உள்ளே செல்லும் சிங்களப்படை


ஆக்கிரமிப்பாளனை நிம்மதியாக ஆட்சி செய்யவிடக்கூடாது என்பது பொது விதி. நேரடியாகத் தாக்குதல் நடத்தி அவனை அப்புறப்படுத்துவது ஒருமுறை. இதற்காகச் செய்யப்பட வேண்டிய தயார்ப்படுத்தல்கள் பலவுண்டு.

ஆளணி, ஆயுதம், தக்க தருணம் போன்ற பல முக்கிய விடயங்கள் இருக்கின்றன. சிறு குழுக்களை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுப்பி ஆக்கிரமிப்பாளனுக்கு இழப்புக்களையும் கலவரத்தையும் ஏற்படுத்துவது காலம் காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போரியல் முறை.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் பிடியில் வீழ்ந்த ஐரோப்பிய நாடுகளுக்குள் நன்கு பயிற்றப்பட்ட சிறு குழுக்கள் நேச நாடுகளால் அனுப்பப்பட்டன.

இங்கிலாந்தில் இந்தக் குழுக்களின் உறுப்பினர் தெரிவும் பயிற்சியும் வழங்கப்பட்டு அவர்களை அனுப்பி வைக்கும் பணியும் மேற்கொள்ளப் பட்டது. பிரான்ஸ் நாடு நாசிப் படைகளிடம் 1940 ஆம் ஆண்டில் வீழ்ச்சி அடைந்தது. ஜேர்மன் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவும் ஜேர்மன் இராணுவ நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் நாசகார வேலைகளுக்காகவும் மிகச் சிறிய காலத்தில் ஒரு இரகசியக் கட்டமைப்பு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த அனுபவம், மொழி அறிவு, தம்மை வெளிப்படுத்தாது வாழும் திறமை என்பனவுள்ள ஆண், பெண் இருபாலாரும் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டனர். பிரான்சைவிட நோர்வே போன்ற ஸ்கன்டினேவிய நாடுகளும் நாசிப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அந்தந்த நாட்டு மொழி அறிவு, அங்கு வாழ்ந்த அனுபவம் போன்ற விசேட தகைமை உள்ளவர்கள் திரட்டப்பட்டனர். அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் உயிர் உடல் ஆபத்துக்கள் பற்றி முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டது. விலகிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

விலகியோருக்கு வேறு பணிகள் வழங்கப்பட்டன. விசேட நடவடிக்கைகள் நிறைவேற்று அமைப்பு Special Operations Executive என்று பெயரிடப்பட்ட இரகசிய அமைப்பு பெப்ரவரி 1941 இல் உருவாக்கப்பட்டது. பிரதமர் சேர்ச்சில் இந்த அமைப்பிற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கினார். தனது அங்குரார்ப்பண உரையில் 'ஐரோப்பாவைத் தீயிட்டுக் கொழுத்துங்கள்'(Set Europe On Fire) என்று கூறினார். எஸ்.ஓ.ஈ (SOE) என்ற சுருக்குப் பெயரால் அழைக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கைகளுக்கான அமைப்பின் குறிக்கோள் அமைதியாக நாசகார வேலைகளைச் செய்ததாக இருந்தது. அட்டகாசமாகத் தீயிடுவது அதன் நோக்கமல்ல.

பிரான்சை ஊடுருவும் எஸ்.ஓ.ஈ. அணியின் இயக்குநராகக் கப்டன் பக்மாஸ்ரர் (Capt. Buckmaster) என்ற அதிகாரி நியமிக்கப்பட்டார். போருக்கு முன்பு அவர் பிரான்சில் போட் மோட்டார் நிறுவனத்தின் முகவராகப் பணியாற்றினார். அவருக்குப் பிரெஞ்சு மொழி அறிவும் அந்த நாட்டின் மூலை முடுக்குப் பற்றிய அனுபவமும் நிறைய இருந்ததால் இந்தப் பதவி வழங்கப்பட்டது. பிரெஞ்சு மொழியை பிரெஞ்சுக்காரர் போலப் பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட்டது. பெற்றாரில் ஒருவர் அல்லது இருவரும் பிரெஞ்சுக்காரர்களாக இருந்தால் இணைக்கப்படும் வாய்ப்பு மிகக் கூடுதலாக இருந்தது.

