையாக முன்னுக்கு வந்தது.

இவற்றுள் 1976ஆம் ஆண்டு மே 5ஆம் நாள், அதாவது மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த நாளன்று தோற்றுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமான LTTE இயக்கம் தான் நன்கு வளர்ச்சியும், முதிர்ச்சியும், ஆற்றலும் பெற்றுக் களத்தில் நின்று போராடும் அமைப்பாக இருந்து வருகிறது.

இனவெறித்தாக்குதல் :

சிங்கள மேலாதிக்க நடவடிக்கைகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் நிராயுதபாணியாய் எதிர் கொண்டு இழப்புகளைச் சந்தித்த ஈழத் தமிழ் அமைப்புகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதமேந்தியதையடுத்து, அதைப் பொறாத சிங்கள இனவெறி அரசு அவ்வெறியில் மேலும் தீவிரமுற்று இனவெறி நடவடிக்கைகளை மூர்க்கத் தனமாக கட்டவிழ்த்து விட்டது. ஏற்கெனவே 1956, 1958 ஆண்டு களில் இனவெறியாட்டம் நடத்திய சிங்களர்கள் 1977இல் மிகப் பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்து நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொண்டு, லட்சக்கணக்கானத் தமிழர்களை அகதிகளாக்கினர்.

பிறகு, 1981 மே மாதம் 31ஆம் நாள் சிங்கள இனவெறி இராணுவமும், இனவெறி சிங்களர்களும் கூட்டாகச் சேர்ந்து நடத்திய தாக்குதலில் யாழ் பகுதி கொலை, கொள்ளை, தீவைப்பு என மிகக் கோரமாக சூரையாடப்பட்டு, எண்ணற்ற தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஈழ மக்களின் முக்கிய செய்தி ஊடகமான ஈழ நாடு பத்திரிகை அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. தமிழர்களின் தொல்கால அரிய ஆவணங்களையும், சுவடிகளையும், அரும்பெரும் கருத்துக் கருவூலங்களையும் தாங்கிய இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட யாழ் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

தொடர்ந்து இப்படி இனவெறி யாட்டம் நடத்தி வரும் சிங்கள அரசுக்கும், இராணுவத்தினர்க்கும் பதிலடி கொடுக்கும் வகையில் 1983 ஜூலை 23 ஆம் நாள் புலிகள் அமைப்பு நடத்திய ஒரு தாக்குதலில் 13 சிங்கள சிப்பாய்கள் கொல்லப்பட அதைத் தொடர்ந்து தமிழர் மீதான வன்முறை மேலும் கொடூரமாக ஏவி விடப்பட்டது. இதுவே 83 ஜூலை கலவரம் எனப்படுகிறது. இதில் கொழும்புவில் வரலாறு கண்டிராத இன ஒழிப்பு வன்முறைத் தாக்குதல்கள் நிகழ, அங்கு 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்க துரை, குட்டிமணி உள்ளிட்ட தமிழ்ச் சிறையாளிகள் பலர் கொல்லப்பட்டதும் இந்தத் தாக்குதலில்தான். இந்த 1983 ஜூலை 23 கொலை வெறியாட்டம்தான் சிங்கள இன வெறியை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி ஈழத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி அச்சிக்கலின்பால் அக்கறை கொள்ள வைத்தது. இந்த ஜூலை 23 வெறியாட்டம் தான் தமிழகமெங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கி முன்னேறிய நகர்ப்புறங்கள் மட்டுமின்றி பின்தங்கிய பட்டி தொட்டிகளிலும், பலதரப்பட்ட மக்களும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக தெருவிலே இறங்கி, அவரவர் வாய்ப்புக்கேற்ற வழிகளில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் எனப் பல்வேறு வடிவங்களில் பொங்கி எழ வைத்தது.

சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக, தமிழீழ மக்களிடையே அன்று முனைப்பு பெற்று உலகறியச் செய்த இவ்விடுதலைப் போர்தான் 25 ஆண்டுகள் கழிந்த இந்த 2008 ஆம் ஆண்டிலும் இன்னமும் தீராமல், தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகிறது. இந்த 25 ஆண்டுகளில் அரசியல் அரங்கிலும், போராளி அமைப்புகள் அரங்கிலும் நடந்தேறிய நிகழ்வுகள் பல. அவற்றை இங்கே ஆராய நேரம், இடம் போதாது. எனவே அதைத் தனியே விடுத்து, உடனடித் தேவை குறித்தவற்றை மட்டும் தொடர்வோம்.

