இனவழிப்புக் கொடூரம் இடம்பெறும் தேசங்களின் வரிசையில் இலங்கை



இன்று - டிசம்பர் 10 ஆம் திகதி - சர்வதேச மனித உரிமைகள் தினம்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபையால் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி மனித உரிமைகளுக்கான சர்வதேச பட்டயம் ஏற்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வரிசையில் இம்முறை இப்பிரகடனத்தின் அறுபதாவது ஆண்டுப் பூர்த்தியில் இத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை, பிரிட்டிஷ் சாம்ராச்சியப் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரத் தீவாக மாறிய அறுபதாவது ஆண்டும் இந்த வருடமே அனுஷ்டிக்கப்பட்டது. இந்தப் பின்புலத்திலே நாம் வாழும் இந்த இலங்கைத் தீவில் மனித உரிமைகளின் நிலைமையை இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஒரு தடவை மீள் மதிப்பீடுசெய்வது பொருத்தமாகிறது.

பிரிட்டிஷ் பிடியிலிருந்து இலங்கைத் தீவு விடுபட்ட காலம் முதல் இங்கு தனது பிரதான - அடிப்படை - உரிமைகளை இழந்து, அடிமைப்பட்ட சமூகமாகத் துன்பியலில் உழலும் பேரவலம் சிறுபான்மையினமான தமிழினத்தின் கதியாக இருந்து வருவதுதான் வேதனைக்குரிய யதார்த்தமாகும்.

பிரிட்டனின் பிடியிலிருந்து அரசியல் அதிகாரம் பெரும்பான்மையினமான சிங்களவரிடம் கைமாறியமையை அடுத்து, சிங்களப் பேரினவாதமே இத்தேசசத்தின் மேலாண்மைக் கருத்தாதிக்கமாக மாறியது. அன்று முதல் தமிழர்களுக்கு எதிரான இன அடக்குமுறை, குரூர வன்முறை மற்றும் பலாத்கார வடிவம் எடுத்தது.

தமிழரின் தேசிய வாழ்விற்கும் இனத்துவத்தின் தனித்துவத்துக்கும் அடிப்படை ஆதாரங்களாகவும், அத்தியாவசிய அடித்தளமாகவும் இருந்த அம்சங்களையும், கட்டமைப்புகளையும் படிப்படியாக இலக்கு வைத்துத் தகர்த்துவிடும் கொடூர வடிவமாக இந்த இன அடக்குமுறை இங்கு விரிவாக்கம் பெற்றமையே இந்த அறுபது ஆண்டுக்கால சுதந்திர(?) இலங்கையின் வரலாறாகக் கட்டவிழ்ந்துள்ளது.

இந்த இனவழிப்பு அடக்குமுறை காலத்துக்குக் காலம் பல வடிவங்களை எடுத்துத் தமிழர்களுக்கு எதிராகப் பாய்ந்தது.

ஆரம்பத்தில் தமிழரின் தனித்துவ இன அடையாளமான மொழி உரிமை முதலில் பறிக்கப்பட்டது. அதனை அடுத்து, கல்வி உரிமை பிடுங்கப்பட்டது. அதன்பின், வேலைவாய்ப்பு உரிமைக்கு ஆப்பு வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாரம்பரிய நிலங்கள் மீதான சொத்துரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அதேசமயம், தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குரிமை, பாரம்பரிய வாழ்விடங்களில் இனத்துவத்தைப் பேணும் தாயக உரிமை போன்றவற்றுக்கும் திட்ட மிட்டுக் கேடு விளைவிக்கப்பட்டது.

இப்படித் தமிழர்களின் அடிப்படை - பிரதான - உரிமைகளுக்கு கட்டப்பட்டு வந்த சமாதி, கடைசியில் இனப்படுகொலைக் கொடூரமாக இப்போது விஸ்வரூபம் எடுத்து, அவர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கே நிரந்தர சாவுமணி அடிக்கும் கட்டத்தை எட்டிவிட்டது.

பேயாட்டம் போடும் பேரினவாதத் திமிர், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, கொடூரப் போர் மூலம் துவம்சம் செய்யும், இனவழிப்பின் உச்சத்தை எட்டியிருப்பதை இன்று உலகு வேதனையோடு பார்த்திடும் நிலைமை.

சர்வதேச மனித உரிமைகள் பட்டயத்தின் கீழ் இனப் படுகொலை அல்லது இன அழிப்பு சகித்துக்கொள்ள முடியாத விடயமாக அமைகின்றது.

இந்தப் பின்புலத்திலேயே இனவழிப்பு பேராபத்து நிலவும் ‘சிவப்பு எச்சரிக்கை’ நாடுகளின் வரிசையில் - முதல் எட்டு தேசங்களுள் - இலங்கைக்கும் இடம் அளித்திருக்கின்றது

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மடலின் அல்பிரைட் அம்மையார் தலைமையில் இவ்விடயங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் விசேட செயலணிக்குழு.

இந்தத் தேசங்களில் இனவழிப்பு அல்லது இனப் படுகொலைகள் இடம்பெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பராக் ஒபாமாவை அந்த செயலணிக் குழு வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.

இந்த செயலணிக் குழுவின் மேற்படி அறிக்கை, புதிய அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் பராக் ஒபாமாவையும், அவரின் கீழ் அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளிண்டன் அம்மையாரையும் வழிநடத்தும் கொள்கை வழிகாட்டியாக அமையும் என்று குறிப்பிடப்படுவது முக்கிய விடயமாகும்.

இனவழிப்புக் கொடூரம் இடம்பெறும் பேராபத்துள்ள ‘சிவப்பு எச்சரிக்கை’ நாடுகள் எட்டில் ஒன்றாக இலங்கையை இந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கையில், சர்வதேச வல்லாதிக்க நாடான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை வெளிவிவகாரக் கொள்கையில் வழிநடத்தும் குறிப்பேடாக இந்த அறிக்கை அமையும் என்பது இலங்கையில் பெரும் கொடூரங்களை எதிர்கொண்டு வரும் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.

இந்தச் செய்தி தரும் தெம்புடனும், தமக்கும் வாழ்வியல் மற்றும் மனித உரிமைகள் கிடைக்கும் தினம் விரைவில் மலரும் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்புடனும் இன்றைய சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஈழத் தமிழர்கள் எதிர்கொள்கின்றார்கள்.


Comments