பிரான்சில் நடவடிக்கைக்குச் சென்றவர்களில் பலரின் பெற்றோர்களில் ஒருவராவது பிரெஞ்சு இனத்தவராக இருந்தனர். எஸ்.ஓ.ஈ. அமைப்பின் பெண் உறுப்பினர்களில் இருவர் பற்றிய வரலாறு இரண்டாம் உலகப் போரின் இரகசிய நடவடிக்கை வரலாற்றில் முதலிடம் பிடித்துள்ளது. ஓடெற் சேர்ச்சில் (Odette Cgurchill) என்ற பெண் பல சாதனைகள் செய்த பின் ஜேர்மன் படையினரிடம் பிடிபட்டார். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவர் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவருடைய நகங்கள் பிடுங்கப்பட்டன. தன்னுடைய மனவுறுதியை அவர் மிகவும் அரும்பாடுபட்டுக் காப்பாற்றினார்.

சேர்ச்சில் என்ற அவருடைய பெயருக்கு மரியாதை வழங்கிய ஜேர்மன் படையினர் அவரைச் சுட்டுக் கொல்லாமல் குற்றுயிராக விட்டுவிட்டனா்; அவர் பிரதமர் சேர்ச்சிலின் உறவினர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் எல்லோரிலும் வீரத்திலும் போரிடும் திறமையிலும் மிகச் சிறந்தவர் என்று ஓடெற் சேர்ச்சிலினால் புகழப்பட்டவர் வயலற் சிசாபோ என்ற போராளியாவர். இவர் எஸ்.ஓ.ஈ அமைப்பில் இணையும்போது 22 வயதினராக இருந்தார். அவருடைய தாய் ஒரு பிரெஞ்சுப் பெண். தந்தை முதலாம் உலகப் போரில் சண்டையிட்ட ஒரு ஆங்கிலேயன்.

வயலற் சிசாபோவின் கணவன் சகாராப் பாலைவனத்தில் ஜேர்மன் படைகளுடன் பொருதிச்சாவடைந்தார். தனது இரண்டு வயதுப் பெண் குழந்தையைத் தனது பெற்றாரிடம் ஒப்படைத்துவிட்டு வயலற் சிசாபோ இந்த இரகசிய நடவடிக்கை அணியில் இணைந்தார். அவர் ஆற்றிய போராட்டப் பணி, அவருக்கு நிகழ்ந்த அகால மரணம் பற்றிய செய்திகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது.(Carve Her Name With Pride - The Story Of Violet Szabo By J.M.Minney Fontana Books 1967).

இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு அவருக்கு பிரித்தானிய, பிரெஞ்சு அரசுகள் தமது அதியுயர் களமுனைப் பதக்கங்களை வழங்கியுள்ளன. துணிவிருந்தால் மாத்திரம் போதாது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நுழைந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் துணிச்சலோடு விவேகமும் தீவிர பயிற்சியும் தேவைப்படுகின்றன. அது மாத்திரமல்ல எடுக்கவிருக்கும் நடவடிக்கை பற்றிய அனைத்துத் தரவுகளும் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். ஏன் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பதற்கு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போராளி தமிழ்க்கவி எழுதிய புதினத்தில் விடை கூறப்பட்டுள்ளது. (இருள் இனி விலகும். தமிழ்க்கவி அறிவமுது பிரசுரம் யூலை 2004)

எதிரிக்கு மனரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்த வேண்டும். கருத்து ரீதியாக அவன் தனது பிடியிலுள்ள மக்களின் மனதை மாற்ற முயல அனுமதிக்கக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக வெளியிலிருந்து எதிரியின் நிலைகள் மீது ஒரு பெருந்தாக்குதல் தொடுக்கப்படும் போது ஏற்கெனவே ஊடுருவியிருந்த போராளிகள் எதிரியின் உட்புறத்தில் பெருஞ்சேதத்தை ஏற்படுத்த முடியும். எஸ்.ஓ.ஈ இரகசிய நடவடிக்கை அமைப்பில் இணைக்கப்பட்ட இரு பாலாருக்கும் வழங்கப்பட்ட பயிற்சிகள் விரிவுரை வகுப்புக்கள் மூலமான கருத்தூட்டலும் செய்முறைப் பயிற்சிகளுமாக அமைந்தன.

வரைபட வாசிப்பு, சங்கேத மொழிமூலம் இருவழித் தொடர்பு மேற்கொள்ளல், ஆயுத தளவாடங்கள் வெடிபொருட்களைக் கையாளுதல், பாலங்கள், புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், மின்சார நிலையங்கள் போன்றவற்றைக் குண்டு வைத்துத் தகர்த்தல் என்பன முக்கியமாக இந்தப் பயிற்சிகளில் அடங்கும். சமிக்ஞைகளை மாத்திரம் இரு வழியாக அனுப்பக்கூடிய கையடக்கத் தொடர்பு சாதனம் இங்கிலாந்து இராணுவத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு போராளிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.