இனவெறி அரசியல் :

ஈழச் சிக்கல் இப்படித் தொடர்ந்து நீண்டு கொண்டிருப்பதற்கு சிங்கள மேலாதிக்கச் சக்திகளின் தன்னல நோக்குகளுடன், அதற்கு ஒத்திசைந்த சிங்கள இனவெறி அரசியலும் ஒரு முக்கிய காரணம். சிங்களத்தில் முக்கியமான கட்சிகள் இரண்டு. ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மற்றொன்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஸ்ரீமாவோ பண்டார நாயகா, சந்திரிகா எல்லாம் SLFP என்றால், ஜெயவர்த்தனே, ரனில் விக்ரமசிங்கே UNP. இவ்விரண்டு கட்சிகளுமே சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு வாக்கு வங்கிகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வதிலேயே முனைப்பாய், தமிழர்களுக்கு எதிரான தீவிர நட வடிக்கைகளை மேற்கொள்வது யார் எனப் போட்டா போட்டி யிடுவதில் முனைப்புக் காட்டுவ தாகவே உள்ள இன வெறிக் கட்சிகள்.

இதற்கு அப்பால் ஜனதா விமுக்தி பெரமுனா JVP என்னும் பொது வுடைமை அமைப்பு. இது 1971இல் ஒரு புரட்சிக்குத் திட்டமிட்டு, அது முன் கூட்டியே ஆட்சியாளர்களுக்குத் தெரிய வந்து சிங்கள அரசின் கொடும் அடக்கு முறைகளைச் சந்திக்க அதன் பின் அரசோடு சமரசமாகி, அதன் இனவெறி அரசியலுக்குத் துணை போய் அதற்கு ஆதரவு தந்து வருகிறது. இத்துடன் பௌத்த மத நிறு வனங்கள். இவையும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. சிங்கள அரசு ராணுவத்துக்கு ஆள் எடுத் தால் புத்தத் துறவிகள் தங்களைத் தேர்வுக்கு போய் நிறுத்தி முன்னிலைப் படுத்திக் கொள்கிற அளவுக்கு
தமிழர்கள்பால் கசப்பைக் கக்குகிற, வெறுப்பை உமிழ்கிற அமைப்புகள்.

இதற்கு அப்பால் இலங்கை அரசியலைத் தீர்மானிக்கிற அளவுக்கு வலிமையற்ற சில இடதுசாரி இயக் கங்கள் சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சமாஜக் கட்சி ஆகிய இருக்கின்றன. இவை பெரும்பாலும் சிங் களப் பாட்டாளி வர்க்கமும், தமிழ்ப் பாட்டாளி வர்க்கமும் ஒன்றிணைந்து சிங்கள இனவெறி அரசை வீழ்த்தி சோஷலிசம் காணும் நோக்கம் கொண் டவை. இதையும் தாண்டி உள்ள சில சிறிய கட்சிகளோ அவையும் தமிழர் விரோத நோக்கம் கொண்டவையே.
ஆக இப்படிப்பட்ட கட்சிகள் நம் ஊரைப் போலவே அவ்வப்போது கூட்டணி அமைத்து, இலங்கை அரசை, சிங்கள இனவெறி அரசியலை நடத்தி வருகின்றன.

தற்போது ஆட்சியிலிருக்கும் மஹிந்த ராஜபக்ஷே SLFP யைச் சேர்ந்தவர். நடைபெற்று வருவது JVP மற்றும் ஜஹிதா ஹேலா, உடுமயா JHU என்னும் பௌத்த அமைப்பு, ஆகியவற்றுடன் இணைந்த கூட்டணி ஆட்சி. இந்தக் கூட்டணி ஆட்சிதான் தற்போது தமிழின அழிப்பு வேலையைத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்திய அரசு :

ஈழச்சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள, இந்தியாவினது அண்டை நாடுகளுடனான அதன் வெளியுறவுக் கொள்கையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அண்டை நாடுகளாக உள்ளவை வடக்கே சீனம், நேபாளம், பூட்டான், மேற்கே பாகிஸ்தான், மத்தியில் பங்களாதேஷ், தெற்கே இலங்கை, தென்மேற்கே மாலத் தீவுகள். இதில் சீனம் தவிர மற்றவை அனைத்தும், இந்தியா உள்ளடங்கியுள்ள சார்க் நாடுகள் அணியில் அங்கம் வகிப்பவை.

