எம்.ஆரின்.நான்கு டீகள்

ஜெயவர்த்தனவை ஜே.ஆர். என்று அழைத்தது போல் கொழும்பு ஊடகங்கள் இப்போது மகிந்த ராஜபக்சவை எம். ஆர். என்று அழைக்கிறார்கள். எம். ஆர். இப்போது போரின் பிடியில் இருக்கிறார். அவர் போரை வழிநடத்திய காலம் போய் போர் அவரை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அவர் எதிர்பார்த்த வேகமான வெற்றி பின்னோக்கிச் சென்றபடி இருக்கிறது. ஆப்பு இழுத்த குரங்கின் நிலைமையில் இருக்கிறார். ஜெயசிக்குறு காலத்தில் சிங்கள இராணுவம் பற்றி முன்னோக்கிச் செல்வது கடினம், பின்னோக்கிச் செல்வது அவமானம் என்று சொல்வார்கள். அதே நிலை இப்போது திரும்பிவிட்டது.

வேகமான வெற்றி கிடைக்கப் போவ தில்லை என்ற நிலைமை தோன்றுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. சற்றேனும் எதிர்பாராத விதத்தில் தமிழ் நாட்டில் நிலவும் ஈழத்தமிழர்களுக்குச் சார்பான பேரெழுச்சி எம். ஆர். நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்திய மத்திய அரசு எம்பக்கம் என்ற நம்பிக்கையில் தனது இராணுவத் திட்டங்களை வகுத்த சிங்கள அரசு தமிழ் நாட்டின் எழுச்சியைக்கண்டு மிரண்டுபோயுள்ளது. மத்திய அரசு ஈழத்தமிழர்கள்பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்பது உண்மை என்றாலும் தமிழ் நாட்டின் கொதிநிலை அதைச் சிந்திக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.
இன்றும் எதிர்காலத்திலும் ஈழத் தமிழர் விவகாரம் தமிழக அரசியலில் முதலிடத்தில் இருக்கும். இதைச் சிங்கள ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

எம். ஆரும் இது பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக ஐலன்ற் பத்திரிகை ஞாயிறு இதழ் (2008.11.02) தெரிவிக்கிறது. தமிழகத்தை அவர் கணக்கில் எடுக்க வில்லையாம். அப்படி ஏதேனும் சல சலப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசு கவனித்துக் கொள்ளும் என்று எம். ஆரும் அவருடைய சகோதரர்களும் நம்பியிருந் ததாகவும் அதே இதழ் தெரிவிக்கிறது. எம். ஆரு க்கு ஆறுதல் கூறுவதற்காக சிங்கள ஆட்சியா ளர்களின் நிரந்தர நண்பன் இந்து பத்திரிகை ஆசிரியர் என். ராம் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தில் கொழும்பு வந்து சேர்ந்தார். சந்திரிகா காலத்தில் கொழும்புக்கு ராம் அடிக்கடி வருவார். யார் யார் ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்ப டுகிறார்களோ அவர்களை ராமுவுக்குப் பிடிக்கும். தமிழ் நாட்டில் அடிமட்டத் தமிழர்கள் தொடக்கம் நீதிபதிகள், சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள் வரையிலான பல தரப்பினர் பேரணி களையும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் தொடங்கியபோது ராம் மிரண்டு போய்விட்டார். அளவுக்கு மிஞ்சிய இனப்பற்று மொழிப்பற்று போன்றவை தமிழ் நாட்டிற்கு ஆபத்தானவை என்று சுட்டிக்காட்டும் கட்டுரையை அவர் இந்துவில் பிரசுரித்தார். அந்தக் கட்டுரை இடம்பெற்ற இரண்டாயிரம் பிரதிகளைக் கைப்பற்றிய பொதுமக்கள் அவற்றைத் தெருவில் போட்டுக் கொழுத்தி விட்டார்கள். தமிழகக் காவல்துறையினர் கொழுத்தியவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