வானிலிருந்து குடை மூலம் தரையில் குதித்தல், ஆயுதம் இல்லாமல் கை கால் மூலம் தாக்குதல் நடத்துதல் போன்ற பயிற்சியும் வழங்கப்பட்டது. எதிரியின் சீருடை அடையாளங்கள், பதவி நிலைகள், வாகனங்களின் தரம் பற்றிய தகவல்களும் விரிவுரைகளில் இணைக்கப்பட்டன. எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உலாவும் போது தன்னைப் பிறர் இனங்காணாதவாறு சூழலோடு இணைந்து மறைவாக நடமாடும் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எதிரி நாட்டின் ஆடை அணிகள் பண்பாட்டு நடைமுறைகள் அவன் போட்டிருக்கும் தடைகள் பற்றிய அறிவும் போராளிகளுக்குப் புகட்டப்பட்டது.

முதன் முதலாகப் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட போராளிகள் மிகப் பெரிய சவாலைச் சந்தித்தனர். அவர்களுக்குத் தொடர்பாளர்களின் பட்டியல் வழங்கப்படவில்லை. யாரை நம்புவது எவருடைய உதவியைத் துணிந்து கோரலாம் போன்ற முக்கிய விடயங்கள் போராளிடம் விடப்பட்டன. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற இந்த நிலவரத்தில் பல உயிரிழப்புக்கள் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டன. இரண்டாம், மூன்றாம் கட்டமாகச் சென்ற போராளிகளுக்கு முதலாம் கட்டத்தினர் வழங்கிய தகவல்கள் மிக முக்கிய பயன் தந்தன. எதிரியினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்கள் எதிரியை வெறுப்பார்கள்.

ஆனால் எதிரியை வெளிப்படையாக எதிர்க்க மாட்டார்கள். இப்படியானோர் 60 விழுக்காடாக அமைகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 20 வீதமானோர் முட்டாள்தனமாகத் தமது எதிர்ப்புணர்வுகளை வாய்மூலம் தெரிவித்து அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். மிகுதி 20 வீதத்தினர் எதிரியுடன் இணைந்து செயற்படுவதோடு விடுதலை விரும்பிகளையும் போராளிகளையும் எதிரிக்குக் காட்டிக் கொடுத்து அதற்கான வெகுமதியைப் பெறுகிறார்கள். இதில் கூறப்பட்டவற்றை ஒரு பொது விதியாகக் கொள்ளலாம் என்ற இந்த விடயம் பற்றிய நூல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்.ஓ.ஈ போராளிகள் ஆக்கிரமிப்பாளனை எதிர்ப்பவர்களை இனங்காண்பதோடு அப்படியான எதிர்ப்பாளர்களை ஒரு வலுவான பயனுள்ள சக்தியாகக் கட்டியெழுப்பும் முக்கிய பொறுப்பைக் கொண்டிருந்தனர். இந்த மட்டில் இவர்களை ஒருங்கிணைப்பாளர்கள் எனலாம். எதிர்ப்பாளர்களுக்குத் தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொடுப்பதுவும் இவர்கள் பொறுப்பாகியது. தமது தொடர்பு கருவிகள் மூலம் எஸ்.ஓ.ஈ போராளிகள் லண்டன் தலைமையுடன் தொடர்புகொண்டு விமானம் மூலம் ஆயுதங்கள் போடும் இடம், நேரம், தரைச் சமிக்ஞை போன்றவற்றை வழங்கினர்.

இதன் பயனால் எதிர்ப்பாளர்கள் ஆயுததாரிகளாகவும் தாக்குதலுக்குத் தயாரானவர்களாகவும் மாற்றப்பட்டனர். இந்த ஏற்பாடுகள் மக்கள் மத்தியில் துணிச்சலையும் ஆக்கிரமிப்பாளனை வெளியேற்ற முடியும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. போராளிகளை ஆரம்பத்தில் மீன்பிடிப் படகுகள், நீர்மூழ்கிகள், விமானக் குடைகள் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு இங்கிலாந்தில் இருந்து அனுப்பினார்கள். லிசான்டர் என்ற சிறிய ரக விமானம் சேவைக்கு வந்தபின் நிலைமை மாறிவிட்டது. அது விமானி உட்பட ஐவரை ஏற்றிக்கொண்டு 3000 அடி உயரத்தில் பறக்கும் திறன் உள்ளது.