சீனம், இந்தியாவைவிட மக்கள் தொகையிலும், பிற தொழில் முன் னேற்றத்திலும் ராணுவ ரீதியிலும் பெரியது. வலிமை வாய்ந்தது. பாகிஸ் தான் இந்தியாவிட பெரியதோ வலிமை வாய்ந்ததோ அல்ல என்றாலும், இந்தியாவுக்கு சவாலாய் விளங்குவது. எனவே சீனாவுடனும், பாகிஸ் தானுடனும் ஆன இந்தியாவின் அணுகு முறை என்னதான் அந்நாடு களோடு நல்லுறவு, நட்புறவு என்று சொல்லப்பட்டாலும், உள்ளூர எச்சரிக்கை மிக்கவை. அந்த இரு நாடுகளுமே எப்போதும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்பதாக இந்திய அரசால் கருதப்படுபவை.

சுதந்திர இந்தியாவில் எல்லைப் பிரச்சினைகள் எழுந்து 61இல் சீனா வுடன் போர் மூண்டது. பாகிஸ்தானு டன் 64-65இல், பிறகு சமீபத்தில் கார்க் கில் யுத்தம் நடைபெற்றது. இவற்றை வைத்து நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம். அடுத்து உள்ள நாடுகளில் இலங்கை தவிர சார்க் நாடுகள் அமைப் பில் உள்ள பிற அனைத்தும் இந்தியாவை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள மிகச் சின்னஞ்சிறிய குட்டி நாடுகள். அதனால் இந்நாடுகள் பற்றி இந்தியாவுக்குக் கவலையில்லை. ஆனால் இலங்கை அப்படியல்ல. இது பிற நாடுகளைப் போல சின்னஞ் சிறியதாக இருந்தாலும் இந்தியாவை அதை மூத்த சகோதரனாக, அதன் மேலாண்மையை ஏற்காத விரும்பாத நாடு.

அதாவது பாகிஸ்தான், சீனா போல இந்தியாவுக்கு நிகரான வலிமையும் அல்லாமல், இந்தியாவில் மேலாண்மையையும் ஏற்க விரும்பாமல் இடைத் தட்டில் இருக்கும் நாடு அது. இதனால் இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் அணுகு முறை தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. அதாவது இலங்கையை அச் சுறுத்தி அது தன்னை மூத்த சகோதரனாக ஏற்றுக் கொள்ள வைக்க இயலாமலும், அதே வேளை அது பாகிஸ்தான் சீனா பக்கம் அதிகம் சாய்ந்து விடாமலும், மிகப் பக்குவமான, தளுக்கான நடைமுறையைப் பின்பற்றி அதைச் செல்லப் பிள்ளை மனோபாவத்தோடு நடத்தி வருகிறது.

இந்தியாவும் இலங்கையும் :

இலங்கையுடனான இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது நாம் மேலே குறிப்பிட்டவாறு இலங்கையை செல்லப்பிள்ளை மனோபாவத்தோடு சலுகைகள் தந்தோ அல்லது அதைப் பலவீனமான நிலைக்குத் தள்ளியோ எப்போதும் தனக்குச் சாய்மானமாக, தன்னைச் சார்ந்திருக்கும் நிலையில் வைத்துக் கொள்வது என்கிற அணுகு முறையைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. இது இலங்கைக்கும் தெரியும் என்பதால் இந்தியாவின் இந்த இக் கட்டான நிலையைப் பயன்படுத்தி முடிந்த மட்டும் இந்தியாவிடமிருந்து உதவிகள் பெறுவது, தன் உள்நாட்டுச் சிக்கல்களிலெல்லாம் இந்தியாவை இழுத்து வைத்து அதைச் சிக்க வைப்பது, தன் இனவெறி ஆதிக்க நலனுக்கு அதை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்வது, பலிகடா ஆக்கு வது, அதற்கு இந்தியா இணங்கி வரா விட்டால் பாகிஸ்தானுடனோ, சீனா வுடனோ உதவிக்குப் போவேன் என்று இந்தியாவை அச்சுறுத்துவது என்கிற உத்தியைக் கையாண்டு வருகிறது.

