தமிழகம் ஈழத்தமிழர்களை ஏமாற்றுகிறோமோ எனத் தோன்றுகிறது - த வீக் செய்தியாளர் கவிதா முரளிதரன்

ஈழத்தமிழர்கள் மீதான தமிழ்நாட்டில் அழுத்தம் நிச்சியம் போதாது. தமிழர்களைக் கொல்லாதே என்று மட்டும்தான் தமிழகத்தில் குரல் எழுப்பப்படுகிறதே தவிர, அங்கு நிலவும் உண்மையைக் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

அங்கு நேரில் சென்று பார்த்தால்தான் அந்த மக்களின் - மண்ணின் காயத்தின் உண்மை வெளிப்பாடு தெரியவரும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் மக்கள் தினம் தினம் அனுவிக்கும் கொடுமையை எழுத்தில் வடிக்க முடியாது.

யுத்தம் நடக்காத பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் பேசவே பயப்படுகிறார்கள். அவர்களின் துயரக் கதைகளை கண்டும், கேட்டும் அறிந்து எனது இதயமே கனத்துப்போயிற்று! என்று கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை சென்று சென்னை திரும்பிய த வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் திருமதி. கவிதா முரளிதரன், தினக்குரலுக்கு அளித்த பேட்டியில் கவலை தெரிவித்தார்.

கேள்வி : பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த நீங்கள் எங்கெல்லாம் செல்லத் திட்டமிட்டீர்கள்? போனீர்கள்? யாரை பார்த்தீர்கள்?

பதில்: குறிப்பாக யாழ்ப்பாணம், வன்னிப்பிரதேசம் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்காதது பெரும் கவலை அளித்தது. மட்டக்களப்பு சென்று சில இடங்களைப் பார்த்தேன். அரசியல்வாதிகளில் மனோகனேசன், சுரேஷ் பிரேச்சந்திரன். கருணா. டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைச் சந்தித்தேன். பேசவே பயப்படும் மக்களைக் கண்டது, அவர்களைப் பேச வைத்து நான் அறிந்தது எல்லாமே கவலை தரும் கண்ணீர்க் கதைகள், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் மனம் நிறைந்த பயத்துடன்தான் காணப்பட்டனர். வெள்ளை வான், தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுவது, காணாமற்போவது குறித்து அந்த இளைஞர்களின் பெற்றோர் வடிக்கும் கண்ணீருக்கு பதில் சொல்ல வேண்டியது, காலத்தின் கட்டாயமாகும்! வெள்ளை வானில் அரசுதான் கடத்துகிறது என்று அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். போர் இல்லாவிட்டாலும், நிம்மதியாக வாழமுடியவில்லையே. தினம் செத்துப்பிழை;ப்பதே எங்கள் வாழ்க்கையாகி விட்டது என்று அவர்கள் என்னிடம் கூறியது, இதயத்தையே காயப்படுத்தி விட்டது.

கேள்வி : அந்தப் பெற்றோரின் பொதுவான குற்றச்சாட்டு எப்படி இருந்தது?

பதில்: கடத்தப்பட்ட அல்லது காணாமற்போன தமிழ் இளைஞர்களின் பெற்றோரை திரு. மனோ கனேசன் மூலமாக சந்தித்தேன். வெள்ளை வானில் வந்தவர்கள் மகனைக் கடத்;திச் சென்றனர். நாங்கள் கதறி அழுதபோது கூட அவர்கள் இரக்கப்படவில்லை. அரசு ஆதரவாளரிடம் முறையிட்டால், இரண்டு, மூன்று மாதம் செல்லும். சிலவேளை, போர் முடிந்ததும் ஒப்படைக்கபடலாம்… என்று பதிலளிக்கின்றனர். சில இளைஞர்கள் இப்படி காணாமல் போய் ஆறு மாதங்களாகி விட்டன. இப்படி சித்திரவதை செய்வதை விட சுட்டுக் கொன்றுவிடலாம் என்று மனமுருகியதை, என்னால் பொறுமையுடன் சகிக்க முடியவில்லை. நான் மட்டக்களப்பில் இருந்த போதே, கொலை, கடத்தல் சம்பவங்கள் நடந்தன. தமிழ் இளைஞர்களின் பெற்றோர், செய்வதறியாது இருக்கின்றனர். இளைஞர்களுக்கு பாதுகாப்பே இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு.