தனது பிரச்சார உத்திகள் பிசுபிசுத்துப் போனதை உணர்ந்த இந்து ராம் எம். ஆரோடு மந்திராலோசனை நடத்தக் கொழும்பு வந்தடைந்தார். நெடுங்கால நண்பர் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற காரணங்களுக்காக ராம் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டார். அங்கு ஒரு நேர்காணல் நடைபெற்றது. கேள்வியும் மறுமொழியும் ஒத்திகை பார்த்தபின் பதிவுகள் ஆரம்பமாகின. ராம் கேட்ட மிக முக்கியமான கேள்வியையும் அதற்கு எம். ஆர் கொடுத்த பதிலையும் இங்கு தருகிறோம். ராம் - பிரச்சினைக்கு உங்கள் தீர்வு என்ன? எம். ஆர் - நான் நான்கு "டீ"த் தீர்வை வைத்திருக்கிறேன். முதலாவது "டீ" வெற்றி பெற்றபின் படை நடவடி க்கையை முடிவுக்குக் கொண்டு வருதல். இதை "டீ" மிலிற்றறைசேசன் எனலாம் (Demilitarisation). அடுத்த "டீ" நான் சனநாயகத்தைத் தமிழர் பகுதியில் நாட்டப் போகிறேன். இது டிமொக்கிறற்றை சேசன் (Democratisation) எனது மூன்றாவது "டீ" தமிழர் பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் (Development).. நாலாவதாக நான் வைத்திருக்கும் "டீ" டெவலூசன்(Devolution) அதுதான் அதிகாரப்பகிர்வு.

இந்த நான்கு டீகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார் ராம். முதலாவது க்குத்தான் அது நிறைவேறினால் தான் மிகுதி மூன்றையும் நிறைவேற்றலாம் என்றார் எம். ஆர். பிரேமதாசா மூன்று "சீ"களை (C) வைத்திருந்தார். இப்போது அடுத்த ஆங்கில எழுத்து "டீ" (D) யின் காலம் பிறந்துவிட்டது. மேற்கூறிய ராம் எம். ஆர். நேர்காணல் 2008.10.29 இந்து இதழில் பிரசுரமாகியுள்ளது. தமிழ்நாட்டில் அது பரபரப்பை ஏற்படுத்தவில்லை. கலைஞர் தொடக்கம் தமிழர்கள் அனைவரும் எம். ஆரை நம்பத் தயாரில்லை. அதிகாரப்பகிர்வு என்பது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. இலங்கையில் நடப்பது சிங்களவனுக்கும் தமிழனுக்கும் இடையிலான இனப்போர் என்பதை ஒவ்வொரு தமிழனும் அறிவான். இது மூவாயிரம் வருடம் பழமைவாய்ந்த ஆரிய திராவிடப்போர் என்றும் சிலர் சொல்லக் கேள்வி. தமிழகத்தில் வாழ்வோர் தாம் தமிழர் என்பதையும் தாம் ஈழத்தமிழர்களின் இரத்த உறவு என்பதையும் நன்றாக உணர்ந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் எம். ஆரின் முதல் மூன்று "டீ"களும் தோல்வி கண்டுள்ளன. நான்காவது "டீ" பற்றி அவர் சிந்திப்பதில்லை. பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது முயல் கொம்பு போன்றது. எல்லா நோய்களுக்கும் ஒரு பொது மருந்துபோல் இராணுவத் தீர்வையே அவர் நம்பி இருக்கிறார். கிழக்கின் உதயம் கொண்டாடப்பட்டுப் பல மாதங்களாகிவிட்டன. பிள்ளையான் கருணா குழு மோதல்கள் உச்சக்கட்டம் அடைந்துள்ளன. இரு பகுதியினரும் பொது மக்களைப் பலி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு அரசபடைகளும் பொலிசும் அனுசரணை வழங்குகின்றன.