இந்தியா தனக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இருப்பதை ஒட்டி யும், வல்லரசு நாடுகளிடமிருந்து பாது காப்புத் தேடியும், தன் புவியியல் பகுதியில் உள்ள அண்டை நாடுகளை தன்னுடன் நல்லுறவோடு வைத்துக் கொள்ள ஒரு கூட்டு அமைக்கும் முயற்சி யிலும்தான் இந்தியா, சார்க் அமைப்பை உருவாக்கியது.
1967 ஆகஸ்டு 8இல் இந்தோ னேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து உருவாக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட் டமைப்பு ASEAM என்னும் அமைப்பு. புருனே 1983லும், வியட்நாம் 1995லும், பிறகு லாவோஸ், மியான்மர் ஆகிய வையும் இதில் உறுப்பு நாடுகளாக சேர்ந்து கொள்ள தற்போது 11 நாடுகள் கூட்டமைப்பாக இது நிலவி வருகிறது.

இதற்கு ஊக்கம் தர, இதேபோல தனக்கு அண்டையில் உள்ள நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவின் முன்னெடுப்பில் 1985இல் வங்கதேச தலைநகர் டாக்காவில் உருவான இயக்கமே தெற்காசிய நாடுகளின் பிரதேச ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு SAARC என்பது. இப்படிப்பட்ட அரசியல் இருப்பு நிலையும் அதுசார்ந்த அயலுறவுக் கொள்கையின் காரணமாகத்தான் இலங்கைக்கு இந்தியா, இப்படி பல் வேறு உதவிகளைச் செய்து வருகிறது. 1971இல் JVP புரட்சியை ஒடுக்க இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்தது. ஆயுத உதவி நல்கியது. 1974இல் தமிழர் களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது.

ஈழத்தில் போராளி அமைப்புகள் தோன்றி சிங்கள அரசை எதிர்த்துப் போராடியபோது, அவ்வரசைப் பலவீனப்படுத்தி அது தன்னிடம் உதவி கோரி, தன்னைச் சார்ந்திருக்கும் படிச் செய்ய தமிழ் போராளிக் குழுக்களுக்கு தமிழ்நாட்டில் அண்டை மாநிலங்களில் பல பயிற்சி முகாம்கள் அமைத்து ஓய்வு பெற்ற ராணுவத்தினரைக் கொண்டு அவர்களுக்கு பயிற்சிகள் அளித்தது. என்றாலும் இதில் புலிகள் அமைப்பு இந்திய அரசின் கையை மீறி வலுவான அமைப்பாக வளர்ந்ததுடன் தமிழீழக் கோரிக்கைகளிலும் உறுதி யாக நின்றதால், தமிழீழம் மலர்ந்தால், அதன் தாக்கம் தமிழகத்திலும் இருக் கும், தமிழகத்திலும் தன்னுரிமைக்கான கோரிக்கை வலுப்பெறும் என்று அஞ்சிய இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொண்டது.

1985இல் ராஜீவ்காந்தி ஆட்சியில் பூட்டானி தலைநகர் திம்புவில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து போராளி கள் அமைப்பை பலவீனப் படுத்த முயன்றது. பின் 1987இல் புலிகளுக்கு எதிராக ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டது. இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பியது எல்லாமும்.
இது போதாதென்று இந்திய உளவு அமைப்பான ராவைப் பயன் படுத்தி போராளி அமைப்புகளுக் கிடையேயான பூசலை ஊதிப் பெரிது படுத்தவும், மாற்று அமைப்பு சார்ந்த போராளிகளைப் பயன்படுத்தி புலிகள் அமைப்பினரைத் தீர்த்துக் கட்டவுமான முயற்சிகளில் இறங்கியது. இவையனைத்தையும் இந்தியா, இலங்கையைத் தனக்கு அணுக்கமாக வைத்துக் கொள்ளும் நோக்கிலும், தனக்கு எதிராக தமிழீழம் மலர்ந்து விடக் கூடாது என்கிற நோக்கிலுமே செய்தது. தற்போது தொடர்ந்து செய்து வருகிறது.

அரசியல் கட்சிகள் :

உலகத்தின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேசிய இனப் போராட்டங்களையெல்லாம், குறிப்பாக வியட்நாம், தென்னாப்பிரிக்கா, ஏன் இந்தியத் துணைக் கண்டத்துள்ளேயே வங்க தேசம் ஆகியவற்றின் போராட்டங்களையெல்லாம் ஆதரித்த அகில இந்தியக் கட்சிகள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ மண் ணில் நடைபெற்று வரும் போராட் டத்தை உரிய அக்கறையோடு நோக்கி அதில் கவனம் செலுத்தாதது, அம் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காதது கவனத்துக்குரியது. பொதுவாகவே, அகில இந்தியக் கட்சிகளுக்கு வடக்கே நடக்கும் நிகழ்ச்சிகளே முக்கியமாகப் படு கின்றன. தெற்கே நடக்கும் நிகழ்ச்சிகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாகப் படுவதில்லை.

