கிழக்கின் உதயம், வடக்கில் வசந்தம், வவுனியாவில் தனிவீடு , வன்னியில் பயங்கரவாதிக ளுக்கு எதிரான நடவடிக்கை என வெவ்வேறு கோசப்பெயர்களில் பேரினவாதச் சிங்களத்தினால் தமிழ் மக்களின் இயல்பான சமுதாய வாழ்க்கை சிதைக்கப்பட்டுவரும் நிலையில், தனிநபர்களின் தனிப்பட்ட பிரிவாக மட்டுமன்றி இன்னும் மேலதிகமான பரிமாணங்களில் இப்பிரிவு தமிழினத்தை வருத்திவரகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயநலனின்பாற்பட்ட எதேச்சதிகார முடிவுகளால் தம் தாய்தேசம் பிளவுபடுத்தப்படும் அவலத்தைப் பார்த்திருக்கவேண்டிய கொடுந் துயரத்தை நாம் மட்டுமன்றி, வேறு இனங்களும் சுமக்கவே செய்தன. அப்படியான சில இனங்கள் தாங்கிய மனவடுக்களை அறிந்துகொள் வது எமக்குப் பயன்செய்யும் என்ற நம்பிக்கை யில் இக்கட்டுரை விரிகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கு தென்-யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு மலர்ந்தது. இதேவேளை துருக்கியின் ஆதிக்கத்துக்குள் இருந்துவந்த பகுதியானது உலகயுத்தத்தில் ஒட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அரபு இஸ்லாமியக்குடியரசாக இருந்துவந்தபோதிலும், 1974 இல் இராணுவச் சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அவ்வாட்சியும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து 1990 இல் தென்-யேமனுடன் இணையும்வரை பல ரத்தக்களரிகளை அது சந்திக்க நேர்ந்தது. அதிலும் மார்க்சீய சார்பு தென்-யேமனும், சவுதியின் ஆதரவுடனான இஸ்லாமிய மதசார்பு வட-யேமனும் பனிப்போரின் இருதுருவங்களைப் பிரதிபலிக்கும் பகைப்புலங்களாக எல்லையுத்தங்களில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. ஆயினும் தேசிய நலனை முன்னிறுத்திய யேமன் மக்களின் ஒற்றுமையுணர்வே இறுதியில் 1990 மே 22 அன்று வெற்றிபெற்றது. ஆமாம், இலங்கைத் தீவைப் போல 8 மடங்கு நிலப்பரப்பைக் கொண்டதும், 20 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட துமான, அந்த இருதேசங்களும் ஒன்றிணைந்து யேமன் குடியரசு தோற்றுவிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க உலகின் வடகிழக்குக்கோடியிலே இலங்கைத்தீவைவிட மூன்றரை மடங்கு நிலப்பரப்பையும் சனத்தொகையையும் கொண்ட நாடுதான் கொரியா, யப்பான், சீனா, மொங்கோலியா, பிரான்ஸ், ரஸ்யா, அமெரிக்கா எனப் பல்வேறு தரப்புகளின் அச்சுறுத்தல்களைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டபோதிலும், 1000 ஆண்டுகளுக்கு மேலாகவே சுயாட்சியுடன் திகழ்ந்து வந்த அந்நாடு அந்நியர்களின் விருப்பின்படி வட- மற்றும் தென்கொரியா என இரண்டு நாடு களாகப் பிரிக்கப்பட்டமை வேதனைகள் நிறைந்த வரலாறு. குறிப்பாக 1910 இலிருந்து கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்திருந்த யப்பான் கொரிய மொழியைச் சட்டவிரோதமானதாக்கி, அதன் பண்பாட்டுப் பெயர்களையும் தடைசெய்திருந்தது.
அவ்வேளையிலேதான் 2ஆம் உலக யுத்தத்தில் யப்பான் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து விடுதலையை அவாவிநின்ற கொரியர்களின் நெஞ்சில் பேரிடியொன்று புதிதாய் இறங்கியது. அதாவது தான் கைப்பற்றியிருந்த கொரியாவின் தென்பகுதியில் தனியானதொரு நிர்வாகத்தைக் கொண்டுவந்து 1948 ஓகஸ்டில் கொரியக் குடியரசை அமெரிக்கா அறிமுகப் படுத்தியது. பதிலுக்கு நான் மட்டும் என்ன குறைந்தவனா ! என்பதைப்போல ரஸ்யாவும் அதே ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் கொரியாவின் வட பகுதியை சனநாயக மக்கள் கொரியக் குடியரசு எனத் தன் பங்கிற்குப் பிரகடனப்படுத்திக்கொண்டது. இவற்றின் தொடர்விளைவாக இரண்டு வருடங்களில் இரு தரப்பு களுக்கும் இடையில் மூண்ட அல்லது மூட்டப்பட்ட போர் 1953 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத் துடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட போதிலும், பதற்ற சூழ்நிலை மட்டும் நிரந்தரமாகத் தணிந்துவிடவில்லை.