கேள்வி : ஈழத்தமிழ் மக்களுக்காக தமிழக மக்கள் எழுப்பும் குரல் - ஆதரவு பற்றி அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பதில் : தமிழகத்தின் ஓட்டுமொத்த ஆதரவுக்குரல் அந்த மக்களுக்கு ஆறுதல் அளித்தாலும், சமரசத்துக்கான அழுத்தம் - நிர்ப்பந்;தம் போதாது என்பதே எனது கருத்து. அந்த மக்களும் அமைதியை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். தமிழ் மக்களைக் கொல்லாதே என்று மட்டுமே தமிழகம் குரல் எழுப்பினாலும், அது வெறும் பத்திரிகைச் செய்தியாக வெளி வருகிறதே தவிர இலங்கை அரசின் செயற்பாடுகளைத் திசை திருப்புவதாக இல்லை. இலங்கை தமிழ் மக்களின் துயர்துடைக்க, மத்திய அரசு மீதான தமிழ் நாட்டின் அழுத்தம் கடுமையாகவும், வேகமாகவும் இருக்கவேண்டுமென்று அம்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

கேள்வி : கொழும்பில் வாழும் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்?

பதில் : பீதியுடன்தான் காணப்படுகிறார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்துடனேயே இருக்கிறார்கள். அவர்களிடம் ஒருவிதமான மன அழுத்தம் தெரிகிறது. வாழ்க்கையே தொலைந்துவிட்ட மாதிரி நடமாடுகிறார்கள்.

கேள்வி : உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள்?

பதில் : கொழும்பிலி;ருக்கும்போது, ஒரு இடத்துக்கு ஆட்டோவில் போனேன். ஆட்டோக்காரர் தமிழர். நான் இறங்கி, பணத்தை நீட்டியதும் அந்த ஆட்டோக்காரர் வாங்க மறுத்து விட்டார்;. காரணத்தைக் கேட்டதும், செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரைக் காப்பாற்ற தமிழகமே திரண்டெழுந்திருக்கையில், இந்த மாதிரியாவது நாங்கள் நன்றி கூற வேண்டாமா…? என்று ஆட்டோக்காரர் சொன்னது, இதயத்தையே சுட்டது.

இன்னுமொரு சம்பவம்: யாழ்ப்பாணம் செல்வதற்கு நான் பக்ரப் பிரயத்தனம் மேற்கொண்டதை அவதானித்த ஒருவர், உங்களிடம் இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் யாழ் மட்டுமல்ல, இலங்கையில் எந்தப் பகுதிக்கும் போகலாம். ஆனால் உங்களிடம் இருப்பது இந்திய பாஸ்போர்ட். அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.

ஏன் என்று வினவிய போது அவர் கொடுத்த விளக்கம், எங்களைச் சுட்டால் அதுபற்றிக் கேட்க யாரும் இல்லை. ஆனால் உங்களைச் சுட்டால், இந்திய நாடு தட்டிக் கேட்கும்! எனக்குப் புல்லரித்தது. இதற்கமைய ஒரு சம்பவமும் என் கண் முன்பாக நடந்தது. அப்பா, அம்மா, மகள் என்று ஒரு குடும்பம். அப்பா, அம்மாவிடம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்தது. மகளிடம் இலங்கை பாஸ்போர்ட் உறவினர்களைச் சந்திக்க யாழ்ப்பாணம் போக வேண்டும். எவ்வளவோ முயற்சித்தும், பிரிட்டிஷ் (வெளிநாட்டு) பாஸ்போர்ட் இருந்த ஒரே காரணத்தினால் பெற்றோர் யாழ். செல்ல அனுமதிக்கப்படவில்லை. மகள் மட்டும் போய்த் திரும்பியுள்ளார்.