இது வெள்ளை ஆட்சிக் காலத் திலிருந்தே ஆதிக்க சக்திகளையும் வரலாற்று ஆசிரியர்களையும், ஊடக வியலாளர்களையும் பீடித்து வரும் நோய். இவர்கள் இந்திய வரலாறு என்று தலைப்பிட்டு வட இந்திய வரலாற்றை பற்றியே அதிகம் பேசு வார்கள். தெற்கே வரமாட்டார்கள். அப்படி தெற்கே வர நேர்ந்தால் அதற்குத் தனியே தென்னிந்திய வரலாறு என்று தலைப்பிட்டு விடுவார்கள். ஆக இந்தியா என்றால் இவர்களுக்கு வட இந்தியாதான். ஆனால் அதற்கு வட இந்திய வரலாறு என்று பெயரிட மாட்டார்கள். இதே தடத்திலேயே வரலாற்றுப் பாடப் புத்தகங்களும், இந்திய வரலாறு, தென்னிந்திய வரலாறு என்றே தலைப்பிட்டு செய்திகளைத் தந்து கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட போக்கின் விளை வாகவே அகில இந்தியக் கட்சிகளும் தெற்கே நடக்கும் இந் நிகழ்வுகள் பற்றி கவலையற்று இருந் திருக்கின்றன.
சரி, வடக்கே இருக்கும் அகில இந்தியக் கட்சிகள்தான் இப்படி என்றால், தமிழகத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த, தற்போது ஆட்சியில் இருக்கும் இரு மிகப்பெரும் திராவிடக் கட்சிகளும் தில்லியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், மாற்றி மாற்றி அவர் களோடு கூட்டு வைத்து அவர்களுக்கு ஆதரவு தருவதும், ஆட்சியில் பங்கு பெறுவது மான நடவடிக்கைகளில் இறங்கி அதற்குத் துணை போகிறவர் களாய் ஈழச் சிக்கலை அவரவர் கட்சி நலனுக்கேற்ப அணுகுகிறவர்களாய் இருந்து வருகிறார்களே தவிர இச் சிக்கலைத் தீர்க்க முனைவதாய் இல்லை.

இவ்விரு கட்சிகளுக்கும் அப்பால் தமிழகத்தில் தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் கட்சிகளாவது தாங்கள் ஓரணியில் திரண்டு ஒருமித்து குரல் கொடுக்க முனைகிறதா என்றால், அதற்கும் வாய்ப்பில்லாமல் அனைத் தும் கூட்டணி அரசியலுக்குள் சிக்கி, தனித் தனியாகவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இப்படி அகில இந்திய அள விலும் சரி, தமிழக அளவிலும் சரி, அரசியல் கட்சிகளிடையே இப்படிப் பட்ட ஒரு பலவீனமான நிலை நீடிப்பத னால்தான் தில்லி ஆட்சியாளர்கள் எது பற்றியும் கவலைப்படாமல், தங்கள் நிலையிலும் எந்தவித மாற்றமுமில் லாமல் எப்போதும் போல இலங் கைக்கான தங்கள் உதவியை நீட்டித்து வரு கிறார்கள்.

இடதுசாரிகள் : மனித குலத்தை அனைத்து வகையான ஒடுக்கு முறை களிலிருந்தும் விடுவிக்கும், விடுவிக்க வழி காட்டும் ஒரே தத்துவம் மார்க் சியமே. அது பொருளியல் ஒடுக்கு முறையோ, சாதிய, மத ஒடுக்கு முறையோ, மொழி, இன ஒடுக்கு முறையோ எதுவானாலும் எல்லாவித ஒடுக்கு முறைக்கும் இது பொருந்தும். இந்த அடிப்படையில் ஈழ மக்கள் அனுபவித்து வரும் இனவெறிக் கொடு மைகளை எதிர்த்துக் குரல் கொடுப் பதும், அம்மக்களின் போராட் டத்திற்கு ஆதரவாகத் துணை நிற்பதும், மார்க் சியத்தின் பேரால் இயங்கும் கட்சிகள், அமைப்புகளின் இன்றி யமையாக் கடமையாகும்.
ஆனால், என்ன காரணத்தாலோ பிற அகில இந்திய கட்சிகள் போலவே, இந்திய இடதுசாரிக் கட்சிகளும் கடந்த முப்பது ஆண்டுகளாக இதில் உரிய கவனம் செலுத்தாது அல்லது இதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காது, வாளாயிருந்து விட்டன.

