இன அழிப்பிலிருந்து தமிழர்களை பாதுகாக்கக் கோரி பிரான்சில் எதிர்வரும் சனியன்று மாபெரும் ஒன்றுகூடல்

தாயகத்தில் வாழும் மக்களை சிங்கள அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பிலிருந்து பாதுகாக்குமாறு கோரி பிரான்சில் எதிர்வரும் சனிக்கிழமை (13.12.08) மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துலக போர் நியமங்களையும் மீறி பெரும் அழிவாயுதங்களைக் கொண்டு சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புப்போரை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

அனைத்துலக மனித நேய அமைப்புக்களை வெளியேற்றியும், போக்குவரத்துப் பாதைகளை மூடியும், பெருமளவு மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றியும் மிகப்பெரும் மனித அவலத்தை நடத்தி வருகின்றது.

இந்த விடயத்தில் பிரான்ஸ் தேசமும், ஐரோப்பிய ஒன்றியமும், அனைத்துலகமும் காட்டுகின்ற மௌனத்தை கலைத்து எமது மக்களை சிங்கள அரச பயங்கரவாதத்தின் இன அழிப்பிலிருந்து பாதுகாக்கும்படி கோரும் மாபெரும் ஒன்றுகூடலாக

எதிர்வரும் சனிக்கிழமை (13.12.08) மாலை 3:00 மணிக்கு பிரான்ஸ் மனித உரிமை சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.

01.04.2007 அன்று பிரான்சில் தமிழ் சமூகப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட இடைவெளியின் பின்னர் எமது தாயகத்தில் நிகழும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் காவல்துறையினர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுமதி வழங்கியமையானது பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்றியுணர்வுடன் கூடிய புது எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள தேசத்தின் இன அழிப்புக் கரங்களில் அகப்பட்டு சாவுக்கும் அழிவுகளுக்குள்ளும் வாழும் எம் உறவுகளின் அவலங்களை வெளிக்கொணர கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த பெருமளவில் ஒன்று திரளுமாறு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களிடம் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.


Comments