தேசிய இனங்களை வரையறை செய்யும் விழுமியங்களின் அடிப்படையில் எந்தவொரு வேறுபாட்டினையும் கொண்டிராதபோதிலும், பனிப்போரின் துருவ அரசியலின் பிரகாரம் கொரிய மக்களின் பாரம்பரிய தாயகமானது இருவேறு கூறுகளாக்கப்பட்டது. உணர்வடிப்படையில் அம் மக்கள் தொடர்ந்தும் ஒற்றைக் கொரிய தேசத்தையே மனதினுள் பூஜித்துவரினும், அவர்கள் ஒன்றுசேரும் பொன்னாள் மட்டும் இன்னும்தான் கனியவில்லை. நாடு பிரிக்கப்பட்ட சமயத்தில் பல குடும்ப உறுப்பினர்கள் அங்கும் இங்குமாய் பிரிந்திருந்ததன் விளைவாக, மீண்டும் தம் உறவுகளைச் சந்திக்கவே முடியாதுபோன பல சோகச் சுமைகள் முதுமைக்காலத்திலும் பல்லாயிரம் கொரிய நெஞ்சங்களை வாட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனாலும், தொடரும் சோகங்களை மட்டுமல்லாது சோகம் களைந்து இன்பம் சூழ்ந்த எடுத்துக்காட்டினையும் வரலாறு நிச்சயமாகவே தன்னுள் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் 2ஆம் உலகயுத்தத்தில் ஹிட்லரின் தலைமையிலான நாசிப்படைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து 1871 இல் அமைச்சர் ஒட்டோ ஃவொண் பிஸ்மார்க் இனால் நூற்றுக்கணக்கான சிற்றரசு களை ஒன்றுசேர்த்து ஸ்தாபிக்கப்பட்ட ஜேர்மனியப் பேரரசானது, அதன் இதய அறைகள் இரு வேறாகக் கிழிக்கப்பட்டதைப்போல மேற்கும் கிழக்குமாகப் பிரிக்கப்பட்டது. அமெரிக்கா தலைமை யிலான கூட்டணி யினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி மேற்கு-ஜேர்மனி எனவும், சோவியத்தின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பகுதி கிழக்கு-ஜேர்மனி எனவும் இருவேறு நாடுகளாகப் பிரகடணப்படுத்த ப்பட்டன. ஜேர்மனி தேசம் நடுநிலையானதாக அறிவிக்கப்படுமானால் முழு ஜேர்மனிக்கான அமைதி-ஒப்பந்தத்தை உருவாக்கலாம் என சோவியத் முன் வைத்த யோசனைத்திட்டம் அமெரிக்கத் தரப்பினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 1955 இல் மேற்கு-ஜேர்மனி நேற்றோ அமைப்பிலும், கிழக்கு-ஜேர்மனி வோர்சௌ-கூட்டணியிலும் சேர்ந்துகொண்ட சூழலில் பனிப்போரின் கூருணர்வு அதிகமான அச்சுறுத்தல்கள் நிலவும் பிராந்தியங்களாக ஜேர்மனியின் இரண்டு நாடுகளும் ஆகியிருந்தன. தம்மை ஆக்கிரமித்தவர்களின் விருப்புவெறுப்புகளுக்குப் பலியாக்கப்பட்ட அத்தேசத்தின் பிளவினை காலாகாலத்துக்கும் நிலைத்துவிடச் செய்வதுபோல கிழக்கு-மேற்கு பேர்ளினைப் பிரிக்கும் நீண்ட மதிற்சுவர் 1961 இல் எழுப்பப்பட்டது.
ஈழத்தமிழினமும் இன்று ஆதிக்கவெறியர் களால் வெவ்வேறு தீவுகளாக ஆக்கிரமிக்கப் பட்ட சூழலே நிலவுகின்றது. இருந்தும் அடுத்தவர்களால் அவரவர் விருப்புவெறுப்புகளுக்காக எம்மீது வலிந்து திணிக்கப்படும் எதனையுமே தலைவிதியென நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. விடியலுக்காகக் கதிரவன் வழியே இங்கு முன்னெடுக்கப்படும் போராட்டம், தாயகம் முழுவதும் ஒளிபெறச்செய்யும் பொன்னாள் நிச்சயம் விரைவிலே உருவாகும்.
- சு.ஞாலவன். -
தமிழ்க்கதிர்
Comments