தேவைப்படும்போது அது 400 அடி உயரத்தில் பதிந்து பறக்கவல்லது. அதன் சராசரி வேகம் மணிக்கு 200 மைல் அதை விமான எதிர்ப்பு பீரங்கியால் சுட்டு வீழ்த்துவது கடினம். 30 யார் நீளமான சம பூமியில் லிசான்டர் விமானத்தால் ஏறவும் இறங்கவும் முடியும். இதனால் போராளிகள் இங்கிலாந்திற்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் பறப்பை மேற்கொள்ளவும் ஆயுதங்களை எளிதாகக் கொண்டுவந்து சேர்க்கவும் முடிந்தது. பிரான்சிற்கும் பி.பி.சி வானொலி லண்டனில் இருந்து இரவு வேளைகளில் 7.30 மற்றும் 9.15 மணிக்கு பிரெஞ்சு மொழிச் செய்தி ஒலிபரப்புச் சேவையை நாளாந்திரம் வழங்கியது.

இது சாதாரணச் செய்திச் சேவையல்ல. சங்கேத மொழியில் எஸ்.ஓ.ஈ போராளிகளுக்கும் ஒன்றிணைக்கப்பட்ட எதிர்ப்புக் குழுக்களுக்கும் ஆலோசனைகள், கட்டளைகள், எடுக்கவேண்டிய நாசகார நடவடிக்கைகள், ஆயுதம் போடுதல் போன்ற தகவல்கள் இதன் மூலம் வழங்கப்பட்டன. ஜேர்மன் படைகளும் இணைந்து செயற்படும் துரோகக் குழுக்களும் பி.பி.சி பயன்படுத்திய சங்கேத மொழியை உடைக்க முடியாமல் இருந்தது ஒரு உதாரணம், லுயிசா மாமி சுகமடைந்து வருகிறார். இதில் பொதிந்திருந்த தகவலை சம்பந்தப்பட்டவர்களால் மாத்திரம் புரிந்துகொள்ள முடியும்.

ஜேர்மன் புலனாய்வுத்துறையினர் பி.பி.சி வானொலியைக் கேட்போரைக் கண்காணித்தது. ஒலிபரப்பு நேரத்தில் வீடுகளுக்குள் திடீர் என்று பாய்ந்து வானொலிப் பெட்டிகளை பறிமுதல் செய்ததோடு அங்கிருந்தவர்களையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றது. கெஸ்தாப்போ என்ற ஜேர்மன் இராணுவப் புலனாய்வுத் துறையினர் பி.பி.சி.யின் ஒலிபரப்பையும் போராளிகளின் இருவழித் தொடர்பு வானொலிச் சாதனங்களையும் கண்காணித்து வரும் காலத்தில் அதே புலனாய்வுத் துறையினரைப் போராளிகளும் கண்காணித்து வந்தனர் என்பது இன்னுமோர் முக்கியவிடயம்.

எந்த முக்கிய நடவடிக்கையில் உதவுவதற்காக முன்னோடிப் படையாக எஸ்.ஓ.ஈ போராளிகள் அனுப்பப்பட்டார்களோ அந்தத் தருணம் 1944 யூன் ஆறாம் நாள் தோன்றிவிட்டது. நோர்மான்டித் தரையிறக்கம் எனப்படும் நேச நாட்டுப் படைகளின் தாக்குதல் அன்று ஆரம்பித்தது. தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரான்சின் நோர்மான்டிக் கடலோரத் தரைப்பரப்பில் நேசநாட்டுப் படைகள் காலூன்றிவிட்டன என்று அறிந்தவுடன் ஜேர்மன் படைத்தலைமையகம் பிரான்சின் பிற பகுதிகளில் இருந்தும், ஜேர்மனியில் இருந்தும் படைகளை வேகமாக நோர்மான்டி நோக்கி நகர்த்தியது.

படை நகர்த்தல் இலகுவாக நடக்காமல் தடுப்பதில் எஸ்.ஓ.ஈ.போராளிகளும் அவர்கள் கட்டியெழுப்பிய றெசிஸ்ரன்ஸ் என்ற ஒருங்கிணைக்கப்பட்ட பிரெஞ்சு போராட்டக் குழுக்களும், மாக்குயிஸ் என்ற பிரெஞ்சு இரகசிய இராணுவமும் திறம்படச் செயற்பட்டன. ஜேர்மன் படை நகர்த்தல் இவர்களால் சில இடங்களில் முற்றாகத் தடுக்க முடியாவிட்டாலும் நிச்சயமாக காலதாமதமாக்கப்பட்டது. இராணுவம் செல்லும் நெடுஞ்சாலைகளும் அவற்றைத் தொடுக்கும் பாலங்களும் முன்கூட்டியே திட்டமிட்டபடி தகர்க்கப்பட்டன. துருப்புக்களைக் காவிச்செல்லும் புகையிரதப் பாதைகளும் நிலையங்களும் அழிக்கப்பட்டன.