புலிகளின் அதிரடித் தாக்குதல்களில் அதிரடிப் படையினர் நாளாந்திரம் மடிகிறார்கள். ஒரு விதத்தில் கிழக்குப் பழைய நிலைக்குத் திரும்புகிறது எனலாம். பிள்ளையான் தலைமையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைக்கான நிதி வழங்கல் செய்யப்படவில்லை. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு மலசலகூட வசதி, குடி நீர் வசதி, குடியிருப்பு வசதி, போக்குவரத்து வசதி ஒன்றுமே செய்து கொடுக்கப்படவில்லை. எம்.ஆர். வெறும் அண்டப் புழுகளாகத் தென்படுகிறார். இந்த இலட்சணத்தில் வன்னியையும் அவர் மேம்படுத்தப் போகிறாராம்.

சிறிலங்காவின் நிதி நிலைமை படு மோசமடைந்து வருகிறது. பண நோட்டுக்களை அச்சடித்துப் பாவனைக்கு விடும் படுபாதகச் செயலை அரசு செய்த வண்ணம் உள்ளது. பொருளாதாரக் கோட்பாடுகள் அனைத்தையும் மீறுவதற்கு அரசு தயாராகிவிட்டது. தேயிலை, இறப்பர் ஏற்று மதிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. பெருந்தோட்ட முதலாளிகள் நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுகிறார்கள். உல்லாசப் பயணிகளின் வருகையிலும் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது. உலக மட்டத்தில் பணத் தட்டுப்பாடும் நிச்சயமின்மையும் நிலவுகிறது. சிறிலங்கா பாதிப்படைந்துள்ளது. போருக்குச் செலவிடுவதற்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் ஒரு ரூபா நாணயத்திற்குப் பத்துச்சதப் பெறுமதி கூட இன்று இல்லை. போரை முன்னெடுப்பதற்குச் சர்வதேச பணச் சந்தையில் கடன் வாங்கும் நடைமுறையை இதுவரை அரசு பின்பற்றி வந்தது. இதுகும் வற்றிவிட்டது. உலகில் நிலவும் நிதி நெருக்கடி பணச் சந்தையைப் பாதித்துள்ளது. ஒரு தோல்வி அடைந்த நாட்டின் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு உதவ வழமையாக வாரி வழங்கும் நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன.

விடுதலைப் புலிகளையும் தமிழர் தரப்பை யும் கண்டிப்பதையே தனது முக்கிய பணியாக இதுவரை காலமும் கொண்டிருந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு (University Teachers For Human Rights= Uthr) இப்போது தனது நிலைப் பாட்டை மாற்றியுள்ளது. சில தமிழர்களால் இயக்கப்படும் இந்தத் தொண்டு நிறுவனம் தனது மிகப்பிந்திய அறிக்கையில் (Bulletin No.31) அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என்றும் ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல்கள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், இரவுக் கொள்ளைகள் போன்றவற்றைப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் செய்வதாகவும் குற்றஞ்சுமத்தி உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா முழுவதும் அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்படுவதும், இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுவதும், அநேகமாக அப்படியானோர் காணாமற் போவதும் வழமையாகிவிட்டது என்று அதே அறிக்கை இலக்கம் 31 கூறுகிறது. இராணுவ நடவடிக்கைள் ஒப்பேறியபின் அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் ஏற்படும் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்திற்கும், குறிப்பாகச் சிறிலங்காவின் நட்பு நாடுகளுக்கும் மேற்கூறிய பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு அதிர்ச்சித் தகவல் வெளியிட்டிருக்கிறது.