எனில், தற்போது இந்நிலையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டிருக் கிறது. இதில் இந்தியப் பொதுவு டைமைக் கட்சி ஊஞஐ ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் ஈழச்சிக்கல் குறித்து தீர்மானம் நிறை வேற்றி கடந்த 02-10-08 காந்தி பிறந்த நாள் அன்று தமிழகம் தழுவி மாநக ராட்சிகளிலும், மாவட்டத் தலைநகர் களிலும், தமிழ் இன உணர்வாளர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள, ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்திய துடன் தொடர்ந்து இந்திய அரசைக் கண்டித்து ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றது.

ஆனால் இ.க.க.மா. ஊஞஐஆ இது வரை இச்சிக்கல் குறித்து எந்தப் போராட்டமும் நடத்தவில்லை என்ப துடன் தாங்கள் தனி ஈழத்தை ஆதரிக்க வில்லை என்னும் தங்கள் பரிசுத்த ஆவிகள் நிலைப் பாட்டையே முழங்கி வருகிறது. இந்தப் பின்னணியில் இச்சிக்கல் சார்ந்து தமிழக அரசியல் கட்சித் தலை வர்களும், தமிழக மக்களும் ஆற்ற வேண்டிய உடனடிக் கடமைகளாக நமக்குத் தோன்றுவன கீழ்வருமாறு.

தமிழர் கடமை : ஈழ மக்கள் மீதான சிங்கள இனவெறிக் கொடுங் கோன்மையைத் தடுத்து நிறுத்தவும், அம்மக்களின் நல்வாழ்வுக்குமான தீர்வாக அனைத்து அமைப்புகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெளிப்படை. ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு நிலைபாட்டைக் கொண் டுள்ளன. இவை பலதரப்பட்டு இருந் தாலும், சாரத்தில் அவற்றை இருவகைப்படுத்தலாம்.

1. ஆதிக்கச் சிங்களரும், ஒடுக்கப் பட்ட தமிழர்களும் இனி சேர்ந்தே வாழமுடியாது என்பதால் இச்சிக்க லுக்குத் தனி ஈழம் ஒன்றே தீர்வு என்பது.

2. தனி ஈழம் கூடாது, இலங் கைக்கு உட்பட்ட தன்னாட்சிப் பகுதியாக, இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு, கூட்டாட்சி அரசுக்குள்ளேயே அதற்குத் தீர்வு காண வேண்டுமென்பது.

இதேபோலவே போராடும் புலிகள் அமைப்பு குறித்தும் இருவேறு நிலைகள் உண்டு.

1. இன்று ஈழ மக்களைப் பாதுகாக்கும், அவர்களது உரிமைகளுக்குப் போராடும் ஒரே அமைப்பாக புலிகள் அமைப்பு மட்டுமே இருக்கிறது. அதன் மூலம் மட்டுமே மக்கள் விடுதலை பெறமுடியும். எனவே புலிகள் அமைப்பை ஆதரிக்க வேண்டும்.

2. புலிகளை ஆதரிக்க முடியாது. அது வன்முறை இயக்கம், பாசிச அமைப்பு. ஆகவே புலிகளை விடுத்து ஈழ மக்களை மட்டும் ஆதரிக்கிறோம். அவர்கள் துயர் துடைக்கக் குரல் கொடுப்போம்.