தொழிற்சாலைகள், மின்சார மையங்கள் என்பனவுக்கும் இதேகதி ஏற்பட்டது. எதிரியின் உளவுரன் உடைக்கப்பட்டது. அவன் எதிர்பாராத எதிர்ப்பு அவனைக் கதிகலங்கச் செய்தது. இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தைச் சீர்தூக்கி ஆராய்ந்த நேச நாட்டுப்படைகளின் முதன் நிலைத் தளபதி ஐசன்கோவர் "இரகசிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் பயனாய் பிரான்சின் விடுதலை ஆறு மாதங்களுக்கு முன்பாக நடந்துவிட்டது" அவருடைய போரியல் நூலான ஐரோப்பாவில் குருசுப் போர் என்பதில் இருந்து இந்த மேற்கோள் எடுக்கப்பட்டது.

வயலற் சிசாபோவும் இன்னுமொரு பிரெஞ்சு நாட்டுப் போராளியும் ஜேர்மன் கனரக வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நெடுஞ்சாலையில் நிலையெடுத்தபோது அம்புஷ் பொறியில் அகப்பட்டனர். வயலற் தன்னுடைய ஸ்ரென் துவக்கின் ரவைகள் அனைத்தும் தீரும் வரை ஜேர்மன் படைகள் மீது தாக்குதல் நடத்தினார். எத்தனை துருப்பினர் இறந்தனர் என்ற விபரம் இதுவரை கிடைக்கவில்லை. இதன்பின் வயலற்றும் மற்றப் போராளியும் ஓடத்தொடங்கினர். இரண்டு மைல் தூரம் ஓடியபின் வயலற்றின் ஒரு காலில் சுளுக்கு ஏற்பட்டு வீழ்ந்தார். ஜேர்மன் படைகள் அவரைக் கைதுசெய்தனர். அடுத்தவர் தப்பிவிட்டார். உயிரோடு பிடிபட்ட வயலற் சிசாபோ ஜேர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டு றாவென்ஸ்புறூக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

பேர்ளின் தலைநகருக்கு வடக்கே ஐம்பது மைல் தொலைவில் இந்தச் சிறைச்சாலை காணப்பட்டது. அந்தக் காலத்தில் ஐரோப்பாவின் பெண்களுக்கான மிகப்பெரிய சிறைச்சாலை என்று றாவென்ஸ்புறூக் சொல்லப்படுகிறது. 1939 இல் கட்டப்பட்ட இந்தச் சிறைச் சாலையில் அது போரின் பின் கைவிடப்படும் வரையில் 1945 மொத்தம் 120,000 பெண்கள் அங்கு அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யப் படைகள் இந்தச் சிறைச்சாலையைக் கைப்பற்றியபோது அங்கு எலும்பும் தோலுமாக 120, 000 பெண்கள் உயிரோடு இருந்தனர்.

றாவென்ஸ்புறூக்கில் கடுஞ்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டபின் வயலற் சிசாபோவும் இன்னும் இரு ஆங்கிலேயப் போராளிப் பெண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். றாவென்ஸ்புறூக்கில் உள்ள உடல்களைச் சாம்பராக்கும் பாரிய மின்சார அடுப்பில் இவர்களுடைய உடல் எரிக்கப்பட்டது. ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் வந்த ஐரோப்பிய நாடுகளுக்குள் விசேட நடவடிக்கைகளுக்காக ஊடுருவிய பெண்களில் மிகச் சிலரே உயிர் தப்பியுள்ளனர். பயணத்தை மேற்கொள்ளும் போது தமக்கு நேரக்கூடிய அனைத்தையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்.

எமது யாழ் செல்லும் போராளிகள் அர்ப்பணிப்பும் தாயகப் பற்றும் நிறைந்தவர்கள். அவர்களுடைய தியாகம் வீண்போகாது. இன்றும் அங்கு போராடிக் கொண்டிருக்கும் புலிப்போராளிகள் அனைவரும் வெற்றிச் செய்தியோடு திரும்பும் நாள் வெகுதூரமில்லை.

- அன்பரசு-

- தமிழ்க்கதிர்-


Comments