சிங்கள பௌத்த தீவிர நிலைப்பாட்டாளர்களுக்கு எல்.ரி.ரி.ஈ.க்கு எதிரான போர் இரண்டாம் பட்ச முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சிங்கள பௌத்த நாட்டை உருவாக்கும் முதன்மைக் குறிக் கோளைக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரப் பகிர்வு என்பதை நிராகரிக்கிறார்கள் தீவிர நிலைப் பாடுடைய ஹெல உறுமயக் கட்சியால் இயக்கப்படும் எம். ஆரின் ஆட்சியின் நிலைப்பாடு இதுதான். கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின் அந்த மண்ணைத் தோண்டப் போகிறார்களாம். எனென்றால் பழைய சிங்கள பௌத்தச் சின்னங்கள் மண்ணடியில் கிடக் கின்றனவாம். இது எல்லாவெல மெத்தானந்த தேரரின் கருத்தும் பகற்கனவுமாகும். இவர்தான் ஹெல உரிமையக் கட்சியின் தலைவர்.

இன்று எம். ஆர். அரசு போர் வெற்றியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. எல்.ரி.ரி.ஈ. செயலிழந்து விட்டது என்ற தனது பிரச்சாரத்தை நம்பிக் கொண்டிருந்த அரசும் இராணுவமும் இப்போதுதான் உண்மைக்கு முகங்கொடுக்கத் தொடங்கியுள்ளன. வேகமான வெற்றி கைக்கெட்டாமல் பின்னுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இறந்த படையினரின் உடலங்களை இராணுவத்தினர் வன்னியில் இரகசியமாகப் புதைக்கிறார்கள் என்ற செய்தி சிங்கள நாட்டில் காட்டுத்தீ போல் பரவத் தொடங்கியுள்ளது. சிங்கள மக்களின் பின்னணி ஆதரவு படிப்படியாக மறைந்து வருகிறது.

இராணுவத்திற்கு ஒரு பெரிய அடி விழும் போது எம். ஆர். அரசும் ஆட்டங்காணும் என்பது உறுதி. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களையும், எழுத்து ஊடகங்களையும் களமுனை உண்மை களை வெளியிடாமல் தடுப்பது காரணத்தோடுதான். இராணுவ இழப்புக்கள் பற்றிய செய்திகள் மக்களிடம் சென்றால் அரசின் தவிப்பு பன்மடங்காகவும் அரசும் இராணுவத் தலைமையும் நிதானம் இழந்துவிட்டார்கள் என்பது வெளிப்படை. உற்சாக பானம் தலைக் கேறினால் சற்றுக் கூடுதலாகப் பேசும் சரத்பொன் சேகா இப்போது வசைமாரி பொழியும் அளவுக்கு மதிமயங்கிவிட்டார்.

தமிழ் நாட்டுத் தலைவர்களை கோமாளிகள் என்ற இராணுவத் தளபதியின் சாடல் கிளப்பிய உணர்வலை இன்றும் தமிழகத்தில் ஓயவில்லை ஆனால் மத்திய அரசு தனது ஆளுமைக்கு உட்பட்ட தலைவர்களின் மானம் மரியாதை பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. சிங்கள அரசுக்கும் இந்திய மத் திய அரசுக்கும் இடையிலான பரஸ்பர உறவில் தேய்மானம் ஏற்பட்டதற்கான அறிகுறி தென்படவில்லை. தனிப்பட்ட உறவுகள் பலப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவரு கின்றன. 2008. 11.02 சண்டே ஐலன்ற் இதழில் அண்மையில் ஒப்பேறிய திருமண உறவு பற்றிய செய்தி காணப்படுகிறது.

பசில் ராஜபக்சவின் மகள் ஒரு இந்தியக் குடிமகளைத் திருமணம் செய்திருக்கிறாராம். அதன் பின் பசில் ராஜபக்சவுக்கும் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் இறுக்கமாகி விட்டதாம். பசில் ராஜபக்சவின் மருமகன் மலையாளியோ அல்லது பிற மாநிலத்தவரோ என்ற தகவலை ஐலன்ற் பத்திரிகை வழங்காமல் விட்டுள்ளது.

- அன்பரசு-
தமிழ்க்கதிர்

Comments