கேள்வி : உங்கள் மனநிலையைப் பாதித்த விஷயம்?

பதில் : பாதித்த என்று கூறுவதைவிட, பாதித்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். இலங்கை எமது அண்டை நாடு மட்டுமல்ல. தொப்புள் கொடி உறவு உள்ள மக்களைக் கொண்ட நாடு. அந்த மக்கள் தினம் தினம் செத்துப்பிழைக்கும் கொடுமையை தூக்கி எறிய தமிழ்நாடு என்ன செய்கிறது என்று என்னையே நான் கேட்கத் தோணுகிறது. முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களின் நேசக் கரத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த மக்களின் எதிர்பார்ப்பில், எத்தனை சதவிகித உதவியை நாம் செய்து விட்டோம். குண்டுமழையில் உயிர், உடைமை, வாழ்ந்த மண் எல்லாவற்ளையும் இழந்து நிற்கும் அந்த மக்களுக்கு சிறிய ஆறுதாக, போர் நிறுத்தத்தைக் கூட கொண்டு வர எம்மால் முடியவில்லையே. நாம் இருக்கின்றோம், தோள் கொடுப்போம் என்று சொல்லி அவர்களை ஏமாற்றுகின்றோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. பெரிய வருத்தமாக இருக்கிறது.

கேள்வி : உங்கள் (த வீக்) பத்திரிகையில், ஈழத்திலிருந்து வந்துள்ள அகதிகள், அகதி முகாம்கள் பற்றி விபரமாக எழுதி வருகிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் ஒரு தனி ஈடுபாடு தெரிகிறது. இதற்கு காரணங்கள் உண்டா?

பதில் : இலங்கை அரசியலில் எனக்கு தனி ஆர்வம் உண்டு. நான் வெளிநாடொன்றுக்குச் சென்ற போது, இடையே கால்பதி;த்த முதல்நாடு இலங்கை தான். தவிர, மக்களின் விருந்தோம்பல் மிகவும் பிடித்திருக்கிறது. ஈழப்பிரச்சையில் இப்பொழுது நான் செய்த விசயம் மிகவும் பலனளிக்கும் வகையில் தொடர் எழுதவிருக்கிறேன். ஏற்கனவே விடுதலைப்புலிகள் அரசியல் பொறுப்பாளர் நடேசனிடமும் பேட்டி எடுத்திருக்கின்றேன். ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை இங்கிருந்து பார்ப்பதைவிட, அங்கு சென்று நேரில் அறிந்து உதவுவதுதான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும். அப்பொழுதுதான் அவர்களின் வலியும், உண்மையும் புரியும்.

கேள்வி : இந்த வகையில், பத்திரிகையாளர் என்ற ரீதியில் உங்களுக்கு ஏதாவது யோசனை தெரிகிறதா?

பதில் : இலங்கை தமிழ் மக்களின் அவலங்களை நேரில் கண்டறிய அரசின் அனுமதியுடன் பத்திரிகையாளர் குழுவொன்றை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும். அங்கு என்ன நடக்கிறது என்பது இந்த பொது அமைப்பின் வாயிலாக உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு அமைப்போ அல்லது அரசியல் அமைப்போ என்றில்லாமல், நடுநிலையாளர்களைக் கொண்ட பத்திரிகையாளர் குழுவொன்று அங்கு செல்ல வேண்டும். இதனை அரசே அனுப்பி வைக்கலாம். இந்தக் கருத்தை எனது இலங்கை பயணக் கட்டுரையில் நிச்சயம் வலியுறுத்துவேன் என்று கூறினார் திருமதி. கவிதா முரளிதரன்.


Comments