இந்நிலைபாடுகளில் எது சரி, எது பொருத்தம், எது பொருத்தப்படாது என்றெல்லாம் விவாதிப்பதற்கான, அது பற்றிய வாதப் பிரதிவாதங்களை நடத்துவதற்கான களமோ, நேரமோ இது அல்ல. அதை வரலாறு தீர்மானித்துக் கொள்ளும். ஈழ மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள். ஆகவே, தற்போது நமக்குள் நிலவும் இதுபோன்ற கருத்து வேறு பாடுகள், முரண்பட்ட நிலைபாடுகள், இது சார்ந்த விவாதங்கள், சர்ச்சைகள் அனைத்தையும் ஏறக்கட்டி ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இப்போது ஈழ மக்களுக்கு உடனடியாகத் தேவைப் படுதெல்லாம் அம்மக்கள் மீதான கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்களது உயிரும் உடை மையும் பாதுகாக்கப்பட வேண்டும், உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதே என்கிற அடிப்படையில் தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்பு களும் இதில் ஒன்று பட்டுக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது ஈழத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள்,

1. ஈழ விடுதலை ஆதரவாளர் களாக, தனி ஈழக் கோரிக்கையை ஏற்பவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

2. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிப்பவர்களாக அதன் நடவடிக்கைகளை ஏற்பவராக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

3. மாறாக, மேற்கண்டுள்ள இரண்டு நிலைபாடுகளிலும் மாறு பட்ட கருத்து இருந்தாலும், குறைந்த பட்ச மனிதாபிமானமான அடிப்படையில், சனநாயக
நோக்கில், ஈழ மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் போதும். அவர்களது துயர் துடைக்க, உரிமைகள் காக்க துணை நின்றால் போதும். அதாவது நம் கண் முன்னே ஒரு இனம், நம் சகோதர இனம், நம் தொப்புள் கொடி உறவு அழிக்கப்படு கிறதே, கொன்று குவிக்கப் படுகிறதே, இதைப் பார்த்துக் கொண்டு நெஞ்சில் ஈரமுள்ள எந்த மனிதன் தான் சும்மா யிருக்க முடியும், உலகில் யார் யாருக்கோ குரல் கொடுத்தோம். ஆனால் தற்போது நம் சொந்தங் களுக்குக் குரல் கொடுக்காமல் அல்லது கொடுக்க முடியாமல் இருக்கிறோமே, இது நியாயமா என்கிற உணர்வோடு, ஈழ மக்களை இத்துன்பத்திலிருந்தும், துயரத் திலிருந்தும் மீட்க, அம்மக்களின் வாழ்வுரிமை காக்க குரல் கொடுக்க வேண்டும்.

இந்த வகையில் தற்போது தமிழகம் தன்னியல்பாய் ஈழ மக்களுக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கே அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. உணர்வாளர்கள் போராட்டம் நடத்து கிறார்கள். பொது அமைப்புகள் போராடுகின்றன. இப்படித் தமிழகமே கொந்தளித்து நடத்தும் போராட்டங் கள்தான், இதுபோன்ற போராட்டங்கள் மட்டுமே, தில்லி அரசின் நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும். ஈழத் தமிழ் மக்களையும் காப்பாற்ற உதவும்.

ஆகவே, தற்போது தமிழீழ விடு தலை உணர்வாளர்கள், தமிழீழ மக்கள் நலனில் அக்கறையுள்ளோர் செய்ய வேண்டுவதெல்லாம், ஈழச் சிக்கல் குறித்து நிலைபாடுகளின் வேற்றுமை களை மறந்து, அல்லது அவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்து மாந்த நேய அடிப்படையில், மனித உரிமை அடிப்படையில் ஈழ மக்கள் ஆதரவு சக்திகளைத் தமிழகத்தில் ஒன்று திரட்டு வதுதான். அச்சக்திகளைக் களமிறங்கி போராட வைப்பதுதான். அந்த வகையில் கீழ்க்கண்டுள்ள கோரிக்கைகளை முன் வைப்போம். அதற்காகப் போராடுவோம். மக் களைத் திரட்டுவோம் என உணர் வாளர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோரிக்கைகள் :

தில்லி அரசே,

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகள் செய்யாதே, படைப் பயிற்சிகள் தராதே. ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள பயிற்சியாளர்களைத் திரும்பப் பெறு.

ஈழத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து, தாய் மண்ணிலேயே அகதிகளாய் வதையும் ஈழ மக்களுக்கு உணவும், மருந்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து இன்றியமையா வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்.

இந்த அடிப்படையில் இத்திசை நோக்கி சிந்தையைச் செலுத்துவதும், இதற்கான விழிப்புணர்வை தமிழக மக்களிடையே ஏற்படுத்தி ஈழ மக்களைக் காக்க, தமிழக மக்களைத் தட்டி எழுப்புவதுமே தற்போது தமிழகத்தின் முன்னோடிச் சிந்தனையாளர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலையாய கடமையாகும்.

-இராசோ-


Comments